Skip to main content

பணம் காசின் பரிணாமம்

பணம் காசின் பரிணாமம் - எஸ்.வி. ராமகிருஷ்ணன்


ஓரிடந் தனிலே
நிலைநில்லாது லகினிலே
உருண்டோடிடும்
பணங்காசெனும்
உருவமான பொருளே

’வேலைக்காரி’ படத்தில் (1949) ஒரு பாடல்.


Image hosted by Photobucket.comஎனக்கு ஏழு வயது ஆனபோது (1944) ஒரு அசாதாரணமான சம்பவம் நிகழ்ந்தது. அதுதான் ஓட்டைக் காலணாவின் பிறப்பு.
காலணா என்பது ஒரு ரூபாயின் 1/64 பகுதி. இன்று அதற்கு அர்த்தமே இருக்க முடியாது. ஆனால் அன்றைய தேதியில் அதற்கு மிட்டாயோ தேங்காய் பர்பியோ வாங்க முடியும். ‘சின்னக் கிளாஸ் பசங்களிடம்’ அதிகமாகப் புழங்கியது காலணாக்கள்தான். காலணாதான் குழந்தைகளின் அடிப்படை நாணயமென்றே சொல்லலாம். அதுவரையில் வழங்கி வந்த காலணாவுக்கான செப்பு நாணயங்கள் பெரிதாகவும் கறுத்துப் போயும் சில சமயங்களில் பச்சைக் களிம்பு பிடித்தும் காணப்படும். ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய விக்டோரியா மகாராணியின் காலணாவிலிருந்து என் காலத்தின் ஆறாம் ஜார்ஜ் சக்கரவர்த்தி படம் பொறித்த காலணா வரையிலும் இதேபோலத்தான் இருந்தன. ஆனால் திடீரென்று முளைத்த புதிய காலணாவோ அதுவரை கேட்டிராத அதிசயமாக நடுவில் பெரிய ஓட்டையுடன் ‘வாஷர்’ மாதிரி விளங்கியது. பளபளவென்று தங்கம்போல் மின்னியது. இது குழந்தைகளின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டதில் அதிசயம் இல்லை. அதே சமயம், பெரியவர்களின் பார்வை வேறு விதமாக இருந்தது. அரசாங்கம் ‘பாப்பர்’ ஆகிக் கொண்டிருக்கிறதுபோல் இருக்கிறது என்று பலரும் சொன்னார்கள். ஆங்கிலேயே ஆட்சி அஸ்தமிக்க ஆரம்பித்துவிட்டதென்றுகூடப் பலருக்குத் தோன்றியிருந்தால் அதுவும் நிஜமே. உண்மையில் யுத்த காலச் செலவுகளால் ‘போண்டி’யாகிக் கொண்டிருந்த பிரிட்டிஷ் இந்திய அரசுக்குக் குறைந்த செலவில் மட்டமான நாணயங்களைத் தயாரிப்பதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. அதனால் தாமிரச் செலவு குறைந்ததென்றால் அரசாங்கத்தின் மதிப்பும் தாழ்ந்து போயிற்று.



ஓட்டைக் காலணாவின் பிரதாபத்தைச் சொல்லுமுன் ஐம்பது வயதுக்குக் கீழே உள்ளவர்களுக்காக அன்றைய நாணயங்களை (coinage) பற்றியதொரு அறிமுகம் தேவைப்படலாம்.
மெட்ரிக் முறையென்பது, ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பதுகளில் பாட புத்தகங்களில் மட்டுமே இருந்தது. நடைமுறையில் இருக்கவில்லை. முகவை நிறுவை அளவுகளிலிருந்து நாணய மாற்று விகிதம் வரை எல்லாம் திறிஷி (பிரிட்டிஷ்) முறைதான். கடைக்குப் போனால் ஒன்றரை வீசை ரவையை நிறுத்தும் ஒரு படி உப்பை அளந்தும் கொடுத்துவிட்டு ஒரு ரூபாய் ஏழரை அணா (1-7-6) என்று விலை சொல்லுவார்கள். ஒரு ரூபாய்க்கு 192 தம்பிடி. அதற்கு ஆங்கிலத்தில் பை (Pie) என்று பெயர். இலங்கையிலும் ஆட்சி செலுத்தி வந்த அதே பிரிட்டிஷார் ரூபாய்க்கு 100 சதம் (Cent) என்று வைத்துப் பள்ளிச் சிறுவர்களின் பாரத்தைக் குறைத்தார்கள். ஏனோ இந்தியாவுக்கு அந்தக் கருணையைக் காட்டவில்லை.
