சுட்டு வீழ்த்தப்பட்ட பலூன் !
ஜோ பைடன் தலைக்கு மேல் பறந்த சீன பலூனை கொஞ்சம் நாள் வேடிக்கை பார்த்துவிட்டுச் சுட்டு வீழ்த்திய காணொளியைப் பார்த்திருப்பீர்கள். கடலில் விழுந்த பலூனின் பாகங்களை ஆய்வு செய்கிறார்கள் என்று படித்த போது ஒரு ’பக்’ ஏற்பட்டது. காரணம் சிறுவயதில் நாங்கள் விட்ட அந்த ஸ்பெஷல் பலூனாக இருக்குமோ சந்தேகம்.
ஏழாவது என்று நினைக்கிறேன், எட்டாவது கூட இருக்கலாம், அது முக்கியமில்லை நான் அரைக்கால் டவுசர் போட்ட காலத்தில் எங்கள் வீட்டுக்கு அருகில் ஆரம்பச் சுகாதார நிலையம் ஒன்று ஹிந்தி தமிழ் எழுத்துக்களுடன் தற்காலிகமாக முளைத்தது. அதற்குள் நுழைவதற்கு முன் பலூனை கொஞ்சம் ஊதலாம்.
பத்துப் பைசாவிற்கு இரண்டு பலூன் கிடைத்த காலம். போச்சம்பள்ளி சேலை போல மஞ்சள் சிகப்பு, நீலம், பிரவுன், சிகப்பு, பச்சை என்று இரண்டு நிறமாகவோ , புள்ளிகள் நிறைந்த சுங்குடி போலவோ விதவிதமாகக் கிடைக்கும். பலூன் காரர் மூங்கில் குச்சியில் பூனை, பறவை போன்று பலூன் சிற்பங்களுடன் அழுக்கான ஒரு பிளாஸ்டிக் பையில் பிஜிலி வெடி போலப் பல பலூன்களுடன் கையில் ஒரு வெள்ளரிப் பிஞ்சு அளவுக்கு பலூன் ஒன்றை ஜபமாலை போல உராய்ந்து பலூனுள் இருக்கும் நெருக்கமாக மூலக்கூறுகளை உசுப்பிவிட்டு ஒலி அலைகளைக் கடத்திக்கொண்டு செல்வார்.
தேர்ந்தெடுத்த நிறத்தில் கைப் பம்ப் வழியே காற்றை அசால்டாக அடித்து பலூனில் முடிச்சு போட்ட இடத்தில் நடிகை சாவித்திரி கொண்டை போன்ற ஒன்றை அமைத்து, நீட்டமாக பலூன் ஒன்றை இணைத்து லாலி பாப் போலக் கொடுப்பார். ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி அன்று அதை வாங்கிக்கொண்டு வரும் வழியிலேயே பலூன் ஸ்தூல சரீரத்தை விட்டு அர்ச்சிராதி மார்க்கம் வழியே வைகுண்டம் சென்றுவிடும். கிழிந்த பலூனை தூக்கிப் போட மாட்டோம். அதை விரலில் சொருகி, வாயில் உள்ளே இழுத்து அம்மாவிற்குத் தெரியாமல்( தொண்டையில் மாட்டிண்டா நாளைக்கு ஸ்கூல் போக முடியாது… ) குட்டி குட்டி முட்டைகளாக அதை இழுக்கும் சில சமயம் வாய்க்குள்ளே பட் என்று வெடிக்கும். இதைத் தவிர பலூனில் தண்ணீர் நிரப்பி, அல்லது அடிப்பாகத்தை இழுத்து ஆப்பிள் செய்வது.. என்று பல விஷயங்கள் இருக்கிறது.
