Skip to main content

சுஜாதா அஞ்சலி கட்டுரைகள் குமுதம் தீராநதி(இரண்டாம் பகுதி)

பகுதி-2 - வ.ஜ.ச. ஜெயபாலன், எம்.ஜி.சுரேஷ், இரா.நடராஜன், த.பழமலய்



வ.ஜ.ச. ஜெயபாலன்
எதிர்பாராமல் வந்த சுஜாதாவின் மரணச் சேதியில் கனத்த மனசு கொஞ்ச நேரம் முடங்கிப் போனது.


கோடை காலம்வரை அவர் வாழ்ந்திருந்தால் இப்படித் துன்பப் பட்டிருக்க மாட்டேன். நினைவில் முள்ளாகச் சஞ்சலப்படுத்தும் ஒரு கணக்கு தீர்க்கப்பட்டிருக்கும்.


1981 தைமாத ஆரம்பத்தில் மதுரை தமிழாராய்ச்சி மாநாட்டு மண்டபத்தில் என்னைச் சந்தித்ததில் இருந்து 1999_ல் எனது அவசர புத்தியால் முரண்பட்டதுவரை நமது நட்பு எப்போதாவது நேரிலும் எப்போதும் இணையத்திலும் செழித்தபடியே இருந்தது. நட்பு மனசுக்கு பல்லாயிரம் கிலோ மீட்டரும் நடந்து போகிற தூரம்தானே.


மைதொட்டு எழுதுகிற பேனாக்குச்சிக் காலத்தில் இருந்து அதி நவீனக் கணினிக் காலம் வரைக்கும் சுஜாதா விஞ்ஞானத் தொழில் நுட்பத்தாலும் மனசாலும் மீண்டும் மீண்டும் பிறந்து வ.ஜ.ச. ஜெயபாலன்


காலத்தை வென்று கொண்டிருந்தார். என்னை கணினியில் எழுதவைத்ததில் சுஜாதாவுக்குத்தான் முதல் மரியாதை. அடுத்த மரியாதைகள் அவுஸ்திரேலிய பாலப்பிள்ளைக்கும் சிங்கப்பூர் முத்துநெடுமாறனுக்குமே சேரும். என்னைப்போலவே வேறு பல எழுத்தாளர்களும் கவிஞர்களும் அவரது கைவிரலைப் பற்றித்தான் கணினித் தமிழ் உலகினுள் காலடி எடுத்து வைத்தார்கள் என்று பின்னர் அறிந்தேன். மாறும் உலகோடு மீண்டும் மீண்டும் பிறந்து தலைமுறைகளைக் கடந்து செல்கிற கலை கைவர, அமரர் சுஜாதாவின் நட்பும் எனக்கு உதவியிருக்கிறது. அவரைப்போலவே நானும் இளைய கலைஞர்களது படைப்புகளைத் தேடித் தேடி வாசிக்கவும் மனம் திறந்து பாராட்டவும் பழகிக் கொண்டேன்.


கால் நூற்றாண்டுகளின் முன்னம் 1981_ம் ஆண்டு தைமாதம் மதுரைத் தமிழாராய்ச்சி மாநாட்டு மண்டபத்தில்தான் நாங்கள் முதன் முதலாகச் சந்தித்தோம். கோமல் சுவாமிநாதன்தான் சுஜாதாவை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். கோமல் சுவாமிநாதனை தலித் இலக்கிய முன்னோடியும் எனது ஆதர்சமுமான கே.டானியல் அண்ணாதான் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அந்தப் பயணம் முழுவதிலும் எங்களோடு டானியல் அண்ணாவும் இருந்தார்.


ஆச்சரியப்படும் வகையில் பிரபல எழுத்தாளரான சுஜாதா என்னுடைய கவிதைகளை அறிந்து வைத்திருந்தார். 1970_களின் பிற்பகுதியில் யாழ்ப்பாணம் வந்திருந்த எழுத்தாளர் அசோகமித்திரனூடாக என்னுடைய ஆரம்ப காலக் கவிதைகள் சில ஏற்கெனவே தமிழ்நாட்டை எட்டியிருந்தது. அசோகமித்திரன் கணையாழியிலும் வேறு சிறு பத்திரிகைகளிலும் அவற்றை வெளியிட்டிருந்தார். எனது முதல் படைப்பான ‘பாலியாறு நகர்கிறது’ கவிதையும் மூன்றாவது படைப்பான ‘இளவேனிலும் உழவனும்’ கவிதையில் வருகிற ‘காட்டை வகுடு பிரிக்கும் காலச்சுவடான ஒற்றையடிப் பாதை’ என்கிற அடியும் பலருக்குப் பிடித்திருந்தது.


