Skip to main content

அணில்

எங்கள் வீட்டில் அசைவ உணவு கிடையாது. இதில் என்ன விஷேசம், ஸ்ரீவைஷ்ணவ குடும்பத்தில் இது சகஜம் தானே என்று கேட்கலாம். இன்று நிலமை அப்படி இல்லை.

“முட்டை கூட சாப்பிட மாட்டீங்களா ?” என்று ஆச்சரியமாக கேட்க ஆரம்பித்துவிட்டர்கள்.

”முட்டையை முழுசா சாப்பிட வேண்டாம்... கேக் சாப்பிடலாமே...?”
ஸ்ரீரங்கம் வைஷ்ணவ குடும்பங்களில் ஒருவர் ஐடி படித்து, அமெரிக்காவில் நுழைந்த கையோடு, பீட்சா, பர்கரும் கூட அவர்கள் வாயில் நுழைந்துவிட்டது.

“நான் சாப்பிடுவது வெஜ் பிட்சா ... பாருங்க பச்சை கலர் புள்ளி இருக்கு..வெஜிடேரியன்” என்று சாப்பிடும் அந்த பிட்சா மாமிசம் செய்த அதே அவனில் அதே தட்டில் செய்யப்பட்டது என்று தெரிந்தும் தெரியாமல் இருக்கிறார்கள்.

மாமிசம் சாப்பிடுவதும், சாப்பிடாமல் இருப்பது அவர்கள் இஷ்டம். விவாதிக்க போவதில்லை.

நான் சாப்பிடுவது இல்லை. அதற்கு சின்ன வயதில் எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்களாக இருக்கலாம். பகிர்கிறேன்.

“பையன் எப்படி சூம்பி போய் இருக்கான்... நல்ல நாட்டு முட்டையாக வாங்கி நானே ஆம்லெட் போட்டு தரேன்” என்று பக்கத்து வீட்டு மணி மாமா என் அப்பாவிடம் சொல்லுவார்.

“எங்களுக்கு வேண்டாமே..” என்றால் விடமாட்டார்.

“சர்த்தாண்டா... நான் சாப்பிடறது இல்லை ஆனா என் பையனுக்கு
கொடுக்கிறேன்...இதுக்காகவே பாத்திரம் எல்லாம் தனியாக வெச்சிருக்கேன்”
மறுத்து பேசினால் உடனே

”கீரையில் கூட தான் உயிர் இருக்கு அதை சாப்பிடலையா ? மாட்டு பால் கூட தான் அசைவம்” என்று ஆரம்பிக்கும் வாதம், வள்ளுவர் புலால் மறுப்பு, அத்வைதம், விஷ்டாத்வைத்தம் என்று போகும் வாதம் ஒரு காபியுடன் முடிவடையும்.

நான் முட்டை, இறைச்சி, தேன் சாப்பிடுவதில்லை.. பட்டு துணி, தோல் உபயோகிப்பதில்லை. எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் இருக்கு.

முட்டை சாப்பிடுவதில்லை என்பதற்கு காரணத்தை இங்கே சொன்னால் பலர் முட்டை சாப்பிடுவதை விட்டுவிடுவார்கள். சுகுனா சிக்கன் வியாபாரம் சரிந்து, இந்திய பொருளாதாரம் ஸ்தபிக்கும் அபாயம் இருப்பதால் அதை தேச நலன் கருதி தவிர்திருக்கிறேன்.

மற்றவை பற்றி சொல்கிறேன்.

ஒரு முறை திருச்சி காந்தி மார்கெட்டில் மாடுகளை பஞ்சு மிட்டாய் கலர் பூசி லாரியில் ஏற்றிக்கொண்டு இருந்தார்கள்.

அப்பாவிடம் அதை பற்றி கேட்டதற்கு
“இது எல்லாம் கேரளா போகிறது...இறைச்சிக்கு அதனுடைய தோல் உன் செருப்புக்கு” என்றார்.

வீட்டுக்கு வந்தவுடன் என்னுடைய தோல் செருப்பு, காலணி எல்லாம் கடாசிவிட்டேன். பிறகு தோல் சம்பந்தபட்ட எதையும் உபயோகிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தேன்.

கசப்பான மாத்திரையை குழைக்க ஒரு முறை தேன் வாங்கிக்கொண்டு வந்த போது குண்டாக இருந்த தேன் பாட்டிலில் ஒரு தேனி மிதந்துக்கொண்டு இருப்பதை பார்த்தேன். தேனியை (ஒன்றாக இருந்தாலும்) அழித்துவிட்டு தேன் சாப்பிட வேண்டுமா என்று தேன் சாப்பிடுவதை நிறுத்தினேன்.

எட்டாவது படிக்கும் போது, ஏதோ ஒரு சினிமாவிற்கு முன்பு நியூஸ் ரீலில் பட்டுப்பூச்சியிலிருந்து பட்டாடை எப்படி தயாரிக்கிறார்கள் என்று காண்பித்தார்கள். பூந்தி செய்வது போல பட்டுப்புழுக்களை.. விட்டுவிட்டேன்.

பத்து பன்னிரண்டு வயது இருக்கும். என் பக்கத்துவிட்டு நண்பன் வீட்டில் அசைவம் சாப்பிடுவார்கள். வாரயிறுதியில் துப்பாக்கி எடுத்துக்கொண்டு வேட்டைக்கு சென்று வந்த பிறகு ஜீப்பில் முயல், நாரை, கௌதாரியை ரத்த கறையுடன் பார்த்திருக்கிறேன். ரத்ததை பார்த்த பிறகு அசைவம் சாப்பிட வேண்டும் ஆசை எனக்கு வரவில்லை.

