Skip to main content

வின்னி


நான் எட்டாவது படித்துக் கொண்டிருந்தேன். ஸ்கூலில் எங்களுக்கு 'P.T' என்று ஒரு வகுப்பு இருக்கும். வெயிலில் நிற்க வைப்பார்கள். எதாவது எக்ஸர்சைஸ் செய்ய சொல்வார்கள். எங்களுக்கு அது அவ்வளவாக பிடிக்காது. லன்ச் பிரேக்கில் விளையாடுவது தான் பிடிக்கும். சீக்கிரம் சாப்பிட்டால் ஒரு அரை மணி நேரம் கிடைக்கும். சீசனுக்கு தகுந்தார் போல் விளையாடுவோம். டிவியில் கிரிக்கெட் காமித்தால், நாங்களும் கிரிக்கெட். புட்பால் என்றால், புட்பால். மழைக்காலம் வந்துவிட்டால் மட்டும் பம்பரம் ஆட ஆரம்பித்து விடுவோம்.


கூட்டம் கூட்டமாக எங்குப் பார்த்தாலும் பம்பரம் விளையாடிக் கொண்டிருப்பார்கள். நான் சாப்பிட்டுவிட்டு பம்பரம் விளையாட்டைப் பார்க்க போய்விடுவேன்.


இன்றும் எப்போதும் போல் லன்ச் முடித்துவிட்டு வின்னியின் விளையாட்டைப் பார்க்க போனேன்.


வட்டதிற்குள் சுரேஷின் பம்பரம் இருந்தது. வின்னி குறிபார்த்து அடிக்க தயாரானான். பம்பர ஆணிக்கு முத்தம் கொடுத்தான். அடித்தான். சுரேஷின் பம்பரம் ஒரு மெழுக்கு வாங்கி ஒரு சில் பறந்தது.


வட்டத்துக்குள் இருக்கும் பம்பரத்தைச் சொல்லி வைத்து மொழுக்கு குத்துவதில் வின்னி கில்லாடி. சிலசமயம் 'மொழுக்கு' கொஞ்சம் பலமாக விழுந்து பம்பரத்திலிருந்து சில்லு தெறிக்கும். இது ஒரு விதமான அவமானச் சின்னம். வின்னியின் பம்பரத்தின் ஆணி பல பம்பரங்களை மொழுக்கு போட்டு, சொறி நாய் மாதிரி ஆக்கியிருக்கிறது.


வின்னி அப்போது என்னைப் பார்த்தான். "என்ன தயிர்வட" என்று என்னருகில் வந்து என் தலையில் ஒரு தட்டு தட்டினான்.


மேலே சொன்ன வின்னியின் முழுப் பேர் வின்சென்ட். நாங்க அவனை 'வின்னி' என்றுதான் கூப்பிடுவோம். ஸ்கூலில் எல்லோருக்கும் இப்படி ஒரு நிக்நேம் இருக்கும். ஸ்கூலில் என் பேர் 'தயிர்வடை'. இந்தப் பேரை வின்னிதான் வைத்தான். வின்னிக்கு வேறு ஒரு பேரும் இருக்கிறது. அதை சொல்லிக் கூப்பிட்டால் அவனுக்குக் கோபம் வரும். இப்போது கூட அதைச் சொல்ல எனக்குப் பயமாக இருக்கிறது. எங்கள் கிளாசில் வின்னிதான் ரொம்ப சீனியர். அவனுக்கு மீசை இருந்தது. எங்களுடன் எட்டாவதை இரண்டாம் முறையாகவோ, மூன்றாம்
முறையாகவோ படித்துக் கொண்டிருந்தான். பிளஸ்-டூ மாணவர்கள் அவனுக்கு நண்பர்கள். ஆங்கிலம் தவிர மற்ற பாடங்களில் பத்துக்குள் ஒரு நம்பரை மார்க்காக வாங்குவான். நன்றாகப் பாடுவான். அவனுக்குப் பிடித்த பாடல் "ஆத்தாடி பாவாட காத்தாட ..". இதை ஒரு முறை பாரதியார் பாட்டுப் போட்டியில் வின்னி பாட ஏக கலாட்டா. அதை பிறகு சொல்கிறேன். வின்னி நன்றாகப் பம்பரம் விளையாடுவான். அவனின் பம்பர விளையாட்டைப்
பார்ப்பதற்கென்றே ஒரு தனி கூட்டம் இருக்கும்.


