Skip to main content

ஹாப்பி பர்த்டே சுஜாதா ! - Follow-up

Image hosted by Photobucket.comசென்ற வாரம் விகடனில் நான் எழுதியக் கட்டுரையை மிகப் பலர் போனிலும், நேரிலும், மென்மெயிலிலும், மின்மெயிலிலும் பாராட்டினார்கள். சிலர் கட்டுரை சோகமாக இருந்தது என்றார்கள். சிலர் தமாஷாக இருந்தது என்றார்கள்.


மதன், 'இந்தமாதிரி எனக்கு எப்ப சார் எழுத வரும்?' என்றார். 'எழுபது வயசானதும்' என்றேன். ஜெயமோகன் அது, நான் எழுதிய சிறந்த கட்டுரைகளில் ஒன்று என்றார். அவருடைய மனைவி, அதில் சோகமும், வருத்தமும் இழையோடுவதாகச் சொன்னார்.


தேசிகன் அதைக் காலையில் படித்துவிட்டு, மோட்டார் சைக்கிளில் சுற்றினேன். தூக்கம் போய்விட்டது என்றார். எனக்கு எழுபது வயது நிறைந்ததைப் பற்றி எழுதிய கட்டுரை அது. தேசிகனின் blogல் உள்ளது.


எழுபது - பல பாசாங்குகளுக்குத் தேவையும், அர்த்தமுமில்லாமல் போகும் வயசு. நமது கன்விக்ஷன்ஸ் எல்லாம் மெல்ல மெல்லக் கழன்று கொள்ளும். மற்றவர் பார்வையிலும் தீர்க்கம் உள்ளது என்பதை உணரும் வயசு. நம்முடைய அத்தியாவசியப் பட்டியல் அடித்துத் திருத்தப்படும் வயசு. இதையெல்லாம் உண்மையாக எழுதினபோது அதே மாதிரி உணர்ந்தவர்கள், ஆனால் சொல்ல தயக்கமுள்ளவர்கள் அந்தக் கட்டுரையுடன் சுலபமாகத் தங்களை அடையாளம் கண்டு கொண்டனர். இதுதான் அதன் பாதிப்பின் உண்மை.


அமெரிக்காவிலிருந்து மகன், அவனுடைய நண்பன் படித்ததாகச் சொல்ல, 'அப்படி என்னதான் எழுதியிருக்கிறாய்?' என்று கேட்டான். அண்ணா நகரிலிருந்து ஓர் அன்பர், தனக்கு முப்பது வயது; தன் வருங்காலத்தின் நாற்பது ஆண்டுகளை, 'இதோ உங்களுக்குக் கொடுத்து விடுகிறேன். எடுத்துக் கொள்ளுங்கள்!' என்று யயாதியின் மகன்போல உணர்ச்சி வசப்பட்டார். இது சாத்தியமில்லை என்கிற பத்திரத்தில் சொல்கிறார் என்பது தெரிந்தாலும், அந்த எண்ணத்திற்கு மரியாதையாக, 'ரொம்ப தாங்ஸ் சார்! எனக்களிக்கப்பட்ட வாழ்நாளே போதும்' என்றேன்.


தமிழில் முக்கியமான க்ளிஷே வாக்கியங்களில் ஒன்றான, 'வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்' - அன்று சுமார் முப்பது தடவை டெலிபோனில் எனக்குக் கேட்டது. பேராசிரியர் ஞானசம்பந்தன் பொருத்தமான ஒரு திருக்குறள் சொன்னார். விகடன் ஆசிரியர் பாலன், 'நான் உங்களைவிட சின்னவன் (டிசம்பர் 28, 1935). கவலைப்படாதீர்கள் ரெண்டு பேரும் ரொம்ப நாள் இருப்போம்' என்றார்.