அசைவம் சாப்பிடவே கூடாது என்ற முடிவுக்கு என் நண்பனும் அந்த நிகழ்ச்சியும் தான் காரணம்.

எந்த வருஷம், மாசம், நாள், கிழமை எல்லாம் நினைவில் இல்லை. ஆனால் அன்று நைலான் கயிறு வலையை மரத்தைச்சுற்றி கட்டி ஒரு அணிலை பிடிக்க முயற்சி செய்துக்கொண்டு இருந்தது நினைவில் இருக்கிறது.
“அணில் ராமர் ஃபிரண்டு அதை பிடிக்க முடியாது” என்றேன்.

“அப்படியா?”

”ஆமாம்” என்று அணில் முதுகில் இருக்கும் மூன்று கோடுகள் கதையை சொல்ல ஆரம்பித்தேன்.

கதையை கேட்டுக்கொண்டே அணில் பிடிபடுவதற்கு அரிசியை இரைத்துக்கொண்டு இருந்தான். பாதி கதையில் என்னை ஒரு மறைவான இடத்துக்கு அழைத்து சென்றான்.

கதையை தொடர்ந்தேன் அப்போது கை விரலை காண்பித்து பேசாமல் இரு என்பதை போல சைகை செய்தான்.

ஒரு அணில் அந்த வலையில் மாட்டிக்கொண்டது. அருகில் சென்று பார்த்தால் நல்ல குண்டு புசுக்காக இருந்தது. முகத்தில் ஏண்டா மாட்டிக்கொண்டேம் என்ற கலவரம் தெரிந்தது.

”இந்த அணில் தான் “ராமருக்கு உதவிச்சா... சாவபோகுது... ”

“சாகடிக்காதே...அரிசி போடலாம்....அப்பறம் விட்டுடலாம்” என்று பூர்ணம் விஸ்வநாதன் குரலில் கெஞ்சினேன்.

“சாகடிக்காமல் சாப்பிட முடியாதே”

“என்ன சாப்பிட போறியா?” என்று கலவரம் அடைந்தேன்.

முயல், கோழி, ஆடு வகையரா மட்டும் தான் சாப்பிடலாம் மற்றவை எல்லாம் சாப்பிட முடியாது என்று நினைத்திருந்தேன்.

“சும்மா விளையாட்டுக்கு தானே...” என்றேன்.

“அட நிஜமாகதான்...” என்று அவன் அப்பாவை கூப்பிட்டான்.

“அங்கிள் சாப்பிட போறீங்களா” என்று அவன் அப்பாவிடம் கேட்டேன்.

”ஆமாம்...” என்பதை போல ஊர்ஜிதப்படுத்தினார்.

அடுத்து நடப்பதை உள்மனம் பார்க்காதே என்று சொன்னாலும் பார்த்துக்கொண்டு இருந்தேன்.

ஒரு பெரிய இரும்பு பக்கெட்டில் தண்ணீர் நிரப்பி வலையில் மாட்டிய அந்த அணிலை வலையோடு போட்டார்கள். நீச்சல் அடிக்க விடாமல் ஒரு குவளையில் அழுத்தி போங்காட்டம் ஆடி அதை மூழ்கடித்தார்கள்.

கொஞ்ச நேரத்தில் அந்த அணில் எந்த சலனமும் இல்லாமல் கண் திறந்து கால் மட்டும் லேசாக ஆடிக்கொண்டு இருந்தது.. பிறகு அதுவும் நின்றது.

அதிர்ச்சியாக இருந்தது.

அதிர்ச்சி மேலும் தொடர்ந்தது.

சின்ன கத்தியை கொண்டு அதன் வயிற்று பகுதியை அறுத்தார்கள். ரத்தம் வந்ததா என்று நினைவில்லை, ஆனால் அந்த அணிலின் வயிற்றில் அரச மரத்து இலைகளின் இளம் சிகப்பு துளிர் நிறத்தில் மூன்று சின்ன குட்டி அணில்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டி கிடந்தது.

பேசினில் மிளகாய், மஞ்சள் மசலா கலவையை பூண்டு வாசனையுடன் ரெடியாக வந்தது.

சொல்ல மறந்துவிட்டேனே நண்பனின் பெயரும் - அணில் !

Comments

  1. வாழைபழத்தில் ஊசியேத்துவது போல!

    ReplyDelete
  2. கடவுளே அணில் பகுதி புனைவாக இருக்க வேண்டும்... அப்படித்தான் இருக்கும்! தேன், பட்டுப்புடவை சமாச்சாரத்துடன் முடித்தால் சப்பென்று இருக்கும் என்று ஒரு பஞ்ச்சுக்காக கற்பனையா எழுதி சேர்த்திருக்கார்.

    பை தி வே தேன் உட்பட விலங்குப் பொருட்களைத் தவிர்ப்பவர்களை 'வேகன்' என்பார்கள். அவர்கள் தேனுக்குப் பதில் மேப்பிள் சிரப் சாப்பிடுவார்கள். நம்மைப் போல ஆடு, கோழி, மீன் சாப்பிட மாட்டேன், ஆனா பால், தேன் ஏன் முட்டை கூட ஓகே என்பவர்களைப் பலசமயம் வெளிநாட்டினரால் புரிந்துகொள்ள முடிவதில்லை. அவர்களுக்கு சைவத்தில் மேப்பிள் சிரப் வகையறா ஆசாமிகளைத் தான் தெரியும்.

    சரவணன்

    ReplyDelete
  3. அந்தக் கிளைமேக்ஸ் என்னை புரட்டிப் போட்டு விட்டது. அது போல ஒன்றுக்கு நான் உடந்தையாக இருந்திருக்கிறேன். அது நினைவுக்கு வந்து என்னைக் கொஞ்சம் அலைக்கழித்தது :(

    ReplyDelete

Post a Comment