தீக்குறளை சென்றோதோம் | சுஜாதா தேசிகன் ஆண்டாள் சம்பந்தமாக வைரமும் முத்துவுமாக இரண்டு சம்பவங்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். சம்பவம் 1: அனந்தாழ்வான் ஸ்ரீராமானுஜரின் பிரதான சீடர்களில் ஒருவர். ஸ்ரீராமானுஜரின் ஆசையைப் பூர்த்தி செய்ய, திருமலை திருவேங்கடப் பெருமாளுக்குப் புஷ்ப கைங்கரியம் செய்து வந்தார். ஒரு நாள் அவருக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளை சேவிக்க வேண்டும் என்று தோன்றியது. திருவேங்கமுடையானிடம் தன் விருப்பத்தைச் சொல்ல, அவரும் “சரி” என்று உத்தரவு கொடுத்தார். அனந்தாழ்வான் உடனே அடியார்களுடன் ஸ்ரீவில்லிப்புத்தூர் வந்தடைந்தார். ஸ்ரீவில்லிப்புத்தூர் குளத்தில் நீராடிவிட்டு மற்ற அடியார்கள் ஆண்டாள் நாச்சியாரை சேவிக்க உள்ளே சென்றபோது, கோயிலில் அனந்தாழ்வானைக் காணவில்லை. அவர்கள் அவரைத் தேடிக்கொண்டு திரும்ப வந்தபோது அனந்தாழ்வான் குளத்திலேயே கையைவிட்டு எதையோ தேடிக் கொண்டிருந்தார். “ஏதாவது தொலைத்துவிட்டீரா?” என்றார்கள் உடன் வந்தவர்கள். “இல்லை.. இங்கேதான் ஆண்டாள் தினமும் குளித்திருப்பாள். அவள் தேய்த்துக்கொண்ட மஞ்சள் ஏதாவது கிடைத்தால் திருவேங்கடமுடையானுக்குப் பரிசாகக் கொடு...