எஸ்.வி.சேகர், 'தமிழக பிராமணர்கள் வரலாறு' இரண்டு பாகம். மொத்தம் ஆயிரம் பக்கம் புத்தகத்தை அட்லாஸ் சைஸில் வாழ்த்து அட்டையுடன் கொடுத்தார். டாக்டர் ஸ்ரீதர், தன்வந்திரி படமும், வைரமுத்து கவிதைத் தொகுப்பும் கொடுத்தார்.


டைரக்டர் ஷங்கர், அந்நியன் ரெமோபோல அழகான ரோஜாக்களின் பொக்கே கொடுத்தார். இவையனைத்தையும் மெய்ப்படுத்தியது எது என்று யோசித்துப் பார்க்கிறேன்.


ரங்கராஜன் என்கிற மனுஷனா? சுஜாதா என்கிற எழுத்தாளனா?


தெரியவில்லை.


நன்றி அம்பலம்.


* - * - * - *


இந்த வாரம் ஆனந்த விகடன் கற்றதும் பெற்றதுமில்...


'பால்குடத்தை நோக்கிப் படையெடுக்கும் எறும்புகளாய்
தோல் குடத்தைத் தொத்தவந்த தீவிர வியாதியெலாம்
மால் படுத்த அரங்கன் மணிவண்ணன் பேர்சொல்ல
வால் சுருட்டிக் கொள்ளுமாமே பெருமாளே சரிதானே'


இந்த சந்தக் கவிதையை எழுதியவர் யார்? விடை கடைசியில்


Image hosted by Photobucket.comவசந்த் வந்திருந்தான். "தல..! சென்ற இதழ்ல க.பெ. கொஞ்சம் சோகமாக இருந்தது. அதனால், இந்த கார்ட்டூனை முதலில் பாரும். பிறகு, இரண்டு ஜோக்குகளைச் சொல்லாவிட்டால், எனக்கு மண்டை வெடித்துவிடும்" என்றான்.


"ஏ ஜோக்னா வேண்டாம், வசந்த்! எனக்கு வயசாகிவிட்டது" என்றேன்.


"இது ஏ இல்லை, பி. உங்களுக்கு மறுபிறவியில் நம்பிக்கை இல்லை என்கிறீர்களே, இதைக் கேளுங்கள். ராமுவும் சோமுவும் இணைபிரியா நண்பர்கள். இரண்டு பேருக்கும் ஒரே வயசு. ஒரே வருஷம் ஒரே ஊரில் கல்யாணம். ஒரே ஆபீஸில் உத்தியோகம். ஆனால், ராமு ஏகபத்தினி விரதன். சோமு கொஞ்சம் என்னை மாதிரி அலைந்தவன். ஒரு நாள் ராமு, ‘நம்ம ரெண்டு பேர்ல யார் முதல்ல செத்தாலும், எப்படியாவது முயற்சி பண்ணி தொடர்பு வெச்சுக்கிட்டு, நம்ம அனுபவங்களைப் பங்கிட்டுக் கொள்ளணும்டா!' என்றான். ‘சரிடா’ என்றான் சோமு.


Image hosted by Photobucket.comஅடுத்த வருஷம் ஹார்ட் அட்டாக் வந்து சோமு செத்துப் போய்விட்டான். ராமு ரொம்ப அழுதான். எப்படியாவது சோமு தன்னை கான்ட்டாக்ட் பண்ணுவான் என்று நம்பினான். அதற்கேற்றாற்போல, செத்துப்போன பத்தாவது நாள் ராமுவுக்கு போன் வந்தது... "ராமு,
[படம் - வசந்த் காண்பித்த சைலண்ட் ஜோக்]


நான்தாண்டா சோமு பேசறேன்!"


"சோமுவா? ஆச்சர்யம்டா! இத்தனை சீக்கிரம் தொடர்பு கொள்வேனு எதிர்பார்க்கலை. எப்படிடா இருக்கே?"


"சூப்பர்! இங்கே எல்லா சௌகரியங் களும் இருக்கு. வேளாவேளைக்கு நிறையச் சாப்பாடு, நிறையச் சந்தோஷம். டிவைன்!"


