Skip to main content

மயில் குயில் ஆச்சுதடி!

உடையாத முந்திரியை எக்ஸ்போர்ட் செய்வதுமாதிரி, அனுபமா கல்யாணத்திற்குப் பின் அமெரிக்காவிற்கு எக்ஸ்போர்ட் செய்யப்பட்டாள். போன சித்திரை மாதம் இருபதாவது திருமண தினத்தை பிட்ஸ்பர்க் பாலாஜி கோயில் புளியோதரையுடன் கொண்டாடினார்கள்.

நடிகர்கள் நாட்டை விட்டுப் போவதால் பிரபலம் ஆவது மாதிரி அனுபமாவும் பிரபலம் ஆனாள்.

“அமெரிக்கா போகிறாயாமே ?.. எங்களை எல்லாம் மறந்துடாதே!” என்ற விசாரிப்புகளுக்கு இடையில் அப்பா “பாட்டை மட்டும் விட்டுவிடாதே..” என்று நாரத கான சபா பக்கம் இருக்கும் மியூசிக்கல் கடையில் கை நிறைய எம்.எஸ்.ஸும், லால்குடியையும் வாங்கித் தந்தார். அம்மா தேங்காய் எண்ணையில் வறுத்த நேந்திரங்கா சிப்ஸ்(மாப்பிள்ளைக்குப் பிடிக்குமாம்), பருப்பு பொடி, குழம்பு பொடி, சுமித் மிக்ஸி என்று அடுக்க ஆரம்பித்தாள்.

அனுவின் அப்பா மஹாதேவன் ஐ.ஓ.சியில் அந்தக் காலத்து என்ஜினியர்; தற்போது ஓய்வு பெற்றுவிட்டார். வேலையில் இருக்கும்போதே ஒன்றரை கிரவுண்டில் மேலும் கீழுமாக இரண்டு மாடி கட்டிக்கொண்டு கோட்டூர்புரத்தில் 'கோட்டூர் கார்டன்ஸ்' காலனியில் பின்பக்கம் வாழையும், வாசலில் மாமரம், மாடியில் அனுபமாவிற்கு சங்கீத டியூசனும் ஏற்பாடு செய்தார்.

அடையாரிலிருந்து வார இறுதியில் எம்.எஸ். சிஷ்யை ஒருவர் அனுபமாவிற்கு வாய்ப்பாட்டு. “வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்”, “என்ன தவம் செய்தனை” போன்ற பிரபல பாடல்களையும் சொல்லித்தந்தாள். ஸ்வீட்டான குரலில் ஸ்ருதி பிசகினாலும் கேட்க நன்றாக இருந்ததால் அனுபமாவுக்கு பள்ளியிலும் கல்லூரியிலும் ஏதாவது ஒரு பரிசு கிடைத்தது.

இசையுலகக் கலைஞர்கள் கோஷ்டியில் சேர்ந்திருக்க வேண்டியது; ஆனால் பாட்டு சொல்லிக்கொடுக்கும் மாமிதான் “நல்ல வரன்... எனக்கு ரொம்ப தெரிஞ்சவா... சுந்தர் ஐ.ஐ.டியில் படிச்ச அடுத்த நாள் அமெரிக்கா போய்ட்டான்... அங்கே கப்பல் மாதிரி வீடு... ஒரே சிஸ்டர் காயூ, அவளும் அமெரிக்கா... அடுத்த வாரம் வரா... அழைச்சிண்டு வரேன் சென்று ஸ்ருதி கூட்டினாள்.

"பார்க்கலாம் மாமி... இப்பதான் இவ காலேஜே முடிச்சிருக்கா... மேலே படிச்சாலும் படிப்பா... அப்பறம் இவ கச்சேரி பண்ண ஆச படறா.."

“அதுக்கென்ன செஞ்சுடலாம்... இப்பவே பத்து உருப்படி தெரியும்.. இன்னும் கொஞ்சம் பிராக்டிஸ் செஞ்சா... ராகம், ஸ்வரம் எல்லாம் தன்னால வந்துடும்...” என்று சொல்லி சுந்தரை அடுத்த வாரம் திடுதிப்பென அழைத்துக்கொண்டு வந்தாள்.

