Skip to main content

நட்சத்திர எழுத்தாளர் (1935 - 2008) - குவளைக் கண்ணன்

1979, 80இல் ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ படிக்கும்போது என் வகுப்புத் தோழனான ஸ்ரீதர் வீட்டுக்குப் போக ஆரம்பித்தேன். அந்த வீடு எனக்குப் பெரிய ஆச்சரியத்தை வைத்திருந்தது. வீட்டின் பல இடங்களில் சுவரை மறைத்துக்கொண்டு புத்தகங்கள் நிரம்பிய கண்ணாடி வைத்த மர அலமாரிகள் நின்றன. மேசை நாற்காலிகள்மீது பக்க அடையாளம் வைக்கப்பட்ட புத்தகங்கள் கிடந்தன. பாடப் புத்தகங்களைத் தவிர வேறெந்தப் புத்தகமும் இல்லாத வீட்டில் வளர்ந்த என்னைப் புத்தகங்கள் நிரம்பிய அந்த வீடு கவர்ந்தது. ப்ளஸ் டூ முடித்துவிட்டு ஸ்ரீதரும் நானும் ஒரே கல்லூரியில் இளங்கலை வணிகவியல் சேர்ந்தோம். ஸ்ரீதரின் அப்பா டாக்டர் எஸ். கிருஷ்ணமாச்சாரி M.D., DMRD, சேலம் அரசு மருத்துவமனையில் ரேடியாலாஜிஸ்டாக இருந்தார். அந்த வீட்டோடு நெருக்கம் அதிகரித்தது. அந்த வீட்டில் இருக்கும் புத்தகங்களை எடுத்துப் பார்க்க ஆரம்பித்திருந்தேன். புத்தகங்களின் முதல் பக்கத்தில் எஸ். கிருஷ்ணமாச்சாரி என்ற பெயரும் ஒரு தேதியும் எழுதியிருக்கும். சில புத்தகங்களில் சீனிவாசராகவன் என்ற பெயர் எழுதப்பட்டிருக்கும். புத்தகங்கள் படிக்க வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டு உள்ளுக்குள் அவசியம்போல் ஆகியிருந்தது. ஸ்ரீதரின் அம்மாவிடம் படிக்கப் புத்தகம் கேட்டபோது, டாக்டரிடம் கேட்கச் சொல்லிவிட்டார். நான் அதுவரை டாக்டரிடம் பேசியதில்லை. 


படிக்க ஏதாவது புத்தகம் வேண்டுமென்று டாக்டரிடம் கேட்டேன். ஏதாவதுன்னா எப்படி, எந்தப் புத்தகம் வேண்டும் என்றார். தெரியவில்லை என்றேன். யாரையெல்லாம் படித்திருக்கிறாய் என்று கேட்டார். சுஜாதா படிச்சிருக்கேன் சார் என்றேன் ஆர்வமாக. வேற யாரையாவது சொல் என்றார். ஜெயகாந்தன் கதைகள் சிலவற்றைப் படிந்திருந்தேன். அவரது 'கங்கை எங்கே போகிறாள்' தொடர்கதை வேறு ஏதோவொரு பத்திரிகையில் தொடராக வந்துகொண்டிருந்தது. நான் அதை விடாமல் படித்துக்கொண்டிருந்தேன். எம்.ஜி.ஆர்., சிவாஜி, கிரிகரி பெக், கிளிண்ட் ஈஸ்ட்வுட் என்றிருந்த என்னுடைய நாயகர்கள் பட்டியலில் ஜெயகாந்தனும் சுஜாதாவும் ரஜினி கமலோடு அப்போதுதான் சேர்ந்திருந்தார்கள். ஜெயகாந்தன் பெயரைச் சொன்னேன். டாக்டர் உள்ளே போய் நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டிருந்த புதுமைப்பித்தன் சிறுகதைகள் புத்தகத்தை எடுத்துக் கொண்டுவந்து தந்தார். பின்னர் வரிசையாகப் புத்தகங்களைத் தந்தார். கார்க்கி, செகாவ், கொகால், டால்ஸ்டாய், டாஸ்டாய வெஸ்கி, காம்யு, ஜாய்ஸ் என்று ஒவ்வொரு புத்தகத்தையும் திருப்பித் தரும்போது அந்தப் புத்தகத்தைப் பற்றி, அந்தப் புத்தகம் என்னை என்ன செய்தது என்பதைப் பற்றிக் கொஞ்சம் சொல்லவைத்தார்.


