Skip to main content

சினிமாவும் எழுத்தும்

1ஆம் தேதி சம்பளம் முக்கியம். வேலை முக்கியம். வேலை போக மற்ற நேரத்தில் கதை கட்டுரை எழுதலாம். என்னையே எடுத்துக்கொள் நான் வேலை பார்த்துக்கொண்டு தான் கதை
எழுதினேன். முழு நேரமும் எழுதினால் குடும்பம் நடத்த முடியாது. ஒரு முறை சுஜாதவிடம் பேசிக்கொண்டு இருந்த போது அவர் எனக்கு கொடுத்த அறிவுரை.
மா.வே.சிவகுமார் பற்றி பல அஞ்சலி கட்டுரைகள் படிக்கும் போது இது நினைவுக்கு வருகிறது.
தமிழ் எழுத்தாளர்கள் எல்லாம் எப்படியாவது சினிமாவுக்கு போக வேண்டும் என்ற துடிப்பு ஏன்
வருகிறது ஏன் என்பது இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது. அப்படி சென்றவர்கள் தங்கள் எழுத்து திறமையை வீணாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பது என் எண்ணம்.
ஐந்து வருடம் முன் ஒரு இயக்குனர் என்னை தி.நகரில் ஒர் இடத்துக்கு வர முடியுமா எங்கள் படத்துக்கு நீங்கள் தான் வசனம் எழுத வேண்டும் என்றார்.
”உடனே வர முடியாது, நான் பெங்களூரில் இருக்கிறேன், சனி ஞாயிறு முடியும்” என்றேன்.
“சார் ஒரு மாசம் லீவு போட்டுவிட்டு வாங்க முழுசா டிஸ்கஷன் பக்க செய்திடலாம்.. ”
“ஒரு மாசம் எல்லாம் முடியாது.. டிசம்பர் மாசம் இரண்டு வாரம் முழுசா லீவு கிடைக்கும்”
“ஓ. அப்படியா ? சரி ஒரு வாரம் ?”
“சனி ஞாயிறு.. எஸ்டரா திங்கள் ஒரு நாள்... முழு வாரம் ரொம்ப கஷ்டம்”
சென்னையில் ஒரு வார இறுதியில் அவரை சந்தித்தேன். ரூம் முழுக்க சிகரேட் புகை. சில பாட்டில்கள். சிப்ஸ் பாக்கெட், பாத்ரூமிலிருந்து ஒரு முகம் எட்டிப்பார்த்தது (அது இந்த கட்டுரைக்கு தேவை இல்லை)
கதையை இரண்டு வரியில் மூன்று நிமிஷம் சொன்னார்.
பக்கத்தில் இருந்தவர் “சூப்பர் சார்.. சம மேட்டர்... புதுசா இருக்கு” என்று ஜால்ரா அடித்தார்
கொஞ்ச நேரம் பேசிவிட்டு திரும்ப கூப்பிடுகிறேன் என்று ஊர் வந்து சேர்ந்தேன்.
அப்பறம் நானும் கூப்பிடவில்லை. அவரும் கூப்பிடவில்லை.
சில வருஷங்களுக்கு முன் அந்த இயக்குனர் ஒரு நடிகையுடன் பிரச்சனை கோர்ட் கேஸ்
என்று பிரபலமானார். எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் போனது நான் செய்த அதிர்ஷ்டம்.

Comments