ஏழாவது படிக்கும் போது பம்பரம் விட ஆரம்பித்து, பலூன் ‘சின்ன பசங்க’ விளையாட்டான போது எங்களுக்கு ‘கேஸ்’ பலூன் மீதான ஈர்ப்பு குறையவில்லை. பொருட்காட்சியில் கிடைக்கும் இந்த ஹீலியம் பலூன்கள் எப்போது செங்குத்தாக நம் கையிலிருந்து தப்பிக்கக் காத்துக்கொண்டு இருக்கும். ( இவை ஹீலியம் கிடையாது ஹைட்ரஜன் என்று பிறகு தெரிந்துகொண்டேன்) வீட்டின் உத்திரத்தில் போய் முட்டி நிற்கும். பள்ளியில் ஆண்டு விழா, விளையாட்டுப் போட்டியில் தலைமை விருந்தினர் நிகழ்ச்சியைத் திறந்து வைக்கும் போது பறக்க விடுவார்கள். அவை கொத்தாக மேலே சென்று பிறகு தனித் தனியாகப் பிரிந்து காணாமல் போவது வரை பார்த்துக்கொண்டு இருப்போம். அவை எல்லாம் எங்கே செல்லும், வெடிக்குமா, கீழே விழுமா அல்லது சென்னைக்கு மேல் கடலில் மிதந்து கொண்டு இருக்குமா என்று யோசித்திருக்கிறேன்.
ஒரு முறை நாங்கள் கிரிக்கெட் விளையாடிய போது பந்து ஆரம்பத்தில் சொன்ன ஆரம்பச் சுகாதார நிலையத்துக்குள் சென்றுவிட்டது. பந்தைப் பொறுக்கச் சென்றவன் பந்துடன் சில பலூன்களை எடுத்துவந்தான். பழுப்பு நிறத்தில் அவை வித்தியாசமாக இருந்தது. நாங்கள் மாற்றி மாற்றி ஊதினோம் ஆனால் எவ்வளவு ஊதியும் வெடிக்கவே இல்லை. ‘மாப்ளே இது ஏதோ ஃபாரின் சரக்கு போல ஊத ஊத பெரிசாகுது’ என்று எங்கள் ஆச்சரியத்துக்கு அளவே இல்லை.
இன்னொருவன் ’இதில் கேஸ் நிரப்பினால் ?’ என்றான்.
அந்த யோசனையை நினைக்கவே சுவாரசியமாக இருந்தது. நாடகத்தில் ‘அதோ டாக்டரே வந்துவிட்டாரே’ என்று சொல்ல டாக்டர் உள்ளே நுழைவது போலச் சாலையில் கேஸ் பலூன் காரர் சென்றுகொண்டு இருந்தார்.
உடனே அவரை கூப்பிட்டு ’இந்த பலூனில் கேஸ் நிரப்பி கொடுக்க எவ்வளவு ?’ என்றோம்.
‘தம்பி இது பலூன் இல்லை, எங்கே கிடைத்தது ?’ என்ற கேள்விகளைப் புறம்தள்ளி. ‘இது பலூன் தான் எவ்வளவு?’ என்றோம். சொன்னார். அவ்வளவு காசு எங்களிடமில்லை. அவர் அவர் வீட்டில் சென்று கிடைத்த சில்லறை, பாக்கெட் மணி போன்றவற்றை எடுத்து வந்து தட்சணையாகக் கொடுத்தோம். பலூன் பாகுபலி போல விரிந்தது. அதை எல்லோரும் சேர்ந்து பறக்கவிட, மெதுவாகக் காற்றில் மிதந்து மேலே சென்று மறைந்தது.
சில மாதங்கள் கழித்து ஏதோ ஒரு ரஜினி படம் ஆரம்பிப்பதற்கு முன் ஒரு ஹிந்தி விளம்பரம் கீறல்களுடன் தமிழில் வந்தது. அப்பா அம்மா, ஒரு குழந்தையுடன் விளையாடினார்கள். கடைசியில் அஞ்சால் அலுப்பு மருந்து பொட்டலம் போல ஒன்றைக் காண்பித்தார்கள். ‘டீலக்ஸ் நி... ’ என்று ஏதோ எழுதியிருப்பதைப் படித்து முடிப்பதற்குள், முன் வரிசையில் சிலர் ரஜினி வருவதற்கு முன்பு அதற்கே கைதட்டினார்கள்.
- சுஜாதா தேசிகன்
13.02.2023
Moods ஐ கிளப்பிட்டீர் ஓய்! பலூன் ஊதற mood ஐ சொன்னேன்
ReplyDeleteE...N...J...O...Y..E...D Sir
ReplyDelete