Skip to main content

’ஜல்லி’ கட்டுக்கதை

"ராம் நிச்சயம் நீ போய் தான் ஆக வேண்டுமா ?” என்றாள் சிந்து
”நிச்சயமாக. ராசியுடன்... இதில் என்ன சந்தேகம்.. ?”
“ராசியுமா ?”
“ஆமாம்.!“
“அது குழந்தை.. இந்த மாசிக்கு தான் பதினைந்து வயசு முடிகிறது... அதை எதற்கு ?”
“தமிழருடைய வீர விளையாட்டை அது எப்போழுது தெரிந்துகொள்ளும் ?.. “
“இதில் என்ன வீரம் இருக்கிறது...? இந்த நூற்றாண்டில் பலருக்கு தமிழே தெரிவதில்லை”
ராம் கைகடிகாரத்தை பார்த்த போது ரத்த அழுத்தம் 140 என்று காட்டியது.
“நான் போகப் போகிறேன்! இதற்கு மேல் இந்த டாப்பிக் வேண்டாம்!” என்றான் தீர்மானமாக



ராசி தன் தேடும் கண்ணாடியை போட்டுக்கொண்டு ஜன்னல் முன் கண்சிமிட்டினாள்.
’மஞ்சுவிரட்டு’ என்று எழுத்துக்கள் ஜன்னல் கண்ணாடியில் ஒளிர்ந்தது.
”மஞ்சுவிரட்டு .. அப்படி என்றால் என்ன ?” என்றது ராசி

பொருளைக் குறிக்கும் படர்க்கை மாதிரி ராசியை குறிப்பிடுவதற்கு காரணம் செயற்கை முறையில் கருமுட்டையை பல ஆண்டுகளுக்கு முன் உறைய வைத்து பிறந்த குழந்தை ராசி. சட்டப்படி ராம், சிந்து இருவரின் முதல் எழுத்தும் குழந்தைக்கு பெயராக ராசி என்று அரசாங்கத்தால் வைக்கப்பட்ட பெயர்.  பதினைந்து வயசுக்கு பிறகு அரசாங்கம் இதை ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ அன்றைய மக்கள் தொகை கணக்குப்படி தேர்வு செய்து அதற்கு தகுந்தார் போல் மாத்திரை கொடுத்து, ஒரு மணி நேரம் சின்ன அறுவை சிகிச்சை மூலம் ஆண்/பெண்ணாக மாற்றுவார்கள்.

ராசி கேட்ட கேள்விக்கு ராமுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.
“அது தான் ஜல்லிக்கட்டு” என்றான் சுறுக்கமாக.
”அலுவலக வேலையை தவிர ஒன்றும் தெரியாது... பல நூற்றாண்டுகளுக்கு முன் நம் முன்னோர்கள் தங்கள் வீரத்தை இந்த விளையாட்டில் காண்பித்தார்கள். காளையை அடக்கும் வீரர்களுக்கு பெண் கொடுத்து திருமணம் செய்து வைத்தார்கள்... இது ஒரு தகுதியாக இருந்தது... ” என்று சிந்து சொன்ன போது
ராசி “ஓ...இப்ப என்ன தகுதி வேண்டும்... ” என்றது.
“இப்ப ஜல்லிக்கட்டு எல்லாம் இல்லை ஜட்டிக்குள் ஏதாவது இருந்தால் போதும்” என்று சிரித்தான் ராம்

”உங்க அசட்டு ஜோக் போதும் நாளைக்கு பொங்கல் அதற்கு ஏற்பாடு செய்ய சொன்னேனே?”
“நேற்றே பொங்கல் கிட் வாங்கிவிட்டேன்” என்று ராம் ஒரு டப்பாவை காண்பித்தான்.
’பத்து நிமிஷத்தில் பொங்கும் உத்திரவதம்’ என்று அட்டைப்பெட்டியில் பெரிசாக அச்சடித்திருந்தார்கள். கீழே சின்ன எழுத்தில் 'நாளை பொங்கல் வைக்க நல்ல நேரம் 10.12am(சுத்த வாக்கிய பஞ்சாகம்). சரியாக 101 டிகிரியில் 10:12 அடுப்பில் வைத்தால் 10:22க்கு பொங்கும். தமிழர் திருநாள் தைப் பொங்கல் வாழ்த்துகள் !!’
ராசி ஆர்வமாக டப்பாவை பிரித்தது.
உள்ளே சின்ன பாத்திரமும், பையில் அரிசி, பருப்பு, வெல்லம், ஏலக்காய் கலவையும் கொடுத்திருந்தார்கள். கொலஸ்ட்ரால் எச்சரிக்கை என்ற பாக்கெட்டில் நெய் உறைந்து போய் இருந்தது. பொங்கல் பொங்கி வழிவதை துடைக்க ஒரு துணியும் சேஃப்டி டிப்ஸ் புத்தகம், இலவச இணைப்பாக இரண்டு ஸ்பூன்; மூன்று உடையாத முந்திரியும் இருந்தது.

