Skip to main content

பார்த்தேன் எடுத்தேன் - 1

இந்த படத்தில் இருக்கும் பூ இன்று காலை வாக்கிங் போகும் போது - ’பார்த்தேன் எடுத்தேன்’.


நான் குடியிருக்கும் அடுக்குமாடிக் கட்டடத்தில் இந்த செடியை பார்த்து வியந்திருக்கிறேன்.எப்போது பார்த்தாலும் வசிகரிக்கும். பல நாள்கள் அதைத் தொட்டுப் பார்த்து அனுபவித்திருக்கிறேன். பழைய சினிமா வில்லனின் புலி நகம் வைத்த செயின் மாதிரி என்ன விதமான படைப்பு! பூவின் பெயர் தெரியாது.

2011 ஆஸ்திரேலியா சென்றபோது, சிட்னி துறைமுகப் பாலம் (Sydney Harbour Bridge) பக்கம் பெரிய மரம் அதிலும் அதே பூ!. சிறிது நேரம் மரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது அங்கே கிளி இரண்டு விளையாடிக்கொண்டு இருந்ததையும் கவனிக்க முடிந்தது. பச்சைக் கிளிகளையே பார்த்துப் பழக்கப்பட்ட எனக்கு வானவில் நிறத்தில் அந்தக் கிளிகளைப் பார்க்கும்போது அத்தை பெண்ணுக்குப் பதில் ஆண்ட்ரியாவைப் பார்த்த மாதிரி இருந்தது.

சிறிது நேரம் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு சிட்னி துறைமுகப் பாலத்தில் நடக்க ஆரம்பித்தேன். பாலத்தின் தடுப்புச் சுவற்றிலும் அதே டைப் கிளிக்குஞ்சு.
பிரியாவிடை கொடுத்துவிட்டுத் திரும்பி வந்ததிலிருந்து அந்தப் பூவின் பெயரையும் அந்தக் கிளியின் பெயரையும் தேடிக்கொண்டிருந்தேன்.


ஒரு வருடம் கழித்து, 2012ல் பூவின் பெயர் தெரிந்தது- புலிநகக் கொன்றை! பூவை இன்னொரு முறை பாருங்கள். பெயர்க் காரணம் தெரியும்.
பி.ஏ.கிருஷ்ணன் அவர்கள் எழுதிய புத்தகம்தான் நினைவு வந்தது. பல வருடங்களாகப் படிக்க வேண்டும் என்று அலமாரியில் அடுக்கியிருக்கும் அந்தப் புத்தகத்தை எடுத்து புலிநகக் கொன்றை பற்றி எதாவது சொல்லியிருக்காரா என்று மேலோட்டமாகத் தேடியபோது 'புலிநகக் கொன்றை - பெயரும் பின்னணியும்' என்ற தலைப்பில் இந்த பூவை பற்றி ஐங்குறுநூறு 142-ஆம் பாடலில் வருகிறது என்று எழுதியுள்ளார். உங்கள் பார்வைக்கு அதை இங்கே தருகிறேன்.

ஐங்குறுநுறு 142-ஆவது பாடலில் ஆங்கில மொழிபெயர்ப்பில் இருந்துதான் எனக்கு இந்த நாவலுக்கான தலைப்பு கிடைத்தது. மொழி பெயர்த்தவர் சங்கப் பாடல்களை உலகம் முழுவதும் அறியச் செய்த AK ராமானுஜன் அவர்கள். பாடலும் அதன் பொருளும் ராமானுஜனின் ஆங்கில மொழிபெயர்ப்பும் கீழே தரப்பட்டிருக்கிறது.
எக்கர் ஞாழல் இறங்கிணார்ப் படுசினைப்
புள்ளிறை கூருந் துறைவனை
உள்ளேன் தோழி படீ இயரென் காண்ணே
[அம்மூவனார், ஐங்குறுநூறு 142]
தோழி கேள்,
அவனுடைய மணலடர்ந்த கூரையில் ஒரு புலிநகக் கொன்றை மரம். அதன் தாழ்ந்த பூத்துக் குலுங்கும் கிளைகளில் எப்போதும் கூட்டலிட்டு அழிவு செய்யும் பறவைகள் கூட்டம். அவனை இனி நான் நினைக்க மாட்டேன். எனது கண்களுக்குச் சிறிது தூக்கமாவது கிடைக்கும்.
The Tigerclaw Tree
What she said
Friend, listen
I'll not think any more
of that man on whose sandy shore
birds occupy the tigerclaw tree
and play havoc with the low flowering branches
and my eyes will get some sleep
[A.K.Ramanujan translation]

கிளிக்கு வருவோம். 'வானவில் நிறத்தில் கிளி' என்று கூகிளில் தேடினேன். உடனே அதன் பெயர் 'lorikeets' என்று கிடைத்தது. தமிழில் இதற்கு இன்னும் யாரும் பெயர் வைக்கவில்லை. நமக்கு அடுத்த சந்ததியினர் வளரும்போதும் புலிநகக் கொன்றை பூக்கள் இருக்கும்; ஆனால் அதன் பெயர் தெரியாமலே வளர்வார்கள்.


Comments