Skip to main content

பகல் கொள்ளை, இரவு கொள்ளை


ஆகஸ்ட் 15ம் தேதி இந்த வருடம் லாங் வீக்கெண்டாக சுதந்திரத்தை அனுபவிக்க பெங்களூருவை காலி செய்து ஸ்ரீரங்கத்துக்கு புறபட்டேன். 
என்னை போலவே பலர் காலி செய்ததால் போக்குவரத்து நெரிசலை கடந்து 
கிருஷ்ணகிரியில் இருக்கும் A2Bக்கு வர நான்கு மணி நேரம் ஆனது. அங்கே பில்லுக்கு, 
காபிக்கு, டாய்லட்டுக்கு என்று எங்கு பார்த்தாலும் டிராபிக் ஜாம். கிழிஞ்சுது கிஷ்ணகிரி 
என்பதற்கு நேற்று தான் அர்த்தம் தெரிந்தது.
நாமக்கல் தாண்டிய பிறகு முசுறிக்கு முன் காவிரி மணல் ஆறாக காட்சிகொடுத்தது. அதன் 
நடுவே சாரை சாரையாக ஏதோ ஊர்ந்து சென்றுக்கொண்டு இருந்தது. இவ்வளவு பெரிய 
சைஸ் எறும்பா ? என்று உற்று பார்த்த போது எல்லாம் லாரிகள் அதன் வால் எங்கே 
இருக்கிறது என்று தேடிய போது கிட்டதட்ட ஒரு கிமீ தூரம் காவிரிக்கு அரணாக 
மறைத்துக்கொண்டு... காவிரியை மணல் குவாரிகளாகிவிட்டார்கள். பிறகு குணசீலம் 
தாண்டிய போது மீண்டும் அதே எறும்புகள்...ஒரு பெண்ணை பலர் ஒரே சமயத்தில் 
கற்பழிப்பதற்கு சமமாகும் செயல் இது. பகல் கொள்ளை.
ஸ்ரீரங்கம் முழுவதும் எல்லோரும் “தண்ணீர் முக்கொம்பு வரை வந்துவிட்டது.. நாளைக்கு 
அம்மாமண்டபம் வந்துவிடும்” என்று பேசிக்கொண்டிருந்தார்கள். இன்று நம்பெருமாள் ஆடி 
28ம் பெருக்கையொட்டி காவிரி தாய்க்கு சீர்கொடுக்கும் உற்சவம் இன்று நடைபெற 
போகிறது. நம்பெருமாள் காவிரி தாய்க்கு மாலை, பட்டுசேலை, சந்தனம், தாம்பூலம் 
போன்ற மங்கலப் பொருட்களை நாம் சீரழிக்கும் காவிரிக்கு சீர்கொடுக்கபோகிறார்!
கடவுள் நம்பிக்கை இல்லை, இயற்கையே கடவுள் என்று பேசும் கட்சிகளுக்கு சனாதன 
தர்மம் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இயற்கையை போற்றி பாதுகாப்பதே சனாதன 
தர்மம்.
சின்ன வயதில் ஸ்ரீரங்கம் கோயிலில் அரவணை பிரசாதம் சாப்பிட்டிருக்கிறேன். இரவு பத்து 
மணிக்கு மேல் தான் கிடைக்கும். சின்ன மண் பானையில் நெய் தளும்பத் தளும்ப 
ஒருவிதமான உப்பு வெல்லம் இரண்டு சேர்ந்த ருசியில் இருக்கும். எனக்கு தெரிந்த நண்பர் 
ஒருவரிடம் ”அரவணை கிடைக்குமா ?” என்றேன் “ஸ்வாமி இன்று கூட்டம் அதிகம்.. பத்தே 
முக்காலுக்கு வாங்க எடுத்துவைக்கிறேன்” என்றார். பத்தே முக்காலுக்கு சென்ற போது 
கூட்டத்தை வெளியே அனுப்பிக்கொண்டு இருந்தார்கள். கருட மண்டபத்தில் கொண்டையுடன் 
இருந்த நாயக்க சிற்பங்களை அமுதனுக்கு காமித்துக்கொண்டு இருந்தேன்.
ஸ்ரீரங்கம் இரவு நேரத்தில் பார்ப்பதே சுகம். கூடவே கொஞ்சம் தூறல் என்றால் ? கேட்கவே 