அதோடு கணக்கு நின்றுவிடவில்லை. பனிரெண்டு தம்பிடிகள் சேர்ந்தது ஒரு அணா. அதுபோல் பதினாறு அணாக்கள் சேர்ந்தால் ஒரு ரூபாய் ஆகும். இதெல்லாம் பிரிட்டிஷ் இந்தியாவில் அதாவது மாகாணங்களில். மகாராஜாக்கள் ஆண்ட சுதேச சமஸ்தானங்கள் ரூபாய்க்குக் கீழ்ப்பட்ட நாணயங்களைத் தத்தம் பாணியில் அச்சடித்தன. உதாரணமாக, திருவாங்கூரில் சக்கரம் இருந்தது. நம்ம ஊரிலே “அவன் கையிலே நாலு காசு சேர்ந்து போச்சு, திமிர் ஏறிடுத்து” என்று சொல்வது போல திருவாங்கூரில் “அவன் கையிலே நாலு சக்கரம் சேர்ந்து போச்சு . . .” என்று பேசுவார்கள். இருபத்தெட்டு சக்கரம் ஒரு ‘சர்க்கார் ரூபாய்’ (திருவாங்கூர் ரூபாய்.) பிரிட்டிஷ் ரூபாயின் மதிப்பு இன்னும் கொஞ்சம் கூடுதல். அதாவது 28 லு சக்கரம். இதில் இரண்டு வினோதங்கள். திருவாங்கூரின் சர்க்கார் ரூபாய் என்பது ஒரு மதிப்புதான். அப்படி ஒரு ரூபாய் நாணயம் அச்சிடப்படவில்லை. மற்றும் பிரிட்டிஷ் நாணயம் சமஸ்தானங்களில் செல்லுபடியாகும். ஆனால் சமஸ்தான நாணயங்கள் சென்னையிலோ கோவையிலோ செல்லுபடியாகவில்லை.
ஒரு ரூபாய், எட்டணா (இன்றைய 50 பைசா), நாலணா (25 பைசா), மற்றும் இப்போது இல்லாத இரண்டணா, ஓரணா, அரையணா, காலணா, தம்பிடி என்ற நாணயங்கள் இருந்தன. விக்டோரியா மகாராணி காலத்திய (அவருடைய உருவம் பொறிக்கப்பட்ட) பழைய ரூபாய் நாணயங்கள் ஏறக்குறைய முழு வெள்ளியால் ஆனவை. முதல் உலக யுத்தத்துக்குப் (1914-1918) பிந்தைய ஐந்தாம் ஜார்ஜ் (1911-35) படம் போட்ட ரூபாய்கள் அதைவிடத் தரம் குறைந்தாலும் கணிசமாக வெள்ளிதான். எனக்குத் தெரிந்த ஆறாம் ஜார்ஜ் சக்கரவர்த்தியின் (பட்டம் : 1938) ரூபாய்கள் இரண்டாவது உலக யுத்தத்தினால் (1939-45) மேலும் பாதிக்கப்பட்டுக் கொஞ்சம் பாவமாக இருந்தன. அவற்றின் வெள்ளி எடை 6/16 தோலா என்று கேட்ட நினைவு. (ரூபாய் நாணயத்தின் எடை ஒரு தோலா.) சுதந்திரம் வரும் தருவாயில் (1947) முதன் முறையாக வெள்ளியே இல்லாமல் நிக்கலினால் ஆன ஒரு ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது. ஒரு பக்கத்தில் புலி போட்டிருந்தது. வெள்ளியே இல்லாமல் ரூபாயா? நம்ப முடியாத கிழவர்கள் “கலி முற்றிவிட்டது” என்று அங்கலாய்த்தார்கள்.