மறுநாள் சரியாக பத்து மணிக்கு ”பீப் பீப் பொங்கலோ பொங்கலோ சொல்ல ரெடியா ? பீப் பீப்” என்றது அட்டைப்பெட்டி. சிந்து உடனே டப்பாவை பிரித்து அடுப்பில் வைத்தாள்.
மத்தியானம் டிவியில் இந்திய தொலைக்காட்சியில் கடந்த நூற்றாண்டு பட்டிமன்றம் ஒன்று ஓடிக்கொண்டு இருந்தது.

”நாளைக்கு தானே ஜல்லிக்கட்டு ? என்ன செய்வார்கள்” என்று ராசி ஆர்வமாக.
அரசாங்கமும் உச்ச நீதிமன்றமும் நூற்றாண்டுக்கு முன் தடை செய்த ஒரு விளையாட்டை . இன்னும் இரண்டு நாட்களில் பார்க்க போகிறோம் என்று துடிப்பு இருந்தது.

ராம் மீண்டும் தன் எள்ளுத்தாத்தா சின்ன வயசில் பார்த்த்தை தனக்கு தோன்றிய கற்பனையுடன் சேர்த்து விவரிக்கத் தொடங்கினான்.

“திரும்பவும் அதே கதையா ?” என்று சிந்து பட்டிமன்றத்தை ஓரத்தில் தள்ளிவிட்டு தன் தோழியுடன் பேச ஆரம்பித்தாள்.

மத்தியானம் ராம், ராசி இருவரும் மதுரைக்கு புறப்பட்டார்கள்.
”ஜாக்கிரதை... பேசாம வீட்டில் இருந்துக்கொண்டு கடந்த நூற்றாண்டு பட்டிமன்றம், சினிமா பார்க்கலாம்..”
“ஐயோ அம்மா.. அதை எல்லாம் பார்த்தால் மூளை மழுங்கிவிடும்...ரிசர்ச் செய்திருக்கிறார்கள்”

ராம், ராசி மதுரைக்கு வந்து இறங்கிய போது வீசா வாங்க வேண்டியிருந்தது.
“எதற்கு போகிறீர்கள் ?” என்று அந்த வீசா அதிகாரி கேட்ட போது ராம் அழகர்கோயில், தேக்கடி என்று சொன்னதை நம்பாமல்
“இப்ப சீசன் இல்லையே “
“அழகர் கோயில் தோசை சாப்பிட வந்தோம்” என்று போய் சொன்னான்.
வேண்டா வெறுப்பாக கண்ணாடி மேஜையை பார்த்து ஏதோ சொல்ல, பேப்பர் ஒன்று வந்து விழுந்தது. கைநாட்டை முத்திரையாக குத்திவிட்டு ராம் கையில் கொடுத்த போது அதில்

“அழகர் கோயில் தோசையில் அளவுக்கு அதிகமாக டால்டா இருக்க வாய்ப்பு இருக்கிறது. சாப்பிட்ட பின் உங்கள் உடல் நலத்துக்கு அரசு பொறுப்பாகாது என்பதை நினைவு கூறுகிறோம். தேக்கடி நீர்வீழ்ச்சிக்கு தகுந்த பாதுகாப்புடன் செல்ல வேண்டும். அலங்காநல்லூர் பக்கம் போகக்கூடாது. சட்டப்படி அது குற்றம். மூன்று வருட சிறை தண்டனை மற்றும் அபராதமாய்... . மேலும் உங்கள் குடியுரிமை பறிபோகும் வாய்ப்பும் இருக்கிறது”என்று எச்சரித்திருந்தார்கள்.

’டிங்’ என்ற சத்ததுடன் குறுஞ்செய்தி வந்திருந்தது “நீங்கள் கையில் வைத்திருக்கும் பேப்பர் அரசாங்க சொத்து. போகும் போது திருப்பி கொடுக்க வேண்டும். பேப்பரை வேஸ்ட் செய்யாதீர்கள்” என்பதை படிக்கும் போது

