Skip to main content

மல்லையா மருத்துவமனையின் முரண்

ஷூ ஃபிளவர் என்ற செம்பருத்தியை ஷூவில் தேய்த்தால் பளபளவென்று ஆகும் என்று சின்ன வயதில் நம்பி தேய்த்திருக்கிறேன். அதில் உள்ள ஈரத்துக்கு கொஞ்சம் நேரம் ஷூ பளபளக்கும். மாமியார் வீட்டில், முடிகொட்டாமல் இருக்க இந்தப் பூவை வெய்யிலில் காய வைத்து சீயக்காயுடன் அரைக்க உபயோகப்படுத்துவார்கள். ஒரு சமயம் இந்தப் பூவைச் சாப்பிட்டு பார்த்திருக்கிறேன்; கொழகொழவென்று இருக்கும். ஆர்கானிக் டீ செய்கிறார்கள். சாமிக்குப் போடுகிறார்கள். தலையில் மட்டும் யாரும் வைத்துக்கொள்ளுவதில்லை!.

செம்பருத்தி, சிவப்பு நிறத்தில் பார்த்திருக்கிறோம், பெங்களூரில் பல வண்ணங்களில் பூக்கிறது- ஆரஞ்ச், பிங்க், வெள்ளை, மஞ்சள்... ஒரே வண்ணமாகவும், இரண்டு வண்ணமாகக் கலந்தும்கூட இருக்கும். எந்த வண்ணமாக இருந்தாலும் எண்ணி 5 இதழ்கள்தான் இருக்கும். (படத்தில் இருப்பது எங்கள் வீட்டு பால்கனி செம்பருத்தி!, பெங்களூருக்கு ஏற்றார் பொல மஞ்சள், சிகப்பு !)



'Hibiscus rosa-sinensis' என்ற தாவரப் பெயரை கொண்ட இந்தப் பூவின் பூர்வீகம் ஆசிய கண்டம். பல ஆயிரம் வருஷம் பழமை கொண்டது. போர்த்துக்கீசியர்கள் இதற்கு ஷூ பிளாக் (Shoe Black) என்று பெயர் கொடுத்தார்கள். இந்தப் பூவை நசுக்கியபின் பூ வாடிப்போய், அது ஒருமாதிரி கத்திரிக்காய் வண்ணத்திற்கு மாறிவிடும். அதன் சாயத்தை இந்தியர்கள் ஷூவிற்கு பாலிஷ் போட உபயோகப்படுத்த, இதற்கு ஷூ ஃபிளவர் என்று பெயர் என்று சில நாட்கள் முன் படித்தேன். சீனாவிலிந்து இறக்குமதி செய்து லண்டனில் பயிரிட்டுள்ளார்கள். பிறகு அமெரிக்காவுக்கும் சென்றது. இன்று அமெரிக்காவில் இதற்கென சங்கம் அமைத்து இதை வளர்க்கிறார்கள்!.

விதையிலிருந்து சாகுபடி செய்வதைக் காட்டிலும், கிளையை ஒடித்து வளரவைப்பது சுலபம். கிளையை 30 டிகிரி பக்கவாட்டில் நுணியில் கொஞ்சம் சாணியுடன் எங்கள் பாட்டி வளர்ப்பதைப் பார்த்திருக்கிறேன். ஏன் 30 டிகிரி? ஏன் சாணி என்று யோசித்துப்பாருங்கள்!

நான்கு வருட உழைப்புக்குப்பின் ஒட்டுச் செடி முறையில் டெக்ஸாஸில் மலினொவாஸ்கி (Malinowski) என்பவர் சுமார் 1000 ஒட்டு போட்டு செம்பருத்தியை நீல நிறத்தில் பூக்க வைத்துள்ளார்!

* - * - *

"முரண்" படத்தைப் பார்த்த பிறகு அல்பிரட் ஹிட்ச்காக்கின் "ஸ்ட்ரேஞ்சர்ஸ் ஆன் தி ட்ரைன்" [Strangers on the Train (1951)] என்ற படத்தைப் சென்னை கமலா தியேட்டரில் பார்த்தேன். கதையின் கருவான, முன்பின் தெரியாத இரண்டு பேர் சந்தித்து பேசிக்கொண்டு இருக்கும்போது, "சரி உங்க மனைவியை நான் கொலைசெய்றேன், நீங்க எங்க அப்பாவை செய்யுங்க, இரண்டு பேருக்கும் மோடிவ் கிடையாது, அதனால் கண்டுபிடிக்க முடியாது!" என்ற ஒன்றை லைனை வைத்துக்கொண்டு இயக்குநர் ராஜன் மாதவ் ஆங்கிலப் படத்தை அப்பட்டமாகக் காப்பி அடிக்காமல், வசனம், காட்சிகளைக் கொண்டு நல்ல த்ரில்லரை அழகாகக் கொடுத்துள்ளார். பாடலை நீக்கியிருந்தால் இன்னும் த்ரில் அதிகமாகியிருக்கும்!. கதைக் கருவை இன்னொரு முறை யோசித்துப் பாருங்கள், எவ்வளவு விபரீதமான ஒன்று என்று!.

