திருகுருகை காவலப்பன்
1914ஆம் வருடம் பதிப்பித்த ஐந்து அணா விலையுள்ள புத்தகத்தில் இரண்டு வரி இப்படி இருந்தது.
“குருகை காவலப்பன் சன்னதி, ஸ்ரீமுஷ்ணத்திலிருந்து 7 மைல். இங்கிருந்து காட்டுமன்னார் கோயில் 8 மைல்”
2013ல் காட்டுமன்னார் கோயில் சென்ற போது இந்தத் தகவல் அடியேனுக்குத் தெரியாது. இதற்காகவே மீண்டும் காட்டுமன்னார் கோயில் செல்ல வேண்டும்
’குருகை காவலப்பன்’ என்ற பெயர் எங்கோ கேட்ட பெயராக இருக்கிறதே என்று குழம்ப வேண்டாம். இவர் ஸ்ரீமத் நாதமுனிகளின் அபிமான சிஷ்யர். அவதார ஸ்தலம் திருக்குருகூர்.
ஸ்ரீமத் நாதமுனிகளுக்கு 11 சிஷ்யர்கள் அதில் முக்கியமான இருவர் உய்யக்கொண்டார் மற்றும் குருகைக் காவலப்பன்.
குருகைக் காவலப்பன் திருக்குருகூரில் தை, விசாகத்தில் அவதரித்தவர். பெரும் செல்வந்தரான இவர் உய்யக்கொண்டார் மூலம் நாதமுனிகளை ஆச்ரயித்து அவராலே பஞ்ச சமஸ்காரம் செய்யப் பெற்று ஸ்ரீவைஷ்ணவர் ஆனார்.
குருகைக் காவலப்பன் பற்றி ஐதீகத்திலும், பின்பழகிய பெருமாள் ஜீயர் தொகுத்த வார்த்தா மாலையில் குறிப்பு இருக்கிறது. மற்றபடி அவர் வாழ்க்கை வரலாறு போன்றவை இல்லை.
ஸ்ரீமந்நாதமுனிகள் சரமத்திருமேனியை நீத்த இடத்தில் ( திருப்பள்ளிப்படுத்தப் பட்ட இடத்தில் ) தன்னுடைய ஆசாரியனின் திருவடியை தியானித்துக் கொண்டு பக்தியுடன் வாழ்ந்து வந்தார். இவருடைய திருவாராதன பெருமாள் சக்கரவர்த்தி திருமகனார்.
நாதமுனிகள் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை நம்மாழ்வாரிடமிருந்து பெற்றுத் தந்தவர். ‘கண்ணிநுண் சிறுத்தாம்பு’ என்ற 11 பாசுரங்களை ஆழ்வார் திருநகரியில் உள்ள புளியமரத்துக்கு அடியில் ஆஷ்டாங்க யோகத்தில் நம்மாழ்வாரைத் தியானித்துப் பெற்றார்.
நாதமுனிகள் அருளிச் செய்தவற்றுள் யோக ரஹஸ்யம் அடங்கும். அதை குருகைக் காவலப்பன் சொல்லிக் கொடுத்தார். அவர் காலத்துக்குப் பிறகு, அதை தன் பேரனான ஆளவந்தாரிடம் சொல்லித் தரும்படி நியமித்தார்.
ஆளவந்தார் யோக ரஹஸ்யத்தை கற்றுக்கொள்ள குருகைக் காவலப்பன் தியானிக்கும் இடம் வந்தடைந்த போது, குருகைக் காவலப்பன் தியானத்தில் இருந்தார். அவரைத் தொந்தரவு செய்ய விரும்பாமல், ஒரு மதிலின் பின் மறைந்து அவர் முடிக்கும் வரை காத்துக்கொண்டிருக்க, திடீர் என்று குருகைக் காவலப்பன் கண் விழித்து “இங்கே சொட்டை குலத்தைச் சேர்ந்தவர் யார்?” என்று கேட்க, ஆளவந்தார் வெளிப்பட்டு தன்னை நாதமுனிகளின் பேரன் என்று அறிமுகம் செய்து கொண்டார். (நாதமுனிகள் சொட்டை குலத்தைச் சேர்ந்தவர்.)
ஆளவந்தார் ஆச்சரியப்பட்டு “எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?” என்று கேட்க, “யோகத்தில் இருந்தபோது பெருமாள் தன் தோளை அழுத்தி எட்டிப்பார்த்தார், சரி, நாதமுனிகளின் சொட்டை குலத்திலிருந்து ஒருவர் வந்துள்ளார் என்பதை யூகித்தேன்” என்றார். ஆளவந்தாரும் யோகரஹஸ்யத்தை அருளிச்செய்யவேண்டும் என்று பிராத்திக்க அதற்குக் குருகை காவலப்பன் தாம் பரமபதம் செல்லவிருக்கும் நாளைக் குறிப்பிட்டு அதற்கு முன்வந்தால் உபதேசிக்கிறோம் என்று எழுதிக்கொடுக்க ஆளவந்தார் ஸ்ரீரங்கம் வந்தடைந்தார்.