சுந்தர் சிகப்பு ரோஜாக்கள் கமல் மாதிரி இருந்தான். சகஜமாகப் பேசிக்கொண்டு சுமாரான காபியை 'வாவ்' என்று பொய் சொல்லிவிட்டு, போகும் போது “எனக்கு அனுவைப் பிடிச்சிருக்கு... நீங்க டைம் எடுத்துக்கோங்க.. முடிஞ்சா நாளைக்கு எஸ் சொல்லுங்க என்று சொல்லிவிட்டுச் சென்றான். சுந்தரின் அம்மாதான் “சுந்தர் பெரியப்பா பெங்களூரில் இருக்கார் பேசிட்டு செல்றேன்” என்று சொல்லிவைத்தாள்.

மஹாதேவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. “இப்படி ‘டவுன் டு எர்த்’ பையன் கிடைக்க மாட்டான்... ஏதேதோ படிச்சிருக்கான்.”

அம்மா “அனுவிற்கு என்ன குறைச்சல்.. பிடிக்காம இருக்க?”

அனுபமாவிற்கு என்ன சொல்லுவது என்று தெரியாமல் குழம்ப, இரண்டு நாளில் சரி என்று சொல்லிவிட்டார்கள்.

நிச்சயதார்த்தம், கல்யாணம், வீசா என்று சினிமா போல அடுத்தடுத்த சீன்களில் எல்லாம் நடந்துவிட, சில மாதங்களில் அமெரிக்காவிற்குச் சென்றாள்.

சுந்தர், நாத்தனார் காயத்ரி, டாய்லெட் பேப்பர், டயட் பெப்சி, பீட்சா என்று எல்லாவற்றையும் அனுபமா பழகிக்கொண்டாள். பெரிய ஜாடி காபி, தொடை வரை தெரியும் பெண்கள் எல்லாம் கொஞ்ச நாள் ஆச்சரியமாக இருந்தது.

“அங்கே இப்ப என்னமா டைம் ?” என்று அப்பா அம்மாவிடம் காலிங் கார்ட்டில் பேசிக்கொண்டு இரண்டு வருஷம் ஓட்டினாள்.

இரண்டு வருஷத்துக்கு பிறகு ஒரு முறை இந்தியா வந்து சோளா பூரி, அப்புசாமி-சீதா பாட்டி புத்தகம், பிளவுஸ், சுடிதார் தைப்பது, வட பழனி முருகன், நண்பர்கள், உறவினர்கள் சாக்லெட் வினியோகம் என்று காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு, அப்பா அம்மாவுடன் பேசுவதற்குள் திரும்ப ஊருக்குப் புறப்பட்டாள். அமெரிக்கா சென்ற போது குளிரில் அழுகையே வந்தது.

அடுத்த வருஷம் பெண் குழந்தை ரம்யா பிறந்தது. மாமியார் தான் வந்து பார்த்துக்கொண்டாள். ரம்யா அப்படியே பெண் சுந்தர். எட்டாவது படிக்கிறாள். தமிழில் பேசினால் ஆங்கிலத்தில் பதில் சொல்லுவாள். ஷாருக்கனை மட்டும் பிடிக்கும். ரம்யாவை அழைத்துக்கொண்டு திருப்பதிக்கு மொட்டை போட வந்தபோது வாந்தி வர, திரும்ப ஊருக்கு எப்படா போவோம் என்றாகிவிட்டது. இந்தியா வந்தால் கண்ணாடி மாதிரி பாதுகாத்து அனுப்ப வேண்டும்.

தாத்தா பாட்டியுடன் ஸ்கைப்பில் “ஹாய்.. வென் ஆர் யூ கமிங் ஹியர்” போன்ற சம்பிரதாயக் கேள்விகள் கேட்டுவிட்டு ”சியூ” என்று மறைந்துவிடுவாள். ஒருமுறை ரம்யா ஹாலோவீன் வேஷம் போட்டுக்கொண்டு ஸ்கைப்பில் வர, மஹாதேவன் நடுங்கிவிட்டார்.

“குழந்தைக்கு ஏதாவது ஸ்லோகம், பாட்டு சொல்லிக்குடுமா...”

சில சமயம் மாப்பிள்ளை பக்கத்தில் இல்லை என்றால் “வானத்தின் மீது மயிலாட கண்டேன்” பாடு என்று அனுபமாவை பாடச்சொல்லிக் கேட்பார்.