அந்தச் சமயத்தில் கல்லூரி முதலாமாண்டு படித்து வந்த நான், பச்சைப் பாவாடை சட்டை, வெள்ளை நிறத் தாவணி அணிந்து சீருடையில் ப்ளஸ் ஒன் படிக்கப் பள்ளிக்கூடம் போய்க்கொண்டிருந்த பெண்மீது காதல் வயப்பட்டு, கவிதை கவிதையாக எழுதிக்கொண்டிருந்தேன். கவிதையெல்லாம் எழுதறயாமே கொண்டு வா பார்க்கலாம் என்றார் டாக்டர். பக்கம் பக்கமாக எழுதி வைத்திருந்ததில் இருந்து நன்றாக இருப்பதாகத் தோன்றிய சிலவற்றை எழுதி எடுத்துக்கொண்டுபோய் டாக்டரிடம் தந்தேன். சில நாள்கள் கழித்துத் தினமணி கதிரில் இருந்து என்னைப் பற்றிய குறிப்போடு எனது கவிதைகளை அனுப்பும்படி கேட்டு ஒரு கடிதம் வந்தது. அப்போது தினமணி கதிரின் ஆசிரியராக இருந்த கஸ்தூரிரங்கன் டாக்டரின் நண்பர். இருபது பக்கங்களுக்குக் கவிதைகளையும் என்னைப் பற்றிய குறிப்பையும் அனுப்பினேன். எமதர்மன் சனீஸ்வரன் என்றெல்லாம் அர்த்தம் வருகிற எனக்கு வைக்கப்பட்ட ரவிக்குமார் என்ற பெயரில் இருந்து, பாரதிக்கு அணுக்கமாக இருந்த குவளைக் கண்ணனின் பெயரைத் தேர்ந்தெடுத்துப் புனைபெயராக்கிக் கொண்டேன். குவளைக் கண்ணன் எனும் பெயரை நான் தோந்தெடுத்ததற்கு மற்றொரு காரணம் அவரது முழுப்பெயர் குவளைக் கண்ணன் கிருஷ்ணமாச்சாரி.


1981 தினமணி கதிர் தீபாவளி மலரில் எனது கவிதைகள் பிரசுரமாயின. கணையாழி என்று ஒரு மாத இதழ் வருவதாக ஸ்ரீதரின் அம்மா சொல்ல, கடை கடையாகத் தேடி ராஜகணபதி கோயிலுக்கு (சேலம்) எதிரில் உள்ள கடையில் கண்டுபிடித்து மாதாமாதம் கணையாழி வாங்க ஆரம்பித்தேன். கணையாழிக்குக் கவிதைகளை அனுப்பினேன். அதில் ஓரிரு கவிதைகள் பிரசுரமாயின. அப்போது கணையாழிக்கு அசோகமித்திரன் ஆசிரியராக இருந்தார். டாக்டர் ஒரு நாள் என்னிடம் 'ரங்கராஜன் இந்த ஞாயிற்றுக்கிழமை இங்க வரான், உன் கவிதைகளைக் கொண்டுவந்து அவங்கிட்டக் காட்டு, இலக்கியத்துல இப்போ என்ன நடந்துண்டு இருக்குன்னு அவனுக்குத் தெரியும். அவன் அப்டுடேட்டா இருப்பான்', என்றார். ஒரு புத்தக வெளியீட்டு விழாவுக்குத் தலைமை வகிக்க சேலம் வந்திருந்த டாக்டரின் தம்பியான ரங்கராஜன் என்கிற சுஜாதாவிடம் எனது கவிதைகளைத் தந்தேன். ஒரு பத்துப் பக்கம் இருக்கும். வேகமாகப் படித்துவிட்டு, ராத்திரியில் வாங்கினோம் இன்னும் விடியவில்லை என்ற ரீதியில் எழுதுவதெல்லாம் கவிதையில்லை, கவிதையில் எழுதப்படாத வரிகள் இருக்க வேண்டும், எது கவிதையில்லை என்றெல்லாம் பேசினார். தமிழில் ந. பிச்சமூர்த்தி, சி. மணி, நகுலன், ஞானக்கூத்தன், ப்ரமிள், பசுவய்யா, கல்யாண்ஜி, கலாப்ரியா, விக்ரமாதித்யன் இவர்களது கவிதை வரிகளைச் சொல்லி, இவர்களைப் படிக்காமல் அடுத்த கவிதையை எழுதாதே என்றார். மதியம் இரண்டரை மூன்று மணிக்கு ஆரம்பித்தவர் விழாவுக்கு அழைத்துப்போகக் கார் வரும்வரை என்னிடம் பேசினார். இந்தப் புத்தகமெல்லாம் எங்க சார் கிடைக்கும்? என்று கேட்டேன். சென்னை ராயப் பேட்டையில் பைலட் தியேட்டருக்குப் பக்கத்தில் 'க்ரியா'வில் கேட்டுப்பார் என்றார்.


