Skip to main content

பொங்கும் பரிவு !

திருவாலி திருநகரி, திருமங்கை ஆழ்வார் பற்றி எழுதிய கட்டுரையில் “ஆழ்வார் பாசுரம் ஒன்று கூட இல்லையே?” என்று வாசகர் ஒருவர் கேட்டிருந்தார். கலியன் பாசுரம் ஏதாவது கிடைக்கிறதா என்று தேடும் போது சிறிய திருமடல், பெரிய திருமடல் இரண்டுக்கும் தனியன் எழுதியது ‘பிள்ளை திரு நறையூர் அரையர்” என்று கண்ணில் பட்டது.
போதுவாக தனியனைச் சேவிப்போம் ஆனால் அது எழுதியது யார் என்று நாம் கவனிக்க மாட்டோம். திருவாலியில் இருக்கும் திருமங்கை மன்னன் அர்ச்சா ரூபம் நிஜம் என்று எழுதியிருந்தது நினைவிருக்கலாம். அர்ச்சை என்றால் என்ன சார் எங்களுக்குப் புரியும் படி எழுதவும் என்று ஒருவர் சொல்லியிருந்தார் அவருக்காக இந்தச் சின்ன விளக்கம்
எம்பெருமான் திருக்கோயில்களில் இருக்கும் நிலை அர்ச்சை. ஆழ்வார்கள் பக்தியுடன் சேவித்ததால் “திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்” என்று பாசுரம் பாட முடிந்தது. நாம் பார்க்கும் போது அது ‘சிலை’ என்று நினைப்பதால் பூர்ணமாக பக்தி செய்ய முடிவதில்லை.
அர்ச்சா மூர்த்தி தான் தனக்குப் பிரியமானது என்கிறார் ஆளவந்தார்(சதுஸ்லோகீ) . ரஹஸ்யத்ரயஸாரத்தில் வேதாந்த தேசிகன் திருமங்கை ஆழ்வார் தம்மை பெருமாளின் விஷயத்தில் தேஹாத்மவாதியாக ஈடுபடச் செய்வார் என்கிறார்.
திருமங்கை ஆழ்வாரோ “நெஞ்சு உருகிக் கண்பனிப்ப நிற்கும் சோரும் நெடிது உயிர்க்கும்” என்றும் “பெருகயல் கண்ணீர் அரும்பப் போந்து நின்று” என்று திருநெடுந்தாண்டகத்தில் உருகிறார்.
பிள்ளை உரங்காவில்லி தாஸர் நம்பெருமாள் புறப்பாடு கண்டருளும் போது ஒரு கத்தியை பிடித்துக்கொண்டு சேவித்து வருவாராம். பெருமாள் திருமேனிக்கு ஏதேனும் அசைவு ஏற்பட்டால், அந்தக் கத்தியால் தம்மைக் குத்திக்கொண்டு உயிரை விட்டு விடுவதற்காகவே அப்படிச் செய்வாராம். பரிவு என்று சொல்லுவதைவிட இதைப் பொங்கும் பரிவு என்றே சொல்ல வேண்டும்.
ஸ்ரீராமாயணக்கதை கேட்ட போது ராமர் சீதையைக் மீட்க அரக்கர்களுடன் போர் புரிந்தார் என்பதைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்டு சண்டை போட தன் படையைத் தயார் செய்தார்
குலசேகர ஆழ்வார் என்று படித்திருக்கிறோம். எப்படியும் உருக முடியுமா ? என்று நினைக்கலாம். இது தான் பொங்கும் பரிவு !
பொங்கும் பரிவுக்கு நம் பிள்ளை திருநறையூர் அரையர் பற்றி ஒரு சம்பவம் சொல்கிறேன்.
தொட்டியம் ( ஸ்ரீரங்கம் அருகே இருக்கும் ஊர்) திருநாராயணபுரத்திலே இருக்கும் சந்நிதியில் அர்ச்சாவதார பெருமாளுக்கு சில பகவத் விரோதிகள் நெருப்பை வைத்தனர் ( அந்த காலத்திலேயும் இருந்திருக்கிறார்கள் ! ). இதைப் பார்த்த அரையர் உடனே எம்பெருமான் திருமேனிக்குண்டான ஆபத்தைக் கண்டு தாமும், மனைவியும், பிள்ளைகளுடன் குடும்பத்துடன் அத் திவ்விய மங்கள விக்கிரகத்தைக் அணைத்துக் கொள்ள நெருப்பும், புகையும் சூழ குழந்தைகள் மூச்சுவிட முடியாமல் திணறி ”பொறுக்கமுடியவில்லையே!” என்று கூற அதற்கு அரையர் “இன்னும் கொஞ்சம் நேரம் தான், துன்பம் பிறகு பெருமாள் திருவடிகளில் சுகமாக இருக்கலாம். அதுவரை பொறுத்துக்கொள்ளுங்கள்” என்று