“இங்கே இருந்திருந்தேனா எங்கயோ போயிருப்ப” என்று ஆதங்கப்பட்டுக்கொள்வார்.

ரம்யா பிறந்து வளர்ந்தபின் சுந்தருடன் புரியாத சாக்கர் விளையாட்டை பார்ப்பதைத் தவிர்த்து, அவனுக்கு முன் தூங்கிப்போனாள். யூடியூபில் சங்கீதம், சூப்பர் சிங்கர் எல்லாம் பார்த்து 'சின்னப் பசங்க எப்டிப் பாடறது' என்று பொறாமைப்பட்டாள். வீட்டில் பாட ஆரம்பித்தாள். நண்பர்களின் குழந்தைகளுக்கு ஜண்டை வரிசை, பஜன் சொல்லிக்கொடுத்தாள். அமெரிக்காவில் நடக்கும் டோலோற்சவம், தமிழ் சங்கம் நடத்தும் விழாக்களுக்கு திருப்பாவை, கடவுள் வாழ்த்து பாடுவது என்று அனுபமா பிரபலமானாள்.

சமீபத்தில் எம்.எஸ். பாடிய 'குறையொன்றும் இல்லை...' பாடல் ஏதோ ஒரு நிகழ்ச்சியில் பாடி அதை ஒருவர் ஃபேஸ்புக்கில் பகிர, இன்னும் யாராவது 'லைக்' போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

நவம்பர் மாதம் தாங்க்ஸ் கிவிங்கிற்கு இரண்டு வாரம் முன் கூட்டாஞ்சோறு என்னும் பாட்-லக் நடத்தப்பட்ட போது அந்த அறிவிப்பு நிகழ்ந்தது. பர்முடாவுடன் ஒருவர் பியரை கையில் வைத்துக்கொண்டு

“நண்பர்களே எம்.எஸ். அம்மாவின் நூற்றாண்டு விழா நடந்து கொண்டிருக்கிறது உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும். இந்த வருடம் அமெரிக்க வாழ் நண்பர்கள் எல்லாம் சேர்ந்து 'ஸ...ரி...க...ம...ப...த...நி...' என்ற அமைப்பை உருவாக்கியுள்ளோம். சென்னையில் நடக்கும் சங்கீத சீசனில் நம்மை போன்ற என்.ஆர்.ஐகளுக்கு அவ்வளவாக வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அதனால் கர்நாடக சங்கீதம், நடனம் தெரிந்த நம்முடைய மனைவி, குழந்தைகள் மட்டுமே கலந்துக்கொள்ள இந்த பிரத்தியேக அமைப்பு. வரும் டிசம்பர் மாதம் முதல் தேதியில் தொடங்க இருக்கிறோம்.
எம்.எஸ்.அம்மா பாடிப் பிரபலப்படுத்திய பல கீர்த்தனைகளுடன் இந்த வருடம் துவக்க திட்டமிட்டுள்ளோம். ... எம்.எஸ் அம்மா பாடிய பல பாடல்களை பாட நம்முடைய அனுபமா சுந்தர் சம்மதித்தால் அவருடைய கச்சேரியையே முதல் கச்சேரியாக முடிவு செய்யலாம்” என்ற போது எல்லோரும் பெரிதாக கைத்தட்டி வரவேற்றார்கள்.

அனுபமாவிற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஆனால் உள்ளுக்குள் போகவேண்டும் என்று முடிவு செய்தாள்.

வீட்டுக்கு வந்த போது சுந்தர் “தீஸ் பீப்பிள் ஆர் நட்ஸ்... இன்னும் மூணுவாரம் தான் இருக்கு அதுக்குள்ள எப்டி?.. ”

“டிராவல் ஏஜன்சியுடம் கேட்டுப்பாருங்க... போன வருஷம் உங்க தங்கை இப்படித்தான் ஒரே வாரத்துல அம்மா கண் ஆப்பரேஷனுக்குப் போனா”

”மாம் ஆர் யூ சீரியஸ்” என்றாள் ரம்யா.

“நீயும் வாயேன்...”