வேண்டாம்! ரசித்துக்கொண்டு இருந்த போது, ஒருவர் “ஆரத்திக்கு உள்ளே போங்க.. ” என்று 
வேகமாக எங்களை ஆரியபடாள் வாசல் வழியாக உள்ளே அனுப்ப, சந்தனு மண்டபத்தில் 
சமர்த்தாக உட்கார்ந்துக்கொண்டோம். பெருமாளுக்கு பிரசாதம் கண்டருள செய்யும் போது 
அங்கே பெரிதாக வாத்தியம் இசைத்தார்கள். இந்த வாத்திய ஒலிப்பற்றி ஒரு சின்ன குறிப்பு.
கூரத்தாழ்வானும் அவர் மணைவி ஆண்டாளும் ஸ்ரீரங்கத்தில் இருந்த சமயம் ஒரு நாள் 
நல்ல மழை! அவரால் வெளியே செல்ல முடியவில்லை. ஆழ்வானும், ஆண்டாளும் அன்று 
பட்னி.
இரவு கோயிலில் அரவணை மணி சத்தம் கேட்கிறது. ஆழ்வான் மீது இருந்த பற்றினால் 
ஆண்டாள் ”உன் பக்தன் இங்கு பட்டினியாக கிடக்க..... ” என்று ஒரு நெடி யோசித்தார். 
யோசித்த மறு நொடி அரங்கன் அர்ச்சகர் மூலமாக ஆவேசித்து “ஆழ்வானுக்கு பிரசாதம் 
அனுப்பிவையும்” என்று கூற, கோயில் உத்தமநம்பி மூலமாக சகல மரியாதையுடன் 
பிரசாதம் ஆழ்வான் திருமாளிகைக்கு வந்து சேர ஆழ்வான் “எதுக்கு ?” என்று வினவ 
“நம்பெருமாள் நியமனம்” என்றார் உத்தமநம்பி.
ஆழ்வான் இரண்டு கவளம் ( தனக்கும், ஆண்டாளுக்கும் ) பெற்றுக்கொள்கிறார். உத்தமநம்பி 
சென்ற பிறகு ஆழ்வான் ஆண்டாளை பார்த்து “நீ ஏதாவது நம்பெருமாளிடம் வேண்டினாயோ 
?” என்று கேட்க ஆண்டாள் தான் நினைத்ததை கூறினாள். “குழந்தை தாயை பார்த்து 
என்னை காப்பாத்து என்று கேட்குமோ ? உலகத்துக்கே படியளக்கும் நம்பெருமாள் 
அடியார்களை மறந்துவிடுவானோ ?” என்று கூறிவிட்டு பிரசாதத்தை ஸ்வீகரித்தார்கள் 
(உண்டார்கள்). அதன் பிறகு அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பராசர பட்டர், வேதவ்யாச 
பட்டர் பிறக்கிறார்கள். ( கூரத்தாழ்வான் தனது தர்மபத்னியுடன் உடல் சம்பந்தம் 
வைத்துகொண்டதில்லை இவருடைய குழந்தைகள் ஸ்ரீரங்கநாதனுடைய (அரவணைப் 
பிரசாதம்) கடாக்ஷத்தினாலேயே அவதரித்தனர் என்பார்கள் )
பெருமாளுக்கு ஆர்த்தி, திருவாலவட்டம் என்று நம்பெருமாள் அந்த இருட்டில் மனதைக் 
இரவு கொள்ளை அடிக்க மழை இன்னும் அதிகமாக.. பிரியப்பட்டு நனைத்துக்கொண்டு 
வந்தோம்.
வீட்டிக்கு வந்த பிறகு, அமுதனிடம் கால் எல்லாம் சேறு காலை அலம்பிக்கோ என்று 
சொன்னேன். “இங்கே ராமானுஜர் நடந்த இடம் என்று சொன்னே.. அந்த சேறு தானே இது, 
அலம்பிக்கனுமா ?”
நேற்றைய ஸ்ரீரங்கத்து அனுபவத்துக்கு காரணம் ஸ்ரீரங்கம் செல்லும் முன் உரையூர் நாச்சியார் கோயில் சென்றது தான் 
என்று நம்புகிறேன் ! ( (கமலவல்லி தாயார், திருபாணாழ்வார் - மெதுவா சேவித்துவிட்டு போங்கோ!)
- சுஜாதா தேசிகன் 
13.8.2017
ஆடி 28, ஒரு மழை நாள்

Comments