Skip to main content

சுஜாதாவின் முதல் சிறுகதை

சுஜாதாவின் "தேர்ந்தெடுத்த சிறுகதைகள்” தொகுப்புக்கு கதைகளை வரிசைப்படுத்திக்கொண்டு இருந்த நேரம். அவர் எழுதிய முதல் சிறுகதை பற்றிய பேச்சு வந்தது. 
“சிவாஜி பத்திரிக்கையில் எழுதிய கதை”
“அது கிடைக்காது” என்றார் தீர்மானமாக. 

இதே போல அவர் எம்.ஐ.டியில் படிக்கும் போது ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அது எம்.ஐ.டி வெள்ளி விழா மலரில் வந்தது. அதை நானும் துபாயில் இருக்கும் ராஜ்குமார் என்பவரும் பல வருஷமாக தேடினோம். பிறகு சுஜாதா மறைந்தபின் அந்த முயற்சியை விட்டுவிட்டோம். மீண்டும் தேடினால் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

இந்த வாரம் ஆனந்தவிகடனில் சுஜாதாவின் முதல் கதை என்றவுடன் பழைய உற்சாகத்துடன் புத்தகம் வாங்கி பார்த்தேன், பிறகு படித்தேன். மைகேல் மதன காம ராஜன் படத்தில் சரளமாக அங்கிலம் பேசும் கமலை பார்த்து இன்னொரு கமல் ”அதெல்லாம் அப்படியப்படியே வரதுதானில்ல...” என்பார். அதே போல் தான் சுஜாதாவின் எழுத்தும். பதினெட்டு வயதில் எப்படி அசால்டாக எழுதியிருக்கிறார்.

எப்படி இந்த கதை கிடைத்தது என்று ஒருவாரமாக தேடினேன். சிவாஜி பத்திரிகையை நடத்தினவர்களின் தொலைப்பேசியை நண்பர் மூலம் கேட்டு அவர்களிடம் பேசினேன்.
”முன்பு சிவாஜியில் தன்னுடைய கதை ஒன்று வந்தது என்று எழுதியிருந்தார் அதை பார்த்துவிட்டு அவரிடம் கடிதம் எழுதினோம்.” ஆனால் மேற்கொண்டு தொடர்பில் இல்லை.
”கதை இருந்ததா உங்களிடம் ?”
“ஆமாம்”

”பெண், பாதி ராஜியம்” என்றவுடன் அதை ஏதோ நகைச்சுவையாக எடுத்துக்கொண்டுவிட்டார் சுஜாதா என்று தெரிகிறது.

சரி எப்படி கிடைத்தது ? நண்பர் Arvind Swaminathan அரவிந்த் சாமிநாதன் ( பா.சு.ரமணன் ) அவர்களின் பாட்டனார் அந்த காலத்தில் ஆயிரக்கணக்கில் பழைய பழைய புத்தகங்களைச் சேகரித்து வைத்திருந்தவர். ஊர் ஊராக, வீடு, வீடாக மாற நேர்ந்ததால் அவற்றில் பலவற்றை கோட்டையூர் முத்தையா செட்டியாரிடம் கையளித்து விட்டார். எஞ்சியவை இன்னமும் (கரையான் அரித்தது போக, வெந்நீர் அடுப்பில் பாட்டி எரித்தது போக, தூள் தூளாக உதிர்ந்தது போக) ஊரில் கல்லியம் பெட்டிகளில் இருக்கின்றன........

அரவிந்த் அப்பாவும் அதே மாதிரி புத்தகச் சேகரிப்பாளர், நா.பா. மணியன், சாவி, ஜெயகாந்தன் உள்ளிட்டோரின் நாவல்களைச் சேகரித்து வைத்திருந்தார்... (அவையும் அழிந்தது போக இன்னமும் சில இருக்கின்றன)
அப்படி இற்றுப் போய் வீணாய்ப் போன பல நூல்களை ஊருக்குச் சென்றிருந்தபோது அரவிந்த் போட்டோ எடுத்தும் சேகரித்தும் வந்திருக்கிறார். அவை பழைய ஹார்ட் டிஸ்கில் இருந்திருக்கிறது.

பல பழைய புத்தகம், பேப்பர் எல்லாம் ஸ்கேன் செய்து பழைய ஹார்ட் டிஸ்கில் வைத்திருந்தார் அரவிந்த்.

சில மாதங்களுக்கு முன்னால் பழைய ஹார்ட் டிஸ்கை நோண்டிக் கொண்டிருந்தபோது புதுக்கோட்டையிலிருந்து வெளியான சில நூல்களின் ஸ்கேன் காபியைப் பார்த்திருக்கிறார். அவற்றோடு சிவாஜி இதழும் இருந்தது. அப்போது ‘எஸ்.ரங்கராஜன்’ என்ற பெயரும் அவர் கண்ணில் பட்டது! அப்பறம் நடந்தது உங்களுக்கே தெரியும்.

அரை நூற்றாண்டுகளுக்கு பிறகு சுஜாதா எழுதிய முதல் கதை கிடைத்திருக்கிறது. இதுவே அவரின் கடைசி கதையும் கூட !

Comments

  1. கதை எங்கே... பாதி பக்கம்தான் போட்டிருக்கிறீர்கள்?

    ReplyDelete

Post a Comment