Skip to main content

சுஜாதா அஞ்சலி கட்டுரைகள் - குமுதம் தீராநதி(பகுதி ஒன்று)

குமுதம் தீராநதி இதழில் வந்த சுஜாதா அஞ்சலி கட்டுரைகள்
பகுதி 1 - பா.வண்ணன், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி.



பா.வண்ணன்
சுஜாதா என்கிற பெயரை நான் முதன்முதலாக பத்தாம் வகுப்பு முடித்த விடுமுறையில்தான் அறிந்துகொண்டேன். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு என்பதெல்லாம் கணக்குப்போட்டுப் பார்த்தால்தான் தெரிகிறது. ஆனால் எல்லாமே நேற்று நடந்ததுபோல இருக்கிறது.


அப்போது எங்கள் அப்பாவுடைய தையற்கடையில் உதவியாளராக மாதவன் அண்ணன் என்பவர் இருந்தார். என்னுடைய புத்தகம் படிக்கும் பழக்கத்தைத் தெரிந்துகொண்டு தன்னுடைய வீட்டில் தன் அண்ணனுக்கும் அப்படிப்பட்ட பழக்கம் உண்டு என்று சொன்னார். ஏராளமான அளவில் புத்தகங்கள் அவரிடம் இருப்பதாகவும் உற்சாகமாகச் சொன்னார். உடனே அந்தப் புத்தகங்களைப் பார்க்கவேண்டும் என்கிற ஆவல் எனக்குள் பீரிட்டெழுந்ததால், “படிப்பதற்கு எனக்குத் தருவாரா?’’ என்று கேட்டேன். அவருடைய அண்ணன் கடலூரில் தங்கி ஏதோ ஒரு அலுவலகத்தில் சுருக்கெழுத்தாளராக வேலை பார்த்துவருகிறார் என்றும், வாரவிடுமுறையான ஞாயிறு அன்றுதான் வீட்டுக்கு வருவார் என்றும் மாதவன் அண்ணன் சொன்னார். அதனால் ஞாயிறு வரை நான் காத்திருந்தேன்.


அவர்கள் வீடு வளவனூரிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவு தள்ளியிருந்த நறையூரில் இருந்தது. ஞாயிறு காலை எழுந்ததுமே என் வேலைகளை வேகவேகமாக முடித்துக்கொண்டு இருபுறங்களிலும் கருப்பந்தோப்புகளும் நெல்வயல்களும் தென்னைமரங்களும் செறிவாக அடர்ந்திருக்க, இடையில் நீண்ட மண்சாலைவழியாக நடந்து சென்றேன். நான் சென்ற நேரத்தில் வீட்டுத் திண்ணையில் மாதவன் அண்ணனும் அவருடைய அண்ணனும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அறிமுகம் முடிந்ததும் நேரிடையாக புத்தகங்கள்பற்றிய பேச்சைத் தொடங்கினேன். என்னை மேலும்கீழுமாகப் பார்த்தவருக்கு அவ்வளவாக நம்பிக்கை வரவில்லை. “என்னடா படிச்சிருக்கே?’’ என்று ஏதோ நேர்காணலில் கேட்பதுபோலக் கேட்டார். “பத்தாவது’’ என்றேன். என் பதிலைக் கேட்டு அந்த அண்ணன் சிரித்தார். “அத கேக்கலடா, புத்தகம் படிச்சிருக்கேன்னு சொன்னாயே, யார்யாரயெல்லாம் படிச்சிருக்கேன்னு கேட்டேன்’’ என்றார். “தமிழ்வாணன், கல்கி, சாண்டில்யன் எழுதனதெல்லாம் படிச்சதுண்டு’’ என்றேன். “கல்கி எழுதுனதுல என்ன படிச்சே?’’ என்று அதற்கடுத்த கேள்வியைத் தொடுத்தார் அவர். “பொன்னியின் செல்வன்’’ என்ற என் பதில் அவருக்கு ஆச்சரியமளித்தது. “உண்மையாவா சொல்றே?’’ என்று மீண்டும் மீண்டும் கேட்டார். நான் தலையசைத்ததை நம்பாமல் “அது எத்தன பாகம் தெரியுமாடா?’’ என்றார். சொன்னேன். “எந்தப் பாத்திரம் அதுல உனக்கு ரொம்பப் புடிக்கும்?’’ என்று புன்னகை நெளியும் உதடுகளோடு கேட்டார். மெல்லமெல்ல நம்பிக்கையின் வெளிச்சம் அவர் முகத்தில் படர்வதைப் பார்த்தேன். “வந்தியத்தேவன்’’ என்று யோசிக்காமலேயே சொன்னதைக் கேட்டு அவர் வேகமாக தலையை அசைத்தார். அதைவிட வேகமாக தலையை அசைத்தபடி “பாதியிலயே ஒருத்தர் இறந்துபோயிடுவாரே அவர் யாரு தெரியுமா?’’ என்று கேட்டார். உற்சாகத்தோடு நானும் “ஆதித்த கரிகாலர்’’ என்றேன். அத்துடன் நேர்காணல் முடிந்தது. திண்ணையிலிருந்து அந்த அண்ணன் எழுந்துவந்து என் தோளைத் தட்டி அழுத்திக்கொண்டார். “வா போவலாம்’’ என்று வேட்டியைச் சரிப்படுத்திக்கொண்டபடி தன்னுடைய அறைக்குள் என்னை அழைத்துச் சென்றார். ஒரு பெரிய புதையலைப் பார்க்கப் போகிற பரவசத்தோடு அவரைப் பின்தொடர்ந்து சென்றேன். தன்னுடைய படுக்கைக்கு அருகே சுவரிலேயே வடிவமைக்கப்பட்ட நிலைப்பேழையின் கதவைத் திறந்தார். அதற்குள் ஆறு அடுக்குகள். அனைத்தும் புத்தகங்களால் நிரம்பியிருந்தன. ஆசைஆசையாக அவற்றின்முன் நின்று ஒருமுறை விரல்களால் தடவிப் பார்த்தேன். “ம், பாரு, எது வேணும்னாலும் எடுத்துக்கோ’’ என்றார். அடுக்கில் தெரிந்த முதல் புத்தகத்தைக் கவனமாக எடுத்தேன். “நைலான் கயிறு’’ என்கிற தலைப்பு படித்த கணத்திலேயே புதுமையாகவும் மனத்தைத் தொடுவதாகவும் இருந்தது. எழுதியவரின் பெயரைப் பார்த்தேன். சுஜாதா என்று போட்டிருந்தது. வார இதழில் வந்த தொடர்கதைத் தாள்களை வெட்டித் தொகுத்து உருவாக்கப்பட்ட புத்தகம் அது. “இந்தப் பெண் எழுத்தாளர் எழுதுனத எடுத்துக்கறேன்’’ என்றேன். நான் அப்படிச் சொல்வேன் என்று அவர் எதிர்பார்க்கவே இல்லை. சிரித்தபடி என் தோளை மறுபடியும் தட்டினார். “பெண் எழுத்தாளர் இல்லடா, அவர் ஆண் எழுத்தாளர்தான். அந்தப் பெயர்ல எழுதறாரு. அவ்வளவுதான்’’ என்றார். எனக்கு கூச்சமாக இருந்தது. மறுபடியும் நைலான் கயிறைக் காட்டி “இத எடுத்துச் செல்லட்டுமா?’’ என்று கேட்டேன். “சரி’’ என்று சம்மதித்தார்.


