ஒன்பதாவது படிக்கும் போது ஜெரோம் கே.ஜெரோம் (Jerome.K.Jerome) எழுதிய தொலைப்பேசி பற்றிய நகைச்சுவைக் கட்டுரை எங்களுக்குப் பாடமாக இருந்தது. இந்தக் கட்டுரையை படித்த காலத்தில் எங்கள் வீட்டில் தொலைப்பேசி இல்லை. தொலைப்பேசிக்கு பக்கத்துக் கடைக்குப் போக வேண்டும்.
சில ஆண்டுகளில் தொலைப்பேசி வீட்டுக்கு வந்துவிட்டது. சினிமாவில்தான் சிகப்பு, பச்சை நிறத் தொலைப்பேசி எல்லாம் பார்க்க முடியும். எங்கள் வீட்டுக்கு வந்தது சாம்பல் நிறம். ஆள்காட்டி விரலைப் போட்டு சுழற்ற வேண்டும். இந்தச் சுழற்சி முறை எப்படி வேலை செய்கிறது என்று போன வருஷம்தான் படித்துத் தெரிந்துகொண்டேன். (டெலிகாம் கம்பெனியில் இருந்துகொண்டு இது கூடத் தெரியவில்லை என்றால் எப்படி?) மவுத்வாஷ் எல்லாம் இல்லாத அந்தக் காலத்தில் மாதத்துக்கு ஒரு முறை ஒரு அக்கா ஜோல்னா பையுடன் வந்து, "என்ன பாட்டி சௌக்கியமா?," கேட்டுக்கொண்டே தொலைப்பேசியை மஞ்சள் துணியைக் கொண்டு துடைத்துவிட்டு, பேசுமிடத்தில் வாசனை ஸ்டிக்கர் ஒட்டிவிட்டுப் போவாள்.
தற்போது ஒரு ரூபாயில் எங்கு வேண்டுமானாலும் பேசலாம். பெட்டிக்கடைக்குப் பக்கத்தில் மரக்கிளை சாய்வாக இருந்தால் மஞ்சள் நிறப் பெட்டியைத் தொங்கவிட்டு விடுகிறார்கள். தெருப் பிள்ளையாருக்கு அடுத்து இந்த மாதிரி மஞ்சள் உண்டியல்தான் தற்போது அதிகம்.
தொலைப்பேசி வந்த புதிதில் "ட்ரிங் ட்ரிங்" என்ற அழைப்பு வந்தால் அதை முதலில் எடுத்து, "இருங்க அப்பாவைக் கூப்பிடறேன்.." என்று சொல்வதற்கு எங்கள் வீட்டில் கடுமையான போட்டி இருந்தது. சில மாதங்களில், "யாராவது அந்த ஃபோனை எடுங்களேன் ரொம்ப நேரமா அடிக்குது.." என்று அம்மா சத்தம் போட, "ராணி காமிக்ஸ்" படித்துக்கொண்டிருந்தாலும் "ரொம்ப பிஸி" என்று எடுக்க சோம்பல்பட்டோம். சில சமயம் பக்கத்தில் யாரும் இல்லாமல் நம்மையே நொந்து கொண்டு எரிச்சலில் "ஹலோ" என்று சொல்லிவிட்டு "அட உங்களுக்கு ஆயுசு நூறு" என்று சொன்னதற்கு கருடபுராணத்தில் என்ன தண்டனை என்று தெரியாது.
டெலிஃபோன் மணி அடித்தால் பொய் தவிரவும் வேறு பலவித உணர்ச்சிகளும் வருகின்றன என்பதுதான் நிஜம் - பயம், மனஉளைச்சல், பதட்டம், பரபரப்பு, ஆத்திரம், என்று பலவற்றை அடுக்கிக்கொண்டே போகலாம்.