"என்ன தயிர் வட எங்க இந்த பக்கம்"
"சும்மா வேடிக்கை பார்க்க வந்தேன்"
"எப்போதும் வேடிக்கை மட்டும் பாக்குற வந்து விளையாடறது"
"என் கிட்ட பம்பரம் இல்லை"
"அதெல்லாம் தெரியாது, நாளைக்கு பம்பரத்தோட வர, இல்ல உனக்கு அந்த இடத்தில...ஒரு மொழுக்குதான்"


வின்னிக்கு என்னைக் கண்டால் பிடிக்காது. கிளாஸ் நடக்கும் போது "தயிர்வட" என்று சத்தமாகக் கூப்பிடுவான், எல்லோரும் சிரிப்பார்கள். என் ஜாமெண்ட்ரி பாக்ஸ், பேனா அல்லது புத்தகங்களை ஒளித்துவைப்பான். தொடையில் காம்பஸால் குத்துவான். காரணம் இல்லாமல் தலையில் தட்டுவான்.வின்னியிடம் அதிகம் பேச மாட்டேன். எது சொன்னாலும் கேட்டுக் கொள்வேன், அல்லது சிரித்து மழுப்புவேன்.


ஸ்கூல் விட்டவுடன் வின்னி என்னிடம் திரும்பவும் வந்து நினைவு படுத்தினான்.


"நாளைக்கு பம்பரதோட வர ... இல்ல ... " எனக்கு அடிவயிற்றில் என்னவோ பண்ணியது.


வீட்டுக்குச் சென்று
"அம்மா பம்பரம் வாங்க பைசா.."
"என்னாடா புது விளையாட்டு, எக்ஸாம் எப்போ?"
"எல்லாம் படிச்சுட்டேன், பம்பரம் வாங்கனும்"
"பருப்பு டப்பா கீழ சில்லரை இருக்கு எடுத்துண்டு போ"
பருப்பு டப்பாவின் கீழே மூன்னு ரூபாய் இருந்தது. கொஞ்சம் கம்மிதான்.
சைக்கிளை எடுத்துக்கொண்டு ஒத்தக்கடைக்குப் போனேன்.


ஒத்தக்கடை என்ற பேர் எதனால் வந்தது என்று எனக்குத் தெரியாது. இங்கிலிஷ் வேர்ஹவுஸ் பக்கத்தில் இருக்கிறது. என் அப்பா காலத்திலிருந்து இருக்கும் கடை. அதில் எங்களுக்கு வேண்டிய எல்லாம் கிடைக்கும். அன்ரூல்டு புத்தகம், பேனா, கலர் பேப்பர், வாட்டர் கலர், கோலி, பம்பரம், எல்லாம். கடையில் எப்போதும் ஒரு கூட்டம் இருந்துகொண்டே இருக்கும்.


"பம்பரம் இருக்கா?"
"நீட்ட கட்டையா, சட்டி கட்டையா "
"சட்டி கட்டை"
"சாட்டை ரெட்டா, பிளாக்கா"
"பிளாக்"


'நீட்ட கட்டை' என்பது பம்பரத்தில் ஒரு வகை, பெயருக்கு ஏற்றார் போல் நீட்டமாக இருக்கும். விலை அதிகம். சத்தம் போடாமல் அழகாக நிறைய நேரம் சுத்தும். 'சட்டி கட்டை' கொஞ்சம் "கட்ட குட்டையா" இருக்கும். கவனமாக ஆணி அடிக்கவேண்டும். இல்லாவிட்டால் அந்தப் பக்கம் எட்டிப்பார்கும். அவ்வளவு சின்னது. என்னிடம் இருக்கும் மூன்று ரூபாய்க்கு அதுதான் வாங்க முடியும். வாங்கினேன். பச்சை நிறத்தில் பளபள என்று இருந்தது. ஆணி அடித்தேன். கூறாகச் சீவிக்கொண்டேன். ஒரு சோடா பாட்டில் மூடியை குஞ்சலம் போல்
சாட்டையின் கடைசியில் மாட்டிக்கொண்டேன். க்ரிப்புக்கு. சாயங்காலம் முழுக்க பம்பரம் விட்டுப்
பழகிக்கொண்டேன். என் பேர் 'தயிர்வடை'யிலிருந்து 'மொழுக்கு தேசிகன்' என்று மாறுவதாக ராத்திரி கனவு கண்டேன்.


