Skip to main content

போராட்டமே வாழ்க்கை


எங்கள் வீட்டு வாசலில் இருக்கும் சிகப்பு நிற கிளோட்டன் செடியின் நுனிக்குருத்தை சில வாரங்களுக்கு முன் குரங்கு ஒன்று வந்து பிய்த்துப் போட்டது. இத்தனைக்கும் எங்கள் வீடு 15-ஆவது மாடியில் இருக்கிறது. செடியில் குருத்து என்பது மிக முக்கியமானது. சில செடிகளுக்கு நுனிக்குருத்து மிக முக்கியம். தேங்காய், பனை போன்றவற்றில் நுனிக்குருத்தை வெட்டிவிட்டால் செடி வளராது.

முளைக்கருவிலிருந்து (embryo) புறப்படும் இந்த நுனிக்குருத்து செடிக்கு மிக இன்றியமையாதது. ஆங்லத்தில் Terminal Bud என்பார்கள். செடி எப்படி வளரவேண்டும் எங்கே இலைவிட வேண்டும் என்ற எல்லாமே அங்கேதான் இருக்கிறது. 100 வருடம் வாழ்ந்துகொண்டு இருக்கும் மரத்தையும், மண்ணிலிருந்து உலகத்தை எட்டிபார்க்கும் சின்ன செடியையும் பெரிதாக வளரவைப்பது இந்த நுனிக்குருத்துதான்.

செடிகளில் குறிப்பிட்ட அளவில் கணுக்களைக் காணலாம் (axil). செடிகளில் தோன்றும் கணு, செடி வளர்வதற்கு ஏற்ற சக்தியை அங்கே சேகரித்து வைக்கிறது என்று நினைக்கிறேன். வேர்களிலிருந்து வளரும் கீழ்நோக்கி நீளும் கிளைகள் எங்கிருந்து வேண்டுமானாலும் முளைக்கும். ஆனால் செடிகளில் மேல்வளரும் கிளைகள் இந்தக் கணுக்களிலிருந்துதான் முளைக்கும். வயலும் வாழ்வும் போன்ற நிகழ்ச்சியை வேறு சேனலுக்கு மாற்றாமல் கேட்டிருந்தால் பூச்சியினால் நுனிக்குருத்து தாக்கப்பட்ட செடிகள் இறந்து போவதையும் அதை எப்படி தடுப்பது என்பதையும் கேட்டிருக்கலாம்.



குரங்கு கடித்த அந்தச் செடிக்கு வருவோம். அந்தச் செடியை தினமும் பார்த்துக்கொண்டிருந்தேன். மூன்று வாரம் செடி அப்படியே இருந்தது. நான்கு இலைகளில் இரண்டு இலைகள் காய்ந்துபோய் கீழே விழுந்தது. ஆனால் சில நாள்களுக்குமுன் அந்த ஆச்சரியம் நடந்தது. செடிக்குக் கீழே ஒரு முளைவிட்டு சின்ன செடியும், செடிக்குமேல் இருக்கும் கணுவிலிருந்து இரண்டு முளையும் செடி துளிர்த்துவிட்டது என்பதை உணர்த்தியது. எந்தக் கணு என்றுகூட செடி தேர்தெடுக்கிறது; இருப்பதிலேயே பலமான கணு எதுவோ அதிலிரிந்து துளிர் வளரும். மற்றவை ஸ்டாண்ட்-பை (Standby)

பொங்கலுக்கு வாங்கும் கரும்புத் துண்டு ஒன்றை நிலத்தில் பதியுங்கள், கணுவிலிரிந்து முளைவரும். குழந்தைகளிடம் காண்பியுங்கள்.

- 0 - 0 - 0 - 0 -

பத்தாவது படிக்கும்போது எனக்கு டின்டின் (Tintin) அறிமுகம் கிடைத்தது. சப்பை மூஞ்சி, Quiff தலைமயிர், கூட ஒரு நாய், அவ்வளவுதான்.

