Skip to main content

ஸ்ரீரங்கம் - 2

இந்தியாவில் எப்போதுமே வரலாற்று ஆராய்ச்சிகளில் குறிப்பாக கால வரன்முறைகளைப் பொருத்த வரையில் எதையும் தெளிவாக வரையறுத்துச் சரியாக கூறுதல் என்பது இயலாததாக இருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம் வரலாற்றுச் செய்திகளும் சம்பிரதாயக் கருத்துகளும் ஒன்றோடொன்று மிக நெருக்கமாகப் பிணைத்துவைக்கப் பட்டுள்ளன.


ஸ்ரீரங்கம் கோயில் தோற்றம் பற்றிய செய்திகள் புராண இதிகாச முறையில் சொல்லப்படுகின்றன. முதன்முதலில் ஏற்பட்ட இதன் கட்டிட வடிவம் சோழ மன்னர்களால் கட்டப் பட்டதாகக் கருதப்படுகின்றது. (இந்தப் பதிவின் கடைசியில் இதைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்) இதற்கு வரலாற்றுச் சான்றுகள் ஏதும் கிடைத்ததாகத் தெரியவில்லை. அதற்கு பின் வரும் காலங்களிலும் ( 10ஆம் நூற்றாண்டு வரை) இத்தகைய தெளிவற்ற நிலையே காணப்படுகின்றது. கிபி 10-ஆம் நூற்றாண்டு வரையில் இலக்கிய ஆதாரங்கள் மட்டுமே இக்கோயில் இருந்தமைக்குச் சான்றாக உள்ளது.


ஸ்ரீரங்கத்தைப் பற்றிய குறிப்பு சங்க இலக்கியமான அகநானூறிலும் (அகம்-137),சிலப்பதிகாரத்திலும், முதலாழ்வார்கள் பாடல்களிலும் உள்ளது.


[அகநானூறு கிபி 3-4ஆம் நூற்றாண்டாகக் கருதப்படுகிறது. சிலப்பதிகாரம் கிபி 2-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி எனக் கருதப்படுகிறது]


அகநானூறில் காதலனைப் பிரிந்து வாடும் காதலியின் முகத்தை காவிரி ஆற்றின் மணலுக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது. திருவரங்கத்தில் நடைபெரும் பங்குனி உத்திரத் திருவிழா பற்றிய குறிப்பு சுவாரசியம்.


அகம் 137. பாலை - உறையூர் முதுகூத்தனார்

ஆறு செல் வம்பலர் சேறு கிளைத்து உண்ட

சிறு பல் கேணிப் பிடி அடி நசைஇ,

களிறு தொடூஉக் கடக்கும் கான்யாற்று அத்தம்

சென்று சேர்பு ஒல்லார்ஆயினும், நினக்கே

வென்று எறி முரசின் விறற் போர்ச் சோழர்

இன் கடுங் கள்ளின் உறந்தை ஆங்கண்,

வருபுனல் நெரிதரும் இகுகரைப் பேரியாற்று

உருவ வெண் மணல் முருகு நாறு தண் பொழிற்

பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள்,

வீ இலை அமன்ற மரம் பயில் இறும்பில்

தீ இல் அடுப்பின் அரங்கம் போல,

பெரும் பாழ்கொண்டன்று, நுதலே; தோளும்,

தோளா முத்தின் தெண் கடற் பொருநன்

திண் தேர்ச் செழியன் பொருப்பிற் கவாஅன்

நல் எழில் நெடு வேய் புரையும்

தொல் கவின் தொலைந்தன; நோகோ யானே.
சிலப்பதிகாரத்தில் ஸ்ரீரங்கம் பற்றிய குறிப்பில் "விரிந்த அலைகளோடு கூடிய மிகப் பெரிய காவிரியாற்றின் இடைக்குறையில் திருமகள் விரும்பி உறையும் மார்பை உடையவரும், நீல நிறம் கொண்டவருமாகிய திருமால், ஆயிரம் தலைகளுடைய ஆதிசேஷன் என்னும் பாம்பணையாகிய பள்ளியின் மீது அழகுறச்சாய்ந்து கொண்டிருக்கும் தன்மை, நீல நிறமுடைய ஒரு மேகமானது பொன்மலையினைச் சூழ்ந்து படிந்திருக்கும் பான்மையில் திகழ்கின்றது" என்று கூறப்பட்டுள்ளது.மதுரைக் காண்டம், காடுகாண் காதை(11)

