Skip to main content

ஊட்டத்தூர் ராமர்

ஊட்டத்தூர் ராமர்
பகல் பத்து ஸ்ரீரங்கம் நம்பெருமாளைச் சேவித்துவிட்டு ’கனைத்து இளம்’ திருப்பாவை பாசுரத்துக்கு ’மனதுக்கு இனியானான’ ஸ்ரீராமரை பற்றி என்ன எழுதுவது என்று யோசித்துக்கொண்டு இருந்த சமயம் அந்தத் தொலைப்பேசி அழைப்பு வந்தது.
“அடியேன் தாஸன் என்று மிகப் பவ்யமாக ஆனால் பரபரப்பாக “இப்ப பேசலாமா ?” என்றது மறுமுனை
“உங்க பேர் என்ன ?”
“ஸ்ரீநிவாசன்…... “
“சொல்லுங்கோ”
“பல திவ்ய தேசம் சென்று உங்கள் அனுபவம் பற்றி எழுதுவதை எல்லாம் தவறாமல் படிப்பேன்…ஒரு விண்ணப்பம்…. “ என்று தயங்கி ஒரு நிமிஷத்தில் சொல்லி முடித்தார்.
“திருச்சி - சென்னை போகும் வழியில் பாடாலூரில் மிகப் பழமையான ராமர் கோயில் இருக்கு. ஏழாம் நூற்றாண்டு என்கிறாகள். வைகுண்ட ஏகாதசிக்குப் போனேன் ஸ்வாமி என்னையும் சேர்த்து மொத்தம் நான்கு பேர் தான் கோயில் இருந்தார்கள்.. கஷ்டமா இருந்தது.... இந்தக் கோயில் பற்றியும் பற்றி எழுத வேண்டும்.. நிறையப் பேர் அந்தக் கோயிலுக்கு வர வேண்டும்.. ஏதாவது செய்யுங்கள்”
கோயில் பற்றி கூகிளில் தேடினேன். தகவல் கிடைக்கவில்லை. எனக்குத் தொலைப்பேசியில் அழைத்தவரைத் தொடர்பு கொண்டேன். அவர் அனுப்பிய SMS
“SriKothandaramaswamy temple,UTTATHUR,(via-PADALUR),4kms from PADALUR Jn on Trichy-Chennai Highway”
கூகிள் மோப்பில் கொஞ்சம் மேய்ந்த பிறகு கோயில் தட்டுப்பட்டது. குறித்து வைத்துக்கொண்டேன்.
இந்த மாதம் குடியரசு தினத்துக்கு ராமரைச் சேவிக்க சென்றேன். திருச்சி - சென்னை ஹைவேயில் இன்னும் இரண்டு கி.மி. யூ டர்ன் அடித்தால் அடையார் ஆனந்த பவன் என்ற பலகையை கடந்து சென்ற பிறகு கூகிள் கோயிலுக்குத் திரும்ப சொன்னது. ஊட்டத்தூர் வந்தடைந்தோம்.
திரு ரா.பி சேதுப்பிள்ளையின் “தமிழகம் ஊரும் பேரும்” என்ற புத்தகத்தில் ஊட்டத்தூர் பற்றிய குறிப்பு இது.
Image may contain: 1 person, smiling
திருச்சி நாட்டைச் சேர்ந்த பெரம்பலூர் வட்டத்தில் உள்ள
ஊற்றத்தூரும் ஒரு பழைய சிவஸ்தலம் ஆகும். “உறையூர்
கடலொற்றியூர் ஊற்றத்தூர்” என்றெடுத்துப் பாடினார் திருநாவுக்கரசர்.
அவ்வூரில் அமர்ந்த இறைவன் தொகுமாமணி நாயகர் என்று
கல்வெட்டுக்களிற் குறிக்கப் படுகிறார். பிற்காலத்தில் குலோத்துங்க
சோழீச்சுரம் என்னும் திருக்கோயிலும் அவ்வூரில் எழுந்தது. இரண்டாம்