கிட்டதட்ட 100 மொழிகளில், பல புத்தகங்களில் இதே மூஞ்சிதான், கொஞ்சம்கூட மாற்றம் இருக்காது. மக்கள் மனதில் ஆழப் பதிந்துவிட்டது. நான் படித்த அதே டின்டின்னை அதே ஆர்வத்துடன் என் மகள் படிக்கிறாள். நமக்கு வயசானாலும், டின்டின்னுக்கு வயசாகாது!.

சாதாரண நாவலைப் படம் எடுத்தாலே ஆயிரத்தெட்டு விமர்சனங்களைத் தாங்கிக்கொள்ள வேண்டும். காமிக்ஸைப் படம் எடுப்பதோ மிகப் பெரிய சவாலே!. 2D-யாக பல மில்லியன் தீவிர ரசிகர்கள் பார்த்த அதே டின்டின்னை எந்தக் குறையும் இல்லாது 3D டின்டின்னாகக் காண்பிக்க துணிவும் உழைப்பும் வேண்டும்.

ஸ்பீல்பெர்க் பீட்டர் ஜாக்சனின் கூட்டணி, காமிக்ஸை அப்படியே எடுக்காமல், திரைக்குக் கொண்டுவரும்போது என்னென்ன செய்ய வேண்டும் என்று ஹோம்வர்க் செய்து படத்தின் ஒவ்வொரு காட்சியையும் செதுக்கியுள்ளார்கள். டின்டின்னை மட்டும் 3D-இல் காண்பித்தால் போதாது, சுற்றி இருப்பதையும் 3D-யாகக் காண்பிக்க வேண்டும்; பக்கத்தில் இருக்கும் மாடிப்படி, ஏன் டின்டின் கட்டியிருக்கும் ஷூ-லேஸ் முதற்கொண்டு.

அறிமுகக் காட்சியில் மார்க்கெட்டில் டின்டின்னை சாலை ஓர ஓவியர் வரைவது போலவும், 3D டின்டின் மூஞ்சியைக் காண்பிக்காமல் அந்த ஓவியர் வரைந்த 2D டின்டின்னை முதலில் காண்பித்துவிட்டு பிறகு 3D டின்டின்னை நமக்கு அறிமுகம் செய்வதிலிருந்து ஸ்பீல்பெர்க் புத்திசாலித்தனம் ஆரம்பிக்கிறது. இந்தக் காட்சி இல்லை என்றால் நிச்சயம் நாம் பார்த்த டின்டின் மாதிரி இந்த டின்டின் இல்லையே என்ற எண்ணம் நம் மனதில் எழும்.

படத்தில் டின்டின் முகத்தைக் காட்டிலும் கேப்டன் ஹாடாக் மூகம் அச்சு அசல்!. டின்டின் முக அமைப்பு, தலைமுடி, டிரஸ் எல்லாம் அப்படியே இருந்தாலும், டின்டின் மூஞ்சியில் இருக்கும் ஒரு குறுகுறுப்பு மிஸ்ஸிங்!.

3D படங்கள் அவதாருக்குப் பிறகு சர்வசாதாரணமாகிவிட்ட நிலையில் Motion Performance Capture வளர்ச்சி அசர வைக்கிறது. ஆனால் டெக்னாலஜி இருக்கிறது என்ற காரணத்துக்காக இவர்கள் ரோட்டில் போகும் குப்பனயோ சுப்பனையோ உபயோகப்படுத்தி எடுக்காமல், பெரிய பெரிய நடிகர்களைப் போட்டு படம் எடுத்ததற்குக் காரணம் டின்டின் சினிமாவில் ஒழுங்காக வர வேண்டும் என்ற ஒரே குறிக்கோள்.