“ஓ நோ... ஐ அம் ஃபைன் ஹியர்...” என்று மிரண்டு போய் அப்பாவைப் பார்த்து கண்ணடித்தாள்

அனுபமாவிற்கு எரிச்சலாக வந்தது. “நெட்டில பார்க்கிறேன்... ஏதாவது ஓர சீட்டாக கிடைக்கும்”

”பாரு பாரு.. எவிரி திங் வில் பி டபிள் த பிரைஸ்”

அனுபமா லாப்டாப்பை திறந்து டிக்கெட் பார்க்க, விலை எல்லாம் சொத்தை எழுதி வைக்கவேண்டும் போல இருந்தது. சுந்தர் எட்டிப்பார்த்து, “மை காட்.. திஸ் இஸ் ரியலி கிரேஸி” என்றான். “ஜெஸ்ட் இக்னோர் திஸ்.. அடுத்த வருஷம் எப்படியும் இது நடக்கும் அப்போ போகலாம்.. நானே அழைச்சுண்டு போறேன்... ”

“இல்லை சுந்தர்... என்னுடைய, என் அப்பாவோட ஆசை... நான் மெட்ராஸ்ல ஒரு கச்சேரி பண்ணணும்றது... அதக்குள்ள கல்யாணம்... இங்க வேளாவேளைக்கு சமையல் செய்யறது, வீக்கெண்ட் எங்கயாவது அலையறது, துணி அயர்ன் செய்யறது, ரம்யாவை ஸ்கூலுக்கு, க்ளாஸ்களுக்கு ட்ராப் பிக்கப் பண்றது... எனக்குன்னு எப்ப டைம் ஸ்பெண்ட் பண்ணியிருக்கேன்? அடுத்த வருஷம் அப்பா நல்லபடியா இருக்கணும்... உங்களுக்கு ஏதாவது ஆபீஸ் வேலை... இவளோட படிப்பு... இல்லை உங்க அம்மா இங்கே வருவா... ஏதாவது காரணம் வரும், போகமுடியாது... ஐ ஹேவ் டிசைடட்...”

“டிக்கெட் விலையைப் பார்த்தியா ?”

“நான் பாட்டு கிளாஸ் எடுத்து சேர்த்த டாலர் இருக்கு அதுல செலவு செஞ்சுக்கிறேன்!”

சுந்தர் கோபமாக “யுவர் சாய்ஸ்” என்று ஒரு ஆப்பிளைக் கடித்து முழுங்கிவிட்டு தூங்கப் போனான்.

அனுபமா டிக்கெட் புக் செய்துவிட்டு அப்பாவிற்கு போன் செய்து சொன்னாள்.

“ஏண்டி மாப்பிள்ளையும் அழைச்சுண்டு வாயேன்.. “

“இல்லப்பா அவர் நானே போக வேண்டாம்னு சொல்லிண்டிருக்கார்”

”ரம்யா ?”

“அவளும் இங்கேயே இருக்கட்டும்... பீட்சா சப்பிடுண்டு அப்பாவுக்கு காப்பி போட்டுண்டு...”

அப்பா ஏதோ சொல்ல நினைத்தார் ஆனால் பேசவில்லை.

“நான் மட்டும்தான் வரேன்... இந்தத் தடவை எனக்காக... கச்சேரி பண்ண... அம்மாகிட்ட சொல்லிடு”

“அம்மா இங்கேதான் இருக்கா. பேசறியா..”

“இல்லப்பா தூங்கணும் நீயே சொல்லிடு... நாளைக்கு பேசரேன்” என்று போனை வைத்துவிட்டு 'ஸ...ரி...க...ம...ப...த...நி' அமைப்புக்கு சம்மதம் என்று சின்ன மெயில் அனுப்பிவிட்டு தூங்கினாள்.

மஹாதேவனுக்கு என்ன சொல்லுவது என்று தெரியவில்லை. பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் நடப்பதை ஊகிக்கத்தான் முடிந்தது.

'சென்னையில் திருவையாறு' மாதிரி போஸ்டர் வடிவமைப்பில் நிறைய ஸ்டாம்ப் சைஸ் போட்டோவில் அனுபமா முதலில் இடம்பெற்றிருந்தாள்.