சிறுகதையில் இந்த மாதிரி ஒரு த்ரில்லரை கொடுப்பது கொஞ்சம் சவாலான விஷயம்; கஷ்டம். ஜெப்ரி ஆர்ச்சர் எழுதிய 'லெட்டர்' என்ற சிறுகதை த்ரில்லர் வகையை சார்ந்தது. (சுறுக்கமாக தந்துள்ளேன், குறிப்பு: கொஞ்சம் 'A', சில இடங்களில் ....... என்று நானே சென்சார் செய்துள்ளேன்.)

காலை டிபன் சாப்பிடும்போது ஆரம்பிக்கிறது கதை. அந்த மேஜையில் அன்னா, மேஜையின் கோடியில் அவளுடைய கணவர் ராபர்ட் உட்கார்ந்துக்கொண்டு இருக்கிறார். அன்னாவின் தோழி அங்கே வந்து அன்னாவிற்கு நைசாக ஒரு கடிதம் கொடுத்துவிட்டு செல்கிறாள்.

கவர் மீது இருக்கும் கையெழுத்து அவளுக்குப் பரிச்சியமானதுதான். அவளுடைய கள்ளக்காதலன் எழுதியது!. மேஜை ஓரத்தில் உட்கார்ந்துக்கொண்டு இருக்கும் ராபர்ட் அன்றைய செய்திதாளில் மூழ்கி இதைக் கண்டுகொள்ளாதது அவளுக்கு நிம்மதியாகவே இருந்தது.

ஓரக்கண்ணால் ராபர்ட் பார்க்கிறாரா என்று மெதுவாக கட்டைவிரலைக் கொண்டு கவரைப் பிரிக்க முயற்சிக்கும் போது, . ராபர்ட் இவளைப் பார்த்துச் சிரிக்க, அன்னாவும் பதிலுக்கு சிரித்துக்கொண்டே கவரைக் கீழே நழுவவிடுகிறார்.

ராபர்ட் திரும்ப செய்திதாளில் மூழ்க, மெதுவாகக் குனிந்து கவரை எடுத்து, மேஜையில் இருக்கும் வெண்ணை தடவும் கத்தியால் பிரித்துப் படிக்கத் தொடங்குகிறார். ராபர்ட் நல்ல வேளை இதைப் பார்க்கவில்லை.

"டார்லிங், ஸ்டான்ஃபோர்ட்டில் ஒன்றாகப் படுத்த அந்த இரவை மறக்க முடியாது. ஸ்டான்ஃபோர்டும் முதல், உன்னுடன் படுத்த அந்த இரவும் முதல்!. ஒரே இரவில் இரண்டு முதல்!. அதே படுக்கை அறையில் நான் இப்போது உட்கார்ந்துக்கொண்டு இதை எழுதுகிறேன். என்னால் உன்னுடன் இருந்த அந்த இரவை விவரிக்கவே முடியவில்லை!"

அன்னா லேசாக சிரித்துக்கொண்டாள்.

"ஒரு காதலன் தன் காதலியிடம் என்ன வேண்டும் என்று கேட்பானோ அதை எல்லாம் எனக்கு நீ தந்தாய். உன்னுடைய மென்னை, தூண்டுதல், சீண்டுதல், சில சமயம் ஒரு ..................."

அன்னா திரும்பப் படிக்கிறாள். தன் உடல் சிவப்பதாக உணர்கிறாள். இவ்வளவு நன்றாக அனுபவிப்பவனாக இருக்கும் இவனுடன் இன்னொரு முறை ஷாப்பிங் போக வேண்டும் என்று நினைத்துக்கொண்டு கடிதத்தைத் தொடர்கிறாள்

"நாம் ஒன்றாக இருந்த எல்லா கணமும் எனக்கு இன்சுவை. எனக்கு மிகவும் பிடித்த இடங்கள்- சில சமயம் நீ ஒரு மணி நேரமே கிடைத்தாலும் லஞ்ச் பிரேக்கின் போது என்னுடன் இருந்த இடங்கள் ஒவ்வொன்றும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. காரின் பின்சீட்; அப்பறம் அந்த சர்வீஸ் லிப்ட், ஆனால் இவை எல்லாவற்றைக் காட்டிலும், அந்த நீண்ட ஓபரா நிகழ்ச்சி. அதன் ஆரம்பம் பிறகு முடிவின் போது... அந்தச் சின்ன அறை!