புத்தகத்தோடு மண்சாலையில் திரும்பி நடந்தபோது அபூர்வமான ஒரு பரிசை யாரோ ஒருவர் எனக்கு அளித்ததைப்போல மகிழ்ச்சியாக இருந்தது. என் ஆவலைக் கட்டுப்படுத்த இயலாமல் வழியிலேயே புத்தகத்தைப் பிரித்து படித்தபடி நடக்கத் தொடங்கினேன். அதன் சுவாரஸ்யம் என்னை நடக்கவிடவில்லை. ஒரு மரத்தடியில் ஒதுங்கி நிழலில் உட்கார்ந்து படிக்கத் தொடங்கினேன். அடுத்த சில மணிநேரங்கள் எல்லாவற்றையும் மறந்துவிட்டேன். பசியோ தாகமோ எதையுமே உணரவில்லை. அந்த எழுத்தின் புதுமை ஒருவித மயக்கத்தைக் கொடுத்தது. பக்கத்திலேயே உட்கார்ந்து யாரோ கதையை விவரிப்பதுபோல இருந்தது. படித்து முடிக்காமல் எழுந்திருக்கக்கூடாது என்று ஏதோ ஒரு வேகத்துக்குக் கட்டுப்பட்டவன்போல நிமிர்ந்துகூட பார்க்காமல் ஒரே வேகத்தில் படித்துமுடித்தேன். சூரியன் உச்சியில் இருந்தது. வீட்டில் அம்மா அப்பா தேடுவார்களோ என்று அப்போதுதான் முதன்முதலாகத் தோன்றியது. நடக்கத் தொடங்கினேன். மறுகணமே படித்துமுடித்த புத்தகத்தோடு வீட்டுக்குச் செல்வதற்குமாறாக, இதைத் திருப்பிக் கொடுத்துவிட்டு இன்னொரு புத்தகத்தை வாங்கிக்கொண்டு வீட்டுக்குச் செல்லலாம் என்றொரு திட்டமெழுந்தது. என் கால்கள் தாமாக மாதவன் அண்ணன் வீட்டை நோக்கித் திரும்பி நடந்தன.


அண்ணன் அப்போதும் திண்ணையில்தான் உட்கார்ந்திருந்தார். என்னைப் பார்த்ததும் ‘‘என்ன என்ன’’ என்று பதறி ஓடிவந்தார். வந்த நோக்கத்தைப்பற்றி மெதுவாகச் சொன்னேன். அவரால் நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. “என்ன பையன்டா நீ. அவன் சொல்றமாதிரி சரியான புத்தகப்பைத்தியம்தான் நீ’’ என்று சிரித்துக்கொண்டார். நைலான் கயிறை வாங்கிக்கொண்டு “எதுடா வேணும்?’’ என்றபடி அடுக்குப்பேழையை மறுபடியும் திறந்தார். என் கண்ணுக்குக் காகிதச் சங்கிலி தெரிந்தது. “இத எடுத்துக்கறேன்’’ என்றேன். அண்ணன் தலையசைத்தபடி அதை எடுத்துக் கொடுத்தார். மறுபடியும் ஏதாவது ஒரு மரத்தடியில் படிக்க உட்கார்ந்து விடுவேனோ என்று அச்சம்கொண்ட மாதவன் அண்ணன், தன்னுடைய மிதிவண்டியிலேயே என்னை உட்காரவைத்து ஓட்டிவந்து வீட்டில் விட்டுவிட்டுச் சென்றார். அன்று இரவிலேயே அதையும் படித்துமுடித்துவிட்டேன்.