அரை ரூபாய் என்பது ஏறக்குறைய ரூபாயின் பாதி அளவிலும் நாலணா நாணயம் (இதைப் பொதுமக்கள் ‘பணம்’ என்று சொன்னார்கள்) அதிலும் பாதி சைஸிலும் வட்டமாக இருந்தன. ஆனால் ஒரு பணத்தின் பாதி மதிப்பு கொண்ட இரண்டணாவோ அளவில் நாலணாவைவிடப் பெரிதாகவும் உருவத்தில் சதுரமாகவும் இருக்கும். ஓரணா நாணயம் வட்டமும் அல்லாது சதுரமுமல்லாது ஒரு அலங்காரமான டிசைனில் இருக்கும். இரண்டணாவின் ஒரு சின்ன சைஸ் பிரதி போலக் காணப்பட்ட அரையணா நாணயமும் உண்டு. இவை எல்லாம் நிக்கல் கலந்த அல்லது கலக்காத வெவ்வேறு உலோகக் கலவைகள். அதற்கும் கீழே இருந்த காலணாவுக்கும் தம்பிடிக்கும் அந்த அந்தஸ்து கிடையாது. அவை வெறும் தாமிரத்தினால் அடிக்கப்பட்டவை. மின்சாரம் பெரிய அளவில் தூர இடங்களுக்கு அனுப்பப்படும் வரை (electrical transmission) செம்பின் விலை மதிப்பு மிகக் குறைவாக இருந்திருக்க வேண்டும். அதனால்தான் “என் கிட்டே செப்பால் அடித்த காசு கூடக் கிடையாது” என்ற வாக்கியம் வந்திருக்க வேண்டும். எனக்குத் தெரிந்தபோது சாதாரணமாகப் பிச்சைக்காரர்களுக்குக் காலணா போட்டார்கள். அதற்கு முன், அதாவது இரண்டாம் உலக யுத்தம் வந்து விலைவாசிகள் கண்டபடி உயரும் வரை, பிச்சைக்காரர்களுக்கு ஒரு தம்பிடிதான் கொடுத்தார்களாம். ஆனால் 1945ல் ஒரு தம்பிடி கொடுத்தால் பிச்சைக்காரர்கள் முறைத்தார்கள். “நீயே வைத்துக்கொள்” என்று கூட எப்போதாவது சொன்னார்கள். பழனி போன்ற கோயில்களுக்குச் செல்பவர்கள் மாத்திரம் பின்னால் வெகுகாலம்வரை கூடத் தம்பிடி கொடுத்தனர். மலை ஏறும் வழி நெடுக இரண்டு பக்கமும் நூற்றுக்கணக்கான பிச்சைக்காரர்கள் உட்கார்ந்திருப்பார்கள். அவர்கள் எல்லோருக்கும் ஆளுக்குக் காலணா கொடுத்துக் கட்டுபடியாகாது. தவிரவும், தலைக்கு ஒரு தம்பிடி என்றால்கூட அவர்களின் தினசரி கலெக்ஷன் நல்லபடியாக இருக்குமாதலால் இது இருசாராருக்குமே அனுகூலமாக இருந்தது. ஐம்பதுகளில் தம்பிடிகளின் புழக்கம் கடைவீதியில் அடியோடு அற்றுப் போய்விட்டது. ஆனால் பழனியில் சில்லறை விற்கும் வியாபாரிகள் ஒரு ரூபாய்க்கு 150 என்ற விகிதத்தில் தம்பிடி நாணயங்கள் கொடுப்பார்கள். (எண்ணிப் பார்த்தால் இதைவிடக் குறையும் என்று சொன்னார்கள். ஆனால் முருகன் தரிசனத்துக்கு மலை ஏறும் அவசரத்தில் யாரும் எண்ணினதாகத் தெரியவில்லை!)
இந்தத் தம்பிடிகள் பிச்சைக்காரர்கள் கைக்குப் போய்த் திரும்ப அதே கடைக்காரர்களிடம் ராத்திரிக்குள் வந்து சேர்ந்துவிடும். அவர்கள் அதை எடுத்துக்கொண்டு பிச்சைக்காரர்களுக்கு ரூபாயாகவும் அணாவாகவும் கொடுப்பார்கள். அதிலும் கமிஷன் அடிக்காமல் ஆண்டிகளுக்கு அவர்களின் சம்பாத்தியத்தின் முழு மதிப்பு கிடைத்திருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை.