”ஹாய் ராம்” என்று குரல் கேட்டு திரும்பி பார்த்த போது குணா வந்திருந்தான்
“விசா பிரச்சனை இல்லையே ? விசா அம்மணி என்ன கேட்டா?”
“அவளுக்கு என் மீது சந்தேம்”
“மாட்டுபொங்கலுக்கு முதல் நாள் வந்தா...  சந்தேகம் வராம காதலா வரும்?”
“காளை ரெடியா ?”
“ஒரு மாசமா ரெடி... தினமும் பிராக்டிஸ்...சாராயம் இல்லாமலே நல்ல வேகம்!”
“சாராயம் எல்லாம் கொடுக்கலாமா ?” என்றது ராசி
“கொஞ்சமா கொடுப்போம்.. நாளைக்கு ஆசனவாய்ல கொஞ்சம் மிளகாய்பொடியும் கூட உண்டு” என்று குணா சிரித்தான்.
“எரியுமே! பாவம் இல்லையா ?” என்று ராசி முகத்தில் கலவரம் தெரிந்தது.
“தொன்றுதொட்டு வரும் பழக்கம்”


மறுநாள் காலை குணா வண்டியை ஓட்ட ராசி வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தது.
அலங்காநல்லூர் என்ற போர்ட் வந்த போது
”எச்சரிக்கை... இது தடைசெய்யப்பட்ட இடம்... என்று ஜிபிஎஸ் அலரியது”
“அந்த சனியனை அணை” என்று ஏதையோ தட்ட ஜிபிஎஸ் ஊமையானது.

ராசிக்கு கண்களில் பரபரப்பு தெரிந்தது.
வண்டியை ஒரு மரத்துக்கு கீழே நிறுத்திவிட்டு அதன் மீது ஒரு போர்வை போத்தினான் குணா
“இது என்னடா”
”மேலேயிருந்து செயற்கைகோள் நம்மளை கண்டுபிடிக்க முடியாது என்று கூகிள் மாப்பை தன் டாப்பில் உயிர்பெற செய்து பார்த்த போது இவர்கள் போட்ட கட்டம் சட்டை என்று சகலமும் தெரிந்தது. ஆனால் அவர்கள் வந்த வண்டி அதில் தெரியவில்லை!”
“சைனா சரக்கு...போன மாசம் வாங்கினேன்.. வா சீக்கிரம் அப்பறம் இடம் கிடைக்காது” என்று வேகமாக நடந்தார்கள்.

போகும் வழி எல்லாம் சில இடங்களில் வண்டியும் அதன் மீது போர்வையும் போர்த்தியிருந்தது.
”போலீஸ் வராதா ?”
“வரும் ஆனா வராது” என்று சிரித்தான் குணா.

”பண்பாட்டை மீட்டெடுப்போம்!
கலாச்சாரம் காத்திடுவோம்!
சல்லிக்கட்டை நடத்திடுவோம்”
என்ற வாசகம் மரத்தின் உடம்பில் “PG available.. " விளம்பரத்துக்கு மீது ஒட்டப்பட்டிருந்ததை தாண்டி நூறு அடிக்கு பிறகு கிராமத்து கோயில் ஒன்று அய்யனார் சிலையும் தென்பட, அங்கே இருந்த மணியை இரண்டு முறை அடித்தான் குணா.

“இது என்னடா பொன்னியின் செல்வனில் ரவிதாசன் வரும் காட்சி மாதிரி இருக்கே” என்றான் ராம்.
கோயில் கதவு மூன்று நிமிஷத்துக்கு பிறகு திறந்தது.
வெளியே வந்த ஆசாமியின் முகத்தில் பதற்றம் தெரிந்தது.
“அர்ச்சனை யார் பேருல”
“காளயன்... ரிஷப ராசி” என்று சங்கேத பாஷையில் பதில் சொன்னான் குணா
ரிஷப ராசி என்று ராசி தன் தேடும் கண்ணாடியில் தேட மாடு படம் வந்தது.
“சரி வாங்க என்னுடன்” என்று கோயிலுக்குள் அழைத்து சென்றார். கதவு தானாக சாத்திக்கொண்டது. கொஞ்சம் நேரம் இருட்டுக்கு பிறகு அங்கே சின்ன மஞ்சள் விளக்கு ஒன்று தெரிந்தது. அதன் பக்கம் ரயில் சுரங்க பாதை மாதிரி வர அதில் கீழே இறங்கிப்போன போது
“பணம் பாதாளம் வரை பாயும்” என்று சும்மாவா சொன்னார்கள் என்றான் குணா.

கூட்டத்தின் பேச்சு ஒலிகள் கேட்கத் தொடங்கியது.

