Skip to main content

தூப்புல் ஸ்ரீ வேதாந்த தேசிகனே! இன்னுமொரு நூற்றாண்டிரும்!

 தூப்புல் ஸ்ரீ வேதாந்த தேசிகனே! இன்னுமொரு நூற்றாண்டிரும்!


வருடம் - 1273 . காஞ்சிபுரம். ஸ்ரீ வரதராஜர் கோயில். காலை. 

நடாதூர் அம்மாள் என்ற வைணவ பெரியவர் மரப் பலகை மீது அமர்ந்து காலக்ஷேபம் செய்துகொண்டு இருந்தார். அவரை சுற்றி, வடக்கு திருவீதிப் பிள்ளை, சுரதபிரகாசிக பட்டர் போன்ற பெரியவர்கள் கூர்ந்து கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அந்தச் சமயம் பளிச் என்ற திருமண்ணுடன் குட்டி ராமானுஜர் போல ஐந்து வயதுக் குழந்தை, தன் மாமாவான கிடாம்பி அப்புள்ளார் கையை பிடித்துக்கொண்டு சிரித்த முகத்துடன் உள்ளே வர, எல்லோரும் அந்தக் குழந்தையை வியந்து, ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.

நடாதூர் அம்மாள் மெய்மறந்து “அடடா ! என்ன முகப்பொலிவு! நம் ராமானுஜரே குழந்தையாக நடந்து வருவது போல இருக்கிறதே!” என்று தன் ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் “கிடாம்பி அப்புள்ளாரே! இந்தக் குழந்தை யார் ? ” என்று கேட்க, அப்புள்ளார் “என் சகோதரியின் மகன். என் மருமான். பெயர் ’திருவேங்கட நாதன்’ ” என்றார்.

உடனே அந்தக் குழந்தை நடாதூர் அம்மளை விழுந்து சேவித்தது. அம்மாள் குழந்தையை கையில் எடுத்து தன் மடியில் வைத்துக்கொண்டு மீண்டும் தன் காலக்ஷேபத்தைத் தொடர ஆரம்பித்தார். ஆனால் எந்த இடத்தில் விட்டோம் என்று அவருக்கு மறந்துவிட்டது. “இந்த குழந்தை வந்த போது எங்கே நிறுத்தினேன்?” என்று கேட்க, கேட்டுக்கொண்டு இருந்தவர்களுக்கும் நிறுத்திய இடம் தெரியவில்லை. அவர்களுக்கும் மறந்திருந்தார்கள்.

மடியில் இருந்த குழந்தை ”அடியேன் வரும் போது நீங்கள் நிறுத்திய இடம் இது தானே!” என்று கடைசியாக கேட்ட வாக்கியத்தை மழலையில் கூற உடனே அந்தக் குழந்தையை வியப்புடன் மார்புடன் அணைத்துக்கொண்டு உச்சி முகர்ந்து, ‘நம் எம்பெருமானார் போல் நம் சம்பிரதாயத்தை நிலை நிறுத்தி, திருமழிசை ஆழ்வார் நெல்லை கிள்ளி சுட்டிக் காட்டியது போல இன்று காட்டிக் கொடுத்த இந்த குழந்தை திருமழிசை ஆழ்வார் போல மற்ற மதங்களை நிராகரித்து வேத செழும் பொருள் காண்பித்த நாராயணனைத் தவிர வேறு தெய்வம் இல்லை என்று உரைத்து அதை எல்லோரிடமும் கொண்டு செல்லப் போகிற அவதாரப் புருஷராக விளங்கப் போகிறான்!” என்று அக் குழந்தைக்குத் தீர்க்கதரிசனத்துடன் ஆசீர்வாதமாக ஒரு ஸ்லோகத்தை அருளினார்.

