Skip to main content

திருமழிசையாழ்வார்

 திருமழிசையாழ்வார்



அடையார் கேன்சர் இன்ஸ்டிடியூட்டை விட்டு வெளியே வந்த போது “உங்க அம்மாவிற்கு மருந்து இல்லை, சந்தோஷமாக வைத்துக்கொள்ளுங்கள்” என்று டாக்டர் சொன்னது திரும்ப திரும்ப ஒலித்துக்கொண்டு இருந்தது.

எல்லாம் பெருமாள் விருப்பம் என்று உபன்யாசத்தில் கேட்டிருந்தாலும் ”அம்மா... உயிருடன் இன்னும் எவ்வளவு நாள் ?” என்ற கேள்வி என் மனதில் எழாமல் இல்லை.

அம்மா என்ன ஆசைப்பட்டார் என்று மனம் யோசிக்கத் தொடங்கியது...

“திருமழிசை இங்கேயே இருக்கு ஆனா போனதில்லை” என்று அம்மா என்றோ சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. மறுநாள் காலை அம்மாவை அழைத்துக்கொண்டு திருமழிசைக்குச் சென்றேன்.

”மாமாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று நாமம் பலவற்றையும்” மாலையாகத் தொடுத்தால் போதும் என்கிறாள் ஆண்டாள். மாமாயன் என்றால் மாயனுக்கு எல்லாம் மாயன் என்று சொல்லலாம். மாயனை define செய்ய திருமழிசை ஆழ்வார் பாடல் ஒன்று போது.

ஆனைகாத்து ஓர் ஆனை கொன்று, அது அன்றி, ஆயர் பிள்ளையாய்
ஆனை மேய்த்து; ஆ-நெய் உண்டி; அன்று குன்றம் ஒன்றினால்
ஆனை காத்து மை-அரிக்கண் மாதரார் திறத்து முன்
ஆனை அன்று சென்று அடர்த்த மாயம் என்ன மாயமே?

கஜேந்திரனைக் காத்த நீ குவலயாபீடம் என்ற இன்னொரு யானையைக் கொன்றாய். பசுக்களை மேய்த்தாய். நெய் உண்டாய்; மலையைத் தூக்கி பசுக்களைக் காத்தாய். நப்பின்னையை அடைய ஏழு எருதுகளைக் கொன்றாய் - நீ மாயன்! என்கிறார் ஆழ்வார்.

திருமழிசையாழ்வார் பெற்றி கொஞ்சம் பார்க்கலாம்.

முதலாழ்வார்கள் வாழ்ந்த காலத்தே, உடன் வாழ்ந்த ஆழ்வார் திருமழிசையாழ்வார். இவரது பிறப்பும் கண்ணனின் அவதாரத்தை ஒத்தது. தேவகியின் மகனாகப் பிறந்து, யசோதையின் அரவணைப்பில் வளர்க்கப் பெற்றது போல திருமழிசை ஆழ்வார் வளர்ந்தார்.

திருமாலின் அடியவராய்த் திகழ்ந்த பார்க்கவ முனிவருக்கும் கனகாங்கி என்னும் தேவமங்கைக்கும் திருமழிசை என்ற ஊரில் பெருமாளின் சுதர்சனச் சக்கரத்தின் அம்சமாய் அவதரித்தவர் திருமழிசையாழ்வார்.

கை, கால்கள் இன்றிப் பிறந்ததால் பெற்றோர் இக்குழந்தையை ஒரு பிரம்புப்புதரின் கீழ் போட்டுவிட்டுச் செல்ல. பிறகு பெருமாளின் அருளால் உருப்புகள் வளர்ந்து, பசி மிகுதியால் அழுத போது திருமகள் பாலமுது தந்தார் என்கிறது குருபரம்பரை.

