Skip to main content

பிறவிப் பெருங்கடல்


உயர்வற உயர்நலம் உடையவன் யவன்அவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவன்அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன்அவன்
துயரறு சுடரடி தொழுதுஎழுஎன் மனனே.
- நம்மாழ்வார் திருவாய்மொழி

அடிக்கடி கேட்ட பாசுரம் தான். சிம்பிளான விளக்கம் - உயர்வுகளுக்கெல்லாம் உயர்வானவன் அவன். அறிவின்மை யாவும் அழியும்படி ஞானத்தையும் பக்தியையும் அடியோனுக்கு அருளினான் அவன். தேவர்கள் முதலிய நித்திய சூரிகளின் தலைவன் அவன். எல்லாத் துன்பங்களையும் நீக்குகின்ற அவனின் திருவடிகளைத்தொழுது பிறவிப் பெருங்கடலிலிருந்து கரை ஏறுவாய் என் மனமே.

உடலை ஒழுங்காக வைத்திருந்தால், மனம் ஒழுங்காக இருக்கும் என்று ஸ்ரீவைஷ்ணவ உபன்யாசத்தில் கேட்டிருக்கிறேன். மனம் நன்றாக இருந்தால் உடல் நன்றாக இருக்கும் என்பது இன்னொரு சித்தாந்தம் ! இரண்டாவது என் தந்தைகடைப்பிடித்தது.

பயம் கலந்த உயிராசை எல்லோருக்கும் இருக்கிறது. சின்ன தலைவலி, கால் குடைச்சல், முகத்தில் பரு என்று எந்த உபாதை வந்தாலும் உடனே டாக்டரிடம் சென்று மருந்து சாப்பிடுகிறோம். பூரான் வீட்டுக்குள் நுழைந்தால் உடனே அடித்துவிடுகிறோம். கொசு கடித்தால் உடனே நசுக்கி வேட்டியில் சின்ன ரத்த கறையாக்குகிறோம் நல்ல ஆரோக்கியத்துக்கு அருகம் புல் ஜூஸ், அலோவேரா பேஸ்ட் என்று எதைவாவது குடிக்கிறோம் அல்லது தடவிக்கொள்கிறோம்.

மருத்துவ பரிசோதனையில் ஏதாவது எண்ணிக்கை அதிகமாகவோ, குறைவாகவோ இருந்தால் பயந்துவிடுகிறோம். உதாரணத்துக்கு நீரிழிவு நோயின் HbA1C அளவு 6க்கு மேல் இருந்தால் உடனே டாக்டர் கொடுக்கும் மாத்திரைகளை விழுங்க ஆரம்பிக்கிறோம். கடந்த சில வருடங்களாக நீரிழிவு நோயை டயட்டில் கட்டுப்படுத்த பிரயத்தனம் செய்யப்படுகிறது. இந்த பதிவு இதை பற்றியது இல்லை, என் அப்பா வாழ்ந்த வாழ்க்கை கொஞ்சம் வித்தியாசமானது. அதைப்பற்றியது.

என் திருத்தகப்பனாருக்கு ஆழ்வார்கள், ராமானுஜர் மீது மிகுந்த பக்தி. எதுவாக இருந்தாலும் “அவன் பார்த்துக்கொள்வான்” என்று ஒற்றை வரியில் எல்லாவற்றையும் அடக்கிவிடுவார். பெருமாள் சேவை, அலுவலகத்தில் பிரச்சனை, கல்லூரியில் சீட்... என்று எல்லாம் ”அவன்” செயல். மார்க் கம்மியாக வாங்கினால் “அடுத்த முறை நன்றாக படி...” என்று சொல்லிவிடுவார். மார்க் கம்மியாகவோ, அதிகமாகவோ வாங்குவது கூட ”அவன்” செயல்.

வாழ்க்கையில் இப்படி எல்லாம் அவன் செயல் என்று இருந்துவிடுவது கஷ்டமான காரியம். மிகுந்த மனோதிடம் வேண்டும். ஏதாவது வியாதி வந்துவிட்டால் ? பெருமாள் பார்த்துக்கொள்வார் என்று டாக்டரிடம் போகாமல் இருக்க முடியுமா ? டாக்டரிடம் போகும் பிரமேயமே அவருக்கு ஏற்பட்டதில்லை.

