Skip to main content

கரும்புப் பூவும் சோம்நாத்பூரும்.


எங்கள் அலுவலக கேண்டீனில் பெங்களூர் மைசூர் சுற்றுலா தலங்களின் படங்கள் பெரிய சைஸில் அலங்கரித்திருக்கும். சினிமா குரூப் டான்ஸில் ஹீரோயின் மட்டும் தனியாகத் தெரிவது போல் அந்த கொலாஜில் ஒரு கோயில் மட்டும் தனியாக வசீகரிக்கும். தினமும் சாப்பிடும்போது கோயில் பக்கம் உட்கார்ந்து சுமாரான சாப்பாட்டையும் ரசித்துச் சாப்பிட்டிருக்கேன். படத்தில் ரசித்த அந்தக் கோயிலுக்கு மார்ச் மாத ஒரு சனிக்கிழமை திடீரென 'சரி கிளம்புங்க' என்று குடும்பத்துடன் கிளம்பினேன் - சோம்நாத்பூர்!



பெங்களூரிலிருந்து 140கிமீ தூரத்தில் சோமநாத்பூர் என்ற அமைதியான சின்ன கிராமமும் இந்தப் பழமையான கோயிலும் இருக்கின்றன. கிபி 1268ல் ஹோய்சாளர்களால் கட்டப்பட்டது. ஹோய்சாளர்கள் கடைசியாகக் கட்டிய பெரிய கோயில் என்கிறார்கள். பேலூர், ஹலேபிடிலும் இந்த மாதிரி கோயில்கள் இருக்கின்றன. ஆனால் சோம்நாத்பூர் கோயில் முழுமையாக இருக்கும் கோயில் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கோயில் மூன்றாம் நரசிம்ம மன்னனின் தளபதியான சோமநாதன் என்பவரால் கட்டப்பட்டது என்ற குறிப்பும் இருக்கிறது.


"சார் கனகபுரா வழியா போனால், மாளவல்லி கிராமம் வரும்... " போன்ற தகவல்களை சிக்னலில் சேகரித்துக் கொண்டு வரைபடத்தில் உள்ள ரூட்டில் பயணிக்க ஆரம்பித்தோம். இந்த வரைபடத்தை உங்களுக்குக் கொடுப்பதற்கு காரணம், யாருக்காவது போக விருப்பம் இருந்தால் இந்த வழியை தேர்ந்தெடுக்காதீர்கள் என்று சொல்வதற்குத் தான். ( நல்ல ரூட் - பெங்களூரிலுருந்து போகும் போது, மாண்டையா வரை சென்று அங்கே யாரையாவது கேட்டால் வழி சொல்வார்கள்.)



கனகபுராவைத் தாண்டினால் மண் பாதை. இரண்டு பக்கங்களும் வெறும் காடு, செடிகொடிகள். சில இடங்களில் எப்பொழுதாவது ஒவ்வொரு வீடு வருகிறது. இன்னும் கொஞ்சம் தூரம் சென்றால் "End of Civilization" போர்ட் வரும் என்று பார்த்தால் ஓர் இடத்தில் 'சுகுணா சிக்கன்' விளம்பரப் பலகை.. நாங்கள் போன வழியில் கார், பஸ் ஏன் சைக்கிள் கூட பார்க்க முடியவில்லை. இந்த மாதிரிக் 'காடுகளை'  பாரதிராஜா படத்தில்தான் பார்த்திருக்கிறேன். வீடு வரும் இடத்தில் எல்லாம், மைல்கல் மாதிரி ஆங்காங்கே மக்கள் கும்பலாக உட்கார்ந்துகொண்டு கள்ளிக்காட்டு இதிகாசம் எழுதுகிறார்கள் என்று பார்த்தால் சூதாட்டம் ஆடுகிறார்கள். சில இடங்களில், "அட கார் எல்லாம் நம்ம ஊருக்கு வருது" என்பதைப் போல தலையை உயர்த்தி வேடிக்கை பார்த்தார்கள். மனைவி "மொகாலய படையெடுப்புக்குப் பிறகு நாமதான் முதல்ல இங்க வரோம் போலிருக்கு". சில இடங்களில் மத்தியான வேளையிலும் ராத்திரி பன்னிரண்டு மணி போல் நிசப்தம். கார் மாட்டு வண்டி போல் போனது.


இரண்டரை மணி நேரப் பயணத்துக்கு பிறகு சின்ன கிராமம். அழகிய பூங்கா. சோம்நாத்பூர் கோயில்.


கோயிலுக்குள் போகும்முன் கோயிலைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம். கோயிலுக்குள் பிரசன்ன சென்ன கேசவப் பெருமாள். 'சென்ன' என்றால் கன்னடத்தில் அழகு என்று பொருள். சென்ன என்பது இந்தக் கோயிலுக்கு சின்ன வார்த்தை.