ஒல்லி உடலும் குறுந்தாடியும் தோளில் புரளும் தலைமுடியும் தொங்கும் ஜோல்னாப் பையுமாக மதுரை உலகத் தமிழர் மாநாட்டரங்கில் அலைந்த என்னை சுஜாதாவுக்கு மிகவும் பிடித்துவிட்டது. இப்படித்தான் எங்கள் கதை ஆரம்பமானது. பிரபலமில்லாத இளையவர்களின் எழுத்துக்களை சலிக்காமல் படிக்கிறது, உலகறியப் பாராட்டுகிறது என்று அவர் எல்லோரையும் ஆச்சரியப்படுத்துகிற மனிதராக இருந்தார். அதுதான் அவரது காயகல்பமாகவும் இளமையின் இரகசியமாகவும் இருந்தது. அந்தப் பயணத்தில் என்னைக் கவர்ந்த கலைஞர்களுள் கோமல் சுவாமிநாதனும் சுஜாதாவும் முக்கியமானவர்கள். பின்னர் நான் இலங்கைக்குத் திரும்பிவிட்டேன். அதேவருடம் ஜூன் மாதம் எங்கள் யாழ்ப்பாணம் நூலகம் ஒரு லட்சம் புத்தகங்களோடு எரியூட்டப்பட்டது. நாங்கள் கூட்டம் கூட்டமாகப் போய் எங்கள் நூலகத்தின் வெந்து தணியாத சாம்பலில் கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தோம். சற்றுத் தள்ளி துரயப்பா மைதானத்தில் எங்கள் நூலகத்தை எரித்த சிங்களப் படை கிண்டலாகக் கூச்சலிட்டபடியே பைலா பாட்டுக்கு நடனமாடிக் கொண்டிருந்தது. அன்றுதான் எங்களில் பலர் இதற்கு ஆயுதப் போராட்டத்தின்மூலம்தான் பதில் சொல்ல முடியுமென்கிற தீர்மானத்துக்கு வந்தோம். நாங்கள் ஆயுதத்தை எடுத்ததுபோலவே அந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட எழுத்தாளர் சுஜாதா பேனாவை எடுத்திருக்கிறார். எனினும் என்னுடைய தமிழக நண்பர்கள் சிலர் அவர் பிராமணர் என்ற காரணத்தால் அவரது பங்களிப்பைக் கண்டு கொள்ள மறுத்தார்கள். ஆனால் கோமல் சுவாமிநாதன், அசோகமித்திரன், இந்திராபார்த்தசாரதியில் இருந்து அ.மங்கை கிருஷ்ணாடாவின்சி வரை பல தலைமுறைகளைச் சேர்ந்த எனது கலைத்துறை நண்பர்கள் பலரின் பிராமணப் பின்னணி பிறப்பின் விபத்து மட்டுமே என்பதை நான் அறிந்திருந்தேன். ராமானுஜரைப் போலவே நண்பர் சுஜாதாவுக்கும் வரித்துக்கொண்ட நாலாயிர திவ்ய பிரபந்த தமிழ்க் கலாச்சாரத்தைத் தவிர மற்ற எல்லா அடையாளங்களும் பிறப்பின் விபத்துத்தான்.


சுஜாதா ஈழத் தமிழ்க் கலைஞர்களின் உண்மையான நண்பர். தனது வன்னிப் பயணத்தின்போது பிரபாகரன் தன்னிடம் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ எங்களைச் சரியாக முன்னெடுத்து வைக்கவில்லை என்று சுட்டிக்காட்டியதாகத் திரைப்பட இயக்குநர் மகேந்திரன் குறிப்பிட்டிருக்கிறார். சுஜாதாவின் கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படச் சுவடி என்னைப்போன்ற ஈழத்து நண்பர்களது ஆலோசனைகளோடு செம்மையும் செழுமையும் படுத்தப்பட்டிருக்கலாம். அந்தத் திரைப்படம் பற்றி எனக்கும் விமர்சனம் படவில்லை. அமரர் ராஜீவ் காந்தியின் மரணத்தைத் தொடர்ந்து இறங்கிய கொடிய இருள் நாட்களிலும்கூட தொடர்ந்து ஈழத்து இலக்கிய முயற்சிகளை குறிப்பாகக் கவிதைகளை ஆதரித்து தனது கடைசிப் பக்கத்தில் எழுதியதை அத்தனை சுலபமாக மறந்துவிட முடியாது.


நாங்கள் நண்பர்களாய் இருந்தபோதும் பல்லாயிரம் கிலோமீட்டர் தொலைவில் வாழ்ந்தோம். அடிக்கடி சந்தித்ததில்லை. இணையம் அறிமுகமானபின்னர் அடிக்கடி சந்திக்காமல் இருந்ததுமில்லை. ஒருமுறை எப்படி கணினியில் தமிழ் எழுதுவது என்று ஒரு தாயிடம் கேட்பதுபோல கேட்டு அவருக்கு மின்னஞ்சல் எழுதினேன். மணலில் அம்மா அனா ஆவன்னா எழுதப் பழக்கியதுபோல கணினியின் மாயத் திரையில் அவர்தான் எனக்குத் தமிழ் அரிச்சுவடி தொடக்கி வைத்தார். 1999_ல்தான் நான் அவரை கடைசியாகச் சந்தித்தேன். அவருடைய வீட்டில் விருந்து சாப்பிட்டேன். என்னோடு மிகவும் அன்பு பாராட்டினார். ஒரு மாலைப் பொழுதில் தனது குலதெய்வமான பார்த்தசாரதி கோவிலுக்கு என்னை அழைத்துச் சென்றார். நாலாயிரத் திவ்வியப் பிரபந்த சேதிகளைச் சொன்னபடி சென்னைச் சுவர்க் காட்டுக்குள் நடந்த சுஜாதாவைத் தொடர்ந்த என்னோடு கதை கேட்டபடி மஞ்சள் சூரியனும் வந்தது. பாரதியார் பற்றியும் நிறையச் சொன்னார். பாரதியாரை யானை மிதித்த இடத்தை எனக்குச் சுட்டிக் காட்டினார். அவர் வாழ்ந்த வீட்டையும் எனக்குக் காட்டினார். திரும்பிச் சென்றபோது சூரியன் போய்விட்டிருந்தான். எனினும் நிலா எங்களோடு துணை வந்தது. இரவுச் சாப்பாட்டு மேசையில் அவரது அன்பான வார்த்தைகளில் அவரது இல்லத் தோழியின் உபசரிப்பில் தினைத்திருந்தோம். பேச்சினிடையே மறுநாள் தனது திரைஉலக நண்பர்களைச் சந்திக்க வருமாறு அழைத்தார். எனினும் அந்த இரவு கொடிய விதி எங்கள் நட்பின்மீது இறங்கியது. உண்மையில் வானத்தில் போன சனியனை ஏணிகட்டி இறக்கியது நான்தான். சின்னப் பிரச்சினைக்காக அவரது மனசு புண்பட நடந்துகொண்டேன். அதன்பின்னர் அந்த உயர்ந்த ஆழுமையை நான் சந்திக்கவில்லை. வருகிற கோடை விடுமுறையில் அவரைச் சந்தித்து மன்னிப்புக் கேட்கவேண்டும் என்கிற தீர்மானத்தில் இருந்தேன்.