தனியாக கார் எடுத்துக்கொண்டு போய் சேவிங் கீரிம், பென்சில், பேனா, தொள தொள டி.சர்ட், சிப் லாக் பைகள் என்று கண்டதையும் தாங்க்ஸ் கிவிங் சேலில் அள்ளிப் போட்டுக்கொண்டாள். சுந்தர் போன பிறகு அப்பாவிடம் ஸ்கைப்பில் ”மெயின் பிலஹரி... அதுக்கு அப்பறம் கல்யாணி சரிவராது” என்று பாடல் லிஸ்டை மாற்றி மாற்றி அமைத்துக்கொண்டாள். தன்னுடைய 'வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்' என்ற பாடலை கடைசியில் வைத்துக்கொண்டாள். மேல்ஸ்தாயியில் அதிக நேரம் சஞ்சாரம் செய்ததால் ’சிங்கர்ஸ் நாடியூல்’ வந்து தொண்டை மக்கர் செய்தது. டாக்டர் வாய்ஸ் ரெஸ்ட் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லிவிட்டாள்.

“இது எல்லாம் ரொம்ப தேவையா? யூ ஆர் கில்லிங் யுவர் செல்ஃப்... இட் இஸ் நாட் டூலேட்... யூ ஹேவ் எ வேலிட் ரீசன் நவ்”

“திஸ் இஸ் மை... சுந்தர் என் வாழ்நாள் லட்சியம்... ஐ வில் மேக்கிட்”

“எதுக்கும் அம்மாவை ஒரு தடவை கேட்டுவிடு”

“ஏன் நீங்க இன்னும் சொல்லலையா? ஆபிஸிலிருந்து திருட்டுத்தனமா பேசுவேளே... எதுக்கு உங்க அம்மாகிட்ட கேட்கணும்.. வேணுமுனா கச்சேரிக்குக் கூப்பிடறேன்.. வந்து கேக்கட்டும்.. என் திறமை அப்பவாவது தெரியட்டும்”

”இப்ப என்ன, நீ போகணும் அவ்வளாவு தானே.. கோ.....”

”டாட் லெட் ஹெர் கோ... ஷீ எஸ் டெஸ்பிரேட்... மாம் வில் தேர் பீ லைவ் ஸ்டிரீமிங் ?”

கிளம்பும் முன் இவ்வளவு முறைத்துக்கொண்டு போக வேண்டுமா, நடப்பதெல்லாம் பிரமையோ என்று கூடத் தோன்றியது.

இரவு ஒரு மணிக்கு லுப்தான்சா விமானம் சென்னையை வந்தடைந்தது. இமிக்கிரேஷன் க்யூவில், கஸ்டம்ஸ் என்று எதுவும் எரிச்சலைத் தரவில்லை. முடிந்து வெளியே வர இரண்டு மணிக்கு மேல் ஆகிவிட்டது. வாசலில் சூடாக காபி குடித்தாள்.

மஹாதேவன் ஏர்போட்டுக்கு ஓலாவில் வந்திருந்தார்.

“நிறைய சாமான் எடுத்துண்டு வந்திருக்கே... எல்லாம் இங்கேயே கிடைக்கிறதே...”

“வெறும் கையோட வரச் சொல்றயா?”

“ஏற்கனவே வீண் செலவு... பக்க வாத்தியம் எல்லாம் ஏற்பாடு செஞ்சாச்சு... வயலின் வாசிக்கிறது சின்னப் பையன் வயலன்ஸ் இல்லாம சொன்னதைக் கேட்பான்..பெரிசா தனி எல்லாம் கொடுக்க வேண்டாம்”

“சரிப்பா கார்த்தால பேசிக்கலாம்.. ரொம்ப டயர்டா இருக்கு.. என்று காப்பி கோப்பையைப் போட குப்பைத் தொட்டியைத் தேடினாள்”

”மாப்பிள்ளை என்ன சொல்றார்...?”

“அவர் என்ன செல்றது... ஒன்னும் சொல்லலை போயிட்டு வாணு சொன்னார்”

ஏர்போர்டிலிருந்து வரும் போது அப்பா ஆலந்தூர் புது மெட்ரோ ரயில் என்று மேலே உள்ள பாலத்தைக் காண்பித்தார்.

“சென்னை மாறிண்டே இருக்கு” என்றாள் அனுபமா.

“நீ வந்து இரண்டு வருஷம் இருக்குமா?”