இராஜராஜன் அச் சோழீச்சுர முடையார்க்கு உழுத்தம்பாடி யூரைத்
தேவதானமாக வழங்கிய செய்தியைக் கல்வெட்டிற் காணலாம்.ஊற்றத்தூர்
என்னும் பெயர் இக்காலத்தில் ஊட்டத்தூர் ஆயிற்று”
Image may contain: one or more people, people standing and outdoor
முழுவதும் பசுமையான கிராமம், புது பெயிண்ட் ஐயனாரையும், சின்ன வெங்காயம் உரித்துக்கொண்டு இருந்தவர்களைக் கடந்து சென்ற போது குடியரசு தினத்துக்கு கிராமத்தில் கோயில் வாசலில் 12.30 மணிக்கு எம்.ஜி.ஆர் பாடல்கள் ஒலிக்க விளையாட்டு போட்டிகள் நடத்திக்கொண்டு இருந்தார்கள்.
ஸ்ரீகோதண்ட ராமர் கோயில் கோபுரம் தெரிந்து நடை சாத்திவிட போகிறார்கள் என்று அவசரமாகக் கோயிலுக்குள் நுழைந்தவுடன் தூரத்தில் ஸ்ரீ சீதாதேவி ஸ்மேத ஸ்ரீகோதண்டராமர், ஸ்ரீலக்ஷ்மணர் தெரிய ஒரு மாமி ஓடி வந்து
“வாங்கோ வாங்கோ… இந்தக் கோயிலுக்கு யாரும் வரதில்லை. என் பையன் தான் இவன் ஒன்பதாவது தலைமுறை.. இங்கே அர்ச்சகராக இருக்கிறான்..” என்று படபடப்பாக பேசினார். பேச்சில் ஏழ்மையும் சந்தோஷமும் கலந்திருந்தது.
Image may contain: outdoor
கோயில் தூண்கள் வரிசையாக, சூரிய ஒளி ஒரு இடத்தில் அடிக்க
“திரு உடம்பு வான் சுடர்; செந்தாமரை கண்; கை கமலம்” என்று நம்மாழ்வார் கூறுவது போல உள்ளே கோதண்டபாணியாக ”தோற்றமாய் நின்ற சுடராக” ஸ்ரீராமர் இடது புறத்தில் சீதா தேவி, வலபுரத்தில் ஸ்ரீலக்ஷ்மணர் திருமுகங்களில் அமைதியைக் காண முடிந்தது.
திருச்சியிலிருந்து கொண்டு சென்ற மாலையைக் கொடுக்க அர்ச்சகர் அதை ஸ்ரீராமருக்கு சாத்தினார் ஆர்த்தியின் போது ஸ்ரீ லக்‌ஷ்மணர், சீதாவிற்கு மாலையே இல்லாமல் வெறும் கழுத்தாக இருப்பதைக் கவனித்தேன்.
“சீதை, லக்ஷ்மணருக்கு மாலை இல்லை.. பக்கத்தில் ஏதாவது கடை இருக்கா ?”
”இங்கே கடை எதுவும் இல்லை. ஊருக்கு வெளியே தான் போக வேண்டும்” என்றார் அர்ச்சகர்.
Image may contain: sky, cloud and outdoor
முன்று மாலையாக வாங்கிக்கொண்டு வந்திருக்கலாமே என்று நொந்துக்கொண்டு சேவிக்கும் போது அர்ச்சகர் சொன்ன விஷயம்
”நான் ஒன்பதாவது தலை முறை.. இதற்கு முன் என் தாத்தா கோயிலைப் பார்த்துக்கொண்டு இருந்தார்.. MRF ல் வேலை செய்துகொண்டு இருந்தேன். தாத்தா போன பிறகு கோயில் கைங்கரியம் தடைப்பட்டு விடக் கூடாதே என்று வேலையை விட்டுவிட்டு வந்துவிட்டேன்… ஊரில் யாரும் கோயிலுக்கு வருவதில்லை வெளியூரிலிருந்தும் யாரும் வருவதில்லை. எப்பாவாது யாராவது பரிகாரம் என்றால் வருவார்கள்…”