என்னை அசாத்திய துணிச்சல் உள்ளவன் என்று சொல்லுவார்கள். நீழும் துப்பாக்கிகளை புறம்கையால் தட்டிவிட்டு நடந்து செல்கிற எனக்கு அவரை நேரில் சந்திக்கவும் மன்னிக்க வேண்டுகிறேன் என்று சொல்லவும் துணிச்சல் ஏற்படவில்லை. பின்னர் என் கவலையை கவிஞர் இந்திரனிடமும் பிறரிடமும் சொல்லி அனுப்பினேன். 2002_ல் எனது கவிதைத் தொகுப்பு பெருந்தொகை வெளிவந்தபோது மன்னிக்க வேண்டுகிறேன் என எழுதி அவருக்கு அனுப்பி வைத்தேன். கிடைத்ததா என்பதும் தெரியவில்லை. கோடை காலம் வரைக்குமாவது இருந்திருக்கலாம். குற்ற உணர்வாம் சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே நில்லென்று கூறி நிறுத்தி வழி போய்விட்டார்.


ஈழத் தமிழரைப் பொறுத்து இந்த வருடம் பிப்ரவரி மாதம் மிகக் கொடுமையானது, எழுத்தாளர் சுஜாதா. ஓவியர் ஆதிமூலம், முன்னைநாள் அமைச்சர் ராசாராம் உட்பட எங்களது தமிழக நண்பர்கள் மூவரை அது காவு கொண்டுவிட்டது. சுஜாதாவுக்கும் ஆதிமூலத்துக்கும் இன்னொரு ஒற்றுமையுமுண்டு ஆதிமூலத்தின் கோடுகளும் சுஜாதாவின் வசனங்களும் ஒன்றுதான். அவற்றின் நடையும் சக்தியும் ஒன்றுதான். ஆதிமூலமும், சுஜாதாவும், இராசாராமும் வேறு வேறு வழிகளில் பயணித்தபோதும் ஈழத் தமிழர்களை நேசித்ததிலும் விருந்தோம்பலிலும் ஒன்றுபோலவே இருந்தார்கள். இவர்களது மரணம் ஈழத் தமிழ் நண்பர்கள் வட்டத்தில் பெரிய வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. சுஜாதா, ஆதிமூலம் இருவரது மரணமும் கலைத் தமிழுக்குப் பெரிய இழப்பாகும். ®


எம்.ஜி.சுரேஷ்
நிறையப் பேர் எழுதுகிறார்கள். ஆனால் சிலருக்கு மட்டுமே நட்சத்திரங்களாக மிளிரும் வாய்ப்புக் கிடைக்கிறது. சமீபத்தில் காலமான சுஜாதா அத்தகைய நட்சத்திரங்களில் ஒருவராக இருந்தார். காலங்கள்தோறும் நட்சத்திரங்கள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. ஒரு காலத்தில் கல்கி; பின்னர் அகிலன், ஜெயகாந்தன். அப்புறமாய் பாலகுமாரன் என்று நட்சத்திர எழுத்தாளர்களை நாம் பட்டியலிட முடியும்.


எழுபதுகளில் எழுத ஆரம்பித்து நான் எழுத்தாளனாக ஆகவேண்டும் என்பதற்காகப் போராடிக் கொண்டிருந்தபோது, இரண்டு எழுத்தாளர்களின் உரைநடை என்னைப் பெரிதும் பாதித்தது. ஒன்று ஜெயகாந்தன். இன்னொன்று சுஜாதா. இவர்கள் இருவரின் எழுத்துக்களுமே எனது வளர்ச்சிக்கு இடைஞ்சலாக இருந்தன என்றே சொல்ல வேண்டும். என் காலத்தில் எழுத ஆரம்பித்த பலருக்கும் இத்தகைய சிக்கல் இருந்தது. ‘சதக்’கென்று கத்தியால் குத்தினான்’ என்று எழுதும் மர்மக்கதை மன்னர்கள் கூட ‘அவள் மெலிதாக அதிர்ந்தாள்’ என்று எழுத ஆரம்பித்தார்கள். அதே போல் ஜெயகாந்தனைப் போலவே ஒரு டஜன் எழுத்தாளர்கள் எழுதிக் கொண்டிருந்தார்கள்.