மறுநாள் ஸ்கூல் சென்றவுடன் வின்னி என்னைத் தேடிக்கொண்டு வந்தான். மறந்திருப்பான் என்று நினைத்தேன்.


"தயிர்வட பம்பரம் எங்கே"
பாக்கேட்டிலிருந்து என் பம்பரத்தை எடுத்தேன்.
"அட, சொன்னா சொன்ன மாதிரி வாங்கியாந்துட்டே"
"குடு பார்க்கலாம்"
கொடுத்தேன்.
"சட்டி கட்டை, லன்ச்சில பாத்துறலாம்"


எனக்கு அன்று பாடத்தின் மேல் நாட்டம் இல்லை. லன்ச் பிரேக்குக்குக் காத்துக்கொண்டிருந்தேன். லன்ச் பிரேக் அன்று ரொம்ப நேரம் கழித்து வந்ததாக தோன்றிற்று. லன்ச்சை சீக்கிரம் முடித்துவிட்டு பம்பர விளையாட சென்றேன்.


வின்னி என்னைப் பார்த்துச் சிரித்து "என்ன தயிர்வட ரெடியா ?"
தலையாட்டினேன்.


"ஒன், டூ, த்திரி" என்று கோரஸ்ஸாக எல்லோரும் கத்தி அபீட் எடுத்தார்கள்.


நானும் எடுத்தேன்.


பம்பரம் விளையாட்டு ரூல்ஸ் தமிழ்நாடு முழுக்க கிட்டத்தட்ட ஒன்றே. பம்பரம் விளையாட்டுக்கு எவ்வளவு பேர் வேண்டுமானலும் இருக்கலாம். விளையாட்டு ரொம்ப சிம்பிள். 1-2-3 என்று கூறியவுடன் எல்லோரும் அவரவர்கள் பம்பரத்தை விட்டு 'அபீட்' எடுக்க வேண்டும். யார் கடைசியில் எடுக்கிறார்களோ அல்லது எடுக்கத் தவறுகிறார்களோ அவர்கள் அங்குப் போடப்பட்டுள்ள வட்டத்துக்குள் அவர்களது பம்பரத்தை வைக்க வேண்டும். வின்னியை போல் சாட்டையை இரண்டு அல்லது இரண்டரை சுத்தில் சுத்தி பம்பரத்தை விட்டு 'அபீட்' எடுக்க
தெரிந்திருக்க வேண்டும். சாட்டையின் நீளத்தை கொண்டு நீங்கள் பம்பர சாம்பியனா என்று எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.


கைமுறுக்குக்குச் சுத்துவதைப் போல் பம்பரத்தின் சாட்டையைச் சுத்தி 'அபீட்' எடுத்தால் நிச்சியம் பம்பரம் வட்டத்தினுள் சென்று அடிபடும்.


குமாரின் பம்பரம் வட்டத்துக்குள் சென்றது. வின்னி என்னை பார்த்து "நல்ல அபீட் எடுகிற" என்றான்.


வின்னி குமாரின் பம்பரத்தைப் பார்த்து ஓங்கி ஒரு அடி அடித்தான். வின்னியின் பம்பரம் அதன் மேல் படாமல் வட்டத்திற்கு வெளியே வந்து சுத்தியது. குமார் பம்பரம் செய்த புண்ணியம், அவன் பம்பரம் மொழுக்கிலிருந்து தப்பியது. நான் சின்னதாக சிரித்தேன். அதை வின்னி பார்த்துவிட்டான்!


"எங்க குமார் பம்பரத்தை நீ அடி பார்க்கலாம்" என்றான்.


நான் சாட்டையைச் சுற்றி பம்பரத்தைப் பார்த்து அடித்தேன். என் பம்பரத்தின் சாட்டை நழுவி பம்பரம் 'மொட்டை' போட்டது!