ராபர்ட் செய்தித்தாள் வழியாக ஓரமாகப் பார்க்க அன்னா சிரித்துக்கொண்டு அந்தக் கடித்தைத் தன் தொடையின் மீது வைத்துக்கொள்கிறாள்.

"ஏன் சிரிக்கிறாய்" என்று ராபர்ட் கேட்க,

"ஓ அதுவா, ஜேம்ஸ்பாண்ட் கோபுரத்தின் மீது இருக்கும் படத்தைப் பார்த்து"

"எங்கே..?"

"முன்பக்கப் பேப்பரில்"

பேப்பரைத் திருப்பி, "ஓ ஆமாம்" என்று ராபர்ட் திரும்பவும் செய்தித்தாளில் மூழ்க, அன்னா தன் காதல் கடிதத்தைத் தொடர்கிறாள்.

.....
.....
......


கொஞ்சம் நேரத்துக்கு பிறகு போன் செய்துவிட்டு வருகிறேன் என்று ராபட் கிளம்ப, அன்னா ராபர்ட் போகும் வரை காத்திருந்து லெட்டரைப் படிக்க ஆரம்பிக்கும் முன் ராபர்ட் தன் மூக்குகண்ணாடியை மேஜையில் மறந்துவிட்டுப் போனதைப் பார்க்கிறாள். இன்னும் சில வரிகள் இருக்கும் லெட்டரைப் படித்துவிட்டு எடுத்துக்கொண்டு போய் கொடுக்கலாம் என்று கடித்ததைத் தொடர்கிறாள்.

"ஒரு சமயம் நீ போலீஸ் உடையில் என் மீது.... நீ என்னை விடவே இல்லை, அன்று நீ கருப்பு நிற ... அணிந்திருந்தாய். நான் பெரிதாக அலரியபோது தான் என்னை விடுவித்தாய். இதே மாதிரி தான் ஒரு சமயம் என்னை அண்டர்கிரவுண்ட் கார்பார்க்கிங்கில் ....

இப்படிக்கு,
உன் காதலன்
ஓபரியான்.


அன்னா சிரித்துக்கொண்டாள். எங்கே திரும்பவும் போலீஸ் டிரஸ் கிடைக்கும் என்று நினைத்துக்கொண்டாள். பின்குறிப்பு என்று போட்டு ஏதோ எழுதியிருக்க, அன்னா ராபர்ட் மூக்கு கண்ணாடி மேஜையில் இல்லாததை கவனித்தாள்.

"திருமணம் ஆன பெண்ணுக்கு எந்தப் பொறுக்கி இந்த மாதிரி கடிதம் எழுதினான்?" என்று ராபர்ட் பின்னாலிருந்து மூக்குக் கண்ணாடியை சரிசெய்துகொண்டே கேட்க, நெற்றியில் வியர்வைத்துளியுடன் அன்னா பதட்டமாக....

இன்னும் சில வரிகள்தான், கதையைத் தேடிப் படித்துப்பாருங்கள்.. !

* - * - *

'இந்தியன்' படத்தில் "என்னைத் தூக்கிப் பார்த்து என் வெயிட் கூடியிருக்கா சொல்லு" என்று ஊர்மிளா கேட்க. கமல் அவளைத் தூக்கிப் பார்த்துவிட்டு 'கொழுப்பு' கூடியிருக்கு என்று சொல்லுவார். என்னைத் தூக்கி பார்த்து கொழுப்பு அளவைச் சொல்ல யாரும் இல்லாத காரணத்தால் போன வாரம் மல்லையா மருத்துவமனையில் இரத்தப் பரிசோதனைக்கு ஒரு இன்ச் ரத்தம் கொடுத்துவிட்டு வந்தேன்.

சர்க்கிரை நோய் உள்ளவர்கள் வருடத்துக்கு ஒரு முறை 'லிப்பிட்' (Lipid) இரத்தகொழுப்பு சோதனை செய்துக்கொள்வது நல்லது. மூன்று வகை கொழுப்பு பற்றிய அதில் தெரிந்துகொள்ளலாம். நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு, ட்ரைகிளிசெரைட்டுகள் (triglycerides). இதன் அளவு அதிகமாக இருந்தால் இருதய நோய் மற்றும் கிட்னி சம்பதமான உபாதைகள் வர அதிக வாய்ப்பு இருக்கிறது.