மறுநாள் “ஒரு எட்டு அந்த ஹாலை பார்த்துட்டு வந்துடலாம்” என்று மைலாப்பூர் சென்றனர். லஸ் பக்கம் ஒரு சந்தில் 'கே.ஆர்.கன்வென்ஷன் சென்டர்' என்ற மினி ஹால் இருந்தது. இருக்கைகள் பாலிதீன் பிரிக்கப்படாமல்; ஏஸியில் சிமெண்ட் வாசனை கொஞ்சம் மிச்சம் இருந்தது.

அலுவலகத்திலிருந்து ஒருவர் ஓடிவந்து “புது ஹால் இப்பத்தான் கட்டியிருக்கிறோம்.. அமெரிக்காகாரர்கள் புக் செஞ்சிருக்காங்க. முதல் கச்சேரி அடுத்த மாசம் ஒண்ணாம் தேதி... ஜனவரி கடைசிலதான் அவேய்லபிள்”

“டிசம்பரில் இவளும் பாடபோறா... .சும்மா பார்க்க வந்தோம்”

“கம்ப்ளீட் ஏசி...” என்று யாருடனோ மொபைலில் பேசப் போனார்.

கபாலீஸ்வரருக்கு அர்ச்சனைக்குப்பின் கற்பகாம்பாளில் அடை சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு வந்து பாடல் லிஸ்டை மீண்டும் ஒருமுறை மாற்றி அமைத்தாள்.

அப்பாவிடம் பாடிக் காண்பித்தாள். அனுபமாவிற்கு கொஞ்சம் டென்ஷனாக இருந்தது.

“எதுக்கும் பயப்படாதே.. அருமையா பாடறே... அடுத்த வருஷம் அகாடமியில் கூப்பிடுவா பாரு” என்றாள் அம்மா.

வயலின், மிருதங்கக் கலைஞர்களிடம் பாட்டு லிஸ்டை படித்துக் காண்பித்தாள்.

“ஓலா புக் செஞ்சு கொடுத்துடுங்கோ... ஜமாய்ச்சுடலாம்.”

“மழை விட்டு விட்டு வருகிறது.. நாளைக்கு கொஞ்சம் சீக்கிரமாகவே வந்துடுங்கோ...”

டிசம்பர் ஒன்றாம் தேதி அனுபமா சற்றும் எதிர்பாக்கவில்லை. மழை அவ்வளவாக இல்லை ஆனால் எல்லா இடத்திலேயும் தண்ணீர். டிவியில் நியூஸ் பார்த்தால் பயமாக இருந்தது. செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்டு... கச்சேரி நடக்குமா என்று போன் செய்தால் போன் வேலை செய்யவில்லை. வீட்டை சுற்றி தண்ணீர்.

பட்டுபுடவை, பிளாஸ்க் எல்லாம் ரெடியாக மேஜையில் இருந்தது. மின்சாரம் போனது. இன்வெர்டர் உதவியுடன் கொஞ்ச நேரம் டிவி ஓடியது. அடையாறு, கோட்டூர்புரம் பாலத்தில் பயணம் செய்யத் தடை என்று ஃபிளாஷ் நியூஸ் போய்க்கொண்டிருந்தது. வீட்டை விட்டுப் போகமுடியாது என்று தெரிந்தபோது வீட்டு வாசலிலும் அனுபமாவின் கண்களிலும் தண்ணீர் எட்டிப் பார்த்தது.

”என்னடி இப்ப எதுக்கு அழறே... எவ்வளவு பேர் எப்படி கஷ்டப்படறா பாரு... இன்னிக்கு இல்லைனா நாளைக்கு” என்றாள் அம்மா.

“இல்லமா இதுக்குத் தான் இவ்வளவு கஷ்டப்பட்டேன். சுந்தரிடம், அவர் அம்மாவிடம் எல்லாம் பேச்சுகேட்க வேண்டியிருக்கு... எவ்வளவு மைல் கடந்து... இந்த பாழாப் போன மழை இப்பவா வரணும்?”

பக்கத்தில் சேரிக் குழந்தைகள், அம்மாக்கள் எல்லாம் ஏதோ மூட்டை முடிச்சுகளுடன் வந்து இவர்களின் வீட்டு வராண்டாவிலும் கார் ஷெட்டிலும் ஒதுங்க ஆரம்பித்தார்கள். குழந்தைகள் எல்லாம் கருப்பாக அழகாக இருந்தது. இந்த மழையிலும், பலூன் ஊதிக்கொண்டும் சிரித்து விளையாடிக்கொண்டுமிருந்தன. மாலை ஐந்து மணிக்கே இருட்டாக, நிறைய பேர் வந்து தஞ்சம் புகுந்தார்கள்.

