விகடன் கேலிச்சித்திரம் - கொந்தளிக்கத் தேவை இல்லை.
விகடன் கார்டூனுக்கு கொந்தளிக்கத் தேவை இல்லை. ஆபாசமாக பல அட்டைப்படங்கள் போட்ட போது ( பிறகு குட்டியாக மன்னிப்பு கேட்டார்கள்) கொந்தளிக்காதவர்கள் இதற்கு ஏன் கொந்தளித்தார்கள் என்று எனக்கு இன்னும் புரியவில்லை. இருந்தாலும் ஏன் கொந்தளித்தார்கள் என்று யோசிக்கிறேன்.
முதன் முதலில் வெளிநாட்டுக்குச் செல்பவர்கள் கலாச்சார அதிர்ச்சியை (cultural shock ) அனுபவிப்பார்கள். எனக்கும் அந்த உணர்ச்சி ரீதியான அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அதைக் காட்டிலும் வேறு பல அதிர்ச்சிகளும் ஏற்பட்டிருக்கிறது. நான் பல வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கிறேன். தில்லும் முல்லு படத்தில் தே.சீனிவாசன் ஒரு நேர்முகத் தேர்வுக்கு வரும் இளைஞன் சட்டையில் பூனை படம் இருக்க, “இது என்ன?” என்று கேட்பார். “பூனை” என்று பதில் சொல்ல, ”அதில் என்ன பெருமை? ” என்பார். அது போலத் தான் என் வெளிநாட்டுப் பயணங்களும். அதில் எந்தப் பெருமையும் இல்லை, ஆனால் பல அனுபவங்களைச் சந்தித்திருக்கிறேன்.
ஒரு முறை ஃபிரான்ஸ் செல்லும் போது ஃபிளைட்டில் எவ்வளவு கேட்டும் கடைசி வரை தண்ணீர் கொடுக்க மறுத்துவிட்டார்கள். கொரியாவில் விடுதிக்குப் போக அனுமதிக்காமல் கொத்தடிமைகள் போல நடத்தினார்கள். அமெரிக்க கக்கூஸில்.. சரி அதை எல்லாம் இங்கே சொல்லி உங்களை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கப் போவதில்லை. யோசித்துப் பார்த்தால் இவை எல்லாம் இந்தியர்கள் மீது இழைக்கப்பட்ட ஒரு விதமான இனவெறி தாக்குதல்(Racial discrimination ).
பொதுவாகவே இந்தியர்கள் ஒருவிதத் தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள். நாம் வெள்ளையரைப் பார்த்தால் நம்மைவிட அவர்கள் ஒரு படி மேலே என்ற மனப்பான்மை நம்மையும் அறியாமல் நம்மிடம் இருக்கிறது.
இதற்கு முன் பாரதப் பிரதமர்கள் அமெரிக்கா சென்று, அதிபர்களுடன் சரிக்குச் சமமாக உட்கார்ந்து காபி குடித்தாலும், அமெரிக்கா அவர்களிடம் ஒரு ’பிக் பிரதர்’ போல நடந்துகொள்ளுவதை நாம் பார்த்திருக்கிறோம்.
நாம் இந்தியர்கள், நாம் எதற்கும் சளைத்தவர்கள் இல்லை என்று நம்மை நாமே நம்ப வைத்தது மட்டும் அல்லாமல், நமக்கு இருக்கும் தாழ்வு மனப்பான்மையை படிப்படியாகக் குறைந்து, இன்று இந்தியாவை, நம் பெருமையை, வெளிநாட்டுக்கும் மார்கெட்டிங் செய்து பாரதத்தின் பெருமையை வேறு ஓர் உயரத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார் நம் பாரதப் பிரதமர் மோடி.
நம் ராக்கெட் நிலவை மென்மையாக முத்தமிட்ட போது, கோவிட் சமயத்தில் பல உலகநாடுகளே வியக்கும் வண்ணம் இங்கே நிர்வாகம் செய்தது, மருந்து அனுப்பி, ’மேட்க் இன் இந்தியா’, ஆஸ்திரேலியா பிரதமர் ‘பாஸ்’ என்று அழைத்தது, சமீபத்திய அமெரிக்கப் பயணம் வரை பலவற்றை அடுக்கிக்கொண்டே செல்லலாம். இன்று இந்தியா ஏதாவது சொன்னால் வெளிநாடுகள் காது கொடுத்துக் கேட்க ஆரம்பித்திருக்கிறது.
இப்பேர்ப்பட்ட பெருமையை மிகு பாரதப் பிரதமரைக் கேவலமாகச் சித்தரித்தவுடன் நியாயமாக வரும் கோபம் தான் வந்திருக்கிறது. நம் நாடு, நம் பிரதமர் என்று இல்லாமல் இது நமக்கு நேர்ந்த அவமானம் என்று அவர்களின் கோபம் நியாயமானது. விகடன் கார்டூனுக்கு கொந்தளிக்கத் தேவை இல்லை, ஆனால் கொந்தளித்ததில் தப்பில்லை.
ஒரு நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தால் தண்டிக்கத்தான் செய்வார்கள் என்பதைக் கூட விகடனால் புரிந்துகொள்ள முடியாமல் மோடி மீது இருக்கும் காழ்ப்புணர்ச்சி காரணமாக இப்படி ஒரு கார்ட்டூனை போட்டு அதற்குப் பலர் 'விகடனுடன் துணை நிற்கிறோம்’ என்று கூறி விகடனுடன் சேர்ந்து அசிங்கப்படுகிறார்கள். அசிங்கப்படுவது அவர்களுடைய விருப்பம், அதை நாம் தடுக்கக் கூடாது.
-சுஜாதா தேசிகன்
18.2.2025
Comments
Post a Comment