Skip to main content

எழுபத்தொன்று - சுஜாதா

[%image(20060504-sujatha_hindu_pic.jpg|351|263|Sujatha)%]

அதிகாலையிலிருந்து போன்கால்கள், பொக்கேக்கள், பரிசுகள், ஏதோ நேற்றுப் பிறந்தவன்போல என்னை உணரவைக்கும்  இந்தப் புதிய சங்கதிகளை என்னை விட என் எழுத்துக்கு நண்பர்கள் தரும் மரியாதையாக எண்ணி அதில் மமதை கொள்ளாமல் இருக்க முயற்சிக்கிறேன். பேரெழில் குமரன் ஒரு மிகப் பெரிய வாழ்த்து அட்டையில் என் போட்டோக்களை அமைத்து  லாமினேட் பண்ணி அனுப்பியிருந்தார். குறைந்தபட்சம் அதைத் தயாரிக்க இரண்டு நாளாகியிருக்கும். அவர் என் பரம ரசிகர். மகனுக்கு வசந்த் என்று பெயர் வைத்திருப்பதாகச் சொன்னார்.


எழுபத்தோரு வயதைக் கடந்த இந்த தினத்தில் பி.ஜி.உட்ஹவுசின் over Seventy என்கிற புத்தகம் நினைவுக்கு வருகிறது. அவர் எழுபது வயதைக் கடந்ததும் இந்தப் புத்தகத்தை எழுதினார். தன்னைச் சுற்றிலும் நிகழ்ந்த மாற்றங்களை அவருடைய தனிப்பட்ட நகைச்சுவை உணர்வுடன் எழுதினார். 'என்னப்பா! உனக்கு எழுபது வயதாகிறதாமே! பார்த்தால் 105 வயசான மாதிரி தெரிகிறாய். ஏன் இதைப் பற்றி எழுதி இன்னும் காசு பண்ணவில்லை?' என்று துவங்கி சில அருமையான கட்டுரைகள் எழுதியுள்ளார்.



''அமெரிக்காவில் இப்போதெல்லாம் மக்களுக்கு மரியாதை உணர்வு அதிகமாகிவிட்டது. இப்படித்தான் அன்று ந்யுயார்க்கில் சாலையில் சென்று கொண்டிருந்த ஒருவனை தன் விரோதி என்று எண்ணிக்கொண்டு ஒருவன் முதுகில் கத்தியால் குத்திவிட்டான். தவறை உணர்ந்ததும் 'ஸாரி' சொன்னான். இப்போதெல்லாம் மரியாதை அதிகமாகிவிட்டது''.


'கின்னஸ் ரிக்கார்டு'க்காக தொடர்ந்து நூறு முட்டை சாப்பிட்டவனை பேட்டி கண்டு  எழுதுகிறார்.


''எப்படி இப்படியொரு சாதனை படைக்க வேண்டும் என்கிற உந்து சக்தி உனக்குக் கிடைத்தது?''


'எல்லாவற்றிக்கும் என் அம்மாதான் காரணம். அவளுக்காகத்தான் இதை செய்தேன். மகனே! உலகத்தில் எதாவது சாதிக்க வேண்டும் என்றாள்''


''எல்லாம் சரி. எப்படி நூறு முட்டை சாப்பிட முடிந்தது? என்ன என்ன பயிற்சிகள் செய்தாய்?''


''அது ஒன்றுமில்லை. முதலில் ஒரு முட்டை சாப்பிட்டேன். அதை முழுங்கியதும் இரண்டாம் முட்டையை சாப்பிட்டேன். அதன்பின் முட்டை நம்பர் மூணு.. இப்படி நாற்பத்தைந்தாவது முட்டையில் நிதானித்துக்கொண்டு நாற்¢பத்தாறாவதுக்குச் சென்றேன்.''


''உன்னால் நாட்டுக்கே பெருமையப்பா'' என்று கட்டுரையை முடிப்பார்.


உட்ஹவுஸ் போல் எனக்கு எழுத வராது. எழுபது வயதைக் கடந்ததைப் பற்றி நான் எழுத வேண்டுமென்றால் கவனிக்கும் விஷயங்கள் இவை. மெரினாவில் பலர் என்னை 'உடம்பு பரவாயில்லையா?' என்று விசாரிக்கிறார்கள். 'அதான் குண்டுக் கல் போல முன்னாலேயே நிற்கிறேனே' என்று பதில் சொல்வதற்கு பதிலாக மையமாக தலையாட்டுவேன். பலர், 'இப்ப நீங்க எழுதற 'கண்டதும் கேட்டதும் கல்கில விடாம படிக்கிறேன்' என்பார்கள். சிலர், 'இப்ப எதுல எழுதறிங்க?' என்கிறார்கள். சிலர் மிக அருகே வந்து தொட்டுப்பார்த்து , 'சார்! உங்களை எங்கயோ பாத்த மாதிரி இருக்கே. சட்டுனு நினைவு வரலை. நீங்க யாரு?' என்கிறார்கள். ஒருவர் என்னை கோபத்துடன் அணுகி, 'ஏன் சார், இவ்வளவு வயசான மாதிரி தெரியறீங்க?' என்றார்.


''வயசு எழுபத்து ஒண்ணு ஆய்டுத்து சார் எனக்கு.''


''இருந்தாலும் இன்னும் நீங்க சின்னவர்னு ஏன் நினைச்சேன்?''


எனக்கு வயசாவதனால் கோபம் கொள்ளும், கோபம் கொண்ட அனைவருக்கும் நன்றி.


- சுஜாதா


பிகு: நேற்று சுஜாதாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன போது இந்த கட்டுரையை எழுதியிருக்கேன் என்றார். "சார், எனக்கு அனுப்பு வைத்தால் என் வலைப்பதிவில் போட்டு பேர் வாங்கிக்கொள்வேன்" என்றேன். சரி என்று அனுப்பிவைத்தார் அவருக்கு என் நன்றி.


போன வருடத்திய கட்டுரை:


ஹாப்பி பர்த்டே சுஜாதா !
ஹாப்பி பர்த்டே சுஜாதா ! - Follow-up

Comments