சுஜாதாவின் பின்புலம் எழுத்துக்குச் சாத்தியம் இல்லாதது. பெரும்பாலும் மருத்துவம், பொறியியல் என்று படிக்கும் மாணவர்களுக்கும் இலக்கியத்துக்கும் எப்போதும் சம்பந்தம் இருப்பதில்லை. கம்ப்யூட்டர் இன்ஜினீயரான சுஜாதா, தமிழில் கதை எழுத வந்தது ஒரு அபூர்வமான நிகழ்வே. அதிலும் தமிழுக்கு ஒரு புதிய நடையை அறிமுகப்படுத்தும் அளவுக்கு நிபுணத்துவம் கொண்டு எழுதுவது இன்னொரு ஆச்சர்யம். அறுபதுகளில் ராஜேந்திரகுமார் என்ற பெயரில் ஒரு எழுத்தாளர் இருந்தார். அவர் குமுதத்தில் நிறைய சிறுகதைகள், தொடர்கதைகள் எழுதி இருக்கிறார். அவரது நீட்சியாகத்தான் சுஜாதா தனது எழுத்தைத் தொடங்கினார். ராஜேந்திரகுமாரின் ‘வால்கள் ஜாக்கிரதை!’ என்ற தொடரைப் படிக்கும் வாசகர்களுக்கு அதை சுஜாதாதான் எழுதினாரோ என்ற சந்தேகம் தட்டும். ஆரம்பகால எழுத்தில் ராஜேந்திர குமாரின் எழுத்தைப் பின்பற்றி எழுத வந்த சுஜாதா, பின்னாளில் தனக்கென்று ஒரு தனித்த அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார் என்பது முக்கியமானது.


சுஜாதாவின் எழுத்துக்கள் எழுபதுகளின் ஆரம்பத்தில் துள்ளலுடன் பிரவேசித்தன. தமிழ்த்திரைப்பட இசைத்துறையில் ஏ.ஆர். ரகுமான் ஒரு பாய்ச்சலை நிகழ்த்தியது போல், தமிழ் உரைநடையில் சுஜாதா ஒரு பெரும் பாய்ச்சலை நிகழ்த்தினார் என்று சொல்லலாம். தமிழில் சுஜாதாவை வைத்து ஒப்பிட்டுப் பார்க்கக் கூடிய மாதிரி இன்னொரு எழுத்தாளர் இல்லை. ஜெயகாந்தனை புதுமைப் பித்தனோடு ஒப்பிடலாம். பாலகுமாரனை தி.ஜானகிராமனோடு ஒப்பிடலாம். அசோகமித்திரனை க.நா.சு.வுடன் ஒப்பிடலாம். இது போல் சுஜாதாவை இன்னொரு தமிழ் எழுத்தாளரோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. ஏனெனில், அவரது பாணி அவரது சுயமான கண்டுபிடிப்பு. இவருக்கு இணையாக ஒரு எழுத்தாளரைச் சொல்லலாம் என்றால் ஜான் அப்டைக்கை சொல்லலாம். சுஜாதா, ஜான் அப்டைக்கின் வாசகர் என்பதை அவரது எழுத்துக்களை வாசிக்கும் வாசகர்கள் புரிந்து கொள்ள முடியும். ஜான் அப்டைக்கின் எழுத்துக்களில் இருக்கும் சொற்சிக்கனம், வியப்பூட்டும் தன்மை, புதிர்த்தன்மை போன்றவை சுஜாதாவிடம் உண்டு.


சுஜாதாவுக்கு முன்பு வரை தமிழில் இரண்டு விதமான எழுத்தாளர்கள் இருந்தார்கள். ஒன்று வணிகப் பத்திரிகைகளில் எழுதுபவர்கள். இரண்டு தீவிரமான இலக்கியப் பத்திரிகைகளில் எழுதுபவர்கள். க.நா.சு, சுந்தர ராமசாமி, நாஞ்சில் நாடன் போன்றவர்கள் சிறு பத்திரிகை எழுத்தாளர்கள் என்றால் அகிலன், நா. பார்த்தசாரதி, சாண்டில்யன் போன்றவர்கள் வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதும் எழுத்தாளர்கள். ஒரு எழுத்தாளர் ஏக காலத்தில் வெகுஜனப் பத்திரிகையிலும் எழுதலாம்; சிறுபத்திரிகையிலும் எழுதலாம் என்று நிரூபித்துக் காட்டியவர் சுஜாதா. இத்தகைய போக்கை ஆரம்பித்து வைத்தவரும் அவரே. அவரால் குமுதத்தில் கணேஷ்_வஸந்த் கதையை எழுதிக் கொண்டே, கணையாழியில் கடைசிப் பக்கங்களையும் எழுத முடிந்தது. இது ஒரு வினோதம். இலக்கியத்தை சட்டகத்தில் போட்டு அடைக்க வேண்டியதில்லை. எழுத்து பல்வேறு சாத்தியங்கள் கொண்டது. குமுதத்தில் எழுதினாலும் கணையாழியில் எழுதினாலும் எழுத்து எழுத்துதான் என்று அவர் சொல்ல வருவதாக நாம் கருதலாம்.


சுஜாதா நிறைய எழுதியிருக்கிறார். அவர் எழுதியவற்றில் பெரும்பாலான எழுத்துக்களை நான் வாசித்திருக்கிறேன். அவரது பிரதிகள் வாசிப்பு இன்பம் கொண்டவை. அவரது ஸ்ரீரங்கத்து தேவதைகள் கதைகளைப் படிக்கும் எந்த ஒரு சிடுமூஞ்சியும் புன்னகை மன்னனாக மாறிவிடுவான் என்பதில் சந்தேகமில்லை. இது போன்ற கதைகள் எழுதுவதில் அவரை கல்கியின் வாரிசு எனலாம். அதே போல் நகரம் போன்ற கதைகள் அவரைப் புதுமைப்பித்தனின் வாரிசாக ஆக்குகின்றன.