செய்திகளையும் ஸ்பீல்பெர்க் பேட்டியையும் படித்தால் அவருக்கு டின்டின்னைப் படமாக்கும் எண்ணம் இருபது வருடங்களுக்குமுன்னரே வந்தது தெரிகிறது. 'ரெய்டர்ஸ் ஆஃப் தி லாஸ்ட் ஆர்க்’ (Raiders Of The Lost Ark) படத்தின் பத்திரிகை விமர்சனங்களில் டின்டின் சாயல் இருக்கிறது என்று பிரெஞ்ச் பத்திரிகை ஒன்றின் விமர்சனத்தைப் படித்ததில், டின்டின் பற்றியும் படிக்க ஆரம்பித்தார்; அசந்து போனார். அதைத் திரைப்படம் ஆக்கும் உரிமையை ஹெர்ஜேவை சந்தித்துப் பெற்றார். ஆனால் படம் எடுக்க ஆரம்பிக்கும்முன் ஹெர்ஜே இறந்துவிட, படம் எடுக்கும் எண்ணத்தையும் ஓரம்கட்டினார் ஸ்பீல்பெர்க். சில வருடங்களுக்குமுன் திரும்ப ஆரம்பித்து டின்டின்னை மோஷன் பர்ஃபாமன்ஸ் கேப்சர் மூலம் உயிர்ப்பித்துள்ளார்.

95-இல் தற்கொலை செய்துகொண்ட திவ்யபாரதி என்ற நடிகையின் பல படங்கள் பாதியில் நின்று போயின. அந்த நடிகையை திரும்ப கிராபிக்ஸில் உயிர்பெற்றுக் கொண்டுவரப்போகிறோம் என்று 95-இல் நான் வேலை பார்த்ததுக்கொண்டிருந்த முதல் கம்பெனியில் விளம்பரம் செய்துகொண்டிருந்தார்கள். அவர்கள் தயாரிப்பில் வெளிவந்த சில கார்ட்டூன் படங்கள் சுமார் வீடியோ கேம் ரகம். அன்றிலிருந்து இன்றுவரை தொழில்நுட்பம் பல மடங்கு முன்னேறிவிட்டது. ஆனாலும் அன்றே பாடல்காட்சியை மிக நேர்த்தியாக (perfection) ஒவ்வொரு ஃபிரேமிலும் கொண்டு வந்திருக்கிறார்கள் - லைட்டிங், கண்ணாடிப் பெட்டியில் இருக்கும் அந்தக் கப்பலைக் காட்டும் போது அந்தக் கண்ணாடிப் பெட்டியில் தெரியும் பிம்பங்கள், அந்த பைக் சேசிங் காட்சி எல்லாம் மலைக்க வைக்கிறது.

மோஷன் பர்ஃபாமன்ஸ் கேப்சர் பற்றி இண்டர்நெட்டில் பல தகவல்கள் கிடைக்கின்றன; படித்துப் பார்க்கலாம். இன்னும் சில வருடங்களில் நம்முடைய இயக்குநர்கள் சிவாஜியை வைத்து இந்த டெக்னிக்கில் படங்களைக் கொண்டு வந்துவிடுவார்கள். சிவாஜி மாதிரி அழும் நபரைக் கண்டுபிடிப்பதுதான் கஷ்டம்!.

- 0 - 0 - 0 - 0 -

சாவை பற்றி பல செய்திகள், கட்டுரைகள் தினமும் செய்திதாள்களில் வருகிறது. எனக்கு யாரைக் கண்டாலும் பயமே இல்லை என்று சொல்லுபவர்களும் உள்ளூர சாவிற்கு பயப்படவே செய்கிறார்கள். மரண பயம், "Scared to Death" என்று சொல்லுவதைப் பார்த்திருக்கலாம்.

உணர்ச்சிவசப்படுவதாலும், அதிக மன அழுத்தம் காரணமாக மாரடைப்பு வருகிறதா என்று ஆராய்ச்சி செய்துபார்த்திருக்கிறார்கள். அதுவும் சாவை பற்றிய பயம் என்றால் கேட்கவா வேண்டும்?