“ ப்ரதிஷ்டாபித வேதாந்த : ப்ரதிக்ஷிப்த பஹிர்மத:

பூயா: த்ரைவித்யமாந்ய: த்வம் பூரிகல்யாண பாஜநம்”

அம்மாள் திருவாக்கில் வந்த ஸ்லோகத்தின் பொருள்: “பிற மதங்களைக் கண்டித்து விலக்கி, நம் வேதாந்த சித்தாந்தத்தை ஸ்தாபித்து, வித்துவான்களின் பெருமதிப்பு பெற்று, சகல மங்களங்கலங்களையும் பெறுவாய்!”

ஸ்லோகம் மூலம் அருள் ஆசீர்வாதம் செய்த அம்மாள் அப்புள்ளாரை நோக்கி “வேங்கடநாதனுக்கு அடியேனே நம் சம்பிரதாயத்தை கற்றுக் கொடுக்க ஆசை, ஆனால் என் முதுமை காரணமாக அப்பாக்கியம் கிட்டப் போவதில்லை! அப்புள்ளாரே! அதனால் நீரே இக் குழந்தைக்கு ஆசாரியராக இருந்து, நம் சம்பிரதாயப் பொக்கிஷங்களான வேதங்களையும், சாஸ்திரங்களையும், ஆழ்வார்களின் அருளிச் செயல்களும், நம்மாழ்வாரின் பகவத்விஷயங்களையும், உடையவரின் ஸ்ரீபாஷ்யத்தையும், திருமந்திரம், த்வயம், சரமஸ்லோகத்தின் அர்த்த விசேஷணங்களையும் பிரசாதிக்க வேண்டும். இதுவே உடையவரின் திருவுள்ளத்துக்கு உகப்பாக இருக்கும்!” என்றார்.

“தங்கள் அனுகிரஹித்தபடியே எல்லா பெருமைகளையும் பெறுவான் என்பதில் ஐயம் இல்லை!” என்று அப்புள்ளார் கூறிய போது கோயிலில் மணி ஓசை கேட்ட போது, அம்மாள் திருவாக்கைப் பேரருளாளனும் சேர்ந்து ஆமோதிப்பது போல இருந்த அச்சமயம், அம்மாள் குழந்தையின் கையை பிடித்து அப்புள்ளாரிடம் கொடுக்க, அப்புள்ளாரும் குழந்தையும் அம்மாளை வணங்கிவிட்டு பேரருளாளனைத் தரிசிக்க கிளம்பினார்கள்.

அந்தக் குழந்தையைத் தான் பின்னாளில் ஸ்ரீ வேதாந்த தேசிகன் என்று போற்றப்பட்ட அவதாரப் புருஷர்!

''ஆங்கிலத்தில் அதிகமாக உபயோகப்படுத்தும் எழுத்து ''E என்று 'frequency distributionவைத்துக் கண்டுபிடிப்பார்கள். 'E' எழுத்துக்கு 12.7%'. 'இந்த E எழுத்தைப் பற்றி இன்னொரு தகவல். 'Georges Perec' என்றவர் 1969ல், La Disparition( A void ) என்னும் 200 பக்கம் கொண்ட நாவலை பிரஞ்சு மொழியில் எழுதினார். அதில் ஆங்கில எழுத்து 'e' கிடையாது. இன்னொரு அதிசயம் இருக்கிறது. Gilbert Adair என்பவர் அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அதிலும் ஆங்கில எழுத்து 'e' கிடையாது.

’E’ இல்லாமல் ஒரு நாவலை எழுதிவிடலாம் ஆனால் ஸ்வாமி தேசிகன் பற்றிச் சொல்லாமல் ஓர் உபன்யாசம், காலட்சேபம் செய்வது என்பது நினைத்துக் கூடப் பார்க்க முடியாதது.

இன்று ஸ்ரீமந்நிகமாந்த மஹாதேசிகன் திருநட்சத்திரம்.
படம்: அடியேன் இல்லத்தில்

- சுஜாதா தேசிகன்
5.10.2022


Comments