இந்தியக் கோயில்களை பல்வேறு கட்டிடக்கலை அமைப்புகளால் அடையாளம் காணலாம். நம்மூர் பக்கம் பார்க்கும் கோயில்கள் எல்லாம் திராவிட வகையைச் சேர்ந்தவை. வடக்கே நாகரா வகை. இரண்டும் கலந்தது வேசரா வகை. கர்ப்பகிரகத்தின் மேல் இருக்கும் விமானம், கோயிலின் நில வரைபடம், அமைப்பு, முதலியவை கொண்டு எந்த வகை என்று சொல்கிறார்கள். சோம்நாத்பூர் வேசரா வகை. இந்தக் கோயிலின் அமைப்பை படத்தில் பார்க்கலாம் [%popup(20090721-somnathpur_googlemap_arch.jpg|651|357| ( கூகிள் மேப் )%]  மூலம் தேடியதில் கிடைத்ததை சேர்த்து இணைத்திருக்கிறேன்) கோயிலைச் சுற்றி நட்சத்திரம் போல் தெரிகிறதா ?



இந்தக் கோயிலின் அமைப்பு பதினாறு முனை கொண்ட நட்சத்திரம் போன்ற அமைப்பைக் கொண்டுள்ளது,  மூன்று கர்ப்பகிரகம் - கேசவா, ஜனார்த்தனா, வேணுகோபால். இதில் ஜனார்த்தனா மற்றும் வேணுகோபால் சிலை மட்டும்தான் ஒரிஜினல்; நடுவில் இருந்த கேசவப் பெருமாள் சிலை பிரிட்டிஷ் மியூசியத்தில் இருக்கிறதாம். தற்போது இருப்பது டூப்ளிகேட் என்கிறார்கள். உண்மையாகத்தான் இருக்க வேண்டும்.. கர்ப்பகிரகத்தின் மேலே கவிழ்த்து வைத்த மணி போல் கோபுரம். கீழிலிருந்து மேலே பார்க்க பிரமிட் மாதிரி தோற்றம். அதன் முழுவதும் சிற்பங்கள் - பிரமிப்பு. 


நாங்கள் போன சமயம் நல்ல வெயில்; காலில் செருப்பு இல்லாமல் கங்காரு போல் தாவித் தாவிப்  போகவேண்டியிருந்தது. ஆனால் கால் கொப்பளித்தாலும் பரவாயில்லை, சிலைகளை பக்கத்தில் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் அருகில்போய் எல்லாவற்றையும் பார்த்தபோது சூடு சுவடு தெரியாமல் போனது.


ராமாயணம், மஹாபாரதம், பாகவத்தில் உள்ள கிருஷ்ணர் கதைகள் எல்லாவற்றையும் சிற்பங்களில் பார்க்கமுடிந்தது. தெற்குச் சுவரில் ராமாயணமும்; வடக்குச் சுவரில் மஹாபாரத சிற்பங்களும். சோழப் பேரரசர்கள் கூட எவ்வளவு முயன்றும் இந்த மாதிரி தங்கள் கலைஞர்களைக் கொண்டு சிற்பங்களை வடிவமைக்க முடியவில்லை என்றும் சொல்கிறார்கள். மல்லித்தமா என்ற சிற்பி இதில் நிறைய சிற்பங்களை செய்திருப்பார் போலும். அவர் பெயர் கல்வெட்டில் 40 முறை வருகிறது. சில இடங்களில் மல்லி; சில இடங்களில் வெறும் 'ம'. அந்தக் காலத்திலேயே சின்னக் கையெழுத்து இருந்திருக்கிறது!. பதின்மூன்றாம் நூற்றாண்டில் பல கோயில்கள் இவர் கைவண்ணத்தில் ஆனவை.



கோயிலின் உள்ளே சிலிண்டர் மாதிரி தூண்கள் பளபளப்பாக இருக்கின்றன. இந்தப் பளபளப்பிற்குக் காரணம், செக்கு மரத்தின் நடுவில் தூண்களை வைத்து மாடுகளைக் கொண்டு இவை பாலிஷ் செய்யப்பட்டதாம். அந்த கால லேத் மிஷின்!


விட்டத்திலும் வட்ட வடிவில் அழகிய வேலைப்பாடுகள். கீழேயிருந்து பார்க்கும் போது தாமரை பூவிற்கு நடுவில் வாழைப்பூ மாதிரி தோற்றம்.