மாமுது மறையோன் வந்திருந் தோனை

யாது நும்மூர் ஈங்கென் வரவெனக்

கோவலன் கேட்பக் குன்றாச் சிறப்பின்

மாமறை யாளன் வருபொருள் உரைப்போன்

நீல மேகம் நெடும்பொற் குன்றத்துப்

பால்விரிந் தகலாது படிந்தது போல

ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறற்

பாயற் பள்ளிப் பலர்தொழு தேத்த

விரிதிரைக் காவிரி வியன்பெரு துருத்தித்

திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்

வீங்குநீ ரருவி வேங்கட மென்னும்

ஓங்குயர் மலையத் துச்சி மீமிசை

விரிகதிர் ஞாயிறுந் திங்களும் விளங்கி

இருமருங் கோங்கிய இடைநிலைத் தானத்து

மின்னுக்கோடி யுடுத்து விளங்குவிற் பூண்டு

நன்னிற மேகம் நின்றது போலப்

பகையணங் காழியும் பால்வெண் சங்கமும்

தகைபெறு தாமரைக் கையி னேந்தி

நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு

பொலம்பூ வாடையிற் பொலிந்து தோன்றிய

செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்


சங்ககாலத்தவர் எனக் கருதப்படும் முதல் ஆழ்வார்கள் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், மற்றும் பேயாழ்வார் ஆகியோரின் பாடல்களில் ஸ்ரீரங்கம் பற்றி குறிப்புள்ளது.


பொய்கையாழ்வார் முதலாம் திருவந்தாதியில் இப்படிக் குறிப்பிடுகிறார்:ஒன்றும் மறந்தறியேன் ஓதநீர் வண்ணனைநான்,

இன்று மறப்பனோ ஏழைகாள் - அன்று

கருவரங்கத் துட்கிடந்து கைதொழுதேன் கண்டேன்

திருவரங்க மேயான் திசை(2087)
[நான் கருவறையில் இருந்த காலத்தே அரங்கனின் இயல்பையும், குணங்களையும் அறிவேன்.

அவன் அருளால் ஞானம் பெற்ற நான் அவனை மறக்கமாட்டேன்]


பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதியில்,மனத்துள்ளான் வேங்கடத்தான் மாகடலான், மற்றும்

நினைப்பரிய நீளரங்கத் துள்ளான், - எனைப்பலரும்

தேவாதி தேவ னெனப்படுவான், முன்னொருனாள்

மாவாய் பிளந்த மகன்(2209)
[திருவரங்கத்தில் எழுந்தருளிய அரங்கநாதன் என் மனத்திலும் எழுந்தருளியுள்ளான்]


மேலும் ...திறம்பிற் றினியறிந்தேன் தென்னரங்கத் தெந்தை,

திறம்பா வருசென்றார்க் கல்லால், - திறம்பாச்

செடிநரகை நீக்கித்தான் செல்வதன்முன், வானோர்

கடிநகர வாசற் கதவு (2269)
[திருவரங்கனை சரணடைந்தவர்க்கு அவனை அடைய முடியும்; இதை நான் இப்போது அறிந்து கொண்டேன் என்று பாடியுள்ளார்]


பூதத்தாழ்வாரின் மூன்றாம் திருவந்தாதியில்விண்ணகரம் வெஃகா விரிதிரைநீர் வேங்கடம்,

மண்ணகரம் மாமாட வேளுக்கை, மண்ணகத்த

தென்குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி,

தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு(2343)
[தேன் துளிர்க்கும் சோலைகள் உள்ள திருவரங்கம் என்று குறிப்பிடுகிறார்]


முதலாழ்வார்களுக்குப் பிறகு வந்த திருமழிசை ஆழ்வார் தன்னுடைய திருச்சந்தவிருத்தத்திலும், நான்முகன் திருவந்தாதியிலும் பல இடங்களில் ஸ்ரீரங்கத்தைப் பற்றி குறிப்பிடுகிறார்.அவனென்னை யாளி அரங்கத்து, அரங்கில்

அவனென்னை எய்தாமல் காப்பான், அவனென்ன

துள்ளத்து நின்றா னிருந்தான் கிடக்குமே,

வெள்ளத் தரவணையின் மேல்(2411)
[என்னை ஆண்டு அருளும் அரங்கன் என் நெஞ்சிலே நிற்கிறான். அமர்கிறான். அவன் மீண்டும் திருப்பாற்கடலில் ஆதிசேஷன் மீது கிடப்பானோ? மாட்டான் என்று மிகுந்த நம்பிக்கையுடன் பாடுகிறார்]


ஸ்ரீரங்கத்தின் மரபு வழி வரலாற்றை கருத்தில் கொள்ளாமல் பார்த்தால், ஸ்ரீரங்கம் கோயிலானது சங்க காலத்தில், அல்லது அதற்குச் சற்று முற்பட்ட காலத்தில் உறையூரை ஆண்ட ஒரு சோழ மன்னனால் எழுப்பப்பட்டு இருக்க வேண்டும். அகநானூறு, சிலப்பதிகாரம், மற்றும் முதலாழ்வார்கள் பாசுரக் குறிப்புகள் இந்தக் கூற்றுக்கு வலு சேர்ப்பதாக உள்ளது. கோயில் ஒழுகில் கிளிச் சோழன் ஸ்ரீரங்க விமானத்தைக் கண்டுபிடித்து, விமானத்தைச் சுற்றி பிரகாரங்கள் கட்டினான் என்ற குறிப்பை முன்பு பார்த்தோம்.