“உற்சவர்களை இல்லையா ? ”
“இங்கே பாதுகாப்பு கிடையாது… அதனால் பக்கத்தில் ஒரு சிவன் கோயில வைத்துப் பூட்டி வைத்திருக்கிறோம்”
மனம் வருந்திய போது அர்ச்சகர் தாயார் சொன்ன விஷயம் மேலும் வருத்தத்தை அளித்தது
Image may contain: indoor and outdoor
“பெருமாளுக்கு விளக்கு ஏற்ற எண்ணைக் கூட இல்லை, வாரத்தில் இரண்டு நாள் புதன், சனிக்கிழமை தான் பெருமாளுக்குப் பிரசாதம் கண்டருள செய்கிறோம்.. இவன் வேலையை விட்டுவிட்டு வந்துட்டான்... இங்கே சம்பளம் கிடையாது… சின்ன குழந்தை இருக்கு …மசம் ஆயிரம் கூட வர மாட்டேங்குது.. “ என்று மேலும் சில குடும்ப விஷயங்களைச் சொன்ன போது மனம் கனத்தது.
”பெருமாளைப் படம் எடுக்கலாமா ?”
“தாராளமா எடுத்துக்கோங்கோ.. இதைப் பற்றி எழுதுங்கோ பலர் வந்தால் நன்றாக இருக்கும்”
Image may contain: one or more people and people standing
கோயிலை சுற்றிப் பார்த்தோம். விசாலமான பழைய கோயில். கோயில் இடது புரத்தில் ஸ்ரீராமானுஜர், ஸ்ரீவிஷ்வக்சேனர், ஸ்ரீநம்மாழ்வார் இருக்க அதைச் சேவிக்கும் போது
“இங்கே ஒரு சுரங்க பாதை இருந்தது. சமீபத்தில் அதை அடைத்துவிட்டார்கள்”
கோயில் உள் பிராகாரத்தை சுற்றிக்கொண்டு வந்த போது அங்கே ஸ்ரீஅனுமான் செய்த சாகசங்களை பார்க்க முடிந்தது. சுவரில் மீன் உருவம் செதுக்கியிருந்தார்கள். வெளி பிரகாரத்தில் சில சிற்ப வேலைபாடுகளை பார்க்க முடிந்தது.
வெளி பிரகாரத்துக்கு சென்ற போது அதன் பிரம்மாண்டம் தெரிந்தது. கோயில் மடப்பள்ளிக்குச் சென்ற போது அங்கே ஒரு டப்பா மடப்பள்ளி போல காலியாக இருந்தது.
“இங்கே பிரசாதம் எல்லாம் செய்வதில்லை. வாரத்துக்கு இரண்டு நாளைக்குத் தான் கண்டருள செய்கிறோம்.. வீட்டிலிருந்து ஏதாவது செய்துகொண்டு வருவோம்…”
எந்தக் காலத்து கோயிலாக இருக்கும் என்று நான் எடுத்த படங்கள் சிலவற்றை நண்பர் சித்திரா மாதவனுக்கு அனுப்பிய போது அவர் உடனே அனுப்பிய தகவல் இது.
“From the photos you have sent this temple belongs to the Vijayanagara Times of the 16th century or later. In case the central part had been constructed earlier, then we have to search for traces of antiquity in and around the Garbha Griham. As it is, this is Vijayanagara style of architecture.”