வேலைக்கு சேர்ந்து இரண்டு ஆண்டுகளில் அப்பாவிற்கு வயிற்று பகுதியில் மிகுந்த வலி வந்த போது ”வெந்தயம், சுக்கு சாப்பிட்டா” சரியாகிவிடும் என்று அசால்டாக இருந்துவிட்டார். சண்டை பிடித்து வலுக்கட்டாயமாக டாக்டரிடம் அழைத்து சென்றோம். கோலி குண்டு அளவு சிறுநீரக கல் இருப்பது ஸ்கேனில் கண்டுபிடிக்கப்பட்டது.

”எவ்வளோ பெரிசு சார்...இனிக்கே அட்மிட்டாகிடுங்க...கல்லை எடுத்துடலாம்.. !” என்றார் டாக்டர்.
”மத்தியானம் வருகிறேன்” என்று வந்துவிட்டார்.
வீட்டுக்கு வந்த பிறகு ”டாக்டரிடம் வரமாட்டேன் என்று சொன்னா நல்லா இருக்காது அதனால அப்படி சொன்னேன்” என்ற போது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

”கல் தம்பாட்டுக்கு இருக்கட்டும், அதுவாக வெளியே வரும். வராமல் போகட்டும் எனக்கு பயம் இல்லை”

“பெரிய காம்பிளிக்கேஷனாகிவிடும்...உயிருக்கே ஆபத்தாகிவிடும்” என்று சொல்லிப்பார்த்தோம்.

“அட போடா... என் உயிரை இந்த டாக்டர் காப்பாத்த முடியாது.. பெருமாள், ஆழ்வார் தான் காப்பாத்த முடியும்” என்று பிடிவாதம் பிடித்தார்.

மேலும் வாக்குவாதம் தொடர்ந்தது.

“நீ சயின்ஸ் படிச்சிருக்கே... அதான் நிறைய கேள்வி கேட்கற...”

“அப்படி இல்லப்பா”

“பெருமாளிடம் திட விஸ்வாசம் வேண்டும். ...பிரகலாதன் காண்பிக்கும் தூணில் உடனே வர வேண்டுமே என்று நரசிம்மரே ஒரு செகண்ட் பதறிட்டார். நரசிம்மர் ஏன் பதறினார் என்றால் அவர் மேல் பிரகலாதனுக்கு இருந்த திட விஸ்வாசம் வேதாந்த தேசிகர் இதை பற்றி அருமையாக சொல்லியிருக்கிறார்” என்றார்.

இதற்கு மேல் எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

யோகா செய்தார், வாழைத்தண்டு நறுக்கி சாப்பிட்டார். ஒரு நாள் சிறுநீர் போகும் போது மிகுந்த வலியுடன் அந்த கல் வெளியே வந்து விழுந்தது.

டாக்டரிடம் சென்றார்
“என்ன சார் அன்னிக்கு வரேன்னு சொல்லிட்டு அப்பறம் வரவே இல்லை... உங்களுக்காக ஆப்ரெஷன் தியேட்டர் எல்லாம் ரெடி செய்தோம்”

“இந்தாங்க டாக்டர் அந்த கல்” என்று அவரிடம் கொடுத்தார்.

“இதை எப்படி வெளியே எடுத்தீங்க”

“யோகா, வாழைத்தண்டு... அதுவா வெளியே வந்துவிட்டது”

டாக்டர் ஆச்சரியப்பட்டு
“இவ்வளவு பெரிய கல் எப்படி சார்... இதை நான் வைத்துக்கொள்ளலாமா” என்று கேட்டு வாங்கிக்கொண்டார்

அப்பாவிடம் போனில் பேசிய போது ”யோகா, வாழைத்தண்டு சாப்பிட்டேன் ஆனால் கல் வெளியே வந்து விழுந்ததற்கும் ஆழ்வார் தான் காரணம்” என்றார்.