கிள்ளி என்பது மருவியே கிளி என்று ஆகியிருக்க்கலாம். கிள்ளி என்பது சோழர்களைக் குறிக்கும் மற்றொரு பெயர். சங்ககாலத்தில் வாழ்ந்த சோழ அரசர்களில் நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, பெருநர்க்கிள்ளி என்ற பெயர்கள் நாம் அறிந்தவை. கிளிச் சோழன் யார் என்பதை ஆராய்வதில் ஒரு பயனும் கிடையாது. ஸ்ரீரங்கம் கோயிலை எழுப்பியது உறையூரை ஆண்ட ஒரு சோழ மன்னன்(கொச்சகனுக்கு முன்) என்று வைத்துக்கொள்ளலாம். அச் சோழ மன்னன் காவிரி கொள்ளிடத்திற்கிடையே இக் கோயிலை தன் தலைநகரத்துக்குப் பக்கத்தில் கட்ட விருப்பபட்டு எழுப்பி, பிறகு அதுவே நாளடைவில் விஸ்தரிக்கப்பட்டு இன்று ஏழு பிரகாரங்களைக் கொண்ட ஒரு மிகப்பெரிய ஸ்ரீ வைஷ்ணவத் தலமாக உருப்பெற்றுள்ளதுOld Comments from my previous blog.


Post by ஈழநாதன்

நிச்சயமாக பிரயோசனமான வரலாற்றுத் தகவல்கள்.தொடர்ந்து தாருங்கள்

Mon, Jun 7 2004 5:42


Post by PK Sivakumar

Desikan, Hats off! Such a wonderful and research information filled article is rare to read now-a-days. Please publish it in some print magazine for wider audience to get benefited. Thanks.

Mon, Jun 7 2004 9:39


Post by srishiv

enna athikama padalgal ezhuthi irukeenga desikan? its ok...purinjuakaren kastappattu ;)...konjam kalokiyalavum ezhuthalaame ennai pondra ilakkiyam theriyathavargalukkagavum?? :) yosippeergal ena ennugindren... anbudan... srishiv...

Tue, Jun 8 2004 9:26


Post by sugumar

Å¢Á÷º¢ì¸¡Áø þÕì¸ ÓÊÂÅ¢ø¨Ä. ̓¡¾¡Å¢ý ¾¡ì¸õ ºü§È ¯ûÇÐ. ¬÷ÅÓõ, ¦À¡Õ¨ÁÔõ ¿ýÚ ¦¾Ã¢¸¢ÈÐ. ±ÉìÌ ¿£í¸û inspiration. ¬ñ¼¡ø ¯í¸ ¦À¡ýÉ¡ ? Å¡úòÐì¸û! ¦¾¡¼÷óÐ ±ØÐí¸û. ¿¡ý þýÛ¦Á¡Õ ¯í¸û ú¢¸ý. ÍÌ

Fri, Jun 11 2004 5:25


Post by rangarajan

Is it correct to say that the face is compared to the sands of the cauveri river?I thought the comparison is between the forehead of the lady and arangam in which the hearths are devoid of fire(perhaps because all the people had gone over to Uraiyur on the eve of panguni utharam)? Why regard Kili as derived from Killi and not the other way about?The association of a parrot with the rediscovery of the temple by the king seems credible enough and the existence of Kilimantapam even now lends support to it. Rangarajan

Sat, Jul 10 2004 6:25


By Desikan, at Tue Nov 02, 07:13:04 PM IST


Post by sugumar

விமர்சிக்காமல் இருக்க முடியவில்லை. சுஜாதாவின் தாக்கம் சற்றே உள்ளது. ஆர்வமும், பொருமையும் நன்று தெரிகிறது. எனக்கு நீங்கள் inspiration. ஆண்டால் உங்க பொன்னா ? வாழ்த்துக்கள்! தொடர்ந்து எழுதுங்கள். நான் இன்னுமொரு உங்கள் ரசிகன். சுகு

Fri, Jun 11 2004 5:25

Comments