குடும்பத்துடன் உயிரைத் தியாகம் செய்தார்கள்.
பட்டர் காலத்தில் வாழ்ந்த பிள்ளை திருநறையூர் அரையர் பற்றி பல குறிப்புகள் வருகிறது. பாசுரங்களின் பொருள்நயம், இசைநயம் முதலியவை குறித்து இவர் பல சர்ச்சகைகள் செய்திருக்கிறார். உதாரணமாக
”சங்கு சக்கரங்கள் என்று கைகூப்பும்” என்று இருக்கிறதே சங்கு என்று ஒருமையில் கூறிவிட்டு சக்கரங்கள் என்று பன்மையில் ஏன் கூறப்பட்டுள்ளது ? என்று கேட்டிருக்கிறார்.
எம்பாரிடமும், பட்டரிடமும் நிறை கேள்விகள் கேட்டிருக்கிறார்.
பட்டரைவிட வயது அதிகமாக இருந்தாலும் பட்டர் மீது மிகுந்த மரியாதையும் மதிப்பும் வைத்திருந்தார்.
பிள்ளை திருநறையூர் அரையரும் பட்டரும் திருவரங்கம் திருக்கோயிலை ப்ரதக்ஷணம் செய்யும் போது மற்றவர்கள் வேகமாகக் குதிரைபோல ஓட்டமும் நடையுமாகச் செய்வார்களாம். ஆனால் அரையரும் பட்டரும் நின்று நிதானமாகக் கோயிலில் மண்டபங்களையும், கோபுரங்களையும் கண்களால் ரசித்துக்கொண்டு ஒரு பிள்ளைத்தாச்சி மாதிரி அடிமீது அடிவைத்து கோயிலை வலம்வர பல நாழிகைகள் எடுத்துக்கொள்வார்களாம். இவர்களை பின் தொடந்த நஞ்சீயர் “உண்பது, உடுப்பது முதலிய செய்ல்களில் மற்றவர்களை போல இருந்தாலும் கோயிலை சுற்றுவதில் தான் என்ன ஒரு வேறுபாடு!. மற்றவர்கள் வேகமாக ஏதோ பலன் கருதி வலம் வர இவர்கள் வலம் வருவதையே பலனாக கொண்டுள்ளார்கள். அதுவும் வலம் வரும் போது பெரிய பெருமாளை மங்களாசாஸனம் செய்கிறார்கள்” என்று வியந்துள்ளார்.
கோயிலை எப்படி அனுபவிக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு. அதே போல் திருவாய்மொழியை எப்படி அனுபவிக்க வேண்டும் என்றும் ஒரு எடுத்துக்காட்டு இருக்கிறது
பிள்ளை திருநறையூர் அரையரிடம் மூன்று திருவாய்மொழிகளுக்கு பொருள் கேட்டேன். அவர் என்ன சொன்னார் என்று நினைவில்லை, ஆனால் அவர் திருவாய்மொழிப் பாசுரங்களுக்கு பொருள் கூறத்தொடங்கி அப்பாசுரங்களில் மிகவும் ஈடுபட்டுக் கண்ணீர் விட்டார் என்பது மட்டும் நினைவிருக்கு என்றாராம் நஞ்சீயர். மீண்டும் தலைப்பை ஒரு முறை படியுங்கள் !
பிகு: அடுத்த முறை பிள்ளை திருநறையூர் அரையரை சேவிக்க திருச்சி செல்ல வேண்டும் என்று எண்ணிக்கொண்டு இருக்கிறேன்.

Comments

  1. அருமை...

    விரைவில் பிள்ளை திருநறையூர் அரையரை சேவித்து வாருங்கள்...

    ReplyDelete
  2. ”சங்கு சக்கரங்கள் என்று கைகூப்பும்” என்று இருக்கிறதே சங்கு என்று ஒருமையில் கூறிவிட்டு சக்கரங்கள் என்று பன்மையில் ஏன் கூறப்பட்டுள்ளது ? என்று கேட்டிருக்கிறார்"

    இதற்கான விளக்கம் என்னவென்று தங்களுக்கு தெரிந்தால் பகிரவும்.

    ReplyDelete
  3. Do you mind if I quote a couple of your articles as long as I provide credit and
    sources back to your webpage? My website is in the exact same area of interest as yours and my users would definitely
    benefit from some of the information you provide
    here. Please let me know if this ok with you. Thanks!

    ReplyDelete

Post a Comment