மறுநாள் இரண்டு புத்தகங்களைப்பற்றியும் என் நண்பன் பழனியிடம் சொன்னேன். ஒரு கண்டுபிடிப்பைப்போல நான் அந்தப் புத்தகங்களைப்பற்றிச் சொன்னபோது, அவன் அவற்றை ஏற்கெனவே படித்துவிட்டதாகச் சொன்னான். அந்தப் பதில் எனக்கு சற்றே ஏமாற்றமாக இருந்தாலும் கதைகளின் நயமான பகுதிகளை ஒருவருக்கொருவர் மாற்றிமாற்றிச் சொல்லி மகிழ்ச்சியடைந்தோம். அன்று முதல் சுஜாதாவின் எழுத்துகளைத் தேடித்தேடிப் படிக்கிறவர்களாக நாங்கள் இருவருமே மாறினோம்.


2


சுஜாதாவின் படைப்புகளைப் படிப்பது என்பது எனக்கும் என் நண்பன் பழனிக்கும் எப்போதும் ஏதோ ஒரு குறுக்கெழுத்துப் புதிர்ப்போட்டியின் விடைகளைக் கண்டுபிடிக்கிற உற்சாகத்தையும் சுவாரஸியத்தையும் வழங்கும் விஷயமாகவே இருந்தது. எழுத்தை ஒரு விளையாட்டாகவே உருமாற்றிவிட்டார் அவர் என்று சொல்லிக்கொள்வோம். இக்கணத்தில் அதை நினைத்துப் பார்க்கும்போது இதுதான் சுஜாதாவின் மிகப்பெரிய பலம் என்று தோன்றுகிறது. வாசிப்பது என்பது எங்களுக்கு எப்படி ஓர் உற்சாகமான விளையாட்டாக இருந்ததோ, அதே அளவுக்கு உற்சாகம் தருகிற ஒரு செயலாக அவர் எழுதுவதை நினைத்தார் என்று தோன்றுகிறது. வேலைகளால் களைப்பு ஏற்படும்போது எழுத்தில் ஈடுபட்டு உற்சாகமடைவேன். எழுத்துவேலையில் களைப்பு உருவாகும்போது, வேலைகளில் ஈடுபட்டு உற்சாகமடைவேன். ஒன்றை மற்றொன்று நிரப்பிக்கொள்கிறது என்று ஒரு சந்திப்பின்போது சொன்ன சொற்கள் நினைவுக்கு வருகின்றன.


ஒருமுறை சுபமங்களா இதழில் சுஜாதாவின் நேர்காணல் வெளிவந்திருந்தது. அதில் எழுத்துமுயற்சியைப் பற்றிய ஒரு கேள்விக்கு அது ஒரு தொழில்நுட்பத்திறமை என்கிற வகையில் பதில் சொல்லியிருந்தார் சுஜாதா. அந்தப் பதிலை பழனியால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. “என்னடா நம்ம சுஜாதா இப்படிச் சொல்லிட்டாரே’’ என்று ஆதங்கத்தோடு பலமுறை ‘உச்சு’க் கொட்டிவிட்டான். எனக்கும் அந்தப் பதில் வருத்தம் தருவதாகத்தான் இருந்தது. “ஆனால் அவருடைய நிலையில் அப்படிப்பட்ட ஒரு பதிலைத்தான் சொல்லமுடியும்’’ என்று சொன்னேன்.


வெகுகாலத்துக்குப் பிறகு மணிரத்னம் இயக்கிய ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ திரைப்படத்துக்கு அவர் எழுதிய வசனங்களைப் பற்றிப் பேசியபோதும் இந்த நேர்காணலைத்தான் சாட்சிக்கு இழுத்துப் பேசிக்கொண்டோம். விஷயம் இவ்வளவுதான். திரைப்படத்தில் இடம்பெறும் இந்திரா என்னும் புனைபெயரில் கதை எழுதக்கூடிய ஒருவர் யாழ்ப்பாணத்தில் நடக்கக்கூடிய ஒரு பாராட்டுக்கூட்டத்தில் உரையாற்றும்போது எழுத்து ஒரு தொழில்நுட்பத்திறமை என்றுதான் உரையைத் தொடங்குகிறார். ஏற்கெனவே சுஜாதாவின் மனத்தில் இருந்ததுதான் இப்படி ஓர் உரையாடலாக வெளிப்பட்டிருப்பதாகச் சொல்லிக்கொண்டோம். அன்றும் பழனி “என்னடா நம்ம சுஜாதா இப்படிச் சொல்லிட்டாரு’’ என்று சொல்லி வருத்தப்பட்டான்.


“மனஎழுச்சி, அகஊக்கம் இதெல்லாம் எதுவுமே ஒரு எழுத்துக்கு வேணாமா?’’


“என்னைப் பொறுத்தவரைக்கும் இது நிச்சயம் தேவைதான்.’’


“அப்படின்னா சுஜாதா ஏன் அப்படிச் சொல்லணும்?’’


“சுஜாதா சொல்றாருன்னா அதுக்கு ஒரு காரணம் இருக்குமில்லயா?’’


“அதான் என்ன காரணம்?’’