புத்தகம் வாங்குவதற்காக இப்போது அமெரிக்காவில் இருக்கும் சென்னைக்கார நண்பன் ஆனந்தோடு சென்னை வந்து, அவனோடு 'க்ரியா'வுக்குப் போனேன். அங்கே சி. மணியின் ஒளிச்சேர்க்கை, வரும்போகும், நகுலனின் கோட் ஸ்டேண்ட் கவிதைகள், பசுவய்யாவின் நடுநிசி நாய்கள், ஞானக்கூத்தனின் கடற்கரையில் சில மரங்கள் போன்ற புத்தகங்களை வாங்கினேன்.


சுஜாதா, ஜெயகாந்தன் என்றிருந்த எனது வாசிப்பு தமிழில் புதுமைப்பித்தன், மௌனி, கு. ப. ரா, லா.ச. ரா., தி. ஜானகிராமன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், நீல பத்மநாபன், வண்ணநிலவன், வண்ணதாசன் என்று விரிந்தது. சுஜாதா தனது ஏதோ ஒரு கதையில் ஒரு கதாபாத்திரத்தை நீட்ஷேயின் வாசகனாகக் காட்டினார். நான் நீட்ஷேயின் தஸ் ஸ்பேக் ஜரதுஷ்ட்ராவையும் ஆண்ட்டி கிரைஸ்டையும் வாங்கிப் படித்தேன். அப்போது நீட்ஷே எனக்கு எவ்வளவு புரிந்தது என்பது தெரியவில்லை. ஆனால், புரிந்த கொஞ்சத்திலேயே எனது மன அமைப்பு தகர்ந்து விழுந்திருந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் ஜரதுஷ்ட்ராவை மொழிபெயர்த்தேன்.


சேலம் கிஞிவிளி குவார்டர்சில் சந்தித்ததற்குப் பிறகு சுஜாதாவைச் சில தடவைகள் சந்தித்திருக்கிறேன். இரண்டு வேலைகளுக்கு இடையில் இருந்தபோது ஒரு முறை ஸ்ரீதரின் அம்மா, 'வாடா சுஜாதாகிட்ட சொல்லி ஏதாவது டைரக்டர்கிட்ட சேர்த்துவிடச் சொல்றேன்' என்று என்னைத் தன்னோடு அழைத்துப் போனார். சுஜாதாவிடம் சொன்னார். என்ன செய்துகொண்டிருக்கிறாய் என்று கேட்டார் சுஜாதா. விற்பனைத் துறையில் இருப்பதைச் சொன்னேன். சுஜாதா என்னிடம், 'ஆணுறை விற்கப் போ, எதை வேண்டுமானாலும் விற்பனை செய், பரவாயில்லை, அது உனது தொழில், சினிமா உனக்கு வேண்டாம், நாசமாப் போயிடுவே, இது வேற உலகம், ஒருத்தன் டாக்டருக்குப் படிச்சிட்டு ஒரு டைரக்டர்கிட்ட கூஜா தூக்கிண்டு இருக்கான், எடுபிடி வேலை செய்யறான். தொழில்னு எதையாவது வித்துண்டு இரு, நிறையப் படி, உனக்குப் பிடிச்சதை எழுது. சொரணை கெட்டுப் போயிடுண்டா, சினிமா உனக்கு வேண்டாம்' என்றார். அவரது குரலில் ஒலித்த கண்டனமும் கண்டிப்பும் இன்னும் ஞாபகத்தில் இருக்கின்றன. அவர் ஆணுறை விற்கப் போ என்று சொன்னது மிகவும் வருத்தத்தைத் தந்தது. பின்னர் தனியார் தொலைக்காட்சியில் விளம்பரங்கள் பெற்றுப் பொருளீட்டித் தரும் விற்பனைப் பிரதிநிதியாகப் பணிபுரிகையில் திரைப்படத் துறையை அருகில் இருந்து பார்க்கக் கிடைத்தபோது, சுஜாதா என்னைக் காப்பாற்றியது தெரிந்தது.


