பலர் தேடிப்படிப்பார்கள் என்ற நோக்கத்தில் நம்பிள்ளை கட்டுரையில் கடைசியில் ஒரு பெண்மணி பற்றிய கதை என்று முடித்திருந்தேன். ஆனால் அதை எப்போது எழுதுவீர்கள் என்று பலர் கேட்பதால் அந்த சம்பவம் இங்கே. நம்பிள்ளை திருமாளிகை சிறியதாக இருந்தது. பலபேர் வந்து காலஷேபம் கேட்க அது சௌகரியமாக இல்லை. நம்பிள்ளையின் அகத்தையும் சேர்த்தால் பலர் வந்து காலஷேபம் கேட்க வசதியாக இருக்கும் என்று நினைத்தார்கள். பக்கத்து அகத்தில் ஓர் அம்மையார் இருந்தார். ஸ்ரீவைஷ்ணவர். நம்பிள்ளையின் சிஷ்யர் ஒருவர் அந்த அம்மையாரிடம் சென்று “நம் ஆசார்யன் திருமாளிகை இடம் பற்றாமல் சிறியதாக இருக்கிறது உமது அகத்தை ஆசார்யனுக்கு சமர்பித்துவிடுமே” என்றார். அதற்கு அந்த அம்மையாரோ “கோயிலிலே(ஸ்ரீரங்கம்) சாண் இடம் யாருக்கு கிடைக்கும் ? நான் பகவான் திருவடியை அடையும்வரை இவ்விடத்தை ஒருவருக்கும் கொடுக்க முடியாது” என்று சொல்லிவிட்டார். இந்த விஷயத்தை சிஷ்யர் நம்பிள்ளையிடம் சொன்னார். நம்பிள்ளை அந்த அம்மையாரை வேறு ஒரு சமயம் பார்த்த போது “காலஷேபம் கேட்க வருபவர்கள் கஷ்டப்படுகிறார்கள் உமது இடத்தைத் தரவேண்டும்” என்று விண...