Skip to main content

திருப்பாவைப் பிரியனின் தீபாவளி

 திருப்பாவைப் பிரியனின் தீபாவளி 



’ஆறு வித்தியாசம்’ படம் போல இருக்கும் முதல் படத்தில் சட்டென்று உங்கள் கண்களுக்கு ஒரு வித்தியாசம் புலப்பட்டால் தொடர்ந்து படிக்கலாம்.  

சமீபத்தில் அடியேன் யாத்திரை சென்று வந்தது உங்களுக்கு நினைவு இருக்கலாம். ஒரு வாரத்துக்கு முன் "பனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றி"  என்று ஆண்டாள் கூறுவது போல் நிஜமாகவே பனி சொட்ட பீகார் மாநிலத்தில் ‘சீதாமர்ஹி’ என்ற இடத்துக்குச் சென்றேன்.  அயோத்தியா ராம ஜென்ம பூமி என்றால் ‘சீதாமர்ஹி’ சீதை ஜென்ம பூமி! ஆம் சிதை அவதார ஸ்தலம்.   இவ்வளவு ராம பக்தர்கள் எங்கள் ஊருக்கு வந்திருக்கிறீர்கள் என்று இளைஞர்களும், சின்ன பசங்களும் பைக்கில் பல இடங்களில் அலைந்து திரிந்து  பால் வாங்கி க்யூவில் நின்ற எங்கள் எல்லோருக்கும் ‘சாய்’  கொடுத்து உபசரித்தார்கள்.  எங்கள் ஊர் பெருமாளை சேவிக்க இவ்வளவு கூட்டமா என்று பூரிப்பில் இருந்ததை கண்கூட பார்க்க முடிந்தது. 

ஒருவர் என்னிடம் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்க ‘அயோத்தியா’ என்றேன். அதற்கு அவர் ராம ஜென்மப் பூமியிலிருந்து சீதையின் ஜென்மப் பூமிக்கு வந்துள்ளீர்கள். உங்களைத் தரிசிப்பதே எங்கள் பாக்கியம் என்று தலைமீது கைகூப்பி வணங்கினார். 

இப்படிப் பட்ட மக்களைக் கவனித்துக்கொண்டு நீண்ட வரிசையில் நின்று கொண்டு பனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றி என்ற பாசுரமான ‘கனைத்து இளங் கற்று எருமை கன்றுக்கு இரங்கி’ என்ற பாசுரத்தைச் சேவித்த போது அதில் ஆண்டாள் ’மனதுக்கு இனியான்’ என்று ஸ்ரீராமரைக் கொண்டாடுகிறாள். அந்த மனதுக்கு இனியானின் மனதுக்குள் இருக்கும் சீதை எப்பேர்ப்பட்ட இனிமையானவளாக இருக்க வேண்டும். அந்த சீதையை ‘மா சீதா’ என்று அந்த ஊரில் கொண்டாடும் மக்கள் இனிமையாக இருப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. 

பொறுமையாக வரிசையில் நின்று ஸ்ரீ சீதாபிராட்டி சமேத ஸ்ரீராமரைச் சேவித்துவிட்டு வெளியே வந்தேன். எல்லா கடைகளிலும் ஏதோ துணிகள் தொங்க விட்டு இருந்தார்கள். விசாரித்தேன். இவை‘சீதா மாதா’விற்கு என்றார்கள். ஒரு துணியை வாங்கிக்கொண்டு குறுக்கு வழியில் மீண்டும் கோயிலுக்குள் நுழைந்தேன்.  அர்ச்சகரிடம் அதைச் சமர்ப்பித்தேன். சில நொடிகளில் அதை சீதாபிராட்டிக்கு சாத்தினார். கொஞ்ச நேரம் சீதை தரித்த அந்த வஸ்திரத்தை சீதையின் திருவடியை அலங்கரித்த பாரிஜாதப் பூக்களுடன் இலவச இணைப்பாக குட்டி லட்டுடன் என் கையில் கொடுத்தார். 



இன்று தீபாவளிக்கு எங்கள் இல்லத்தில் வீற்றிருக்கும் திருப்பாவைப் பிரியனான நம்பெருமாள் சீதை சாத்திக்கொண்ட வஸ்திரத்தைச் சாத்திக்கொண்டுள்ளார். பூமிப்பிராட்டிக்குச் சூடிக்கொடுப்பது கைவந்த கலை.

பிகு: நம்பெருமாள் ’மேட்சிங்காக’ சாத்திக்கொண்டு இருக்கும் கிரீடம் அயோத்தியா தசரத பவனில்... அது வேறு கதை!

எல்லோருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். 

- சுஜாதா தேசிகன்
24.10.2022
தீபாவளி

Comments

  1. நீங்கள் திரு வேளுக்குடி ராம அனு யாத்திரை சென்று உள்ளீர்கள் என்று
    தெரிகிறது. அந்த அனுபவங்களை தொடர்ந்து எழுதினால் அங்கே செல்ல
    விரும்பும் அன்பர்களுக்கு உபயோகமாக இருக்குமே.

    ReplyDelete

Post a Comment