டாக்டர் மறைந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. என் நாயகர்கள் பட்டியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. இருந்தாலும் நேர்படப் பேசிய, நகரப் பேருந்துகளில் பயணித்த, பணத்தின் பின்னால் போகாத, அதிகம் பேசாத டாக்டர், பட்டியலில் முன்னணி நாயகராக இன்றைக்கும் இருக்கிறார்.


சுஜாதா நல்ல சிறுகதைகள் என்று தோன்றக்கூடிய சில சிறுகதைகளை எழுதியிருக்கிறார். நகரம், பூனை போன்ற சிறுகதைகளின் பெயர்களும் நைலான் கயிறு தொடர்கதைக்கு முன்னோடியாக அமைந்த அவரது ஒரு சிறுகதையும் நினைவுக்கு வருகின்றன. மங்கையர் மலரில் தொடர்கதையாக அவர் எழுதிய எப்போதும் பெண் நினைவுக்குவருகிறது. தமிழில் சரித்திர நாவல் என்னும் பெயரில் கோணி கோணியாக நமக்குக் கிடைப்பவற்றிலிருந்து அவருடைய ரத்தம் ஒரே நிறம் வித்தியாசமானது.


பெண்களைப் பற்றியும் பெண்களது மார்பகங்களைப் பற்றியுமான தனது முதிரா இளைஞர் மனத்து வெளிப்பாடுகளை, 'ரெண்டு கை பத்தாது போ', 'நாலுபேர் உட்கார்ந்து சீட்டாடலாம் பாஸ், அவ்ளோ பெருசு', என்றெல்லாம் வசந்த் என்ற கதாபாத்திரம் பேசுவதாக எழுதியவையும் பாய்ஸ் திரைப்படத்தில் அவர் எழுதிய சில வசனங்களும் அவருக்குப் பெருமை சேர்ப்பவை அல்ல. பொழுதுபோக்கு எழுத்தில் அவரது மொழிநடை சுவாரஸ்யமானது. அவரது ஊடகப் பங்களிப்பு பற்றி ஊடகக்காரர்களும் திரைப்படங்களில் அவரது பங்களிப்பு என்ன என்பதைத் திரைப்படக்காரர்களும் எழுதலாம். தீவிரமாக ஆழ்ந்து செல்ல வேண்டிய விஷயங்களைக்கூடச் சுலபமாக, சாதாரணமாக ஆக்கிவிடுவதை சுஜாதா பாணி என்று சொல்ல வேண்டும். அவர் மறந்துகூடத் தனது ஆழம் தெரிவது போன்ற எழுத்தை எழுதியதில்லை. அவருடையது அவ்வளவு கவனமான எழுத்து. தனது சிறந்த கதையை சுஜாதா கடைசிவரை எழுதவேயில்லை என்பதை, அவர் படித்த புத்தகங்களைப் பற்றியும் அவற்றின் தீவிரத் தன்மை பற்றியும் அறிந்த எவரும் சொல்லிவிடலாம்.


சுஜாதா நல்ல புத்தகங்களைத் தேடிப் படித்தவர், தீவிரமான வாசிப்புப் பழக்கம் கொண்டவர், அநேகமாக உலகின் சிறந்த புத்தகங்களைப் படித்திருக்கக்கூடியவர். சுஜாதாவின் எழுத்துக்களைவிட சுஜாதா சுவாரஸ்யமானவர். தனது எழுத்தைப் போலன்றி அவர் தீவிரமானவர். தனது நட்சத்திர அந்தஸ்துக்கும் புகழுக்கும் சுஜாதா தனது சிறந்த கதையைத்தான் விலையாகக் கொடுத்திருக்க வேண்டும்.


( நன்றி: காலச்சுவடு, 100வது சிறப்பிதழ் )

Comments

  1. குவளை கண்ணன் நீங்கள் சொல்வது மிக சரி சுஜாதா சார் மிகப்பெரிய எழுத்தாளர் இன்று வரை நான் அவர் விசிறி ஆனால் நீங்கள் சொல்வதை போல் அவர் ஒர் முதிரா இளைஞர் தான் சமயத்தில் இவர் ஏன் பெண்ணின் தனி அங்கத்திற்க்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் என தோன்றும் (ஆனால் அதனை இரண்டு முறையாவது நான் படிப்பேன்) ஆனாலும் அவரை பற்றிய தங்கள் கருத்துடன் நான் ஒத்துப்போகிறேன்

    ReplyDelete

Post a Comment