இதே போல ராமரை எங்கோ பார்த்திருக்கிறேன் என்று படங்களை தேடிய போது ஹம்பியில் கோதண்ட ராமர் கோயில் நினைவுக்கு வந்தது.
Image may contain: one or more people and people standing
பொதுவாக தமிழ்நாட்டு ராமர் கோயில்களில் ஸ்ரீராமரின் வலது புறத்தில் சீதை அலங்கரிப்பாள், வட தேசம், கர்நாடகாவிலும் சீதை இடதுபுறத்தில்.
( இடது புறத்தில் இருந்தால் அது பட்டாபிஷேக கோலம் என்ற தகவலையும் சித்திரா மாதவன் கூறினார் )
கோயில் வாசலில் ஒருவர் பலகையில் ஏதோ எழுதிக்கொண்டு இருக்க அதைப் பற்றி விசாரித்தேன்
“கோயில் பற்றி போர்ட் வைத்தால் நான்கு பேர் வந்துவிட்டுப் போவார்கள்… இதற்கு இத்தனை நாள் பர்மிஷன் கிடைக்கவில்லை. இப்ப தான் கிடைத்தது...போர்ட் மூவாயிரம் ரூபாய்… “ என்றார்.
No automatic alt text available.
ஸ்ரீராமரை மீண்டும் ஒரு முறை சேவித்துவிட்டு காரில் புறப்படும் போது ஊருக்கு வாங்கிய எண்ணை, அரிசி காரில் இருந்தது நினைவுக்கு வர அதைக் கோயிலுக்கு சம்பர்பித்துவிட்டு மனதில் ஏதோ வருத்ததுடன் கிளம்பினோம்.
ஊருக்கு வெளியே ஹைவேயை தொடும் போது ஒரு பூக்கடை கண்ணில் பட்டது.
“தெரிந்திருந்தால் இங்கிருந்து மாலை வாங்கிக்கொண்டு சென்றிருக்கலாம்..
அடுத்த தடவை போகும் போது லக்ஷ்மணர், சீதைக்குச் சேர்த்து மூன்று மாலையாக வாங்கிக்கொண்டு போக வேண்டும்… ” என்று காரை ஹைவேயில் ஓட்ட ஆரம்பித்தேன்…
No automatic alt text available.
நதாதூர் அம்மாள் பரத்வாதி பஞ்சகம் என்ற ஒரு நூலை எழுதியிருக்கிறார். பெருமாளின் ஐந்து நிலைகளைப் பற்றி கூறுவது இது -
பரத்துவம், வியூகம், விபவம், அந்தர்யாமித்துவம், அர்ச்சை. பயப்பட வேண்டாம் எளிமையாகச் சொல்ல முயற்சிக்கிறேன்.
பரத்துவம் - வைகுண்டபதியாக இருக்கிறான்.
வியூகம் - பாற்கடலில் இருந்துகொண்டு ஜகத்ரட்சகனாக இருக்கிறான்.
விபவம் - பெருமாள் அவதாரங்களைக் குறிக்கும் ( வாமன, ராமர், கண்ணன் .. )
அந்தர்யாமி - எல்லா உயிர்களுக்குளும் இருக்கிறான்.
அர்ச்சை - எல்லாக் கோயில்களிலும் நாம் பார்க்கும் பெருமாள்.
அர்ச்சை கடைசியில் வருவதால் தாழ்ந்த நிலை என்று நினைக்க வேண்டாம். அர்ச்சை என்பது அவதாரமாகத் தான் நம் பூர்வர்கள் கொண்டாடினார்கள். அதனால் தான் அர்ச்சாவதாரம்.
Image may contain: one or more people and people standing
அர்ச்சாவதாரம் என்றால் எம்பெருமான் நம் அர்ச்சனையை ஏற்றுக்கொள்கிறான். ( அவனுக்கு அர்ச்சனை செய்பவர் - அர்ச்சகர் ).
“ஆழ்வார்கள் பல இடங்களிலும் பிரபத்தி பண்ணிற்றும் அர்ச்சாவதாரத்திலே” என்கிறது ஸ்ரீவசன பூஷண வாக்கியம்.
“செளலப்பியத்திற்கு எல்லைநிலம் அர்ச்சாவதாரம்” என்றும் “இதுதான் (அர்ச்சாவதாரம்) பர வியூக விபவங்கள் போலன்றிக்கே கண்ணால் காணலாம் படி இருக்கும்” என்கிறது முமுக்ஷுப்படி
ராமாவதாரம், கிருஷ்ணாவதாரத்தில் நாம் பெருமாளுக்கு சென்று புஷ்பம் சேர்க்க முடியாது. ஆனால் அர்ச்சாவதாரத்தில் தேர் ஓட்டிய பார்த்தசாரதிக்கு, வெண்ணெய் திருடிய நம்பெருமாளுக்கு ஓவர் நைட் பஸ், ரயிலில் சென்று புஷ்பம் சமர்ப்பிக்கலாம்.