நான் சுஜாதாவை எழுபதுகளில் தான் முதல் முறையாக நேரில் சந்தித்தேன். அப்போது சாவி தினமணி கதிர் ஆசிரியராக இருந்தார். அவர் சுஜாதாவுடனான வாசகர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். அப்போது சுஜாதா ஒடிசலாக, உயரமாக, தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவின் சாயலில் இருந்தார். நிறைய கூச்சப்பட்டார். தயங்கித் தடுமாறி பேசினார். இன்னொரு சந்தர்ப்பத்தில் சென்னையில் இலக்கியச் சிந்தனை நடத்திய கூட்டம் ஒன்றில் பேசினார். இந்த இரண்டு சந்திப்புகளிலும் சுஜாதாவின் பேச்சு வசீகரமாக இருக்கவில்லை. அவர் எழுத்தில் இருக்கும் சாதுர்யம் பேச்சில் இல்லை. பின்னர் அவர் சென்னையிலேயே செட்டில் ஆன பிறகு பலமுறை சந்தித்திருக்கிறேன். என்னுடைய புத்தகங்கள் வெளியாகும் போதெல்லாம் அவருக்கு அனுப்பி வைத்துத் தொல்லைப்படுத்தியிருக்கிறேன். அவரும் பொறுமையாகப் படித்துத் தன் அபிப்ராயங்களைத் தெரிவித்திருக்கிறார். என்னுடைய அட்லாண்டிஸ் மனிதன் நாவலைப் பற்றி நிறைய விசாரித்தார். ‘இது போன்ற நாவலுக்கு வாசகர் வரவேற்பு எப்படி இருக்கிறது?’ என்று கேட்டார். அவருக்கு நவீன இலக்கிய முயற்சிகளில் ஆர்வம் இருந்தது. ஸ்ரேயாவின் மார்பக நடுநீரோடை முதல் டெரிடாவின் கட்டவிழ்ப்புச் சிந்தனை வரை எதைப் பற்றி வேண்டுமானாலும் அவரால் எழுத முடியும். எந்த ஒரு விஷயத்தையும் விலகி நின்று பார்க்க அவரால் முடியும்.


ஒரு பத்துப் பேர் ஒன்றாகச் சேர்ந்து கொண்டாலே, ஒரு அதிகார மையத்தைக் கட்டமைக்கும். இன்றைய தமிழ்ச்சூழலில் இத்தனை பெரிய புகழும் அங்கீகாரமும் கிடைத்தும் அவர் தனக்கென்று ஒரு அதிகார மையத்தைக் கட்டமைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


நாற்பதாண்டுகளுக்கும் மேலாகத் தமிழில் எழுதி வந்த இவரது இடம் என்ன என்று கேட்டால், கீழ்க்கண்டவாறு சொல்லலாம். சுஜாதா புதிய நடையை உருவாக்கியவர், விஞ்ஞானக் கதைகளை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர். சிறந்த எழுத்தாளர் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் பாரதி, புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, மெளனி, நகுலன் என்ற வரிசையில் அவரை வைத்து மதிப்பிட முடியாது. சுஜாதா வாசகனின் முன் தூண்டிலுடன் நின்றவர். முன்னவர்களின் எழுத்து தூண்டிலுக்கு எதிரானது. பலரும் சுஜாதாவை ஒரு கரம் மசாலா எழுத்தாளர் என்றுதான் அடையாளப்படுத்த முனைவார்கள். அப்படிச் சட்டென்று முத்திரை குத்தி சுஜாதாவைக் கழித்துக் கட்டிவிட முடியாது. கணேஷ்_வஸந்த் கதைகளை எழுதிய அவர்தான் ‘பாவம்’, ‘நகரம்’ போன்ற கதைகளையும் எழுதினார் என்பதை நாம் செளகர்யமாக மறந்துவிடக்கூடாது.


எந்த ஒரு மகத்தான இலக்கியவாதியாக இருந்தாலும், கறாராக மதிப்பீடு செய்தால் அவர் எழுதிய மொத்தக் கதைகளிலும் ஒரு பத்துக் கதைகள் மட்டுமே தேறும். புதுமைப்பித்தன் முதல் சுந்தர ராமசாமி வரை யாராக இருந்தாலும் இதுதான் உண்மை. அப்படிப் பார்த்தால் சுஜாதா எழுதிய நூற்றுக்கணக்கான கதைகளில் நிச்சயம் ஒரு பத்து நல்ல கதைகள் தேறும். அவரை நினைவு கூர்வதற்கு அது போதும் என்றே சொல்லத் தோன்றுகிறது. l