ரிடையர் ஆகும் தருவாயில் வருடாந்திரச் செக்கப்பில் ரத்தப் பரிசோதனை செய்த போது அப்பாவிற்கு டயபட்டீஸ் இருப்பது தெரியவந்தது. அதை பற்றி அவர் துளியும் கவலைப்படவில்லை. எதை கட்டுப்படுத்த எந்த முயற்சியும் எடுத்துக்கொள்ளவில்லை. ”காபிக்கு சக்கரை போட்டுக்கொள்ளாதே” என்று சொன்ன அறிவுரையை ஏற்றார்.
“மாமா உங்களுக்கு பிடிக்குமே பாயசம்” என்று எதிர்த்தவீட்டு பாயசத்தையும் சாப்பிட்டார். அமெரிக்காவிலிருந்து என் தம்பி சுகர் டெஸ்ட் எடுக்கும் கருவி வாங்கிக்கொண்டு வந்தான். அதை உபயோகிக்க மறுத்தார்.

டாக்டரிடம் போகலாம் டயபட்டீஸ் ஒரு மோசமான வியாதி என்று பல முறை சொல்லிப்பார்த்தோம். கோவித்துக்கொண்டும், சின்ன சண்டை, பெரிய சண்டை எல்லாம் போட்டு ஓய்ந்துபோனோம்.

நீரிழிவு நோய் தன்னை ஒன்றும் செய்யாது. நோய் வருவதும் போவதும் அவன் செயல். உன் டாக்டரும் மருந்தும் என்னை காப்பாத்த முடியாது என்பதை திடமாக நம்பினார்.

“உங்க யாருக்கும் எந்த கஷ்டமும் கொடுக்க மாட்டேன்.. ஒரு நாள் டக்குன்னு ஆழ்வார் என்னை கூப்பிட்டுக்கொள்வார்” என்றார்.

அப்பா ரிடையர் ஆன பிறகு தினமும் ராமானுஜ நூற்றந்தாதியை சேவித்து(படித்து) வந்தார். வாரயிறுதியில் திருச்சிக்கு செல்லும் போது, வீட்டுக்குள் நுழைந்தவுடன், ராமானுஜ நூற்றந்தாதி புத்தகத்தை என் கையில் கொடுத்து “முழுவதும் கடம்(மனப்பாடம்) செய்துட்டேன், சேவிக்கிறேன், சரியா இருக்கா பார்” என்று வாரம் தவறாது சின்ன குழந்தை போல கேட்பார்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை பாத்ரூம் சென்றவர் மயங்கிவிழுந்து ஆசாரியன் திருவடியை அடைந்தார்.

முன்பே டாக்டரிடம் சென்றிருந்தால் இன்னும் கொஞ்ச நாள் இருந்திருப்பாரோ ? தற்போது நான் கடைப்பிடுக்கும் டயட் முன்பே தெரிந்திருந்தால் அவருக்கு சொல்லி கொடுத்திருக்கலாமே, போன்ற கேள்விக்கு விடை நம்மாழ்வார் திருவாய்மொழியில் தான் இருக்கிறது.

ஆசாரியன் திருவடியை அடைவதற்கு சில மணி நேரம் முன்பு என் அம்மாவிடம் “அடுத்த பத்து நாளைக்கு சேர்த்து இன்றே சேவித்துவிட்டேன்” என்று சொன்னதை பற்றி இன்றும் யோசிப்பதுண்டு.

Comments

  1. நல்ல பகிர்வு....உங்கள் அப்பாவைப் போல ஒரு பொட்டு சந்தேகம் ஊடுருவாத பரிபூர்ண நம்பிக்கை கொண்டவர்கள் அரிது. இது தான் ஆழ்வார்/ஆச்சார்யன்கள் சொன்ன பூரண சரணாகதித் தத்துவம். அப்படியும், பரமபதம் பரந்தாமனின் விருப்பத்தின் பேரில் தான். உங்கள் தந்தையார்க்கு கிடைத்திருக்கும் என்று தான் தோன்றுகிறது (வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே!) ---- எ.அ.பாலா

    ReplyDelete
  2. உங்கள் தந்தைக்கு இருந்ததைப் போன்ற நம்பிக்கைதான் வேண்டும். அதற்கும் அவன் அருள் வேண்டும். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete

Post a Comment