சுட்டு வீழ்த்தப்பட்ட பலூன் ! ஜோ பைடன் தலைக்கு மேல் பறந்த சீன பலூனை கொஞ்சம் நாள் வேடிக்கை பார்த்துவிட்டுச் சுட்டு வீழ்த்திய காணொளியைப் பார்த்திருப்பீர்கள். கடலில் விழுந்த பலூனின் பாகங்களை ஆய்வு செய்கிறார்கள் என்று படித்த போது ஒரு ’பக்’ ஏற்பட்டது. காரணம் சிறுவயதில் நாங்கள் விட்ட அந்த ஸ்பெஷல் பலூனாக இருக்குமோ சந்தேகம். ஏழாவது என்று நினைக்கிறேன், எட்டாவது கூட இருக்கலாம், அது முக்கியமில்லை நான் அரைக்கால் டவுசர் போட்ட காலத்தில் எங்கள் வீட்டுக்கு அருகில் ஆரம்பச் சுகாதார நிலையம் ஒன்று ஹிந்தி தமிழ் எழுத்துக்களுடன் தற்காலிகமாக முளைத்தது. அதற்குள் நுழைவதற்கு முன் பலூனை கொஞ்சம் ஊதலாம். பத்துப் பைசாவிற்கு இரண்டு பலூன் கிடைத்த காலம். போச்சம்பள்ளி சேலை போல மஞ்சள் சிகப்பு, நீலம், பிரவுன், சிகப்பு, பச்சை என்று இரண்டு நிறமாகவோ , புள்ளிகள் நிறைந்த சுங்குடி போலவோ விதவிதமாகக் கிடைக்கும். பலூன் காரர் மூங்கில் குச்சியில் பூனை, பறவை போன்று பலூன் சிற்பங்களுடன் அழுக்கான ஒரு பிளாஸ்டிக் பையில் பிஜிலி வெடி போலப் பல பலூன்களுடன் கையில் ஒரு வெள்ளரிப் பிஞ்சு அளவுக்கு பலூன் ஒன்றை ஜபமாலை போல உராய்ந்து பலூனுள...