நான் ஏதாவது ஒரு விடையைச் சொல்லவேண்டும் என்று உள்ளூரத் தூண்டிக்கொண்டே இருந்தான் பழனி.


“ஒருவேளை இப்படி இருக்கலாம் பழனி, ஒரு எழுத்தாளன்னு சொல்லும்போதே அடிப்படையில அவன் மனஎழுச்சியும் அகஊக்கமும் தானாகவே நிறைந்தவன்னு எடுத்துக்கலாமா? அதாவது இந்த இரண்டும் எழுத்தாளனுக்கு இருக்க வேண்டிய அடிப்படைத் தகுதிகள். தொழில்நுட்பம் என்பது அவன் கற்றுத் தேறவேண்டிய கூடுதல் தகுதி. சுஜாதா தொழில்நுட்பத்திறமையைப் பற்றிப் பேசும்போது அதை அடிப்படைத் தகுதிகள் பற்றிய பேச்சாக எடுத்துக்கக்கூடாது. கூடுதல் தகுதி பற்றிப் பேசறாருன்னு வேணுமின்னா எடுத்துக்கலாம்.’’


பழனி ஒருகணம் என்னை ஏறிட்டுப் பார்த்தான். “எடுத்துக்கறதுல தப்பில்லை. ஆனா நீ எனக்காக சொல்றமாதிரி இருக்குது. உண்மையாவே அவரு அப்படி நெனச்சிருப்பாரா?’’


“உண்மையோ பொய்யோ பழனி. அவர் அப்படி நெனச்சித்தான் சொல்லியிருப்பாருன்னு நாம நெனச்சிக்கலாமே. அதுல நமக்கு என்ன நஷ்டம்? எவ்வளவு பெரியவர் அவர். அவருடைய நம்பிக்கையைப் பத்தி நாம ஏன் எடைபோடணும்?’’


பழனி என்னுடைய தோளைத் தட்டினான்.


“மனஎழுச்சியைப் பத்தி ஒன்னும் தெரியாத ஆளில்ல அவர் பழனி. பிரபந்தங்கள் பற்றியும் பாசுரங்கள் பற்றியும் எவ்வளவோ சொல்லியிருக்காரு. நெறைய எழுதியும் இருக்காரு. ஆழ்வார்கள் மனஎழுச்சி இல்லாமயா பாடியிருப்பாங்க? ஆழ்வார்கள் பாடின பாடல்களை மனப்பாடமாவும் நெகிழ்ச்சியாவும் சொல்ற ஒரு மனுஷர் மனஎழுச்சிமேல நம்பிக்கை இல்லாதவர்னு எப்படிச் சொல்லமுடியும்? மன எழுச்சிங்கறத திட்டவட்டமான அடிப்படைத்தகுதின்னு அவர் நெனைச்சிருக்கலாம்ன்னுதான் ஒரொரு சமயத்துல தோணுது.’’


“அப்படின்னா தொழில்நுட்பத் திறமைதான் முக்கியம்னு ஏன் சொல்லணும்?’’ பழனி மறுபடியும் பழைய கேள்வியில் வந்து நின்றான்.


“அந்தக் கேள்விக்கான பதிலும் பிரபந்தத்துலயே இருக்கறமாதிரி தோணுது பழனி’’ என்றேன். அப்போதுதான் அந்தப் பதிலை என் மனம் கண்டுபிடித்திருந்ததால் நானும் ஒருவித பரவசத்தில் இருந்தேன். “எப்படி?’’


“எல்லா ஆழ்வார்களும் ஒரே இறைவனைப்பற்றித்தான் பாடறாங்க. ஒரே விதமாத்தான் உருகறாங்க. அவுங்க பாடுகிற பாடல்களின் புறவடிவம்கூட ஏறத்தாழ எல்லாமே ஒண்ணாதான் இருக்குது. அறுசீர் விருத்தம், எண்சீர் விருத்தம். கலிப்பா இப்படி. ஒரே வகையான வடிவ அமைப்புக்குள்ள, ஒரே விதமான இறைவனைப்பற்றிய பாடல்களுக்குள்ள, ஒரேவிதமான அனுபவத்தை முன்வைக்கிற பாடல்களுக்குள்ள ஒரு கவிஞர் எப்படி வித்தியாசம் காட்டமுடியும் சொல்லு? சொல்லுகிற முறையில ஒரு தனிப்பட்ட தொழில்நுட்பத்திறமை இருந்தால்தான் ஒரு கவிஞர் மற்ற கவிஞர்களிடமிருந்து வேறுபட்டு நிற்கமுடியும். நெருப்பென நின்ற நெடுமாலேன்னு ஒரு வரி பாடுவோமே ஞாபகமிருக்குதா? என்ன மாதிரியான வரி பார்த்தியா அது? சொல்லும்போதே உடம்பு சிலிர்க்குதில்லையா? என்ன மாதிரியான நெருப்பு அது? அகந்தையை அழிக்கிற நெருப்பு. ஆசையை அழிக்கிற நெருப்பு. வெறுப்பையும் காமத்தையும் அழிக்கிற நெருப்பு. எல்லாவற்றையும் அழிச்சி அகற்றிவிட்டு அணைச்சிக்கறவன்தானே நெடுமாலா இருக்கமுடியும். எல்லா சமயத்துலயும் இப்படி ஒரு சொல்ல உருவாக்கமுடியாது. மனசுக்குள்ள சொற்கள் கொந்தளிக்கும்போது இப்படி சட்டுனு பொங்கிவந்துடும். இத சொல்றதுக்குத்தான் தொழில்நுட்பத்திறமை வேணும். சுஜாதா சொல்றது இந்தத் தொழில்நுட்பத் திறமையைத்தான்னு தோணுது.’’