முதலில் ஒரு ரூபாய்க்கு உலோக நாணயம்தான் இருந்ததாம். அதாவது நோட்டு கிடையாது. எனக்குத் தெரிந்தபோது ஒரு ரூபாய்க்குக் காகித நோட்டும் இருந்தது. அதுவும் யுத்த காலத்தில் தான் தொடங்கிற்றாம். இதிலும் அரசின் மதிப்பைக் குறைக்கும் ஒரு விஷயம் இருந்தது. ஐந்து, பத்து, நூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் எல்லாவற்றிலும் ரிசர்வ் பாங்க் கவர்னர் ஒரு உறுதி மொழி அளித்துக் கையப்பம் வைத்திருப்பார். அதன்படி எவரும் ரூபாய் நோட்டுக்களை ரூபாயாக கஜானாவில் மாற்றிக்கொள்ள உரிமை உண்டு. அதற்கு அர்த்தம் அந்த அளவு வெள்ளியைத் திருப்பிக் கொடுக்க அரசு கடமைப்பட்டிருந்தது என்பதே. அதாவது அரசாங்கம் கையிருப்பில் வேண்டிய வெள்ளியை வைத்துக் கொள்ளாமல் இஷ்டப்படி கரன்ஸி நோட்டு அடிக்க முடியாது. அடிப்படை (ஒரு ரூபாய் நோட்டில் நீதித்துறைச் செயலர்தான் கையெழுத்திட்டிருப்பார்.) நாணயமான ரூபாயையே காகிதமாக அடிப்பது என்ற குறுக்கு வழியை ஆங்கில ஆளுகையின் முதல் 180 ஆண்டுகளுக்கு எவரும் நினைத்துப் பார்த்ததில்லை. ஆனால் ரூபாயே நோட்டாக வந்த பிறகு இப்போது உயர் மதிப்பு நோட்டுகளைக் கஜானாவுக்குக் கொண்டு சென்றால்கூட அவர்கள் அந்த அளவு ஒரு ரூபாய் நோட்டு கொடுத்தால் போதும் என்று ஆகிவிட்டது. இது அரசாங்கம் இஷ்டப்படி நோட்டு அச்சடிக்க அனுசரணையாயிற்று. பணவீக்கமும் அதிகரித்தது.
யுத்தத்தினால் அதிகரித்தது பணப்புழக்கமும் பணவீக்கமும் மட்டுமல்ல. எல்லாவற்றுக்கும் தட்டுப்பாடு, கட்டுபாடு ஏற்பட (பின்னால் ராஜாஜி நாமகரணம் செய்த) ‘கண்ட்ரோல் பெர்மிட் லைசென்ஸ் ராஜ்யம்’ அப்போதுதான் தொடங்கிற்று. அதற்குத் தகுந்தவாறு லஞ்ச ஊழலும் கறுப்புச் சந்தையும் தலையெடுத்தன. வியாபாரிகள் பலர் கறுப்புச் சந்தையில் கொள்ளையடித்தனர் என்றால் அதிகாரம் இருந்த இடத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு லஞ்ச லாவண்யம் பெருகிற்று. திடீரென்று (1945இல் என்று நினைக்கிறேன்) வைஸ்ராயின் நிர்வாக சபை - இன்றைய மத்திய அமைச்சரவை போன்றது - ஒரு வெடிகுண்டைத் தூக்கிப் போட்டது. ஆயிரம் ரூபாய் நோட்டுகளை இன்றிலிருந்து செல்லாது என்றது அந்த ஆணை. தாங்கள் நியாயமான வழியில் சம்பாதித்த பணத்தையும் பலர் ஆயிரம் ரூபாய் நோட்டாக வைத்திருக்கக்கூடும். (அப்போதெல்லாம் வங்கியில் பணம் போடும் வழக்கம் இன்று போல வளர்ந்திருக்கவில்லை என்பதை நினைவிற் கொள்க.)
