Skip to main content

கழுதை வழி

கழுதை வழி




பத்து நாளைக்கு முன் ‘இந்தியர்கள் விலங்கிட்டு’ இந்திய நாட்டுக்குத் திருப்பி அனுப்பியதைக் கண்டு பலரும் ராகுல் காந்தி போலக் கொத்துப் போனார்கள். சட்டவிரோதமாகச் சென்றதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தப்பு தான், ஆனால் அவர்களை நடத்தியவிதம்? தோழர்கள் மனிதம் செத்துவிட்டது என்றார்கள். 

இந்தியாவிற்குத் திரும்பி அனுப்பினார்கள் என்று எழுதினார்கள். யாரும் தாய்நாட்டுக்கு வந்து சேர்ந்தார்கள் என்று எழுதவில்லை. டிரம்ப் இவர்களைக் குற்றவாளிகள், வேற்றுக்கிரகவாசிகள் என்று மீண்டும் மீண்டும் திட்டிக்கொண்டு இருந்த போது அதை யாரும் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. இதனாலேயே பலர் டிரம்ப் வரக் கூடாது என்று வேண்டிக்கொண்டார்கள். 

பிரதமர் மோடியின் ஸ்வச்ச பாரத் - தூய்மை இந்தியா திட்டத்துக்கு நாமும் ஏதாவது செய்வோம் என்று முன்பு நான் வசித்த தாம்பரம் வீட்டுக்கு முன் இருந்த குப்பை எல்லாம் அகற்றி இங்கே குப்பை போடாதீர்கள் என்று போர்ட் வைத்து சின்ன செடி ( நாளை மரமாக வளரும் என்று நம்பி ) வைத்தேன். சில நாளில் திடீர் என்று மரம் உசந்து வளர்ந்துவிட்டதோ என்று பார்த்தால் நான் வைத்த செடிக்குப் பக்கம் ஒரு பாஜக கொடியை நட்டு வைத்துவிட்டார்கள். வாகனம் உள்ளே வர, எடுக்க மிகக் கஷ்டமாக இருக்க அந்தக் கொடியை யார் வைத்தார்கள் என்று ஏதோ சந்து பொந்தில் எலி மாதிரி நுழைந்து வைத்தவரிடம் சொன்னேன். 

இதோ எடுத்துவிடுகிறேன் என்று ஆறு மாதம் கடந்தது.  மாதத்துக்கு இரண்டு முறை என்ற கணக்கில் பன்னிரண்டு முறை ஓர் எலியாக அவதாரம் எடுத்து அவரிடம் சொன்னேன். திடீர் என்று ஒரு நாள் எனக்கு ஆச்சரியம். அந்தக் கொடிக் கம்பத்துக்குப் பக்கம் ஒரு காங்கிரஸ் கம்பம் அதைவிட ஒரு அடி பெரிதாக முளைத்தது. இந்த இரண்டு கம்பத்துக்கும் குப்பையே தேவலை என்ற முடிவுக்கு வந்து, கோபத்துடன் மீண்டும் பெங்களூக்கே வந்துவிட்டேன். 

அந்தக் கொடிக் கம்பங்களால் பெரிய உபத்திரமும் எனக்கு இல்லை என்றாலும், நாளை தென்னம் துடப்பத்தைத் திருப்பி வைத்தது போலப் பல கட்சிக் கொடிகள் அங்கே பறந்து,  பொங்கல், தீபாவளி கட்சித் தலைவர் பிறந்தநாள் என்று அங்கே ஒரு தலைவர் படத்தை வைத்து மாலை மரியாதை செய்து, ஒரு மினி கோயிலாக ஆக்கிரமிப்பு நடக்க வாய்ப்பிருக்கிறது.

பிஜேபி ஆதரவாளனாக இருந்தாலும்,  ஒவ்வொரு சமயமும் அந்தக் கொடிக் கம்பங்களைப் பார்க்கும் போது, காரை வைத்து இடித்துவிடலாமோ என்று கூட நினைத்தேன். பார்ப்பானுக்கே உள்ல பயம் காரணமாக அப்படிச் செய்யவில்லை. டிரம்ப் என்னைப் பயந்தவர் இல்லை, இது போன்ற ஆக்கிரமிப்புகளை எதிர்க்கிறார்.  தப்பு செய்தால் இப்படித் தான் நடத்தப்படுவீர்கள் என்று விலங்கிட்டுக் காண்பிக்கிறார்.