அவதரங்களிலேயே ராமர், கிருஷ்ணர் அவதாரங்கள் ’பூர்ண அவதாரங்கள்’ என்பார்கள். அதாவது they were complete. இத்தானைக்கும் ராமர் மட்டும் தான் தன்னுடன் எல்லோரையும் வைகுண்டத்துக்கு அழைத்துச் சென்றார், கண்ணன் தனியாக தான் சென்றான்.
Image may contain: outdoor
பூர்ண என்ற சொல்லைக் கட்டிலும் பரிபூரணம் ஒரு படி மேல் பரிபூரணம் - Perfect. பரிபூரண அவதாரம் என்றால் அது அர்ச்சாவதாரம் தான்.
திருமங்கையாழ்வார் திருநெடுந்தாடகத்தில்
உலகம் ஏத்தும்
தென் ஆனாய்! வட ஆனாய்! குட பால் ஆனாய்!
குணபால மத யானாய்! இமையோர்க்கு என்றும்
முன் ஆனாய்!* பின் ஆனார் வணங்கும் சோதி!
திருமூழிக்களத்து ஆனாய்! முதல் ஆனாயே!
“பின் ஆனார் வணங்கும் சோதி!” அதாவது அவதார காலத்துக்குப் பின் வந்தோர் வணங்கும்படி இருக்கிறார் பெருமாள் என்கிறார் ஆழ்வார்.
மேலே கூறிய ஐந்து நிலைகளிலும் எல்லாத் திருக்குணங்களும் நிறைந்த இடம் அர்ச்சாவதாரமே என்று தெரிந்துகொண்டு சரணாகதி செய்வதற்கு ஏற்ற இடம் என்று முடிவுகட்டியவர்கள் ஆழ்வார்கள்.
அர்ச்சாவதாரமாக சில இடங்களில் படுக்கையை விரித்து பக்தர்கள் வரும் போது வரட்டும் என்று படுத்துக்கொண்டு இருக்கிறான். சில இடங்களில் நிற்பதைப் பார்த்தால் யாரையோ எதிர்பார்த்துக்கொண்டு நிற்பது மாதிரி தோன்றும்.
No automatic alt text available.
கார் ஓட்டிக்கொண்டு நாம் அவனைச் சேவிப்பது பெரிய சாகசம் மாதிரி நினைக்கிறோம். நமக்காகக் காலங்காலமாக நின்றுகொண்டே இருக்கிறான் ? அதைவிடவா இது பெரிசு ?
நாம் செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை “உள்ளேன் ஐயா!” என்று அட்டண்டன்ஸ் கொடுத்தால் போதும். அப்பாடா வந்துவிட்டான் என்று மகிழ்கிறான்.
மணி 2.30. பூக்கடையை தாண்டியதும் “அப்பா Lakshmana and Sita have also done great deeds.. மாலை வாங்கி அவர்களுக்குக் கொடுத்துவிட்டு போகலாம்” என்றான் அமுதன்.
பூமாலையை வாங்கிக்கொண்டு மீண்டும் ஊருக்குள் சென்றோம். கோயில் சாத்தியிருந்தது. அர்ச்சகரைப் போனில் தொடர்பு கொண்ட போது “சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன்.. இதோ வந்துவிட்டேன்” என்று பாதி சாப்பாட்டில் எழுந்துகொண்டு வந்தார்.
மீண்டும் கதவு திறந்து இளையபெருமாள், சீதா தேவிக்கு மாலை சாற்றிய பிறகு தான் மனதுக்குக் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. இந்த மாலை கொஞ்ச நாள் வாடாமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு கிளம்பினோம்.
கோயில் எப்படிப் போக வேண்டும் என்று கூகிள் மேப் கொடுத்திருக்கிறேன். கூட்டமாகச் சென்றுவாருங்கள், ”ஆர்வமே நெய்யாக” கொஞ்சம் எண்ணை, புஷ்பம், அரிசி எடுத்துக்கொண்டு செல்லுங்கள்.
Image may contain: one or more people and people standing
துவஜஸ்தம்பம் எனப்படும் கோயில் கொடிமரம் இந்தக் கோயிலில் இல்லை ஆனால் வெளியில் ஸ்ரீகருடாழ்வார் பெருமாளைப் பார்த்துக்கொண்டும், அவருக்குப் பின்புறம் ஸ்ரீஅனுமார் யாராவது வந்தால் வரவேற்க காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