அவர்கள் அந்தப் பணம் தங்களுக்கு எப்படிக் கிடைத்தது என்று சொல்லி அந்த நோட்டுகளை ரிசர்வ் பாங்கிலோ அல்லது இம்பீரியல் பாங்கிலோ (ஸ்டேட் பாங்கின் அன்றைய பெயர்) மாற்றிக்கொள்ளலாம். ஒன்று இரண்டு நோட்டுகளைக் கொண்டு போனால் அவர்கள் ஆட்சேபணை இல்லாமல் கொடுத்து விடுவார்கள். ஆனால் லட்சக் கணக்கில் கொள்ளையடித்து சேமித்து வைத்திருந்தவர்களுக்கு மிகக் கஷ்டம். இதில் பெரிதும் பாதிக்கப்பட்டவர் சென்னை மாகாணத்தின் அன்றைய வெள்ளைக்கார கவர்னர் ஸர். ஆர்தர் ஹோப் என்று பரவலாக நம்பப்பட்டது. சாதாரணமாக பிரிட்டிஷ் கவர்னர்கள் லஞ்சத்தில் ஈடுபட மாட்டார்கள். ஆர்தர் ஹோப் யுத்தகாலக் காற்று அடிக்கும்போது தூற்றிக் கொண்டவர். வர்த்தக உலகில் பெரும் புள்ளிகள் சிலரைத் துணைக்கு அழைத்து முடிந்த வரை கறுப்புப் பணத்தை மாற்றிக் கொண்டாராம் ஹோப். எங்கள் கோயமுத்தூரின் புகழ்பெற்ற தொழிலதிபர் ஒருவர் - கவர்னருக்கு மிக வேண்டியவர் - இரண்டு லட்சம் ரூபாய் இதுபோல் மாற்றிக் கொடுத்தாராம். அந்த நாளில் ஒரு லட்சமே மிகப் பெரிய தொகை. அதை உடையவர்களை ‘லக்ஷ£திபதி’ என்று உசத்தியாகச் சொன்ன காலம்.
ரூபாய் அணா பைசாக் கணக்கு சிக்கலானது. மெட்ரிக் முறை போல் பூஜ்யத்தைச் சேர்த்தால் காரியம் ஆகிவிடாது. உதாரணமாகப் பள்ளிக்கூடத்தில் ஒரு கீழ் வகுப்புக் கணக்கு பின்வரும் ரீதியில் அமைந்திருக்கும்.
ரூ அ பை *
147 13 7 x
        16
___________________________
2365 9 4
(* ரூபாய், அணா, பைசா)


இந்தக் கணக்கைப் போடுவதானால் முதலில் 7 தம்பிடியை 16ஆல் பெருக்கி, வரும் 112ஐ 12ஆல் வகுப்பது முதல் கட்டம். மீதி வரும் 4 தம்பிடிகளை அங்கேயே விட்டுவிட்டு வகுத்தலில் தேறும் 9 முழு அணாக்களைப் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்தது 13 அணாக்களைப் பதினாறால் பெருக்கிக் கிடைக்கும் 208 அணாவுடன் கையில் வைத்திருக்கும் 9 அணாக்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதை 16ல் வகுத்தால் கிடைக்கும் மீதி 9 அணாவை அணாக் கணக்கில் விட்டுவிட்டு ஈவுத் தொகையாக 13 ரூபாயை கையில் வைத்திருந்து ரூ.147ஐப் பதினாறால் பெருக்கிக் கிடைக்கும் 2352 ரூபாயுடன் கூட்டி மொத்தம் 2365ஐ ரூபாய்க் கணக்கில் எழுதினால் கணக்கு முடிந்தது. இதைப் படிப்போருக்குப் ‘போர்’ அடித்தாலோ தலை சுற்றினாலோ நான் அதற்குப் பொறுப்பாளி அல்ல. பணக் கணக்கு என்பது அப்படித்தான் இருந்தது. இப்போதானால் இந்தக் கணக்கைப் போட பெரும்பாலோர் கால்குலேட்டரை நாடுவார்கள். அன்றோ ஒன்பது வயதுக் குழந்தைகள் இதைக் காகிதம், பென்சில் (அல்லது சிலேட்டு, பலப்பம்) மூலம் கணக்கிட்டார்கள். சில சமயம் தப்பு போட்டுக் குட்டும் வாங்கினார்கள். அல்லது பெஞ்சு மேல் ஏறி நின்றார்கள். நான் கணக்குப் பாடத்தில் மக்காக இருந்ததால் இதை அனுபவ பூர்வமாகச் சொல்ல முடியும். இப்போதுகூட நான் எழுதியிருக்கும் மாதிரிக் கணக்கின் விடை தப்பாக இருந்தால் ஆச்சரியப்பட மாட்டேன். நல்ல வேளையாகக் குட்டி வைக்க எங்கள் வாத்தியார்கள் இன்று இல்லை!