இரா.நடராஜன்
சுஜாதாவைப் பற்றி நினைத்த நிமிடத்தில் பின்னாலேயே இரண்டுபேரின் நினைவு ஓட்டிக்கொண்டு வந்துவிடும் எனக்கு. ஒருவர் நான் பத்தாங்கிளாஸ் படிக்கும் போது கணக்கு ஆசிரியராக இருந்த ஊ.பெரியசாமி சார். சுஜாதாவின் ‘பதினாலு நாட்கள்’ நாவலை கணக்குப் புத்தகத்துக்கு நடுவில் வைத்து பரபரப்பாக நான் படித்துக் கொண்டிருக்கும்போது வகுப்பில் என்னை கையும் களவுமாகப் பிடித்தவர். இரண்டாவது நபர் டக்ளஸ் ஆடம்ஸ். ‘‘ஹிச்சிகர் வழிகாட்டிகள்’’ என அறிவியல் புனை கதைகளால் வயிறு வலிக்க சிரிக்க வைத்தவன். தமிழின் டக்ளஸ் ஆடம்ஸ் சுஜாதா தான், அல்லது ஆங்கிலத்தின் சுஜாதா, டக்ளஸ் ஆடம்ஸ்தான் என எனக்குள் எங்கோ ஒரு மூலையில் ஆழமாகப் பதிந்து விட்டிருக்கவேண்டும். சுஜாதா இறந்து விட்டார் என்ற செய்தி இந்திய அறிவியல் தினமான (என்ன ஒரு பொருத்தம்) பிப்ரவரி 28 காலையில் எனக்கு வந்து சேர்ந்த நிமிடத்திலிருந்து என்னோடு ஊ.பெரியசாமி சாரும், டக்ளஸ் ஆடம்ஸும் சேர்ந்து தொண்டையை அடைத்துக் கொண்டிருக்கிறார்கள்.


எனது கவிதைத் தொகுதி ஒன்றை பெங்களூர் தமிழ்ச்சங்க விழா ஒன்றில் வெளியிட்டு பேசுவதற்கு சுமார் 22 வருடங்களுக்கு முன் 1968_ல் தமிழில் வீசத்தொடங்கிய தனிப்புயலாக நாம் அவரைப் பார்க்கிறோம்! ‘நைலான் கயிறு’ கதையின் வழியே வந்த அந்தப் புதிய எழுத்து எந்த ரூபத்திற்குள்ளும் கடைசிவரை அடங்கவில்லை. இது அவரது பலமா பலவீனமா என்பதை காலம் தான் சொல்ல முடியும் என்றாலும், என் வயதை ஒத்த ஒரு முழு சந்ததிக்கும் அதிர்ச்சி, மகிழ்ச்சி, சுதந்திரம், எரிச்சல், ஆச்சரியம், கடும் விமர்சனம் எனப்பலவகை எண்ண ஓட்டங்களை அது ஏற்படுத்திச் சென்றுள்ளது. எழுபத்திரண்டு வயதா? எந்த சுஜாதாவிற்கு? தமிழின் அறிவியல் புனை கதைகளுக்கு என்று ஒரு முழு ஆளுமையாக சுஜாதா இருந்திருக்க வேண்டும். சுஜாதாவின் சம காலத்தவர்களான ஃபிராங்க் ஹெர்பர்ட்ஸ், (டியூன் சில்ரன் ஆஃப் டியூன், எம்பரர் ஆப் டியூன் ஆகியவை இவரது முழுமையான அறிவியல் புனைகதை நாவல்கள்) ஹார்லான் எல்லிஸன் (டேன்ஷரஸ் விஷன்_புகழ்), ஸ்டெயின்ஸ்லா எலம் (பிரிக்ஸ் த பைலட்) போன்றவர்களோடு ஒப்பிடுமளவு அறிவியல் புனை கதை தளம் எதுவும் சுஜாதாவிடம் இல்லை. ஆனால் அறிவியல் அறிவுத் தேடலை கதையின் ஒரு கூறாக அவருக்கு முன் யாருமே முன் வைத்திருக்கவில்லை. ஒரு அணு விஞ்ஞானி கடத்தப்பட்டதை வைத்து அறிவியல் பேசும் ‘‘நில், கவனி... தாக்கு’’ கதையும், குமுதத்தில் தொடராக வந்த இந்திய ராக்கெட் கதையான விக்ரமும், நாவல்களா என்பதில் உங்களுக்கு சந்தேகம் இப்போது வரலாம். ஆனால் அவை வெளி வந்தபோது லட்சக்கணக்கானவர்கள் அவரை அறிவியல் புனை கதையின் அதிசய குழந்தையாகவே பார்த்தார்கள்... தொடர்ந்து என் இனிய இயந்திரா (விகடன் தொடர்) சொர்க்கத்தீவு, மீண்டும் ஜினோ என நீங்கள் வாசித்துப் போனால் ஆஹா ஒரு அறிவியல் புனை கதை வித்தகன் டக்ளஸ் ஆடம்ஸ் போல, ஆர்தர் சி. கிளார்க் போல கிடைத்தானப்பா என மருங்கினால் தொலைந்தீர்கள்.. வேறு ஒரு சுஜாதா வந்து கைகுலுக்குவார்.


அந்த சுஜாதா ‘‘கொலை உதிர்கால’’ சுஜாதா பெடரிக் ஃபோர்ஸித், அகதா கிறிஸ்டி, மைக்கல் சிறிஸ்டின் போல துப்பறியும் கதை நிபுணர். அகதாவுக்கு ஒரு பைராட்போல, சுஜாதாவுக்கு கணேஷ் வசந்த். ஹெர்குல் பைராட், ஜெர்லாக் ஹோம்சின் மாணவர்கள் போல... கிட்டத்தட்ட நிக் கார்ட்டர், ஜேம்ஸ் ஹாட்லி, இர்வின் வாலஸ் போல கச்சிதமான மர்மக் கதைகளின் மன்னன் சுஜாதா. கிணறு தோண்டும் தொல்பொருள் ஆராய்ச்சி (வஸந்த் வஸந்த்!!) முதல், ஜெர்மெனியின் இன்டர்போல் அறிவியல் (மேற்கே ஒரு குற்றம்) வரை அலைக் கழிக்கும் மர்ம முடிச்சுகளோடு வியர்த்து விறுவிறுக்க படித்து தமிழின் ஷிட்னிஷெல்டன்பா என்று வியந்தால் தொலைந்தீர்கள்.