என் சொற்களை பழனி நம்பியதுபோலவும் இருந்தது. நம்பாததுபோலவும் இருந்தது. சிறிதுநேரம் கழித்து “எனக்காக நீ வேணுமின்னே சொல்றமாதிரி இருக்குது. ஆனாலும் கேக்கறதுக்கு நல்லா இருக்குது’’ என்று சிரித்துக்கொண்டு சொன்னான்.


“காகிதச் சங்கிலி, கனவுத் தொழிற்சாலைன்னு அவர் எழுதியதை ஒரு நிமிடம் நெனச்சு பாரு. ஒரு தொழில்நுட்பத் திறமை அவர் மனசுக்குள்ள ஓடறதாலதான் அந்த வார்த்தைகளை அவரால் சட்டுனு சொல்லமுடியுது.’’ “அதுதான் உண்மைன்னா அவரே இத இன்னும் வெளிப்படையா சொல்லியிருக்கலாமே.’’


“அவரால சொல்லமுடியாது பழனி. காரணம் அவருக்கிருந்த அறிவியல் அந்தஸ்து. எல்லாவற்றையும் அறிவியல் செயல்பாடா பார்க்கற ஒருவர் கவிதை எழுதுகிற பித்துநிலையை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்? அவரைப் பொறுத்தவரைக்கும் அது ஒரு திறமை. அவ்வளவுதான்.’’


பிறகு எந்தப் பேச்சுமில்லாமல் அஸ்தமனச் சூரியனைப் பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினோம். சிறிதுநேர மெளனத்துக்குப் பிறகு அடங்கிய குரலில் “நானேதான் சும்மா அப்படி சொல்லிப் பார்த்தேன் பழனி. அப்படி ஒரு நம்பிக்கை அவருக்கு இல்லாதது எனக்கும் வருத்தமாத்தான் இருக்குது’’ என்றேன்.


3


இரண்டு மாதங்களுக்கு முன்பு பொங்கல் பண்டிகையையொட்டி ஊருக்குச் சென்றிருந்த சமயத்தில் பழனியோடு பேசிக்கொண்டிருந்தபோது தற்செயலாகவே எங்கள் உரையாடல் மரணத்தின் திசையில் இருந்தது. கடந்த முறை பயணத்துக்கும், இந்த முறை பயணத்துக்கும் இடைப்பட்ட நாட்களில் எங்கள் தெருவில் நாலைந்துபேர் மறைந்துவிட்டிருந்தார்கள். சில இயற்கை மரணங்கள். சில அகால மரணங்கள். அந்த மரணங்களைப் பற்றிப் பேசத் தொடங்கி பேச்சின் மையப்பொருளாகவே மரணம் மாறிவிட்டது. பொத்தாம்பொதுவில் வீசப்படும் ஒரு தூண்டில் அகப்படுகிற மீனை இழுத்துக்கொண்டு நிமிர்வதைப்போல மரணத்தூண்டில் கைக்குக் கிடைக்கிற ஆளை அள்ளிக்கொண்டுபோய்விடுகிறது. மரணம் நம்ப முடியாத விசித்திரம் என்று சொல்லிக்கொண்டோம்.


“சுஜாதா கூட இப்படி நடந்துவிடுகிற அபத்தமான ஒரு மரணத்தைப்பற்றி எழுதியிருக்காருடா’’ சுஜாதா கதை என்றதும் பழனியின் முகத்தில் ஆவல் தெரிந்தது. “தலைப்பு சரியா ஞாபகமில்லை. ஆனா கதை இதுதான்’’ என்று கதையைச் சொல்லி முடித்தேன்.


காவலரால் துரத்தப்படுகிறவனையும், அவனுக்கு அடைக்கலம் வழங்குகிறவனையும் பற்றிய சிறுகதை அது. காவலரைப்பற்றிய எண்ணம் வந்தாலேயே அஞ்சி நடுங்குகிறவனை அமைதிப்படுத்தும் வழி தெரியாமல் குழம்புகிற நண்பன், ஆபத்துக்கு உதவட்டும் என்று ஒரு பாதுகாப்புக்காக கைத்துப்பாக்கியைக் கொடுத்து வைத்துக்கொள்ளுமாறு சொல்கிறான். கையில் துப்பாக்கி இருந்தாலும்கூட அவனுடைய பயம் அவனைவிட்டுப் போகவில்லை. தனியிடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள அவனைச் சந்திக்க வருகிற நண்பன் தற்செயலாக ஒரு காவலர் உடையில் வருகிறான். காலடிச் சத்தத்தையும் காவலர் உடையையும் பார்த்ததும் பீதியின் உச்சத்தில் நண்பனையே சுட்டுவிடுகிறான்.


“எந்த நேரமும் மரணம் நிகழ்ந்துவிடும்னு காத்திருப்பவன் உயிரோட இருக்கறான். மரணத்த பத்தியே கொஞ்சம்கூட நெனச்சிப் பாக்காதவன் உயிர விட்டுடறான். என்ன மாதிரியான வாழ்க்கைடா இது? சுஜாதா இதக்கூட யோசிச்சிருக்காருங்கறது ஆச்சரியமாதான் இருக்குது’’ ஒரு தத்துவ ஞானியைப்போல அன்று பழனி பேசினான்.


