Skip to main content

பனியன் அண்டர்வேருடன்...


 முதலில் கொஞ்சம் பழைய மேட்டர்... 

1995ல் விளையாட்டாக ஐந்து பக்கம் கொண்ட தமிழ் வலைதளத்தை tamil.net'ல் அமைத்தேன். அந்த காலத்தில் தமிழ் வலைதளம் மற்றவர்களுக்கு தமிழில் தெரியவேண்டும் என்றால் போன ஜென்மத்தில் நிறைய புண்ணியம் செய்திருக்க வேண்டும். என் வலைத்தளத்தை பாராட்டி வந்த மின்னஞ்சல்களை விட பூச்சி-பூச்சியாக தெரிகிறது என்று வந்த மின்னஞ்சல்கள் தான் அதிகம்.

 பின்னர் பிளாகர் வந்த புதிதில் அதற்கு மாறினேன். வலைப்பதிவுக்கு கலர் அடிப்பது, லேயவுட்டை மாற்றுவதை கொஞ்சம் நாள் செய்துக்கொண்டு இருந்தேன். புது மனைவிக்கு அழகு பார்ப்பது அலுத்து போன பிறகு கொஞ்சம் எழுத ஆரம்பித்தேன். தமிழ்மணம் வந்த சமயம், அப்போது பிரபு ராமநாதன் எனக்கு அறிமுகமானார். அவர் என் பெயரில் ஒரு domain தருவதாகவும், அதில் என் வீட்டுப்பக்கத்தை கொண்டுவரவேண்டும் என்று விரும்பினார். அவரிடம் தொடர்ந்து கண்ணாம்மூச்சி விளையாடினாலும் என்னை அவர் விடுவதாக இல்லை. ஐந்து வருடம் என்னை துரத்தித் துரத்தி என் பேரில் domain வாங்கி தந்தார். காசியின் உதவிக்கொண்டு Blogcms நிறுவினேன். அடுத்த புது மனைவிக்கு அழகு பார்த்த பின்னர், டிவி ரிமோட்டில் அடுத்த சானலை மாற்றுவது போல Wordpressக்கு மாறினேன்.

எல்லாம் நன்றாக போய்க்கொண்டு இருந்தது. நானும் எழுதுவதை சில மாதங்களக நிறுத்தியிருந்தேன். போன வாரம், எழுத வருகிறதா என்று பார்க்க ஒரு சின்ன கட்டுரை எழுதினேன். வலைப்பதிவில் அதை பிரசுரித்த சில மணி நேரத்தில் என்னுடைய www.desikan.com தளம் 'ஹாக்' செய்யப்பட்டது. "பேசாதே!" என்ற சைகையுடன் ஒரு பாவபட்ட பெண் விரலை வாயில் வைத்துக்கொண்டு போஸ் கொடுக்க என்னுடைய தளத்தை நிர்வகிக்கும் கம்பெனியுடன் பேசிய போது "இதோ பத்து நிமுஷம் சார்" என்று முந்தா நாள் எடுத்த நகலை கொண்டு என் வலைத்தளத்தை மீட்டார்கள். ஆனால் என் எழுத்துக்கு பதிலாக என்னுடைய வலைத்தளம் உள்ளே இருக்கும்(டைரக்டரி லிஸ்டிங்) பனியன் அண்டர்வேர் எல்லாம் வெளியே தெரிய ஆரம்பித்தது.

 நண்பர் ரவியை(Ravidreams) கூப்பிட்டு விஷயத்தை சொன்னேன். உடனே அவருடைய வேலை எல்லாம் விட்டுவிட்டு தகவல் களஞ்சியத்தில்( Database) ஏதோ பிரச்சனை இருக்கலாம் என்று சரி செய்தார். செகியூரிட்டி பேச் எல்லாம் போட்டிருக்கேன், இனி பிரச்சனை இருக்காது நீங்க தொடந்து எழுதலாம் என்று நம்பிக்கை கொடுத்தார். பழைய நிலைக்கு திரும்ப கொண்டு வர இரண்டு நாட்கள் ஆனது.

 நேற்று ராத்திரி ஒரு நகல் எடுத்து வைக்கலாம் என்று திரும்ப என் வலைத்தளத்துக்கு சென்ற போது மெலிதான இசை கேட்டது, கூடவே காஷ்மீரில் என்ன நடக்கிறது தெரியுமா ? என்று இந்திய ராணுவத்தை திட்டி பீரங்கி என்னை நோக்கி இருக்க மீண்டும் பனியன், அண்டர்வேர் தெரிய ஆரம்பிக்க... கோபம் வரவில்லை அதற்கு பதில் திடீர்னு ஞாநோதயம் வந்தது.

 உடனே எல்லா பதிவுகளையும் XML இம்போர்ட் எஸ்போர்ட் கொண்டு கூகிள் ஆண்டவரிடம் ஒப்படைத்துவிட்டேன்.

நீதி: பதிவுகளை வேர்ட் பிரஸில் வைத்துக்கொண்டு இருப்பவர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.  நான் வேட்பிரஸில் ரசிகர் அதில் தான் எழுதுவேன் என்று அடம்பிடிப்பவர்கள், 'கூகிள் ஆண்டவர் துணை' என்று போட்டுவிட்டு எழுதுங்கள்.
( இன்று காலை ET ல் வந்த படம், கொஞ்சம் எடிட் செய்து உபயோகப்படுத்தியிருக்கேன் )

Comments

  1. ஏன் இந்த வேண்டாத வேலை. பிளாக்கர் சேவை இலவசமே, கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளாக எனது பதிவுகள் அப்படியே காணமல் போகாமல்தானே இருக்கின்றன?

    பார்க்க: http://dondu.blogspot.com/2010/08/blog-post_22.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete

Post a Comment