அங்கே சரித்திரக்கதை சுஜாதா, காந்தளூர் வசந்த குமாரன் கதையோடு ‘‘கல்கித்தோத்தான் போ’’ எனுமளவும், பதறியபடி வாசிக்க சரித்திர கிரைம் போல ‘ரத்தம் ஒரே நிறமுமாய்’ உங்கள் முன் நிற்பதைக் காணலாம்... மண்டைக்காடு மதக் கலவரத்தை ‘‘விடிவதற்குள் வா’’ என்றும் மனித நேயம், தொழிலாளர் பிரச்சனை என (மணமகனும் படித்து மானுட விடுதலை இலக்கிய கர்த்தா சுஜாதாவை நீங்கள் அடைவதற்குள் ‘‘கரையெல்லாம் செண்பகப்பூ’’, ‘‘24 ரூபாய் தீவு’’ என மறுபடி துப்பறிவார், ‘வைரங்களை’ படைத்து மீண்டும் அறிவியல் புனை கதைக்குள் புகுந்து காணாமல் போய்விடுவார். பிரிவோம் சந்திப்போம் என்று காதல் சுஷாதாவும் உண்டு.


கதை சுஜாதா இப்படி என்றால் கட்டுரை சுஷாதா 1970களில் சிலிக்கன் சில்லுப்புரட்சி (தினமணி) தொடங்கினார். அதிகம் தத்தளித்தது கட்டுரை சுஜாதாதான்... அறிவியல் கட்டுரையில் எந்த அளவிற்கு இறுக்கமான ஞானச் செறிவு இருந்ததோ அந்த அளவிற்கு பொதுக் கட்டுரைகள், பகுதி அறிவியல் (PartialScience) கட்டுரைகளில் பெரும் பதட்டம் தென்பட்டது. ஜீனோமில் மனித ஜீன்களின் முழுமையும், தலைமை செயலகத்தில் மூளை குறித்த அறிவியலின் ஏறக்குறைய மொத்த தேடலையும், நானோ தொழில் நுட்பம் (25 ரூபாய்க்குக் கிடைத்த பொக்கிஷம் இது!) நூலில் அடுத்த நூற்றாண்டு அறிவியலின் அதிசய பதிவையும் அவர் கச்சிதமாக முன்வைத்தார். (இன்று மற்றவர்கள் எழுதுவது போல இணையதளத்திலிருந்து மொ.பெ. செய்து தனதாக்கவில்லை. அவரை படித்து டைப் செய்து நாங்கள் அதை இணையதளத்தில் சேர்ப்பித்தோம்) இப்படி ஒரு வெகுஜன கல்வியாளர் கிடைத்தார். அறிவியலின் பிதாமகர் என்று நீங்கள் நினைத்தால் உடனே வேறொரு சுஷாதாவைச் சந்திக்க நேரும்.


அந்த சுஜாதா ‘‘கடவுள் இருக்கிறாரா’’ சுஜாதா, பிரிஜியோ ஃப் கப்ரா போன்றவர்கள் மாதிரி விளாடிமிர் வெமாட்ஸிமாதிரி அறிவியலையும், புராணத்தையும் குழைத்து வரலாற்றை மறு ஆய்வு செய்வார் என நினைத்துப் புகுந்தால்... அது அப்படியும் அல்ல என்று நாம் துரத்த துரத்த எங்கும் சிக்காமல் வேதாந்த சிகிச்சை, கருட புராணம், இத்தியாதிகளோடு களம் புகுவார். அவருக்குள் என்று ஏதோ அடையாள சிக்கல் இருப்பது போலத் தோன்றும். அறிவியல் கதை காரர், விஞ்ஞானி அதனால் யாராவது நாத்திகர் என்று சொல்லி விட்டால் பெரியார் கொள்கை அவருக்கு சரிப்படவில்லை. ஆனால் சனாதனவாதி என்று தன்னை ஏற்பதற்கு ‘‘விஞ்ஞான அறிவு’’ இடம் தரவில்லை... எனவே ‘‘ஒரு விஞ்ஞானப் பார்வையிலிருந்து’’ முதல் ‘‘கடவுள் இருக்கிறாரா’’ வரை தன்னையொத்த ‘மத்திமர்’’களுக்கு விருந்து படைத்தார். அவ்வளவுதானா அவர் என்று நீங்கள் நினைத்துவிட முடியாது.


பாரதி பிறந்த வீடு, ஊஞ்சல், அடிமைகள் என்று நாடகங்கள் கொடுத்தார். The Death of Sales man னோடு ஒப்பிடப்படும் ஊஞ்சல் ஒரு சோதனை முயற்சியே.. டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு ஒரு நல்ல அறிவியல் சட்டத்துரை உரையாடல், ஆனால் மறுபடியும் அறிவியலா, அற்புதமா! என்று விளையாடும் ‘‘கடவுள் வந்திருந்தார்’’ நாடகம் சர்ச்சை கிளப்பியது. விவாதங்களைத் தூண்டியது. ஒரு கிரீஷ்கர்னார்டு கிடைத்துவிட்டார் என்று நீங்கள் இருந்து விட முடியாது...


