1979, 80இல் ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ படிக்கும்போது என் வகுப்புத் தோழனான ஸ்ரீதர் வீட்டுக்குப் போக ஆரம்பித்தேன். அந்த வீடு எனக்குப் பெரிய ஆச்சரியத்தை வைத்திருந்தது. வீட்டின் பல இடங்களில் சுவரை மறைத்துக்கொண்டு புத்தகங்கள் நிரம்பிய கண்ணாடி வைத்த மர அலமாரிகள் நின்றன. மேசை நாற்காலிகள்மீது பக்க அடையாளம் வைக்கப்பட்ட புத்தகங்கள் கிடந்தன. பாடப் புத்தகங்களைத் தவிர வேறெந்தப் புத்தகமும் இல்லாத வீட்டில் வளர்ந்த என்னைப் புத்தகங்கள் நிரம்பிய அந்த வீடு கவர்ந்தது. ப்ளஸ் டூ முடித்துவிட்டு ஸ்ரீதரும் நானும் ஒரே கல்லூரியில் இளங்கலை வணிகவியல் சேர்ந்தோம். ஸ்ரீதரின் அப்பா டாக்டர் எஸ். கிருஷ்ணமாச்சாரி M.D., DMRD, சேலம் அரசு மருத்துவமனையில் ரேடியாலாஜிஸ்டாக இருந்தார். அந்த வீட்டோடு நெருக்கம் அதிகரித்தது. அந்த வீட்டில் இருக்கும் புத்தகங்களை எடுத்துப் பார்க்க ஆரம்பித்திருந்தேன். புத்தகங்களின் முதல் பக்கத்தில் எஸ். கிருஷ்ணமாச்சாரி என்ற பெயரும் ஒரு தேதியும் எழுதியிருக்கும். சில புத்தகங்களில் சீனிவாசராகவன் என்ற பெயர் எழுதப்பட்டிருக்கும். புத்தகங்கள் படிக்க வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டு உள்ளுக்குள் அவசியம்போல் ஆகியிருந்தது. ...