"வேலை எதுவும் கிடையாதா?"


"ஒரே ஒரு சுலபமான, எனக்குப் பழக்கமான வேலைதான் கொடுத்திருக்காங்க. காலைல எழுந்து சாப்பிட்ட உடனே ஒரு தடவை, அப்புறம், பத்து மணிக்கு லைட்டா தீனி. அதுக்கப்புறம் ஒரு முறை. மத்தியானம் கொஞ்சம் ஹெவியாகச் சாப்பிட்டுட்டு ரெண்டு முறை மறுபடி அதே சமாசாரம்..!"


"அட, பரவாயில்லையே! சொர்க்கத்திலேயும் ரொம்ப ஜாலியா என்ஜாய் பண்றேனு சொல்லு!"


"சொர்க்கமா? காங்கேயம்டா! இங்கே நான் ஒரு காளைமாடா பொறந்திருக்கேன்!"


வசந்த், நான் சிரிக்க யோசிப்பதைப் பார்த்து, "இரண்டாவது ஜோக் கேளுங்க. மரணத்தைப் பத்தி எழுதியிருந்தீங்களே!"


"சொல்லித் தொலை!"


"ஒருவனுக்கு என்னவோ காரணத்தால் மிக அரிதான வியாதி வந்து, டாக்டர் அவனிடம், 'ஸாரி
மிஸ்டர் கோதண்டம்! உங்களுக்கு இன்னும் பன்னிரண்டு மணி நேரம்தான் வாழ்க்கை பாக்கியிருக்கிறது!' என்று அறிவித்துவிட்டார். அவன் வீட்டுக்கு வந்து தன் மனைவி பிரமீளாவிடம் இதைச் சொல்லி அழுதான். அவளும் அழுதாள்.


அப்புறம் யோசித்தாள்... ‘இருக்கிற பன்னிரண்டு மணியை அழுது தீர்க்க வேண்டாம். இன்பமாகக் கழிப்போம்!' என்று முதலில் ஒரு கோயிலுக்குப் போய், அவசரமாகச் சாமி கும்பிட்டு விட்டு, நல்ல ஒட்டலுக்குப் போய் சுவையான உணவு உண்டுவிட்டு, ஒரு சினிமா பார்த்துவிட்டு, வீட்டில் வந்து படுத்தபோது மணி பதினொன்று.


மனைவி சொன்னாள்... 'மறக்க முடியாதபடி நாம் காதலிப்போம், வா!' என்று அவன் முகத்தை ஏந்தி முத்தம் கொடுத்துவிட்டு, மார்போடு தழுவிக் கொண்டாள். அதன்பின்...’’


‘‘டீடெய்ல்ஸ் வேண்டாம்! எனக்குப் புரியும்!’’


‘‘சற்று நேரத்தில் கணவன், 'இம்மாதிரி சந்தோஷம் அனுபவித்ததே இல்லை. எத்தனை இன்பம் தந்தாய் பெண்ணே!’ என்றான். 'போதுமா?' என்றாள்.


'இன்னொரு முறை' என்றான்.


இன்னொரு முறையும் இன்பத்தின் எல்லையைத் தொட்டனர். சிறிது நேரம் கழித்து, கணவன் மனைவியை எழுப்பினான். 'இன்னும் ஒரே ஒரு தடவை கண்ணு!’ என்றான். 'உங்களுக்கென்ன... காலைல எந்திரிக்க வேண்டியதில்லை. நான் மட்டும்தானே எந்திரிக் கணும். போதுங்க!’ என்றாள்.’’


நான், "ஆச்சர்யமே இல்லை... உன்னை எவளும் கல்யாணம் செய்துக்கமாட்டா!" என்று அவன்


மேல் Spiritual Writing, 1998 தொகுப்பை எறிவதற்குள், புறப்பட்டுச் சென்றான்.


விடை: அது, கிரேஸி மோகன் எழுதி எனக்கு அனுப்பிய ஆறுதல் கவிதை.