Hound of the Baskervilles என்ற ஷெர்லாக் ஹோம்ஸ் கதையில் சார்ல்ஸ் என்பவர் முரட்டுத்தனமான நாயைப் பார்த்து பயந்து மாரடைப்பால் இறந்து போவார். பிரிட்டிஷ் மருத்துவப் பத்திரிக்கையில் Hound of the Baskervilles Effect என்ற கட்டுரையில் சாவு எப்போது என்ற பயம் காரணமாக வரும் மாரடைப்பு பற்றி ஆராய்ச்சி செய்துள்ளார்கள். நிச்சயம் மரண பயத்தால் நிறைய மாரடைப்பு ஏற்படுகிறது என்று காண்பிக்க ஜப்பான் சீனாவில் மாதத்தின் நாலாம் நாளை அவர்கள் தேர்ந்தெடுத்து அந்நாளில் எவ்வளவு பேர் மாரடைப்பினால் இறந்து போகிறார்கள் என்று கணக்கிட்டுள்ளார்கள். (ஜப்பான் சீனாவில் நான்காம் எண் மரணத்தைக் குறிக்கும் என்று நம்பப்படுகிறது). ஆராய்ச்சி முடிவில் மாதத்தின் நான்காம் நாள் மற்ற நாள்களைக் காட்டிலும் நிறைய பேர் மரடைப்பால் இறக்கிறார்கள் என்று கண்டுபிடித்தார்கள்.

சாவின் விளிம்பிற்குச் சென்றுவந்தேன் என்று சிலர் சொல்லுவதைப் பார்த்திருக்கலாம். எனக்கு பல்பு தெரிகிறது, வெளிச்சம் தெரிந்தது, தாத்தா பேசினார், ஏன் கடவுள் கூட தெரிந்தார் என்று சொல்லுவது எல்லாம் உங்கள் ரத்த ஓட்டத்தில் அதிகமாக இருக்கும் அதிக அளவு கார்பன் டையாக்சைடுதான் காரணம் என்று கண்டுபிடித்துள்ளார்கள்.

"இன்னிக்கு செத்தால் நாளைக்குப் பால்" என்ற வசனம் சினிமாப் படங்களில் நகைச்சுவையாகிவிட்டது. கொரியாவில் செத்தால் எப்படி இருக்கும் என்று பார்க்க ஒரு நிறுவனம் இருக்கிறது. உங்களை மஞ்சள் உடையில் (இறந்தபின் அணிவிக்கப்படும் அங்கி) ஒரு சவப்பெட்டியில் படுக்கவைத்து மூடியை மூடிவிடுவார்கள். கொஞ்சம் நேரம் கழித்து திறந்துவிடுவார்கள். இப்படி வெளியே வந்தவர்கள், வாழ்கை என்றால் என்ன என்று புரிந்துக்கொண்டேன், இனிமேல் எல்லோரிடமும் அன்பு செலுத்துவேன், பேராசையை விட்டுவிடுவேன் என்று சொல்லுகிறார்கள்.

சென்னையில் ஆபீஸ் போகும்போது வழியில் ஒரு சுடுகாடு இருக்கும். பிண ஊர்வலம் போகும் அன்று முக்கால்வாசி அமாவசையாக இருக்கும். தமிழ் சீரியலில் பாருங்கள் வெள்ளிக்கிழமை மாலைதான் யாராவது இறந்துபோய் ஒப்பாரி வைப்பார்கள்.

படத்தில் இருப்பது ஜூன் மாதம் லண்டன் சென்றபோது ஷாப்பிங் இடத்தில் பார்த்த ஒரு கடை இது!. உங்கள் சாவிற்கு நீங்கள் முன்பதிவு செய்யலாம். இதில் கூட பிரிபெய்ட் வந்துவிட்டது!

திரும்ப செடியின் பகுதியைப் பாருங்கள், எப்படி போராடி வாழ்கிறது என்று!

கூடு இதழுக்கு எழுதியது 

Comments