அனுபமா தீர்மானமாக “அப்பா நான் பாடப் போறேன்” என்றாள்.

“உனக்கு என்ன பைத்தியமா ... எப்படி வெளியே போவே?”

”வெளில இல்ல இங்கேயே..”

பக்கத்து குடிசை ஜனங்களை உட்கார சொன்னாள். அம்மா ஊருக்கு செய்து வைத்த ஓமப்பொடியை எல்லோருக்கும் கொடுக்க... பக்க வாத்தியம் எதுவும் இல்லாமல் வள்ளலலாருடைய

”வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்
மயில்குயில் ஆச்சுதடி...”
என்ற பாடல் கணீர் என்று ஒலித்தது.

”சாதி சமயச் சழக்கைவிட் டேன் அருட்
ஜோதியைக் கண்டேனடி” என்று பாடும் போது கண்ணீர் வந்தது.
கூட்டம் புரியாமல் பார்த்துக்கொண்டு இருந்தது.

பாடி முடித்த பின் அனுபமாவிற்கு இந்த மாதிரி திருப்தியாக வேறு எப்போதும் பாடியதாக நினைவுல்லை.  அப்பா “அசத்திட்டேடி” என்று அழுதுதேவிட்டார்.
குடிசை ஜனங்கள் கைத்தட்டினார்கள்.  அனுபமா உற்சாகமாக “உங்களுக்கு பிடித்த பாட்டு எதுவானா சொல்லுங்க பாடறேன்” என்றாள்

கூட்டத்தில் ஒரு சிறுவன் “ஆலுமா டோலுமா பாடு அக்கா” என்றான்

- சுஜாதா தேசிகன்
நன்றி: கல்கி பொங்கள் சிறப்பிதழ், ஜனவரி 2016

Comments

  1. சிறகு இரவிச்சந்திரன்January 12, 2016 at 9:02 PM

    அருமை தேசிகன்!

    ReplyDelete
  2. வாவ் !! அருமை .. ! அழகான காட்சியை கண்களில் கொண்டு வந்த நரேஷன் ! எக்ஸலண்ட் !! தாளாத இசை தாகம் , தடை போடும் வாழ்வு , பெண்ணின் வாழ்க்கை , திருமணத்திற்கு பின் அவளின் ஆசைகள் தீக்கிரையாகும் தருணங்கள் , இப்படி எல்லாத்தையும் படம் பிடிச்சு , அனுபமா வின் கண்ணாடியை நாங்கள் அணிந்து வாழ்ந்துப்பார்த்த உணர்வு.. !!

    ReplyDelete
    Replies
    1. அனுபவித்து படித்தற்கு நன்றி

      Delete
  3. சார், கொஞ்ச நாளாகவே உங்க கதைகள் மற்றும் கட்டுரைகளை வாசித்துக் கொண்டு வருகிறேன். சுஜாதா அவர்களின் inspiration தெரிந்தாலும், உங்களுக்கு என்று ஒரு தனி முத்திரையையும் கவனிக்க முடிகிறது.

    ஆனால் இந்த கதை over the top சார். அதுவும் கடைசியில் அந்த twist அக்மார்க் சுஜாதா பாணி என தோன்றுகிறது. The plot thickens என்ற சொலவடையின் பிரயோகத்தை கண்கூடாகக் காண முடிகிறது. It is such a classic feel-good story!

    நன்றி
    விக்ரம்

    ReplyDelete
    Replies
    1. அப்படியா :-) நன்றி தொடர்ந்து படியுங்கள்.

      Delete
  4. ஸ்ரீனிவாசன்January 13, 2016 at 10:12 AM

    அருமை..!

    ReplyDelete
  5. அருமையான கதை. நிஜமாகவே அழுகை வந்து விட்டது.

    கடைசி வரி ட்விஸ்ட் யதார்த்ததைக் காட்டுகிறது. கூடவே சில விஷயங்களைச் சொல்லாமல் சொல்கிறது. மிகச் சிறப்பான சிறுகதை.