எந்தையே வினையேன், தந்த இந்தத் தொள்ளமுதினை அமுது செய்க என்று, சிந்தையோடு அவன் பரவிட, அவன் அருள் செய்தே அந்த நற்சுவை அழிழ்தினை அமுது செய்தனனால்

என்று திவ்வியசூரி சரிதம் ( பாடல் 57 ) சொல்கிறது.

திருவாளன் என்பவன் பிரம்பு அறுக்கப் போன இடத்தில் குழந்தையின் குரல் கேட்டுக் குழந்தையைக் கண்டெடுத்து மகிழ்ச்சியுடன் இல்லத்துக்கு எடுத்துச் சென்றான். அவன் மனைவி பங்கயச் செல்வி அன்புடனும், ஆசையுடனும் குழந்தையை வளர்த்து வந்தனர்.

திருமழிசையில் தோன்றியதால் ‘திருமழிசையாழ்வார்’ என்ற பெயர் பெற்ற இவருக்கு ‘பக்திசாரர்’, ‘மழிசைப் பிரான்’ என்ற திருநாமங்கள் உண்டு.

‘பிரான்’ என்ற சொல் பெருமாளைக் குறிக்கும் ஆழ்வார்களில் ‘பிரான்’ என்ற ஏற்றத்தைப் பெற்றவர் இவர் ஒருவரே. "கிடந்தவாறு எழுந்து இருந்து" என்று ஆவார் கூற ஆராவமுதன் தன் சயனத்தை விட்டு எழ ஆரம்பித்தான். அன்று முதல் ஆராவமுதன் ஆராவமுதாழ்வார் என்றும் இவர் மழிசைப்பிரான் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

’ஆழ்வார்’ என்ற பெயரை பெருமாள் ஏற்றுக் கொண்டு ஆராவமுதாழ்வார் ஆனார்.

சமணம், சாக்கியம், சைவம் போன்ற பல சமயங்களில் புகுந்து ஆராய்ந்து இறுதியாக வைணவ சமயத்தின் மூலமாகத்தான் பரம்பொருளைக் கண்டறிய முடியும் என்பதைக் கண்டவர்.

திருமழிசையாழ்வார் பல மதங்களைத் தழுவி, உண்மை அறியாது தவித்த போது அவரை திருத்தியவர் பேயாழ்வார் தான்.

தாம் அருளிய நான்முகன் திருவந்தாதி முதல் பாட்டில்
“நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்
தான் முகனாய்ச் சங்கரனைத்தான் படைத்தான்” என்று ஸ்ரீ நாராயணனே பரம்பொருள் என்றும், அவனே எல்லாவற்றிற்கும் மூல காரணம் என்றும் அடித்துக் கூறுகிறார்.

மாற்றுச் சமயக் கருத்துகளைவிடத் திருமாலே பரம்பொருள் என்னும் பேருண்மையை நிலைநாட்டுவதில் மற்ற ஆழ்வார்களைக் காட்டிலும் இவர் அழுத்தமாகச் சொல்லுவதால், ஆழ்வாரை, மணவாள பெருமாள் நாயனார், "உறையில் இடாதவர்" என்று ஆசாரிய ஹ்ருதயத்தில் போற்றியுள்ளார்.
( என்றும் பகை அழிக்க ஆயத்தமாய் இருப்பவர் என்று பொருள், இங்கே பகை என்பது மாற்றுச் சமய கருத்துகளைக் குறிக்கும் )

ஸ்ரீவேதாந்த தேசிகன் பிரபந்தசாரத்தில்

தைம்மகத்தில் வருமழிசைப் பரனே மற்றைச்
சமயங்கள் பலதெரிந்து மாயோ னல்லாற்
றெய்வம்மற் றில்லையென வுரைத்த வேதச்
செழும்பொருணான் முகன்றெண்ணூற் றாறு பாட்டு
மெய்ம்மிகுத்த திருச்சந்த விருத்தப் பாடல்
விளங்கியநுaற் றிருபதுந்தப் பாமன் மெய்யே
வையகத்து மறவாம லுரைத்து வாழும்
வகையடியே னுக்கருள்செய் மகிழ்ந்து நீயே