அடுத்த நாள் வந்த ரிப்போர்டில் எனக்கு இந்த ட்ரைகிளிசரைட் அளவு மிக அதிகமாக இருக்கிறது என்ற அதிர்ச்சித் தகவல் வந்தது. மூன்று சிறுகதை எழுதி அப்படியே பாதியில் நிற்கிறது; அதை எல்லாம் முடிக்கும்முன் ஹார்ட் அட்டாக் வந்துவிடப் போகிறதே என்ற பயம் ஒரு பக்கம். ஒழுங்காக மனைவி கொடுப்பதைத்தான் சாப்பிடுகிறேன்... சந்தேகப்பட்டு இதே இரத்த பரிசோதனையை வேறு இரண்டு இடத்தில் கொடுக்க, அதில் வந்த ட்ரைகிளிசரைட் அளவு மல்லையாவில் எடுத்த அளவைவிட 100 புள்ளிகள் கம்மியாக இருந்தது.

மல்லையா மருத்துவமனைக்கு ரிப்போர்ட்களை எடுத்துக்கொண்டுபோய்க் காரணம் கேட்க, அவர்கள் சொன்ன காரண வரிசை- நீங்கள் முன் இரவு குடித்திருப்பீர்கள் (நான் பீரை கூட நக்கிப் பார்த்தது இல்லை). மூன்று நாட்களுக்கு முன் ஏதாவது ஸ்வீட் சாப்பிட்டிருப்பீர்கள், பூர்வாசிரமத்திலேயே உங்களுக்கு இருந்திருக்கும்.... ஏதேதோ சல்ஜாப்பு. அப்படி என்றால் அடுத்தநாள் வேறு இரு லேபில் எடுத்த ரீடிங் கம்மியாக இருக்கிறதே என்று கேட்க. சரியான பதில் இல்லை.

கடைசியாக, டை கட்டிய ஒரு பெரிய டாக்டர் என்னை தனி அறைக்கு (தள்ளி?) அழைத்துச் சென்று, "ஏதோ ராண்டம் தப்பு நடத்திருக்கலாம். ஆனால் தப்பு நடந்திருக்கு என்று சொல்ல முடியாது, நடக்கவில்லை என்றும் சொல்ல முடியாது. நீங்கள் விரும்பினால் இன்னொரு முறை எப்போது வேண்டும் என்றாலும் இந்த டெஸ்டை இங்கே ஃபிரியாக எடுத்துக்கொள்ளுங்கள்!" என்றார்.

இவர்கள் கொடுத்த ரிப்போர்டை நம்பியிருந்தால் அதற்கும் மருந்து தந்திருப்பார்கள். பிறகு அந்த மூன்று சிறுகதைகளை யார் முடிப்பது?

பிகு: செம்பருத்தியை தினமும் சாப்பிட்டாள் கொழுப்பு குறையும் என்று சொல்லுகிறார்கள் !

( கூடு இதழுக்கு எழுதியது )

Comments

  1. தேசிகன்,

    ஏதேனும் ஒரு வேல்யூ வழைமையிலிருந்து கூடுதலாக இருந்தால், அதன் அருகில் * போட்டு, மீண்டும் ஒருமுறை பரிசோதித்துப் பார்த்தோம், அப்போதும் கூடுதலாகத்தான் இருந்தது என்று நல்ல லேப்கள் விளக்கிக் கூறும். மல்லையாவில் அப்படிக் கூறி இருந்தால், இந்த ராண்டம் சால்ஜாப்பு செல்லாது. நீங்கள் கேஸ் போட்டு பில்லியனராகலாம்:-)

    லலிதா ராம்

    ReplyDelete
  2. அப்ப அந்த "3" -லேருந்து நாங்க தப்பவே முடியாதா? :) #கொலவெறி

    ReplyDelete
  3. இது மாதிரியான கார்ப்பரேட் மருத்துவமனைகளில் கொடுக்கப்படும் ரீடிங்குகளை நிச்சயம் இன்னொரு டயக்னாஸ்டிக்ஸில் க்ராஸ் செக் செய்யவும்.

    there is a cartel running in many places to show higher values of Sugar or such reports to ensure regular visits and medicines

    - அலெக்ஸ் பாண்டியன்

    ReplyDelete
  4. True enough :) :) Do read this blog http://www.rbvigneshwar.wordpress.com/

    ReplyDelete
  5. I think triglycerides are purely related on our physical actitivits. It is a fluctuating parameter. There is a possibility of varying test results within one day depending on the type of kit used to measure the value.

    ReplyDelete

Post a Comment