Skip to main content

சென்னையில் ஒரு நாள்

திங்கள் அன்று சென்னயில் இருந்தேன். புத்தகக் கண்காட்சிக்குச் செல்லும் முன் ஏழே முக்காலுக்கு ராயர்ஸ் கஃபேவுக்கு ரொம்ப நாள் கழித்துச் சென்றேன். பெரிய க்யூ நின்று கொண்டு இருந்தது. முதல் பந்தியிலேயே இடம் கிடைத்தது. முதலில் எல்லோருக்கும் கப்பில் கெட்டிச் சட்னி தருகிறார்கள், மற்றபடி எதுவும் மாறவில்லை. சுடசுடப் பொங்கல், வடை, இட்லி என்று சாப்பிட்டுவிட்டுப் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றேன்.

Tamil Calendar !
நுழைந்தவுடன் ஒரே மலைப்பாக இருந்தது. பல வருஷங்கள் முன்பு புத்தகக் கண்காட்சியில் பதிப்பகங்கள் சார்ந்து ஸ்டால்கள் இருக்கும். ஆனால் தற்போது பல ஸ்டால்களில் பல பதிப்பகங்களின் புத்தகங்கள் விசிரி போல அடுக்கி வைத்திருக்கிறார்கள். நீயா நானா கோபினாத் பல ஸ்டால்களில் சிரித்துக்கொண்டு இருக்கிறார். பொன்னியின் செல்வனும், சிவகாமியின் சபதமும் எல்லோரும் போட்டி போட்டுக்கொண்டு மலிவாகத் தருகிறாரார்கள்.

பதிப்பகங்கள் சார்ந்த ஸ்டால்களில் பார்த்திவிட்டு மினி சூப்பர் மார்கெட் ஸ்டால்களைச் சுலபமாகக் கடந்து சென்றேன்.

கீதா பிரஸ்
ஹரன் பிரசன்னாவை கிழக்குப் பதிப்பகத்தில் சந்தித்தேன். பார்த்தவுடன் சிரித்துக் கைகுலுக்கினார். என்னை அடையாளம் தெரிந்து சிரித்தாரா அல்லது சும்மா சிரித்தாரா என்று தெரியாது. கூடவே நண்பர் ஜடாயூ இருந்தார். நலம் விசாரித்துவிட்டு உயிர்மையில் மனுஷ்யபுத்திரன் இருந்தார். ஒரு ‘ஹலோ’ சொல்லலாம் என்று பார்த்தால் இரண்டு பெண்களிடம் அம்.அதாமி பற்றியும் பாட்டில் தண்ணீர் பற்றியும் டிவியில் விவாதிப்பது போலவே விவாதித்துக்கொண்டு இருந்தார். பிறகு என்னிடம் திரும்பி “உங்க புத்தகம் ஒன்றும் வரலையா இந்த வருஷம் ?” என்றார். அவரைப் போல விவாதிக்க எனக்குத் தெம்பு கிடையாது. பிறகு சந்திக்கிறேன் என்று நழுவினேன்.

இருந்த முறை பெரிதாக எதுவும் வாங்கவில்லை. கீதா பிரஸில் சரணாகதி புத்தகம் ஐந்து ரூபாய்க்கு வாங்கினேன்.

பேயாழ்வார் அவதார ஸ்தலம்
மாலை நான்கு மணிக்கு முதலாழ்வார்கள் மூவரில் ஒருவரான, பேயாழ்வார் அவதரித்த கிணறு ராயஸ் கஃபே பக்கம் இருக்கிறது அங்கே சென்றேன். நானே வாசல் கதவைத் திறந்து சேவித்திவிட்டு வந்தேன்.

இரவு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மறுநாள் பொங்கல் என்பதால் மனிதர்களைவிட பேருந்துகளே நிறைய இருந்தது. முதுகுப்பை இளைஞர்கள் கையில் ’அக்வஃபினா’ பாட்டில்களும், பெரியவர்கள் கையில் ’அம்மா’ தண்ணீர் பாட்டில்களும் பார்க்க முடிந்தது. புத்தகக் கண்காட்சியில் சிறுவர்கள் கையில் ஆங்கில புத்தகங்களும், பெரியவர்கள் கையில் தமிழ் புத்தகங்களும் பார்க்க முடிந்தது. இந்த இரண்டுக்கும் இதோ தொடர்பு இருப்பது மாதிரி எனக்கு தெரிந்தது. 

Comments

  1. தொடர்பு என்னவென்று புரிகிறது...!

    ReplyDelete
  2. நானும்தான் போயிருந்தேன். கிளி ஜோசியம், குறி ஜோசியம், எண் ஜோசியம், இன்ஸ்டண்ட் ஜாதகக் கணிப்பு - இவற்றைத் தேடினேன். என் கண்ணில் படவில்லை. நீங்கள் பார்த்தீர்களா?

    ReplyDelete
  3. அடுத்த முறையாவது புத்தக திருவிழா சமயத்தில் சென்னை செல்ல வேண்டும்!

    ReplyDelete

Post a Comment