”சீக்கிரம் வாடா.. கூட்டம் அதிகம்.. அப்பறம் கதவு பக்கம் இடம் கிடைக்காது..” என்று உள்ளே சென்ற போது ஆரவாரம் அதிகமானது..
”பூமிக்கு அடியில் இருப்பதால் எவ்வளவு சத்தம் போட்டாலும் கேட்காது!” என்று குணா சொன்னது ராமுக்கு சரியாக காதில் விழவில்லை.
உள்ளே ஒரு இண்டோர் ஸ்டேடியம் மாதிரி கட்டியிருந்தார்கள். சுற்றி இரும்பு வேலி போடப்பட்டிருந்தது. தடை செய்யப்பட்ட மதுரை ஃபேமஸ் ஜிகர்தண்டா விற்றுக்கொண்டு இருந்தார்கள்.

எல்லோர் முகத்திலும் எப்போது ஆரம்பிக்கும் என்ற எதிர்பார்ப்பு தெரிந்தது.
“ராக்கமா கையை தட்டு... ” பாடல் ஸ்பீக்கரை கிழித்தது.
“ரொம்ப பழைய பாட்டு இல்ல... இப்ப இந்த மாதிரி பாட்டு எல்லாம் கிடையாது... “ என்றான் ராம்.
அப்போது பாடலில்  “அட மாமா நீ ஜல்லிக்கட்டு” என்ற பாடல் வரி வந்த போது ஆரவாரத்தின் வால்யூம் அதிகமானது

பெரிய திரையில் நேரடியாக காலில் சலங்கை கட்டப்படுவதை ஒளிபரப்பிக்கொண்டு இருந்தார்கள்.. .
ராசி ஆர்வமாக “இது எதுக்கு ?” என்றது
“ஓடும் போது சத்தம் வர!”
”ஜெயித்தா என்ன கிடைக்கும் ?”
“பணம்.. புகழ்.. “
“போன முறையை விட இந்த முறை பெண்கள் கூட்டம் அதிகம்.. சிந்துவை கூட அழைத்துக்கொண்டு வந்திருக்கலாம்”
“அவளுக்கு இதுல எல்லாம் பயம்.. ஃபேஸ்புக் மாதிரி போன ஜென்மத்து பாட்டி அவள்”
ஆரவாரம் பெரிதாக கேட்டது பெரிய திரையில் பன்னீர் ரோஜா மாலை ஒன்று கழுத்தில் போடப்பட்டது. கண்கள் சிகப்பாக... திறந்துவிடப்படும் கதவு கிளோசப்பில் காட்டப்பட்டது.
“எல்லோரும் தயாரா!! ?” என்று ஒலிபெருக்கியது.
“தயார்! தயார்!” என்று கூட்டம் பதில் சொன்னது.

எல்லோரும் அந்த கதவு எப்போது திறக்கும் என்று பார்த்துக்கொண்டு இருக்க திரையில் 10.... 9.... 8 என்று வர அந்த நொடிக்கு தயாரானார்கள். 4... 3.. 2... 1 கூட்டத்தின் ஆரவாரம் உச்சத்தை அடைந்தது.

கதவு திறந்துவிடப்பட்ட போது அதிலிருந்து பல ரோபோ காளைகள் கொம்பில் எல்.ஈ.டி விளக்குகள் மின்ன நடுவில் இருந்த காளையன் என்ற மனிதனை நோக்கி சீறி பாய்ந்தது. காளையன் தலைத்தெரிக்க ஓட காலில் கட்ட பட்ட சலங்கை ஒலியின் ‘ஜல் ஜல்’ சத்தம் ஆரவாரத்தில் கரைந்து போனது.

மாட்டுப்பொங்கல் அன்று எழுதியது

Comments

  1. நல்லாதான் இருக்கு..இருந்தாலும் கொஞ்சம் போர்...

    ReplyDelete
  2. தடை செய்யப்பட்ட மதுரை ஃபேமஸ் ஜிகர்தண்டா விற்றுக்கொண்டு இருந்தார்கள்.
    --LOL
    “நீங்கள் கையில் வைத்திருக்கும் பேப்பர்...பேப்பரை வேஸ்ட் செய்யாதீர்கள்” ---
    --100 வருஷத்துக்கு அப்புறம் பேப்பரா? மியூசியத்தில்தான் பார்க்கலாம்!
    கூகிள் மாப்பை -- கூகுள் கம்பெனி 100 வருஷம் இருக்கப் போகுதா!!

    ரோபாட் மாடாக இருக்கும் என்று யூகிக்க முடிகிறது. என் சந்தேகம் ரோபாட் மாட்டை வைத்து நடத்துவதைக்கூட தடை செய்வார்களா என்பதுதான்!

    சரவணன்

    ReplyDelete
  3. More fictitious and not interesting as other story you wrote..!

    ReplyDelete
  4. Could guess the climax as you had taken us ahead of centuries!! Very interesting with your titbits of unique humour!!!! Was surprised to see some typing errors!!!!

    ReplyDelete

Post a Comment