28.02.08 அன்று அதிகாலையில் என் நண்பர் மகாலிங்கத்தை வேறு எதையோ விசாரிப்பதற்காக தொலைபேசியில் தொடர்புகொண்டபோது, அவர் சுஜாதாவின் மறைவுச்செய்தியைச் சொன்னார். ஒருகணம் ஆழ்ந்த துக்கம் என் நெஞ்சில் கவிந்தது. அவரைச் சந்திக்கச் சென்ற நாளின் நினைவுகள் அலைபாயத் தொடங்கின. பழனிக்கு அந்தச் செய்தியை உடனடியாகச் சொல்லிவிட வேண்டும் என்ற வேகத்தில் தொலைபேசி எண்களைச் சுழற்றினேன். மணி அடித்துக்கொண்டிருந்ததே தவிர எடுக்கப்படவே இல்லை. அது அவன் வாடகைக்கு வசிக்கிற வீட்டுச் சொந்தக்காரரின் தொலைபேசி. நாலைந்து முறை விடாது முயற்சி செய்துவிட்டு நிறுத்திவிட்டேன். வேறு யாரிடமும் பேச விருப்பமில்லை. என் மனைவி அமுதாவிடம் மட்டும் சுஜாதாவைப் பார்க்கச் சென்ற அனுபவம் நினைவிருக்கிறதா என்று கேட்டு சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தேன். பெங்களூரில் இருக்கும்போது ஒருமுறையும், சென்னைக்குப் போனபிறகு ஒருமுறையும் அவரைப் பார்க்கச் சென்றபோது என்னோடு அமுதாவையும் அழைத்துச் சென்றிருக்கிறேன்.


இளமையும் துடிப்பும் நிறைந்த ஏராளமான படைப்புகளை சுஜாதா எழுதியிருக்கிறார். இளமையின் இதயமும் கண்களும் அவரிடம் நிரந்தரமாக இருந்தன. இளமையின் துடிப்போடு எழுத்துத் துறையில் அவர் காலமெல்லாம் வலம்வந்தார். தன்னால் தொடமுடிந்த எல்லாத் துறைகளையும் தொட்டுப் பார்த்தார். இளமை என்பதை வெறும் வயது சார்ந்த ஒன்றாக மட்டுமே நாம் சுருக்கிப் பார்க்கத் தேவையில்லை. இளமை என்பது வேகம். இளமை என்பது ஒருவித சாகசநாட்டத்தைக் குறிக்கும் அடையாளம். இளமை, ஈர்ப்பு, புதுமை என மூன்றோடு தன் மனத்தையும் இணைத்து ஒரு புத்தம்புதிய படைப்புமொழியை சுஜாதா தன் படைப்புகளில் பயன்படுத்தினார். சொற்களால் இழைத்து இழைத்து உருவாக்கிய இந்தப் படைப்புமொழிதான் சுஜாதா தமிழுக்கு வழங்கிய மிகப்பெரிய கொடை.


இரண்டு நாட்கள் கழித்தபிறகுதான் பழனியுடன் தொலைபேசியில் பேச முடிந்தது. “நம்ம சுஜாதா போயிட்டாருடா’’ என்று என்னை முந்திக்கொண்டு திரும்பத் திரும்பச் சொன்னான். இரண்டு முறை திருப்பித் திருப்பிச் சொன்னான். அவன் குரல் உடைந்திருந்தது. “நூலகத்திலேருந்து ‘கரையெல்லாம் செண்பகப்பூ’ எடுத்தாந்து வச்சிருக்கேன். அதத்தான் இந்த வாரம் முழுக்க படிக்கப் போறேன். சுஜாதாவுக்கு நான் செலுத்துகிற எளிய அஞ்சலி’’ என்றான்.


கடந்த முறை சந்திப்பில் நானும் பழனியும் மரணத்தைப் பற்றிய அவருடைய சிறுகதையை முன்னிட்டு பேசிக்கொண்டதுகூட ஏதோ ஒரு விசித்திரம்தான் என்று தோன்றுகிறது. அந்தக் கதையில் நிகழ்கிற அபத்தம், அவருடைய மரணத்திலும் நேர்ந்துவிட்டதாக நானாக நினைத்துக்கொண்டேன். எந்த மீனையோ அள்ளிக்கொண்டு உயரவேண்டிய மரணத்தூண்டிலில் இப்போது சுஜாதா சிக்கிக்கொண்டார். மரணம் என்பது நம்பமுடியாத ஒரு விசித்திரம் என்பதைத்தான், நாம் ஒவ்வொரு மரணத்தின்போதும் மீண்டும் மீண்டும் தெரிந்துகொள்கிறோம் என்று தோன்றியது. டி


அசோகமித்திரன்
ஒரு முறை சுஜாதா என் வீட்டுக்கு வந்தபோது என்னிடம் காமிராவும் இருந்தது, புகைப்படச்சுருளும் இருந்தது. புகைப்படங்கள் எடுத்தோம். இது நடந்து முப்பது ஆண்டுகள் இருக்கும். எனக்கு வீட்டில் முன் வெராந்தாவில் ஐந்தடிக்கு ஐந்தடி இடம். இதில் ஒரு மேஜை, ஒரு சிறிய அலமாரி, மூன்று நாற்காலிகள். வெராந்தாவுக்கு என்றிருந்த கம்பி டிரெல்லியை அலமாரிகளாக மாற்றி அவற்றில் சில புத்தகங்கள். குறிப்பாக அகராதிகள்.