பம்பரத்தை அடிக்கும் போது பம்பரம் சுத்தவேண்டும் அல்லது அட்லீஸ்ட் சீறவாவதுவேண்டும். இல்லை என்றால் அதற்குப் பெயர் மொட்டை. மொட்டை போட்ட பம்பரமும் வட்டத்துக்குள் செல்ல வேண்டும் என்பது தான் ரூல்.


"தயிர்வட பம்பரத்தை உள்ளே வை"


என் பம்பரம் வட்டத்துக்குள் சென்றதில் வின்னி உற்சாகமாக இருந்தான்.


அந்தச் சம்பவம் அப்போது நடந்தது. இதற்காகவே காத்துகொண்டிருந்தவன் போல் என் பம்பரத்தை பார்த்து ஒரு அடி அடித்தான். என் பச்சைப் பம்பரம் இரண்டாக உடைந்தது. வின்னி குதித்தான், கத்தினான், ஆடினான், எதேதோ சேஷ்டை செய்தான். உடைந்த பம்பரத்தை எல்லோரிடமும் காண்பித்தான். பிறகு அதை என் கையில் கொடுத்து "இதுக்குத்தான் பொண்டாட்டி பம்பரம் வெச்சிக்கனும்" என்றான்.


பம்பரம் விளையாட்டில் அடிவாங்குவதற்கென்றே மற்றொரு பம்பரத்தை வைத்து கொள்வார்கள். அந்தப் பம்பரத்துக்குப் பெயர் 'பொண்டாட்டி பம்பரம்'.


உடைந்த பம்பரத்தைப் பார்த்து எனக்கு அழுகை வந்தது. அதன்பின் பம்பரம் விளையாட்டே எனக்குப் பிடிக்காமல் போய்விட்டது. விளையாடுவதும் இல்லை, வேடிக்கை பார்ப்பதும் இல்லை. வின்னி என்னை பார்க்கும்போதெல்லாம் "என்ன "தயிர்வட பம்பரம் கொண்டு வந்திருக்கியா?" என்று வெறுப்பேற்றுவான்.


பம்பர சீசன் முடிந்து, 'பெ-பந்து' வந்தது. பிறகு வருடாந்திரத் தேர்வு வந்து நான் ஒன்பதாவது வகுப்புக்குச் சென்றேன். வின்னி அந்த வருடமும் பாஸாகவில்லை. அவனை ஸ்கூலைவிட்டு அனுப்பிவிட்டார்கள் என்று எல்லோரும் பேசிக்கொண்டார்கள். ஒருமுறை குமார் அவனைப் பாலக்கரையில் பார்த்ததாகச் சென்னான். பிறகு வின்னியை நாங்கள் எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாக மறந்தோம். பம்பர சீசன் போது எப்போதாவது வின்னியைப் பற்றிப் பேசிக் கொள்வோம்.


-OoO-


போன மாதம் நான் ஓட்டுப் போட திருச்சிக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்தேன். ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ் கிளம்ப இன்னும் ஐந்து நிமிடம் இருந்தது. ஜன்னல் சீட்டில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். "டீ-காப்பி, டீ-காப்பி, ஹாட் காப்பி" என்று ஒருவர் போய் கொண்டிருந்தார். எங்கோ பார்த்த மாதிரி இருந்தது. காதோரத்தில் நரை. யார் என்று தெரியவில்லை. ரயில் கிளம்பியது. ரயிலுடன் ஓடி வந்து யாருக்கோ காப்பி கொடுத்துக்கொண்டிருந்தார். சட்டென்று எனக்கு நினைவுக்கு வந்தது - அது வின்னி!.



Old Comments from my previous blog.