அலுவலத்தில் மீட்டிங்கின் போது யாருடைய செல்ஃபோன் அடித்தாலும் பெரும்பாலானவர்கள் தங்கள் செல்ஃபோனை புது மனைவியைத் தொட்டு பார்ப்பது போல் தொட்டுப் பார்ப்பதை நீங்கள் அடுத்த முறை கவனிக்கலாம். பீச்சில் காதலர்களை போல எப்போது தங்கள் செல்போனை சில்மிஷம் செய்யும் நபர்கள் வேறு வகை.
நான் சென்னையில் வேலை செய்த ஒரு கம்பெனியில் என் 'பாஸ்' எனக்கு அடிக்கொருதரம் ஃபோன் செய்வார். போனை கீழே வைத்தாலே அடிக்கும். அதனால் சில சமயம் கையிலேயே வைத்துக்கொண்டிருப்பேன். "மெயில் அனுப்பியாச்சா?", மெயில் அனுப்பிவிட்டு "மெயில் அனுப்பிவிட்டேன் படி" என்று ஒரு ஃபோன். "ஷங்கர் ஏன் இன்னிக்கு வரலை?" பதில் சொல்லி வைத்தவுடன், "எப்ப வருவான் என்று கேட்டுச் சொல்".... இப்படி "சென்னையில் இன்னிக்கு என்ன வெயில்?", "லஞ்சுக்கு என்ன எடுத்துக்கொண்டு வந்திருக்கிறாய்?" தவிர எல்லாவற்றையும் கேட்டுவிடுவார். அதனாலேயே எனக்கு தொலைப்பேசி அந்த "டிரிங் டிரிங்" அழைப்பு வந்தால் அலர்ஜியாகி அதை விரோதி மாதிரி பார்க்க ஆரம்பித்துவிட்டேன்.
ஒரு ஞாயிறு மதியம், அப்பா திடீர் என்று இறந்த செய்தி கேட்டது இந்த போனில்தான். இவை எல்லாம் ஆழ் மனதில் பதிந்துவிட்டதாலோ இதனால் தானோ என்னவோ "டிரிங் டிரிங்" அழைப்பு வந்தால் பரபரப்பு, பதட்டம் எல்லாம் சேர்ந்துக்கொண்டது. திருமணத்துக்கு பின் "டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா?" போன்ற வரிகள் எனக்கு அபத்தமாகியது.
சில மாதம் முன்னாடி என் செல்போனின் 'ரிங் டோனை' பழைய போன் மாதிரி "டிரிங் டிரிங்" என்று சத்தம் வருவதை போல் வைத்திருந்தேன். செல்போன் அடித்தால் உடனே
ஒள்ளிய கருமம் செய்வன் என்று உணர்ந்த
( பெரிய திருமொழி, 4.10.7 )
மாவலி வேள்வியில் புக்கு
தெள்ளிய குறளாய் மூவடி கொண்டு,
திக்கு உற வளர்ந்தவன் கோயில்...
மாவலிக்கு ஏற்பட்ட அந்த 'திக்' எனக்கும் ஏற்படும். பிறகு நல்ல தேஷ் ராகத்தில் அமைந்த வீணை இசைக்கு மாற்றிவிட்டேன். சிலர் குழந்தை அழும் சத்தம், தண்ணீர் கொட்டும் சத்தம், நாய்யின் 'லொள் லொள்' சத்தம் கூட வைத்திருக்கிறார்கள்.
தொலைப்பேசி அடித்தால் முகத்தில் ஒரு புன்னகையுடன் 'ஹலோ' என்று சொல்லிப்பாருங்க அடுத்த முனையில் இருப்பவருக்கு அந்த புன்னகை கேட்கும் என்று சொல்லுகிறார்கள். கணவன், மனைவி அடுத்த முறை டிரை செய்யலாம். புன்னகை கேட்டு, "பக்கதுல யாரு ? இவ்வளோ வழியிறீங்க?" என்று பதில் வந்தால் நான் பொறுப்பு இல்லை.
எங்கள் அலுலவகத்தில் பணிபுரியும் ப்ரியா சில நாள் முன் காலை போன் வந்ததால் பதட்டப்பட்டு எழுந்து தடுக்கி விழுந்து, கதக் நாட்டியக் கலைஞர் பாதி மேக்கப் போட்டுகொண்டிருக்கும் போது நாய் துரத்தி ஓடி வந்ததைப் போல் அடிபட்டுக்கொண்டிருக்கிறார். போனில் இருக்கும் உளவியல் பற்றி யாராவது ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது.