அடுத்து வருபவர் சினிமா வசனகர்த்தா. ஏற்கெனவே தமிழில் இரண்டு, கன்னடத்தில் ‘24 ரூபாய் தீவு’ வந்திருந்தது. இப்படி கதைகளில் ஏற்கனவே ‘‘கனவுத் தொழிற்சாலை’’யை முன் வைத்த சுஜாதா, ரிடையர் ஆன பிறகு முழுநேர வசனகர்த்தா ஆனார்.


இன்னும் குமுதம் ஆசிரியர் சுஜாதா, இந்தியா டுடே சுஜாதா... தமிழ் இணையதள இதழ் கண்டுபிடித்த சுஜாதா... ஹைக்கூ சுஜாதா... கவிதை சுஜாதா... என ஒரு தசாவதானியாய் இருக்கவேண்டியதன் அவசியத்தை காலம் அவருக்கு ஏதோ ஒரு வகையில் உருவாக்கி இருக்க வேண்டும். அவர்மீது பலருக்கும் பலவிதத்தில் ஆத்திரம் உண்டு.


ஆனால், இப்போது அவர் இல்லை. அதை நினைக்கும்போது.. அந்த வெற்றிடம் நம்மைத் திகைக்கவைக்கிறது. ®


த.பழமலய்
1989 வாக்கில் என் வீட்டுக்கு வந்திருந்த எழுத்தாளர் பாவண்ணன் தான் பெங்களூரில் சுஜாதாவைச் சந்திப்பதாகச் சொன்னார். ‘சனங்களின் கதை’ (அப்போதுதான் வெளியாகி இருந்தது) பிரிதி ஒன்றைப் பெற்றுச் சென்றார்.


சுஷாதா படித்துவிட்டுக் கணையாழியில் ‘கடைசிப் பக்கத்தில்’ (அக்டோபர், 89) எழுதினார். அது, குறிப்பிட்ட வாசகர்களின் பார்வை சனங்களின் கதையின் மீது படுவதற்கு ஒரு காரணமாக அமைந்தது. பிறகு, குமுதத்தில் அவர் பணியாற்றிய ஆண்டுகளில் என் கவிதை, கட்டுரைகளை வெளியிட்டது (செப்டம்பர், 94) பரிந்துபட்ட வாசகர்களுக்கு நான் அறிமுகமாக உதவியது. இவ்வாறு, எனக்கு என்று இல்லை, புதியவர்கள் பலருக்கும் அவர் ஓர் உந்து விசையாக, ஊக்குநராக இருந்திருக்கிறார்.


சென்னைக்குச் செல்கையில் ஓரிருமுறை அவர் வீடு போய்ச் சந்தித்திருக்கிறேன். ஸ்நேகா சீனிவாசன், பாலாஜி (கணேசன்) உடன் வந்து வீடு காட்டினார்கள்.


அவரை விட அம்மையார்தான் என்னுடன் அதிகம் பேசுவார். அது, அவர் எழுத்துகளைப் பற்றி நாங்கள் எங்களுக்குள் பேசுவதாக இருக்கும். சுஜாதா ஒட்டுக் கேட்பவர் போல உட்கார்ந்திருப்பார். அது வேடிக்கையாக இருக்கும்! தன் மனைவி சுஜாதா பெயருக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் ரெங்கராஜன் அல்லவா அவர்! அவருடைய அறிவு, திறமை, ஆர்வம் உழைப்பு வீணடிக்கப்படுகிறதோ என்று நான் அவரிடமே கேட்பது உண்டு. தமிழர் வாழ்வியலுக்குப் பார்ப்பனர்களின் பங்களிப்பு உடன்பாடானதா, எதிர்மறையானதா என்று விவாதித்திருக்கிறேன். தமிழர்களுக்கு, ஒரே நேரத்தில், பழமையின் மீதும் புதுமையின் மீதும் இருக்கும் மோகம் அவருக்கு வியப்பளிப்பதாகவே சொல்லியிருக்கிறார். தமிழர்களுக்குப் பார்ப்பனர்கள் குறித்த முரண்பாடான அணுகுமுறையும் அவருக்கு ஒரு புதிர்தான். எது எப்படியோ தமிழும் தமிழர்களும் அவர்களுக்குச் சோறு போடுகிறார்கள் என்பது அவருக்குத் தீர்மானமாக இருந்தது. நானும், என்னைப் போன்றவர்களும் (பாவலர் அறிவுமதி...) என்ன விமரிசனம் செய்தாலும் தன்னையும் தன் தமிழ் எழுத்தையும் சந்தேகிக்க வேண்டாம் என்பது அவர் ‘வேண்டுகோளாக’ இருந்தது.


ஒவ்வொரு முறையும் ஏதாவது தன் அண்மை வெளியீட்டை அன்பளிப்பாகத் தருவார். பேராசிரியர்கள் புதிய தமிழையும் பொருட்படுத்த வேண்டும் என்பது அவர் நியாயமான எதிர்பார்ப்பு.


திருவரங்கத்து அரங்கநாதன் மீது அவருக்கிருந்த ஒருவித ஈர்ப்புக்கு அவரை ஒரு புதிய ஆழ்வார் என்று சொல்லலாம். அவர் ஆழ்வார் வரிசையில் சேர்கிறாரோ இல்லையோ இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் எழுத்தாளர் வரிசையில் இடம் பெறுபவர்.


வைகுண்ட பதவியை விட, வாழும் தமிழ்ப் பதவி பெறுவதே அவருக்கு உவப்பானதாகும். அது, உறுதியும் இறுதியும் ஆனது!


( நன்றி: குமுதம் தீராநதி, ஏப்ரல் 2008 இதழ்)

Comments