ஸ்ரீரங்கத்தில் திருவத்யயன உத்ஸவம். அரையர் சேவை..
கடுவினை களையலாகும், காமனைப் பயந்த காளை
இடவகை கொண்டது என்பர் எழில் அணி அனந்தபுரம்
படம் உடை அரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண
நடமினோ, நமர்கள் உள்ளீர்!-நாம் உமக்கு அறியச் சொன்னோம்.
திருவனந்தபுரம் பெருமாளைச் சேவிக்க என்னைச் சேர்ந்தவர்கள் இப்போதே எழுந்திருங்கள் உடனே திருவனந்தபுரம் நடந்து சென்று அவன் பாதத்தை வணங்கலாம் என்று நம்மாழ்வார் அழைக்கும் பாசுரத்துக்கு அரையர் இசையுடன் அபிநயம் செய்கிறார்.
ஆளவந்தார் ரசிக்க அன்று அரையருக்கு என்ன தோன்றியதோ இந்தப் பாசுரத்தை இரண்டு முறை அபிநயம் செய்கிறார் அதுவும் ஆளவந்தாரைப் பார்த்துக்கொண்டே.
நம்மாழ்வார் தனக்கு ஒரு குறிப்பு வைத்திருக்கிறார் என்று ஆளவந்தார் உடனே எழுந்துகொண்டு, திரிதண்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டார், மடத்துக்குக் கூட செல்லாமல், அவர் சிஷ்யரை கூப்பிட்டு மடத்திலிருந்து ”திருவாராதன பெருமாளை எழுந்தருளிக்கொண்டு வா” என்று உடனே திருவனந்தபுரம் நோக்கி சிஷ்யர்களுடன் ஆழ்வார் சம்பந்தம் கிடைக்கும் என்று புறப்படுகிறார் ( ஆழ்வார் நமர்கள் உள்ளீர் - நம்மைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர் சிஷ்யர்களுடன் புறப்படுகிறார் ).
அங்கே அனந்த பத்மநாபனை சேவிக்கும் போது குருகை காவலப்பன் எழுதிக் கொடுத்த ஓலை நினைவுக்கு வருகிறது. அதை எடுத்துப் பார்க்கையில் அன்று தான் அப்பன் பரமபதம் செல்லும் தினம் !
“ஒரு புஷ்பக விமானம் இருந்திருக்கலாமே!” என்று மிக வருந்திக் ஸ்ரீரங்கத்துக்கு மீண்டும் வந்தார்.
திருக்குருகை காவலப்பனிடம் ஒருவர் “எம்பெருமானை எப்போதும் நினைத்துக்கொண்டிருக்கும் நீர் அவனை நினைக்க எனக்கு ஒரு வழி சொல்லவேண்டும்” என்று கேட்க அதற்கு அப்பன் சொன்ன பதில் “நான் உனக்கு எம்பெருமானை நினைக்க வழி சொல்லுகிறேன். நீ அவனை மறக்க எனக்கு வழி சொல்லுவாயாக” என்றார். ( அதாவது பார்க்கும் பொருளில் எல்லாம் பெருமாள் அதில் அந்தராத்மாவாக இருக்கிறார் என்று கொள்ள வேண்டும்)
அவருடைய வாழி திருநாமம் இது எல்லாப் புத்தகத்திலும் இருக்காது
மகரமதில் விசாகம் நாள் வந்துதித்தான் வாழியே
மாறன்தாள் நாதமுனி மலரடியோன் வாழியே
நிகரில் நன் ஞானயோகம் நீண்டு செய்வோன் வாழியே
நிர்ணயமாய் ஐந்து பொருள் நிலையறிவோன் வாழியே
அகமறுக்கும் இராமர்பதம் ஆசையுள்ளோன் வாழியே
ஆழ்வார்கள் மறையதனை ஆய்ந்துரைப்போன் வாழியே
செகதலத்தில் குருகூரில் செனித்த வள்ளல் வாழியே
செய்ய குருகைக் காவலப்பன் திருவடிகள் வாழியே
நிர்ணயமாய் ஐந்து பொருள் நிலையறிவோன் வாழியே - இதற்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை. தேடிக்கொண்டு இருக்கிறேன்.
இன்று திருக்குருகை காவலப்பன் திருநட்சத்திரம்
திருக்குருகை காவலப்பனின் திருவடிகளே சரணம்
- சுஜாதா தேசிகன்
26.01.2022
தை, விசாகம்
திருக்குருகை காவலப்பன் திருநட்சத்திரம்
படம்: ஸ்ரீ குருகை காவலப்பன், ஸ்ரீமந் நாதமுனிகள், ஸ்ரீ ஆளவந்தார், குருகை காவலப்பன் கோயிலில்.
திருக்குருகை காவலப்பனின் திருவடிகளே சரணம்...
ReplyDeleteஆழ்வார்திருநகரியும்,திருக்குருகூரும் ஒரே ஊர்தான் என்பதையும் குறிப்பிட்டிருக்கலாம்.
ReplyDeleteThere is one village near Gangaikondacholapuram in the name of kuruvalappar koil
ReplyDelete