திருவாங்கூர் நாணயத்தைப் பற்றிச் சொன்னேன். அங்கே இரண்டுவித நாணயங்கள் புழங்கியதால், இதைவிடச் சிக்கலான கணக்குகள் கொடுத்துப் பிள்ளைகளின் உயிரை வாங்குவதற்கு சௌகரியமாக அமைந்தது. 137 ரூபாய் ‘சர்க்கார் நாணயத்தை’ பிரிட்டிஷ் நாணயமாக மாற்றுக என்று பள்ளிக்கூடக் கணக்குகள் கொடுப்பார்கள். 137ஐ இருபத்தெட்டு சக்கரத்தால் குணிக்க (பெருக்க) வேண்டும். வரும் விடையை 28 லு சக்கரத்தால் வகுத்தால் பிரிட்டிஷ் நாணய மதிப்பு கிட்டும்.
சுதந்திரம் வந்து பத்தாண்டு காலத்திற்குப் பிறகு, 1958ல் என்று நினைக்கிறேன். நேரு அரசு மெட்ரிக் முறையின் அடிப்படையில் அமைந்த நாணயச் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தது. ரூபாய் அப்படியே இருக்க, இலங்கையின் சதம் போல, அது நூறு புதுக் காசுகள் ஆக்கப்பட்டது. புதுக்காசு ‘நயா பைசா’ என்று பெயர் சூட்டப்பட்டது. சரியான மொழிபெயர்ப்புதான்.
புதிய காசு மக்களுக்குப் பழக்கமாகும் வரை சில வருடங்களுக்குப் பழைய நாணயங்களும் கூடவே அனுமதிக்கப்பட்டன. ஆனால் புதிதாகப் பதிப்பிக்கப்படவில்லை. தவிரவும் கொஞ்சங் கொஞ்சமாகத் திரும்பப் பெற்றுக்கொண்டு உருக்கப்பட்டன என்று நினைக்கிறேன். ஆக காலக்கிரமத்தில் அவை வழக்கிலிருந்து மறைந்தொழிந்தன. ஆனால் இது நாலணா, எட்டணா இரண்டுக்கும் பொருந்தாது. புதிய காசுக்கு நாலணா 25 பைசாவாகவும் எட்டணா 50 பைசாவாகவும் கச்சிதமாய்ப் பொருந்தியதால் அவை நீடிப்பதற்குத் தடையேதும் இல்லை. ஆனால் அவற்றின் புதிய பதிப்புகள் அணாக் கணக்கில் எழுதப்படவில்லை. 25 பைசா அல்லது 50 பைசா என்றே குறிக்கப்பட்டன. அதே சமயம் அவற்றின் பழைய நாணயங்களும் செல்லும்.