"Emotional Memory" என்பது பற்றி விஞ்ஞானிகள் சமீபமாக ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார்கள். பயம் அதில் ஒரு முக்கிய உணர்ச்சியாக ஆராயப்படுகிறது. இந்த உணர்ச்சி, மீன், நத்தை, பறவை, பல்லி, முயல், எலி, குரங்கு மனிதர்கள் எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கிறது. இந்த பய உணர்ச்சிகள் நாம் பலவற்றை நினைவு வைத்துக்கொள்ள நம் மூளைக்குப் பயன்படுகிறது என்பதுதான் உண்மை.
LeDoux என்ற ஆராய்ச்சியாளர் எலியை வைத்து ஆராய்ச்சி செய்துள்ளார். எலியை ஒரு கூண்டுக்குள் அடைத்துவிட்டு, ஒர் ஓட்டை வழியாக ஒலி அல்லது ஒளியை அனுப்பி எலி பயப்படுகிறதா என்று பார்த்தார். பயப்படவில்லை. அடுத்த முறை ஒலி, ஒளி அனுப்பும்போது எலிக்கு சின்னதாக மின்சார அதிர்ச்சியும் கொடுத்தார். (வீட்டு மசால் வடையைக் கூட கொடுத்திருக்கலாம்!) எலிக்கு பயம் உண்டாகியது. அப்போது எலியின் இதயத் துடிப்பு, இரத்தக் கொதிப்பு போன்றவை எடுக்கப்பட்டன. அடுத்த முறை எலி ஒலி அல்லது ஒளியைப் பார்த்தவுடன் மின்சார அதிர்ச்சி கொடுக்காமலே அதற்கு இரத்தக் கொதிப்பு, இதயத் துடிப்பு எகிறுகிறது என்று கண்டுபிடித்துள்ளார். ஆக அதன் சின்ன மூளையில் எங்கோ ஒரு ஓரத்தில் பயம் பதிந்துவிட்டது. பதிவான இடம் எமிக்டல் (Amygdala).
ஏமிக்டல என்பது நம் மூளையின் ஒரு மூலையில் இருக்கும் விசஷேப் பகுதி. இங்கேதான் நம் உணர்ச்சிகள் எல்லாம் தூண்டிவிடப் படுகின்றன. (Memory Triggers என்கிறார்கள்).
புளியங்காயை நாதஸ்வர வித்வான்முன் சாப்பிடும் போது வித்வானுக்கும், அடுத்த வீட்டில் பூரி பொரிக்கும் வாசனை நம் வீட்டுக்கு வரும்போதும், நல்ல பசி வேளையில் எப்படி மோர்க்களி செய்ய வேண்டும் என்று சொல்லக் கேட்கும்போதும் வாயில் ஜொள்ளு வருவதற்குக் காரணம் இது தான்.
காலை அலாரம் அடித்தவுடன் என்னமோ ஏதோ என்று பதறி எழுவது, சின்னக் குழந்தைகள், ஏதாவது சத்தம் வந்தால் சின்னதாக ஜர்க் கொடுப்பது, மிருகங்கள் தங்கள் உடலை சுருக்கிக் கொள்வது எல்லாம் இந்த மூளையின் செயல்பாடே. மூளை எது உண்மையிலேயே ஆபத்து என்று தெரியாமல் உடனே பதறுவதே இதற்குக் காரணம்.
நாட்டில் இருக்கிற மின்சாரப் பற்றாக்குறையில் மனிதனுக்கும் எலி மாதிரி மின்சார அதிர்ச்சி எல்லாம் கொடுத்து பரிசோதிக்கத் தேவை இல்லை. ஒரு தொலைப்பேசி அழைப்பே போதும்.
டிரிங்.. டிரிங்.. டிரிங்..
Comments
Post a Comment