நன்றி ஆனந்த விகடன்



Old Comments from my previous Blog


எழுபது - பல பாசாங்குகளுக்குத் தேவையும், அர்த்தமுமில்லாமல் போகும் வயசு. நமது கன்விக்ஷன்ஸ் எல்லாம் மெல்ல மெல்லக் கழன்று கொள்ளும். மற்றவர் பார்வையிலும் தீர்க்கம் உள்ளது என்பதை உணரும் வயசு. நம்முடைய அத்தியாவசியப் பட்டியல் அடித்துத் திருத்தப்படும் வயசு. இதையெல்லாம் உண்மையாக எழுதினபோது அதே மாதிரி உணர்ந்தவர்கள், ஆனால் சொல்ல தயக்கமுள்ளவர்கள் அந்தக் கட்டுரையுடன் சுலபமாகத் தங்களை அடையாளம் கண்டு கொண்டனர். இதுதான் அதன் பாதிப்பின் உண்மை.


சத்தியமான உண்மை...


பதிவுக்கு நன்றி தேசிகன்.


By அன்பு, at Tue May 10, 02:48:45 PM IST  


thanks desikan... will be great if you translate both to english.


By Ramnath, at Tue May 10, 05:56:30 PM IST  


why certain comments are appearing as lines? what should be done to read?


By Anonymous, at Tue May 10, 08:31:37 PM IST  


dear anonymous,


the comments are in Unicode UTF-8 encoding. try changing the encoding to UTF-8 and it should work. if not send a mail to me and i will help you.
- desikan


By Desikan, at Tue May 10, 10:10:42 PM IST  


Both the jokes are superb. :))


By Haranprasanna, at Tue May 10, 10:17:51 PM IST  


Dear Desikan,
This is wonderful writing. I am amazed at your versatility. I am still waiting for you to write more scientific blogs. I know that people have been very critical but I enjoy reading such stuff more than anything. I just updated my blog today. I find extreme pleasure in writing blogs and visiting blogs like yours. Thank you for your comments in my blog.


By ROBBIE, at Wed May 11, 08:06:37 AM IST  


விகடனில் நானும் படித்தேன்...


அம்பலம் - இணைய தளத்தில் சுஜாதா ஒரு தொடர் எழுத்தாளாரா? மிக்க நன்றாக இருந்தது...


By Ram.C, at Wed May 11, 10:50:13 AM IST  


i've been a vivid reader of sujatha too since my skool days but somehow i think age is catching up with him - the 'ramya krishnan' episode says that he knows it too. don't know why but he seems to rewrite things that he'd written bfo' - refer to the last paragraph in last week's 'katradhum petradhum' for example. in an earlier essay where someone had criticized saying sujatha means 'light reading' he'd given the same set of anecdotes there. remember reading it in desikan's hompage.


By arvi, at Wed May 11, 01:00:56 PM IST  


//in an earlier essay where someone had criticized saying sujatha means 'light reading' he'd given the same set of anecdotes there. remember reading it in desikan's hompage. //


here is the article
http://www.employees.org/~desikan/s_e_ninai015.htm


By icarus, at Wed May 11, 01:09:54 PM IST  


>>அமெரிக்காவிலிருந்து மகன், அவனுடைய நண்பன் படித்ததாகச் சொல்ல, 'அப்படி என்னதான் எழுதியிருக்கிறாய்?' என்று கேட்டான்.


இந்த ஒரு வாக்கியமே ஓராயிரம் கதை சொல்கிறது!!


By சுபமூகா, at Wed May 11, 04:38:30 PM IST  


I have a book which is a compilation of Sujatha's kelvi badhil. to one question on how many stories he has written, he has said that en rasigarana Desigani kettal than theriyumunu. Are you that Desigan ?


Thuglak


By Anonymous, at Thu May 12, 08:29:08 PM IST  


Thuglak,


Yes I am the same Desikan :-) Sujatha has referred.


By Desikan, at Fri May 13, 09:49:51 AM IST  


 

Comments