எழுத்தில் ஆர்வம் உள்ள வெளியூர்த் தமிழர்கள் பலர் என் வீட்டுக்கு வருவதற்குப் பல காரணங்களில் ஒன்று, நான் பகல் வேளைகளில் கூட வீட்டில் இருக்கும் வாய்ப்பு உண்டு. இரண்டாவது, சிறிதும் தயங்காமல் அவர்கள் விரும்பும் சில எழுத்தாளர்களிடமும் பதிப்பாளர்களிடமும் அழைத்துச் செல்வவேன்.


சுஜாதா முதலில் டில்லியிலும் பிறகு பெங்களூரிலும் இருந்த நாட்களில் சென்னைக்கு வருவதாயிருந்தால் அவர் சென்னையில் தங்கிப் போகும் முகவரியை முன்கூட்டியே கடிதம் எழுதித் தெரிவித்துவிடுவார். (அப்போது தொலைபேசி கிடையாது. முதலில் ஒருநாள் அவர் என் வீட்டுக்கு வந்து விடுவார். அடுத்த நாள் அல்லது அதற்கடுத்த நாள் நான் அவர் கொடுத்த முகவரிக்குச் சென்று அவரைப் பார்ப்பேன்.


எங்கள் இருவருக்கும் நான்காண்டுகள் வயது வித்தியாசம். இருவரும் ஒரே மாதிரிப் புத்தகங்களைப் படித்திருப்போம். நான் ஹரோல்டு ராபின்ஸ் ரசிகனல்ல. ஆனால் அன்று பிரபலமாக இருந்த ஜான் ல கார், அல்ஸ்டேர் மக்ளின் புத்தகங்களைப் படித்திருந்தேன். இதெல்லாம் சராசரிகள் படிக்கும் புத்தகங்கள். நாங்கள் இவற்றையும் படித்து கார்லோஸ் காஸ்டனீடா என்று அப்போது படித்த மேதாவிகள் நடுவே மிகவும் பேசப்பட்ட ஓர் ஆசிரியரையும் படித்திருந்தோம். எங்கள் இருவருக்கும் காஸ்டனீடாவின் நம்பகத்தன்மை பற்றிச் சந்தேகம்.


என்னுடைய வழிகாட்டிப் பணியில் சுஜாதாவையும் அவர் அப்போது மிகவும் மதித்த லா.ச.ரா.வைப் பார்க்க அழைத்துச் சென்றேன். நா.பார்த்தசாரதி. அழகிரிசாமி. அப்புறம் அமெரிக்கத் தூதரகக் கிருஷ்ணன்.


கிருஷ்ணன் நிறையத் தமிழ்ப் புத்தகங்களை வாங்குவதோடு அவற்றைப் படித்து விவாதிக்கவும் செய்வார். அந்த நாளில் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அமெரிக்க எழுத்தாளர் அல்லது கவிஞர் சென்னைக்கு வருவதுண்டு. அப்போது அவர் சில சென்னை எழுத்தாளர்களுக்கு அழைப்பிதழ் அனுப்புவார். இதில் இதர மொழிகளும் இருக்கும். பிரதானமாகத் தமிழ்.


அன்றெல்லாம் அமெரிக்கத் தூதரகத்துக்குப் போவது இன்று போலக் கடினமான காரியம் அல்ல. கிருஷ்ணன் அந்த ஒரு சந்திப்போடுச் சிலரை மட்டும் தனியாகப் பகல் விருந்துக்குக் கூப்பிடுவார். அனந்தமூர்த்தியிலிருந்து ஜி.ரங்கராஜன் வரை நான் பலரை அழைத்துச் சென்றிருக்கிறேன். விருந்து சென்னை பிரசிடன்ஸி கிளப்பில். கிருஷ்ணன் இருபது தோசைகளுக்கு ஏற்பாடு செய்து விடுவார். அந்த கிளப் தோசை பிரசித்தமானது. எனக்குத் தெரிந்து இன்னொரு டில்லி எழுத்தாளர். அங்கு சிறிது உணவு அருந்திவிட்டு முறையானப் பகல் விருந்துக்கு இலக்கியச் சிந்தனை ப. லட்சுமணன் இல்லத்துக்கும் போக வேண்டியிருந்தது. இரண்டுக்கும் நான்தான் துணை. அந்தச் சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் கொண்டது. சுஜாதாவுக்குப் பகல் உணவுக்குப் பதில் நான்கு தோசை சாப்பிடுவது பிடித்திருந்ததா என்று நான் கேட்கவில்லை. சிறிது சிரமமான காரியம்தான்.


நான் எடுத்த புகைப்படங்களில் பெரும்பான்மை என் வீட்டிலிருந்தே எடுத்தவை. ஒரு முறை ‘கணையாழி’ அட்டைக்கு அந்தப் புகைப்படங்களில் சிலவற்றைக் கதம்ப வரிசைகள் கொண்ட ஒரு அட்டைப் படமாகச் செய்தேன். அது பலருக்குப் புரியவில்லை. எல்லாமே மிக நல்ல படங்கள். ஒன்று மிகச் சிறப்பானது. அது தி.ஜானகிராமனுடையது. சுஜாதா மறையும் வரை இங்கு சென்னையில் இருக்கும் என் மகன் அது நான் எடுத்தது என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தான். இல்லை. உலகப் புகழ் பெற்ற பெங்களூர்வாசியான ஒரு தமிழ்ப் புகைப்பட நிபுணர் எடுத்தது.