- சுஜாதா தேசிகன் 
31.1.2018
தை பூசம்
ஸ்ரீஉடையவர் 'தான் உகந்த திருமேனி’ பிரதிஷ்டை செய்யப்பட்ட நாள்

Follow up :

’ஏதாவது’ செய்யலாமே !

ஊட்டத்தூர் ராமர் கோயிலை பற்றி இந்த வருடம் ஆரம்பத்தில் என் அனுபவங்களை எழுதியிருந்தேன். அதற்குப் பிறகு நடந்த சம்பவங்கள் பிரமிப்பூட்டுபவை. பலர் கோயிலை தேடிக்கொண்டு சென்றிருக்கிறார்கள். தொழிலதிபர் ஒருவர் தினமும் பிரசாதம், மாலைக்கு ஏற்பாடு செய்தார். வெளிநாட்டில் வாழும் ஒரு வயதானவர் எனக்குப் போன் செய்து அழுதார். ஒரு பெண்மணி எனக்கு இரவு முழுவதும் மனசு கஷ்டமாக இருந்தது என்று அடுத்த நாள் விடியற்காலையில் தனியாக பேருந்து பிடித்து கோயிலுக்குச் சென்று எனக்கு வாட்ஸ் ஆப்பில் கோயிலின் படங்களை அனுப்பினார். ஒருவர் ராமர் பெயருக்கு DD எடுத்து அனுப்பியிருக்கிறார்.

ஸ்ரீராம நவமிக்கு முதல் முறையாக 500 பேர் ஸ்ரீராமரை சீர் வரிசையுடன் சென்று தரிசித்துள்ளார்கள். தினமணி, குமுதம் பக்தி போன்ற பத்திரிக்கையில் இந்தக் கோயில் பற்றி கட்டுரைகள் வந்துள்ளது.

சமீபத்தில் இன்னொருவர் எங்கள் ஊரில் ஸ்ரீராமானுஜர் விஜயம் செய்த கிருஷ்ணர் கோயில் இருக்கிறது அதற்கு ஏதாவது செய்யுங்கள் என்று படங்களை அனுப்பியிருந்தார். பலர் பணம், உதவி என்று செய்ய முன்வந்தாலும், பொதுப் பணத்தை ஒழுங்காக உபயோகிக்க வேண்டும் என்று வந்த உதவிகளை எல்லாம் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த மாதிரி இருக்கும் பல கோயில்களுக்கு உதவ வேண்டும் என்று மிகுந்த யோசனைக்குப் பின் அடியேனும், டாக்டர் திரு கோகுல் அவர்களும் ( திருநெல்வேலி, ஆழ்வார் திருநகரியில் மருத்துவராக இருப்பவர் ) சேர்ந்து ஒரு அறக்கட்டளையை நிறுவியிருக்கிறோம்.

அறக்கட்டளை பெயர் :

"ராமானுஜ தேசிக முனிகள் அறக்கட்டளை"
"Ramanuja Desika Munigal Charitable Trust"

நம் எல்லோருக்கும் எங்கு இருந்தாலும் உள்ளூர நம் தேசம், நம் ஊர், நம் கோயில் என்பது நம் ரத்தத்தில் கலந்துள்ளது. அதனால் ‘ஏதாவது செய்ய வேண்டும்’ என்று நினைக்கிறோம். இந்த மாதிரி கட்டுரைகளை படித்து உணர்ச்சிவசப்பட்டு உடனே பணம் அனுப்பிவிட்டு பிறகு மறந்துவிடுவோம். ஏதாவது என்பதை டிரஸ்ட் மூலமாக இப்படிச் செய்யலாம் என்று இருக்கிறோம் - கோயிலுக்கு மாதா மாதம் தேவைப்படும் பூ மாலை, எண்ணை அல்லது அந்த ஊர் அர்ச்சகருக்கு மாச ஒரு குறிப்பிட்ட தொகை, அல்லது அவர் பிள்ளைகளுக்கு படிப்புக்கு உதவி, அந்தக் கோயிலை சுற்றி இருக்கும் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு உதவி, கோசாலை, கோயிலுக்கு உள்ளே தோட்டம், மோட்டார் பம்ப், லைட் என்று எது தேவையோ சட்டத்துக்கு உட்பட்டுச் செய்ய திட்டம்.

டிரஸ்ட் சம்பந்தமாக வங்கி கணக்கு சில நாள் முன் திறக்கப்பட்டுள்ளது.

பத்து பேர் ஆயிரம் ரூபாய் கொடுப்பதை விட ஆயிரம் பேர் பத்து ரூபாய் கொடுப்பது மேல். பணம் முக்கியம் ஆனால் அதைவிட முக்கியம் கைங்கரியம். என்ன திட்டங்கள் என்று இந்த பக்கத்தில் பகிர்ந்துகொள்கிறேன்.