இருபத்தைந்து பைசாவுக்குக் கீழே புதிதாகக் கொண்டுவரப்பட்ட நாணயங்கள் வருமாறு (ஒரு) நயா பைசா, இரண்டு நயா பைசா, ஐந்து நயா பைசா, பத்து நயா பைசா. பின்னால் இருபது பைசா நாணயமும் வெளியாயிற்று (இப்போது காண்பது அரிது.) நாலணா எட்டணா தவிர மற்ற பழைய நாணயங்களான தம்பிடி, காலணா, அரையணா, ஓரணா, இரண்டணா முதலியவை புதிய காசுக் கணக்கில் பொருந்தாததால் சில சிக்கல்கள் ஏற்பட்டன. அதுவரை, பல பொருட்களுக்கு ஓரணா அல்லது இரண்டணா என்று விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. உதாரணமாக சுதேசமித்திரன் (தினத்தாள்) ஓரணாவாக இருந்து வந்தது. நயா பைசா மதிப்பில் இது 6ரு பைசாவாகும். தொலையட்டும் என்று பிரதிக்கு ரு பைசா நஷ்டத்தில் அப்பத்திரிகையின் நிர்வாகம் அதை 6 நயாபைசா என்று நிர்ணயித்தது. நல்லவர்களுக்குக் காலம் இல்லை என்பது போல் சுதேசமித்திரன் அதிலிருந்து க்ஷீணமடைந்து சில ஆண்டுகளில் மூடப்பட்டது. ‘ஹிந்து’வோ இரண்டணாவுக்கு விற்று வந்த பத்திரிகை. அதன் சரியான நயா பைசா மதிப்பு 12லு வரும். கிட்டிய மதிப்பு என்ற கொள்கையைக் கடைப்பிடித்து அதை 13 நயாபைசா என்று வைத்துவிட்டார்கள். ஆக, நாணய சீர்திருத்தத்தினால் ஹிந்து பத்திரிகை பிரதிக்கு லு பைசா லாபம் அடைந்தது. Unearned income என்று சொல்லலாம்! குமுதம், விகடன், கல்கி போன்ற நாலணாப் பத்திரிகைகள் பாதிக்கப்படவில்லை. நாலணா என்பதற்குப் பதில் 25 நயா பைசா என்று விலையை எழுதினார்கள். விலை அதேதான்.
இதுபோல் பல சாமான்கள் பாதிக்கப்பட்டன. பெரும்பாலும் கிட்டிய மதிப்பு வியாபாரிகளுக்குத்தான் அனுகூலமாக அமைந்ததே தவிர நுகர்வோருக்கல்ல. ஒன்றரை அணா விற்ற பல பொருள்களும் 10 பைசாவாக உயர்த்தப்பட்டன (+1 பைசா) இதெல்லாம் rounding off என்ற பெயரில் நடந்த அநியாயங்கள். இதனால் ஒரு சிறிய அளவுக்குப் பணவீக்கம் அதிகரித்தது என்று கூடக் கேட்டிருக்கிறேன். அதே சமயம் (1957-62) தொடங்கி இருந்த இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தினாலும் இருக்கக் கூடும். அத்திட்டத்தில் பணவீக்கத்தை உண்டு பண்ணும் அம்சங்கள் நிறையவே காணப்பட்டன. வலதுசாரியான மினூ மஸானியும் இடதுசாரியைச் சேர்ந்த பூபேஷ் குப்தாவும் இத்திட்டத்தைத் தாக்கிக் காரசாரமாக எழுதினார்கள். ஆனால் பணம் என்னமோ வீங்கிக் கொண்டேதான் போயிற்று.
ஆரம்ப காலத்துக்கென்று, அரை நயா பைசா நாணயம் ஒன்றை அச்சடித்திருந்தால் இதுபோன்ற சில சங்கடங்களை அரசு தவிர்த்திருக்கலாம். சில ஆண்டுகளுக்குப் பிறகு அதை வாபஸ் பெற்றிருக்கலாம். ஏனோ இதைச் செய்யவில்லை. சில ஆண்டுகளிலேயே பணவீக்கம் ஒரு நயாபைசா, இரண்டு நயா பைசா நாணயங்களைப் புழக்கத்தில் இருந்து விரட்டிவிட்டது. இன்றைய இளைஞர்கள் பலர் ஒரு நயா பைசா என்ற காசைக் கண்ணால்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் கொள்கை அளவில் (in theory) இன்றும் அது செலாவணியில் இருக்கும் நாணயம்தான். நயா பைசாவைத் தொடர்ந்து பின்னாட்களில் ஐந்து பைசாவும் பின்னர் பத்து பைசாவும் கொஞ்சங் கொஞ்சமாக மறைந்தன. இன்று இருபத்தைந்து பைசாதான் குறைந்தபட்ச நாணயமாக விளங்குகிறதெனலாம்.