இந்திரா பார்த்தசாரதி
‘அவர் தொட்ட எதனையும் அணி பெறாமல் செய்ததில்லை’ என்று ஆலிவர் கோல்ட் ஸ்மித்தைப் பற்றி அவர் இறந்த போது கூறினார் ஸாம்யுவல் ஜான்ஸன். இது அமரர் சுஜாதாவுக்கு முற்றிலும் பொருந்தும். சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், கட்டுரைகள், கேள்வி, பதில்கள் என்று அடுக்கிக் கொண்டே இவற்றை அணிபெறச் செய்தது, அவருடைய தமிழ் நடை. தமிழ் மொழிச் சொற்களின் அர்த்த எல்லைகளை விரிவாக்கிய தற்காலத்து எழுத்தாளர்களிலே முதன்மையானவர் சுஷாதா.


அவருடைய முதல் சிறுகதை, நகுலன் தொகுத்த ‘குருக்ஷேத்திர’த்துக்காக எழுதியது.அதன் கையெழுத்துப் பிரதி வடிவில் அதை நான் படித்தபோது, எனக்குள் ஒரு பிரமிப்பு ஏற்பட்டது. ஓர் எளிய கதை நிகழ்வை இத்தனை அற்புதமாகச் சொல்லமுடியுமா என்ற பிரமிப்பு. தமிழ் நடைக்குப் பல புதிய பரிமாணங்களை உருவாக்கித்தரப் போகிறார் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. அது வீண் போகவில்லை. வரப் போகிற உன்னதமான சிருஷ்டிகளுக்கு அச்சாரமாக இருந்தது. அக்கதை. ‘குமுத’த்தில் அது ஒரு நாவலாக நீண்ட போது, அச்சிறுகதையின் கூர்மை அதற்கில்லை. அக்கதை அவர் மனத்தில் உருவானபோது, சிறுகதையின் உள்ளீடான வடிவத்தைதான் அது பெற்றிருக்க வேண்டுமென்று எனக்குப்பட்டது.


ஒரு விஞ்ஞானிக்கு இலக்கியத்தில் ஈடுபாடு ஏற்பட்டால், அதனால் இலக்கியத்துக்கு எவ்வளவு பெரிய லாபம் என்பதற்கு சுஷாதாவின் கட்டுரைகளும், படைப் பாக்கங்களுமே சான்று. குறுகத்தரித்த நடையில் ஒரு பிரபஞ்சத்தை உள்ளடக்கிச் சொல்லும் ஆற்றல், ஒரு விஞ்ஞான இலக்கியவாதியால்தான் முடியும்.


புறநானூற்றில் ஒரு விஞ்ஞானி (வான்கோள் ஆய்வாளன்) ஒரேயொரு கவிதைதான் எழுதியிருக்கிறான். அக்கவிதையின் பொருள் ஆழத்தாலும், சொற் சிக்கனத்தாலும், பரவலாக அறியப்படுகிறது. கவிஞன் பேர், கணியன் பூங்குன்றன்.


கவிதையின் முதல் வரி: ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’. சுஷாதா என்னை 1965ல் முதல் தடவையாகச் சந்தித்தபோது கேட்ட கேள்வி: ‘ ஒரு பண்டிதரா இருந்திட்டு, படைப்பிலக்கியம் பண்ணலாமா நீங்க? தமிழ்ப் பண்டிதர்கள் மன்னிப்பார்களா?’ அக்கால கட்டத்தில் தமிழ் இலக்கியச் சூழ்நிலை அப்படித்தானிருந்தது. ‘பண்டித உலகம் வேறு, படைப்பிலக்கிய உலகம் வேறு’ என்று. ‘தெள்ளியராதல் வேறு, திருவுடையாரதல் வேறு ‘ என்பது போல. முதல் சந்திப்பின்போதே, அவரை என்னால் அடையாளம் காணமுடிந்தது.


‘கணையாழி’யில் அவருடைய ‘கடைசிப் பக்கத்தை’ அப்பொழுது நான் வாசித்து வந்ததால், அவர் கேள்வி என்னை ஆச்சரியத்துக்குள்ளாக்கவில்லை. என்னுடைய முதல் நாடகமாகிய, ‘மழை’யைக் கையெழுத்துப் பிரதியில் படித்து விட்டு அவர் சொன்னார்: ‘நாடகம் நல்லா வந்திருக்கு.. இதைத் தமிழில் மொழி பெயர்க்கிற உரிமையை எனக்குத் தர்ரீங்களா?’ நாடகத்தில் ஆங்கிலச் சொற்கள் மிகுந்திருக்கின்றன என்பதைச் சுட்டிக் காட்டும் சுஷாதா ‘ப்ராண்ட்’ நகைச் சுவை இது.


பல துறைகளிலும் செறிவான ஈடுபாடு கொண்ட காரணத்தால், அது அவர் எழுத்துக்கு வலிமை சேர்த்தது. அவர் ஒரு வியக்கத்தக்க அறிவாளி, பல்வேறு ரசனைகளையுடைய கலைஞர். சொல்லை வியப்பாக்கிய சிற்பி.

Comments