இந்த அறக்கட்டளையை உருவாக்கச் சென்னையில் ஆடிட்டர் திரு.வரதராஜன் தன் வேலை எல்லாம் விட்டுவிட்டு, தி.நகர் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு நடையாய் நடந்து இலவசமாக உதவி செய்து தன் கைங்கரியத்தை ஆரம்பித்து வைத்துள்ளார். .

டிரஸ்ட்டின் பெயர் ‘ராமானுஜ தேசிக முனிகள்’ என்று எல்லா ஆசாரியர்களைத் துணைக்கு அழைத்துள்ளோம். நீங்களும் இதற்குத் துணை இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

ஸ்ரீ வேதாந்த தேசிகன் 750 திருநட்சத்திரம் அன்று இதை உங்களுக்குத் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி.

சுஜாதா தேசிகன்
Dr.கோகுல்

விளம்பி வருஷம்,
புரட்டாசி 5, திருவோணம்.
21.9.2018

Name: Ramanuja Desika Munigal Charitable Trust
STATE BANK OF INDIA,
BRIGADE METROPOLIS,
BANGALORE
Account no : 37954692708
Type: Current Account
IFSC Code:- SBIN0015034

Comments

  1. கோதண்ட ராமரை நானும் அறிந்துக் கொண்டேன்....


    அவன் அனுகிரகம் கிடைத்தால் சென்று சேவிக்கலாம்...

    ராமர் திருவடிகளே சரணம்...

    ReplyDelete
  2. I tried to call Shri Dhamodharan, the archagar without success.
    However, as a way forward: Pl. establish a common account to take contributions for nithya padi pooja and Neiyadhyam. Pl. post the account details in your website and social media.
    Regards,
    Jayakanth Raju.
    Abu Dhabi.

    ReplyDelete
  3. Nice article and touching..! Govt should come forward to restore the ancient temples and pay salary for those, who are kind enough to god more than focusing on their own life.

    ReplyDelete
  4. அற்புதமான நெகிழ்கசியான கட்டுரை.
    திரு ஜயகாந்த் ராஜூ எழுதினாற்போல் ஒரு பேங்க் அகவுண்ட் ஆரம்பித்து தெரிவித்தால் அடியேனாலும் மற்ற பக்தகோடிகளாலும் முடிந்ததை அனுப்ப ஹேதுவாக இருக்கும்.
    தன்யோஸ்மி

    ReplyDelete
  5. அருமை....ராமா மனோரமே..அடியேன் நண்பர்களுடன் ஊட்டத்தூர் தரிசனம் கிடைக்கப் பெற்றுள்ளேன்.... அமைதியான,ரம்யமான சேவை...
    உயரிய உரைத்தமைக்கு நன்றி..

    ReplyDelete
  6. ஊட்டத்தூர் ராமர் தரிசனம் அருமை. அர்ச்சகர், அவா attitude நெகிழச் செய்கிறது.

    நடாதூர் இல்லையோ? நதாதூர்னு இடுகைல வந்திருக்கே.

    ReplyDelete
  7. வணக்கம் தேசிகன்
    எவ்வளவோ விடயங்கள் தங்களின் தளத்தில் மனத்தைத் தொட்டவை. எனினும் புகைப்படங்கள் எல்லாம் மனதுக்கு மிகவும் அருகாமையில் உணர முடிகிறது. இப் பிறப்புக்கு இவைதான் போலும் எம் பெருமான் எனக்கருழியது.நன்றி

    ReplyDelete
  8. Dear Sri DESIKAN SIR,
    AFTER GOING THROUGH YOUR BLOG,I SENT ₹500/-TO SHRIMAN DHAMODARAN,KOVIL BY POSTAL MONEY ORDER ON 15.2.2018..
    I went to the temple and had darshan of Seethamma,RAMAR, Lakshmanan,I had talk with his mother,grand mother,..ms.anandhi, MOTHER of Sri DHAMODARA n explained,the plight of the family..
    I again on 28.3.2018, remitted another sum of ₹1500/-TO Sri DHAMODARA n..

    ReplyDelete
  9. I recently went to this temple and offered what i could do a 25kg rice bag ,tamarind and gingley oil as my humble share for nithyapadi and pooja Thanks for your write up. I had a
    great darshan and satisfaction of visiting a great old Ramar temple

    ReplyDelete

Post a Comment