எது எப்படியிருந்தாலும் கணக்கு மிகவும் சுலபமாகிப் போனது. எல்லாத் தொகைகளுக்கும் ஒரு தசம புள்ளியை இந்தப் பக்கமோ அந்தப் பக்கமோ நகர்த்தினால் பெருக்கலும் வகுத்தலும் முடிந்து போயின. அல்லது பைசா ரூபாயாகவோ ரூபாய் பைசாவாகவோ ஆகிவிட்டது. இதன் விளைவாகக் கணக்கு வாத்தியார்களின் மகிமையும் குறைந்து போயிருக்கக்கூடும்!
ஆனால் இதற்கெல்லாம் கொஞ்ச காலம் பிடித்தது. ஆரம்ப நாட்களில் பரவலான குழப்பம் இருந்தது. படித்தவர்கள் படிக்காதவர்களைவிட அதிகமாகத் தப்பு செய்தார்கள். எனக்கு ஞாபகம் இருக்கிறது, கல்லூரி மாணவனான நான் சென்னைக்கு ரயிலில் வரும்போது என்னிடம் ஒரு வயதான மாது அன்பாகப் பேசிக் கொண்டிருந்தவர், சென்ட்ரல் வந்தவுடன் அடுத்த நாளைக்காகப் புனாவுக்கு ஒரு டிக்கெட் வாங்கித் தரச் சொல்லிக் கேட்டுக் கொண்டார். பணமும் கொடுத்தார். நானும் நல்ல பிள்ளையாக ஓடிப் போய் வாங்கி வந்து கொடுத்தேன். ஆனால் புக்கிங் கிளார்க் ஆறு அணாவுக்குப் பதில் தவறுதலாக ஆறு பைசா பாக்கி கொடுத்துவிட்டார். (அப்போது நயா பைசா வந்த புதிது, எல்லோருமே இது போன்ற தப்புகள் செய்து கொண்டிருந்த சமயம்.) நானும் கண்ணை மூடிக்கொண்டு வாங்கிக்கொண்டு வந்து பெருமையோடு அந்த அம்மாளிடம் சமர்ப்பித்தேன். அவருக்குக் கழுகுக் கண் போலும், உடனே தப்பைச் சுட்டிக்காட்டினார். நானும் சிரமத்தைப் பாராமல் கௌண்டருக்கு ஓடிச் சரியான சில்லறை வாங்கி வந்தேன். ஆனால் அதைக் கொடுக்கும்போது டிக்கெட்டை அவரிடம் கொடுக்க மறந்துவிட்டேன். சில்லறையைக் கண்ணில் எண்ணை விட்டுக்கொண்டு எண்ணிய அந்த மாமியும் இதை கவனிக்காமல் கோட்டை விட்டு விட்டார். நான் வீட்டுக்கு வந்த பிறகு என் பாக்கெட்டில் டிக்கெட் இருப்பது கண்டு திடுக்கிட்டேன். ரிசர்வேஷன் இல்லாத டிக்கெட் (அப்போது அது சகஜம்.) உடனே விழுந்தடித்துக்கொண்டு சென்ட்ரலுக்கு ஓடிப் போய் டிக்கெட்டை ‘கான்சல்’ பண்ணி பணத்தைத் திருப்பி வாங்கியதுகூடப் பெரிதில்லை. அவர் பேச்சோடு பேச்சாகச் சொல்லியிருந்த ஒரு பொது நண்பரின் பெயரை மாத்திரம் வைத்துக்கொண்டு துப்புத் துலக்கி அந்த அம்மாளின் விலாசத்தைக் கண்டுபிடித்ததும் பணத்தை அனுப்பி வைத்ததும் ஒரு நீண்ட கதை!
பின் குறிப்பு : ஒன்று சொல்ல மறந்து விட்டேன். காரல் மார்க்ஸில் ‘ஸ்டேட்’ போல காலக்கிரமத்தில் அதன் அவசியம் தீர்ந்து போன பிறகு, நயா பைசாவின் ‘நயா’ பகுதி ‘உதிர்ந்து’ போயிற்று (withered away) மக்களும் அவர்களைப் பின்பற்றி அரசும் அதை விட்டு விட்டனர்.


நன்றி: உயிர்மை, மே 2005

Comments

Post a Comment