திருமழிசையாழ்வார் தை மகம் திருநட்சத்திரத்தில் திருமழிசையில் அவதரித்தார். இவர் பிற மதங்கள் பலவற்றிலும் புகுந்து ஆராய்ந்து அவற்றின் குற்றங்களை உணர்ந்து 96 பாசுரங்கள் கொண்ட நான்முகன் திருவந்தாதி வாயிலாக ஸ்ரீமத் நாராயணனே உபாசிக்கத்தக்கத் தெய்வம் என்று வேதத்தின் சாரார்த்ததை ஸ்தாபித்தருளினார். மேலும் திருசந்தவிருத்தம் என்ற 120 பாசுரங்கள் கொண்ட பிரபந்தத்தால் ‘சகல வஸ்துக்களும் எம்பெருமானுக்குச் சரீரமாய் நிற்பவை என்ற உண்மைப்பொருளை விளக்கியுமருளினார். இவ்விரண்டு பிரபந்தங்களையும் தவறாது மறவாது உரைத்து வாழும் வகையை அருள வேண்டும் இப்பாசுரத்தில் ஸ்வாமி வேதாந்த தேசிகன் திருமழிசைபிரானைப் பிராத்திக்கிறார்.

திருமழிசையாழ்வாரின் பெருமையை உணர்த்தும் வகையில் பல கதைகள் கூறப்படுவதுண்டு. அவற்றுள் முக்கியமானது அவருடைய சீடன் கணிகண்ணனைப் பற்றிய கதை.

கணிகண்ணன் பல்லவ மன்னனின் ஆணைப்படிக் கச்சியை விட்டு வெளியேறிய போது, திருமழிசை ஆழ்வாரின் பாட்டுக்கு ஏற்பத் திருவெஃகாவில் பள்ளி கொண்டிருந்த பெருமாள் தன் பைந்நாகப் பாயைச் சுருட்டிக்கொண்டு இவர் பின் சென்றார். பிறகு மனம் வருந்தி மன்னன் மன்னிப்பு கேட்க, இவரது வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் ஊர் திரும்பினார்.

இந்தக் கதையின் ஆதாரம் திருமழிசை பாடிய இரண்டு தனிப்பாடல்கள்:

கணிகண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா நீகிடக்க வேண்டா துணிவுடைய
செந்நாப் புலவனும் செல்கின்றேன் நீயும் உன்றன்
பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள்.

என்று முதல் பாட்டுக்குப் பெருமாள் எழுந்து செல்ல, சமாதானமானதும் அதைச் சற்றே மாற்றி

கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டும் துணிவுடைய
செந்நாப் புலவரும் செலவொழிந்தான் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய் படுத்துக்கொள்.

என்று முடியுமாறு பாட, திரும்ப வந்து விட்டார்!

இவர் மங்களாசாசனம் செய்த திவ்யதேசங்கள் 17

மணவாள மாமுனிகள் "துய்மதி பெற்ற மழிசை பிரான்" என்றும் இவர் அவதரித்த திருநாளை "நல்லவர்கள் கொண்டாடும் நாள்" ( உபதேசரத்தினமாலை 12 ) என்றும் சிறப்பித்துக் கூறுகிறார்.

இன்று திருமழிசை ஆழ்வார் திருநட்சத்திரம். நாமும் கொண்டாடுவோம் !

திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம்!!

பிகு: இன்று என் திருதகப்பானாரின் (86ஆம்) பிறந்த தினம், என் அம்மா திருமழிசையாழ்வாரைத் தான் கடைசியாகச் சேவித்தார் - மாயம் என்ன மாயமே!

- சுஜாதா தேசிகன்
7.2.2023
தை மகம்
திருமழிசை ஆழ்வார் திருநட்சத்திரம்.
( படம் : எங்கள் அகத்தில் இன்று திருமழிசை ஆழ்வார் )

Comments