    ReplyDelete
  6. Very nice story. Any one living outside Will be able to relate so much. Felt the narration going too fast at times due to amount of information you wanted to share. Great attention to her feelings. Thanks for a nice one

    ReplyDelete
  7. சுஜாத்தாவே உங்கள் உடம்பில் புகுந்து கொண்டு எழுதியதாக உணர்கிறேன், அவ்வபோது நீங்களும் விழித்திடுகிறீர்கள் - நன்றி பாலகண்ணன்

    ReplyDelete
  8. மிக நேர்த்தியான கதை. தொடர்க சகோ.

    ReplyDelete
  9. //மறுநாள் “ஒரு எட்டு அந்த ஹாலை பார்த்துட்டு வந்துடலாம்” என்று மைலாப்பூர் சென்றனர்.// இந்த லைன் வரைக்கும் பெரிய impact இல்ல. இதன் பிறகு narration பின்னிப் பெடல், அருமையான கிளைமேக்ஸ், எதிர்ப்பார்க்கலை, பார்த்திருந்தாலும் கூட, நீங்கள் விவரித்த விதம், முடித்த விதம் வெகு நேர்த்தி, பாராட்டுக்கள்! Keep it up

    ReplyDelete
  10. சொல்ல வார்த்தைகள் இல்லை.. அனுபமாவிற்காக நானும் அழுகிறேன்... அருமையான படைப்பு..

    ReplyDelete
  11. Dear Desikan
    Enjoyed your short story

    ReplyDelete
  12. அமெரிக்கால ஏதுங்க சாக்கர்? அமெரிக்கன் ஃபுட்பால் என்று ஓவல் ஷேப் பந்தை வைத்துக்கொண்டு, அதைக் கையில் எல்லாம் எடுத்துப் போட்டு, முரட்டுத்தனமாக விளையாடும் கந்தறகோளமான ஆட்டம்தான தெரியும்? சாக்கர் வேர்ல்ட் கப் லாஸ் ஏன்ஜலிஸ்ல நடந்த விஷயமே அங்கு நிறைப் பேருக்குத் தெரியவில்லை!

    ReplyDelete
  13. The story is nice. I could see sujatha's touches everywhere.

    ReplyDelete
  14. I do not know whether I cursed the rain when I had a hurting fall, but I really cursed the rain several times feeling very depressed for Anupama's dedication and will power. That was the ultimate urge of feeling that you had brought in me Desikan!!!!!! Your style is exceptionally different and gripping. Natural flow of events with such a similarity happening in many families!!!!! Enjoyed!

    ReplyDelete
  15. Desikan. You are not writing stories. You narrate real life events with a touch of drama.

    Please continue to write. You give long gap between two editions

    ReplyDelete
  16. நறுக் தெறிச்சாப்ல னு ஒரு உதாரணம் சொல்வா!!!அப்படி இருக்கு!!சுஜாதா எப்படி வார்த்தையை விரயம் பண்ண மாட்டாரோ அதே மாதிரி!!! சபாஷ்!!!💐💐💐💐

    ReplyDelete
  17. You have an unique style of writing short stories. It has all emotions and combines cultures and different eras. Really a nice imagination and writing. Keep going! Hoping to see you some time. Pl send me your mobile no. to my mail id

    ReplyDelete
  18. ஒரே வார்த்தைல சொல்லணும்னா அருமை. I am spellbound after reading the story.

    ReplyDelete
  19. ஆன்மிக தொடர் எழுதுவது ரெயில் தண்டவாளம் போல.பிசகாமல் பயணிக்க இயலும்.NRI கதைகள் நாடகங்கள் நெறைய பார்த்து,கேட்டு இருக்கிறோம்.47 நாள் சினிமா பயமுறுத்தல் சுஜாதாவின் சேச்சு...இதெல்லாம் தாண்டி இன்றைய NRI விஷயங்கள் அடுத்த கட்டத்தில் மெச்சூர்டாகவும் சந்தோஷமாகவும் இருக்கும் தகவல்கள் நெறைய கேள்வி படும் சூழலில்...TMK வின் ஆகாத்யத்துக்கு நேர்மாறான ஒரு அனுபமாவை மூணு புள்ளி கோலத்தில் ஒரு ரங்கோலியே வடிவமைக்க முடியும்னா அது இன்றைய சூழலில் தேசிகனால்தான் இயலும்
    சிறப்பு

    ReplyDelete

Post a Comment