அந்த விலங்கு ஒரு குறியீடு. ஓர் அவமானச் சின்னம்.  மொட்டை அடித்து கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதை மேல் ஏறுவதின் நவீன வடிவம். முன்பு ஒரு காலத்தில் இந்தியாவிற்குள் நுழைந்த முகமதியர்கள், பிரிட்டிஷ் , கிழக்கிந்திய கம்பெனி ஆசாமிகள் செய்தது எல்லாம் ஆக்கிரமிப்புகளே. அவர்களை டிரம்ப் போல அனுப்பியிருந்தால் காந்திக்கு வேலை இருந்திருக்காது. இந்தியா சுரண்டப்படாமல் சுபிக்ஷமாக இருந்திருக்கும். 

அமெரிக்கச் செல்ல வேண்டும் என்பது பலருடைய கனவு. ஐ.டி மாணவர்களை விடுங்கள், மதுரைக்குச் சென்று பேசப் போகிறேன் என்பதைக் காட்டிலும் அமெரிக்க சென்று பேசப் போகிறேன்  என்று சொல்லும் எழுத்தாளர்கள், பேச்சாளர்களிடம் இருக்கும் அகக்களிப்பை நீங்கள் கவனிக்கலாம். இத்தனைக்கும் மதுரையில் தமிழ் படித்தவர்கள் அதிகம். 

ஒரு தலைமுறைக்கு முன் (அதாவது நான் படித்த காலத்தில்) படித்த கூட்டம் ’எப்படியாவது’ அமெரிக்கச் செல்ல வேண்டும் என்று பல வழிகளைக் கையாண்டார்கள். கார்பரேட் நிறுவனங்களில் மூலம்  பிசினஸ் வீசாவில் பெரும்பாலானவர்கள்  அமெரிக்கா சென்றார்கள். அப்படிச் சென்றவர்களின் தொழில் அனுபவம், வங்கிக் கணக்கு, திறன்கள்  என்று பல விஷயங்கள் மாற்றி அமைக்கப்பட்டது. அமெரிக்க மண்ணில் இறங்கியவுடன் “நான் இங்கே பயிற்சிக்கு வந்திருக்கிறேன், வேலைக்கு இல்லை” என்ற பொய்யைச் சொல்ல வேண்டும் என்று ஏசி அறையில் கற்பிக்கப்பட்டது. சென்ற தலைமுறையில் பலர் இப்படி ஏவாதது ஒரு பொய்யைச் சொல்லித் தான் சென்றுகொண்டிருந்தார்கள். நோண்ட ஆரம்பித்தால், இராணுவ விமானம் காக்கா போல பறந்து, இந்தியாவின் ஜனத்தொகை கூடிவிடும். 

ஒரு பெண்ணின் பிரசவ வலியையும், என்ன குழந்தை எப்படிப் பிறக்கப் போகிறது என்ற தவிப்பைப் பலர் வீசா ஸ்டாம்ப் குத்தும் போது உணர்ந்தார்கள். இமிகிரேஷன் கவுண்டரில் இருக்கும் அதிகாரி என்ன கேள்வி கேட்கப் போகிறாரோ, என்ன ஸ்டாப் குத்தப் போகிறாரோ என்று  ரத்த அழுத்தத்துடன் பயப்படாதவர்கள் இருந்திருக்க மாட்டார்கள். 

கோவிட் வருவதற்கு ஒரு வாரம் முன்  அமெரிக்கா சுற்றுலா விசா வாங்கச் சென்றிருந்தேன். பராக்குப் பார்க்கும் போது ஒன்றைக் கவனித்தேன். எல்லோரும் ஒழுங்கான  உடை, திருத்தப்பட்ட  முகமண்டையுடன், நாற்றம் அடிக்காத ஷூ-சாக்ஸ் கையில் ஒரு ஃபைல் என்று ஒழுங்காக வந்திருந்தார்கள். பெரும்பாலோர் முகத்தில் கனவுகளுடன் பதற்றமாகக் காணப்பட்டார்கள் ( விசா ரிஜக்ட் ஆகிவிடுமோ ?). டோக்கன் நம்பர் கூப்பிட்ட சமயம் சிலர் கை கூப்பி விசா பாலாஜியை வேண்டிக்கொண்டு சென்றார்கள். அமெரிக்காவிற்குள் போவதற்குத் தடையாக நம்மை அறியாமல் ஏதாவது பாவம் செய்திருப்போமோ என்று பயந்துகொண்டு, கேட்ட வேள்விகளுக்கு எப்படியாவது போக வேண்டும் என்ற துடிப்பில் பதில் கூறினார்கள். 