கோயிலைச் சுற்றி 64 மண்டபம்; இந்த மண்டபங்களில் இருந்த சிலைகள் கூட பிரிட்டிஷ் காரர்கள் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்கள் என்று சொல்கிறார்கள். இந்தக் கோயிலின் சிறப்பு அம்சம் ஒரு சிற்பத்தைப் போல இன்னொரு சிற்பத்தைப் பார்க்க முடியாது: எல்லாமே தனித்துவமானவை. எல்லாச் சிற்பங்களும் ஆபரண வேலைப்பாடுகளோடு மிக அழகாக இருக்கின்றன. இந்த மாதிரி சிற்ப வேலைப்பாடுகள், சந்தன மரத்திலும், யானை தந்ததிலும்தான் நாம் பார்த்திருக்கிறோம். இந்தக் கோயிலே நம் இந்தியக் கட்டிடக்கலைக்கு மிகச் சிறந்த ஓர் ஆபரணம் என்று தோன்றுகிறது.



கோயிலுக்கு வெளியே பெரிய அரச மரம், மரத்தை சுற்றி பஞ்சாயத்து மேடை மாதிரி காட்டி வைத்துள்ளார்கள். மரத்தின் மீது  சின்ன தபால் பெட்டி ஒன்று இருக்கிறது. இதில் தபால் போட்டால் சோநாத்பூர் முத்திரையுடன் போய் சேரும். அடுத்த முறை போகும் போது யாருக்காவது தபால் போட வேண்டும்.


வழக்கம் போல் இந்தக் கோயில் இருப்பதே இங்கே பலருக்குத் தெரியாமல் இருக்க, வெளிநாட்டுக்காரர்கள் டிஜிட்டலாக சோம்நாத்பூரை தங்கள் ஊருக்கு எடுத்துக்கொண்டு போகிறார்கள். கோயிலைச் சுற்றி எந்த உணவகமும் பொழுது போக்கும் இல்லாதது மிகப் பெரிய ஆறுதல். நாம் நம் குழந்தைகளுக்கு ஈஃபில் டவரும், லண்டன் பிரிட்ஜும் காண்பிக்கிறோம். இல்லை என்றால் சனி ஞாயிறு சரவண பவன். இது போன்ற புதையல்களை நாம் கண்டுகொள்வதில்லை.



சோம்நாத்பூருக்குச் செல்வதற்கு சில வாரங்கள் முன் மேல்கோட்டை சென்று உடையவரை தரிசித்துவிட்டுத் திரும்பிய பொழுது பாண்டவபுரம் என்ற இடத்தில் வயல்களில் விளைந்திருக்கும் முட்டைகோஸைப் பார்ப்பதற்கு வண்டியை நிறுத்தினோம். கூடவே பச்சைப் பசேல் என்று இருந்த பயிர் என்ன என்று கேட்டதற்கு "கேரட், இன்னும் ஒரு வாரம் கழித்து முழுவதும் தண்ணீர் நிரப்பி மண் லூசான பிறகு கேரட்டை புடுங்குவோம்" என்றார். என் மகள் இப்பவே பார்க்க வேண்டும் என்று சொல்ல அவரும் பொருமையாக ஒரு கொத்து கேரட் புடுங்கி என் மகள் கையில் கொடுத்தார்.


அந்த  விவசாயிடம் கோஸ் கிடைக்குமா என்று கேட்டவுடன் கை நிறைய அள்ளிக் கொடுத்தார். எவ்வளவு வற்புறுத்தியும் பணம் வாங்க மறுத்துவிட்டு "சாப்பிடத் தானே கேட்கிறீர்கள், வியாபராமா செய்யப் போகிறீர்கள்?" என்றார். மனிதர்களையும் பார்த்த திருப்தியில் அவரை ஒரு படம் பிடித்துவிட்டுப் புறப்பட்டோம்.



இரண்டு பக்கமும்  கரும்பு தோட்டங்கள் அதற்கு மேல் அழகான பூக்கள். மக்காச் சோளம் என்றே நினைத்தேன். கூட வந்த என் மனைவியின் சொந்தம் அது கரும்புப் பூக்கள் என்றார். பொங்கலுக்குப் பொங்கல் மட்டும் கரும்பு பார்த்திருந்த நான், இல்லை அது மக்காச் சோளம் தான் என்று சத்தியம் செய்தேன். ஒரு நாள் இரவு தூக்கம் வராமல் எதையோ தேடியபொழுது கரும்புப் பூ படம் சஞ்ஜய் காந்தி(கிராமத்து படங்கள் அருமை) வலைத்தளத்தில் இருந்தது.. மக்காச் சோளம் என்று நினைத்திருந்த நான் அன்று மக்கானேன்.


(  சோம்நாத்பூர் ஆல்பம் பார்க்க )


மறந்து போன குறிப்புகள் : பிரிட்டிஷ் காரர்கள் காலத்தில் சோம்நாத்பூர் எப்படி இருந்தது என்று தேடும் போது எனக்கு சில படங்கள் கிடைத்தது. அதை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். மறந்துவிட்டது.


இந்த படங்கள் எடுத்த ஆண்டு 1895!  பார்த்து ரசியுங்கள் ( நன்றி: பிரிட்டிஷ் நூலகம் )








Comments