Post by srishiv
hahaha really a great flow of writing about the flashback desi...infact i went back to my school days with my "TOP"( Bambaram) and all the games, like ghostball( Pei panthu ;) ) romba nalla irunthathu...what to do? sometimes we used to face the persons who really haunted and taunted us in our early ages who are in a bad condition as well as the people in good condition too...what to say? all are in the pages of our heart autograph...is it not? nam manadhin autograph pakkangalil avargalukkum oru idam...avlo thaan..... nandri...inum ezhuthungal.. aaaludan eathirpaarkum, anbu, srishiv... guwahati il irunthu....
Wed, Jul 7 2004 3:26


Post by Shreya
such easy flow, i enjoyed it thouroughly. keep writing. p.s: sorry 2 b asking here..did my mail help?
Wed, Jul 7 2004 4:25


Post by Martin
Hi Desikan, Evocative piece with a fast, rippling flow. Made me nostalgic for the boyhood days. Could identify with the narrator. The O'Henry twist was sorta predetermined and could be anticipated. Expecting much more. Anbudan...
Wed, Jul 7 2004 10:26


Post by kanagasabaibooma
great any bit of literature linking to chilhood will kindle sparks. the chilhood energy is a boundryless phenamina. the loss of the top-bambaram-prepares us to face many losses in our life,with out resentments. your story line is so rich,it will give many perceptions,both positive and negative. congratulations kanagasabaibooma from abhudhabi


 


Thu, Jul 8 2004 4:26
Post by Sivakumar
Vanakkam Desikan, Ennai ungalukku teriyathu. Aanal en nanban moolam ungalai patri arinthen. Enakkum sujatha avarkalin ezutthu enraal mugavum pidikkum. Ippo, enakkum bambaram vilayadinathu ghabagam varuthu. Naanum ungaludan koodave ninnu vinni seiratha paatha mathiriye irukku. Avvalu uyir irunthathu ungal ezhuthu nadayil. Innum ezuthungal. En blog http://mithra11.blogspot.com Naan ippozhuthu thaan aarambithirukkiren.
Thu, Jul 8 2004 5:26


Post by Elilventhan
Anbulla Desikan, Sujathavukku pottiyaka neengalum ezhuthath thodangivitteerkala? Ithuvum oru Srirangathu kathai polave irukkirathu. Thamilil en karuththukalai ezhutha asai. Eppadi ezhuthuvathu Ezhil venthan
Fri, Jul 9 2004 2:26


Post by rangarajan
There is a small anachronism here.Have you seen boys playing with tops the way you have described it in the post-tv days?I havent! Then the nickname thayirvadai seems appropriate only in east or south ranga higher elementary school!The mozhukku also smacks of srirangam f the fifties and sixties. Enjoyable,evocative and inimitable! Rangarajan
Sat, Jul 10 2004 6:25


Post by usha
very nice
Sun, Jul 11 2004 11:26


Post by Eelanathan
அருமையான நினைவுத்தூறல்களை சுவாரசியமான கதையாக்கித் தந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்
Mon, Jul 12 2004 10:25
Post by J. Rajni Ramki
கோட்டோவியமே ஆயிரம் அனுபவங்களை சொல்லிவிடுகிறது. சீறிரங்கத்து ரியல் போட்டோவில் கூட இந்தளவுக்கு ரியாலிட்டி இருக்காதுங்கிறேன்!
Mon, Jul 12 2004 6:26


Post by KVR
படம், நினைவலைகள் இரண்டுமே அருமை. கொஞ்சம் அங்கே இங்கே தட்டி ஒரு சிறுகதை ஆக்குங்களேன் தேசிகன்.
Tue, Jul 13 2004 7:26


Post by MK
Excellent log!!! Thanks for sharing. "Pondaati Pambaram" - thought provoking. - MK
Fri, Jul 16 2004 12:25


Post by Raviaa
உங்கள் குருவின் சாயலிலாமல் தனித்து சாதித்திருக்கிறீர்கள். என்ன சரளமான நடை ! அசோக்கமித்திரனின் 5 வது அட்ச்சரத்தில் கிரிக்கட் ஆட்டம் வரும். அதே ஞாபகம். எளிமையான எழுத்துக்கள். ஏன் இவ்வளவு நாள் கதைகள் எழுதவில்லை என்று புரியவில்லை. தேவனை உங்களுக்கும் பிடிக்கும் என்பதற்காக புகழவில்லை...
Tue, Jul 20 2004 3:27


Post by sakaran
அருமையான சரளமான நடை... ரொம்ப ரசித்தேன்.. உங்க ஓவியம் இன்னமும் அழகு சேர்க்கிறது.
Sun, Aug 1 2004 6:57

Comments