என் முறை வந்த போது வீசா கொடுத்தால் சுற்றிப் பார்த்துவிட்டு வருகிறேன் இல்லை என்றால் பாதகம் இல்லை, இது என்ன வைகுண்டமா என்று நினைப்பில் பதில் சொன்னேன். விசா கொடுத்தார்கள் ஆனால் கோவிட் என் சுற்றுலாவைக் கவர்ந்து சென்றது. கோவிட் முடிந்தும் அமெரிக்காவைக் கிடப்பில் போட்டுவிட்டு சிம்லா சென்று,  மலைச்சரிவில் ஒரு குதிரையின் மீது அமர்ந்து பயணம் செய்தேன். பள்ளத்தாக்கில் குதிரையுடன் வழுக்கிக்கொண்டு பரலோகம் சென்றுவிடுவோமோ என்று பயத்தில் அடிவயிற்றுக்குக் கீழே ஏதோ குறுகுறு என்று செய்ய, அந்தச் சமயம் பார்த்து த்வயம் மறந்து போனது. ’அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன்’ என்று குத்து மதிப்பாக எதையோ ஜபித்தேன். குதிரைக்கே இந்த நிலை என்றால் கழுதைக்கு ? சமீபத்தில் கழுதை பாதையில் சென்று திரும்பிய இந்தியர்களின் அனுபவங்கள் ’நைட் மேர்’ வகை. தங்கள் நிலபுலன்களை விற்று, மொத்தப் பணத்தையும் யாருக்கோ அழுது, காடு, கடலை கடந்து அமெரிக்காவில் நுழைவதற்கு முன் பரமபதச் சோபனப் பலகையில் பெரிய பாம்பு வழியாகக் கீழே இறங்கியுள்ளார்கள். 

அமெரிக்காவோ அல்லது வேறு தேசத்துக்கோ செல்வது அவரவர் விருப்பம். அதில் சரி தவறு என்று எதுவும் இல்லை. அங்கே இருக்கும் சௌகரியங்கள் இங்கே கிடைக்காது, அதனால் திரும்பி வருவார்களா இல்லையா போன்ற விவாதங்கள் எல்லாம் டிவிட்டர் டைம்பாஸ். என்னையே எடுத்துக்கொண்டால் நான் தமிழ்நாட்டில் இல்லாமல் திராவிடத் தேசத்தில் ஒன்றான கன்னடத் தேசத்தில் இருக்கிறேன். மீண்டும் தமிழகத்துக்குத் திரும்புவேனா என்று தெரியாது. இங்கே பஞ்சகச்சம் திருமண் தரித்துச் சென்றால் ‘என்ன ஐய்யரே’ என்று கிண்டல் செய்யாமல் மரியாதையுடன்,  தென்-வடகலை பேதம் இல்லாமல் குடியிருந்து (பெங்களூர்) குளிரில் வாழ முடிகிறது. 



பிகு: இதை எழுதிவிட்டு, இன்று ’டைஸ் ஆப் இந்தியா’ நாளிதழைப் புரட்டிய போது, ’நியூயார்க் செல்ல வேண்டாம், சோபா அடுக்குமாடிக்குடியிருப்பு வாங்கினால் நியூயார்க்கை இங்கேயே அனுபவிக்கலாம் என்று முதல் பக்கக் கதவு விளம்பரத்துள் நிழைந்தால், இன்று மேலும் 119 இந்தியர்கள் இந்தியாவிற்குத் திரும்ப அனுப்பப்படுகிறார்கள் என்று தலைப்புச் செய்தி. ( பார்க்க படம் ) 

அவர்களை தாய்நாட்டிற்கு வரவேற்போம்! 

-சுஜாதா தேசிகன்
15.02.2025
கோத்தாஸ் காபி குடிக்கும் ஒரு சாதாரண சனிக்கிழமை.

Comments