அப்பாவுக்குத் திருமணம் ஆவதற்கு முன்பே தேசிகன் என்று எனக்குப் பெயர் வைத்துவிட்டார். அதாவது பிறக்கப் போகும் முதல் பையனின் பெயர் தேசிகன் என்று தீர்மானித்துவிட்டார். இதை என் அப்பாவே என்னிடம் சொல்லியிருக்கிறார். ”பெண்ணாகப் பிறந்திருந்தால் என்ன செய்திருப்பே?” என்று ஒரு முறை கேட்டதற்கு . ”பெருமாள் ஏமாற்ற மாட்டார்” என்றார் நம்பிக்கையுடன். அவருக்கு ஸ்ரீ வேதாந்த தேசிகன் மீது இருந்த பற்று அப்படி. பெயரில் என்ன இருக்கிறது என்று நினைக்கலாம். கொஞ்சம் பின்னோக்கி ஸ்ரீ ராமானுஜர் சரித்திரத்தை புரட்டலாம். ஸ்ரீஆளவந்தார் திருநாடு அலங்கரித்த சமயம். அவருடைய மூன்று விரல்கள் மடங்கியிருந்தது பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஸ்ரீராமானுஜர் ஆளவந்தாரின் ஆசையை ஒவ்வொன்றாக நிறைவேற்றுவேன் என்று சொல்ல, மடங்கிய விரல்கள் விரிந்தன. அந்த மூன்று ஆசைகள் நம்மாழ்வாரின் திருநாமத்தை சூட்ட வேண்டும். பராசர பட்டர், வேத வியாசர் திருநாமங்களை சூட்ட வேண்டும் ஸ்ரீபாஷ்யத்துக்கு உரை இதில் முதல் இரண்டு ஆசைகள் - பெயர் சூட்ட வேண்டும் என்பது ! பாஷ்யம் எழுதுவது போல கஷ்டமானது கிடையாது. சில வருடங்கள் முன் பெரியவாச்சான் ...