Skip to main content

ஸ்ரீரங்கம் - 5

[%image(20050803-Melkote.jpg|600|281|Melkote)%]

ஸ்ரீராமாநுசருக்கு முதலாம் குலோத்துங்க சோழனால் (கிபி 1070-1120) பல தொந்திரவுகள் நேர்ந்தன. சைவசமயத்தில் பற்று கொண்ட அரசன், ஸ்ரீராமாநுசர் மற்றும் அவரது சீடர்களான பெரியநம்பி, கூரத்தாழ்வான் ஆகியோருக்கு பல கொடுமைகளைச் செய்தான் என்று கூறப்படுகிறது. இதனால் ஸ்ரீராமாநுசர் மைசூர் பக்கத்தில் உள்ள திருநாராயணபுரத்துக்கு (மேல்கோட்டை) தன் 52 சீடர்களுடன் சென்று அடைக்கலம் புகுந்தார். இந்தசமயத்தில் ஒய்சாளர்கள் சோழர் வசம் இருந்த மைசூரைக் கைப்பற்றியிருந்தார்கள். அதனால் ஸ்ரீராமாநுசர் மேல்கோட்டை சென்றதில் வியப்பில்லை.

 


(படத்தில் ஸ்ரீராமாநுசர் சன்னதி மேல்கோட்டை. நான் சென்ற ஆண்டு(2003) டிசம்பரில் மேல்கோட்டை சென்றபோது வரைந்த ஓவியம்).   

 

சோழ அரசர்கள் சைவ ஆதரவாளர்கள் என்றாலும் கூட ராமாநுசருக்கு நேர்ந்த அனுபவத்தை வைத்து அவர்கள்ஸ்ரீவைஷ்ணவத்திற்கு எதிரானவர்கள் என்ற முடிவுக்கு நாம் வந்துவிடக் கூடாது. ஏனென்றால் சோழக் கல்வெட்டுகள் சைவ, வைஷ்ணவ கோயில்கள் இரண்டிலும் காணப்படுகிறது அரசர்கள் சிலசமயம் தங்கள் மந்திரிமற்றும் ஆலோசகர்கள் சொல் கேட்டு வரம்பு மீறி நடந்து கொண்டார்கள் என்று நாம் கொள்ளலாம். 

 

முதலாம் குலோத்துங்கனின் கல்வெட்டுகள் பல, ஸ்ரீரங்கம் கோயிலில் காணப்படுகிறது. அதில் பல தளபதிகள், அதிகாரிகள் கொடையாளிகளாக இருந்துள்ளார்கள்.

முதாலாம் குலோத்துங்கனை, 'கிருமிக்கண்ட சோழன்' என்றும் அழைப்பர்.


முதலாம் குலோத்துங்கனின் மகன் விக்கிரம சோழன் (கிபி 1120-1133)  அரசின் வருவாயில் பெரும் பகுதியைத் தன் குலதெய்வமான சிதம்பர நடராஜர்  கோயிலுக்குச் செலவழித்தான் என்றாலும் கூட ஸ்ரீரங்கம் கோயிலுக்கும்  பல நற்பணிகளைச் செய்துள்ளான் என்று கோயிலொழுகு கூறுகிறது. அவை :

1. 5-ஆம் பிரகாரத்தின் வடகிழக்குப் பகுதியில் கிருஷ்ணர் சன்னதி மற்றும் மாட்டுத்தொழுவம் அமைத்தது.

2. தென்மேற்குப் பகுதியில் ராமர் சன்னதி.

3. வடமேற்குப் பகுதியில் நாச்சியார் சன்னதி. 

4. 4-ஆம் பிரகாரத்தில் உள்ள கருடன்.

 

5-ஆம் பிரகாரம் அகளங்கன் திருவீதி என்று அழைக்கப்படுகிறது. அகளங்கன் என்பது விக்கிரம சோழனுக்கு உள்ளபட்டங்களில் ஒன்றாகும்.  

 

விக்கிரம சோழனுக்கு அடுத்து அவன் மகனாகிய இரண்டாம் குலோத்துங்க சோழன் தன் தந்தையைப் போல் சிதம்பர நடராஜர் கோயிலுக்கு வருவாயின் பெரும் பகுதியைச் செலவு செய்தான். கல்வெட்டுகள் மற்றும் ஒட்டக்கூத்தரின் குலோத்துங்க சோழ உலா இதைப்பற்றி விரிவாகக் கூறுகிறது. சைவசமயத்தின் மேல் உள்ளஆர்வத்தினால் சிதம்பரம் கோயிலில் உள்ள விஷ்ணுவின் விக்கிரகத்தை அகற்றினான். மேல்கோட்டையிலிருந்து வந்த ராமாநுசர் இதைக் கேள்விப்பட்டு அவ்விக்கிரகத்தைத் திருப்பதியில் பிரதிஷ்டை செய்தார். எறக்குறையஇந்த நிகழ்ச்சி கிபி 1140-ஆம் ஆண்டு நடைபெற்றதாக நாம் கருதலாம். பிறகு திருப்பதியிலிருந்து காஞ்சிபுரம்வழியாக  ஸ்ரீரங்கம் வந்தடைந்தார். ராமாநுசர் காலம் 1050-1150. குருபரம்பரை 1017-1137 என்று கூறுகிறது.


இரண்டாம் குலோத்துங்கனின் ஆட்சி காலத்தில் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு நந்தவனம் அமைக்க நிலம் வழங்கப்பட்டுள்ளதாக கல்வெட்டு கூறுகிறது.


 இரண்டாம் குலோத்துங்கனுக்கு பிறகு ராஜராஜா(கிபி 1150-1173) அவனை தொடர்ந்து ராஜாதிராஜா(கிபி 1163-1178) ஆண்டார்கள் என்று இரண்டு கல்வெட்டுகளில் காணப்படுகிறது. முதலாம் கல்வெட்டு, ல்குடியைச்சேர்ந்த விருந்தன் சீமான் என்பவர் சில  பரிசு பொருட்கள், காசு, மற்றும் ஒரு விளக்கு கொடுத்ததாக கூறுகிறது.(கோயில்லொழுகில் இவர் ராமாநுசரின் சீடர் என்று குறிப்புள்ளது) இரண்டாம் கல்வெட்டு, குறட்டிபட்டினத்தைச்(கைவர நாடு) சேர்ந்த பெருமாள் என்பவர் பெரிய பெருமாளுக்கு நெற்றிச் சுட்டி ஒன்றைப் பரிசாகக்கொடுத்ததாகக்கூறுகிறது. 

Comments