Skip to main content

கல் சொல்லும் கதை


கல் சொல்லும் கதை

மேலே படத்தில் இருக்கும் கல்லை பற்றி தெரிந்துக்கொள்ளும் முன் அதற்கு பின்னால் 800 வருட சரித்திரம் இருக்கிறது.

உங்களை சுமார் 800 ஆண்டுகள் பின்னோக்கி ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து செல்ல போகிறேன்.

ஸ்ரீரங்கத்தில் ராமானுஜருக்கு பிறகு எம்பார், பட்டர், நஞ்சீயர், நம்பிள்ளை ஆகியோர் ஸ்ரீராமானுஜரின் நியமனப்படி கோயில் நிர்வகித்து வந்தார்கள்.
நம்பிளையின் சிஷ்யர்களில் இரு கண்களாக போற்றப்படுபவர் இருவர் - வடக்குத் திருவீதிப்பிள்ளையும், பெரியவாச்சான் பிள்ளையும்.

வடக்கு திருவீதிப்பிள்ளைக்கும் அவர் மனைவி ஸ்ரீரங்கநாச்சியாருக்கும் கிபி 1205ல் ஐப்பசி திருவோண நட்சத்திரத்தில் பிள்ளை லோகாசாரியார் அவதரித்தார்.

( நம்பிள்ளைக்கு லோகாசார்யர் ( ஜகத்குரு ) என்ற பெயரை கந்தாடைத் தோழப்பர் சூட்டினார் ( இந்த வைபவத்தை பிறகு ஒரு கட்டுரையில் எழுதுகிறேன் ). தன்னுடைய பிள்ளைக்கு தன் ஆசாரியன் பெயரை சூட்ட விரும்பி ’லோகாசார்யர்பிள்ளை’ என்று பெயர் சூட்டினார். அதுவே பிள்ளை லோகாசார்யன் )

இவரும் இவர் தம்பி அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஆகிய இருவரும் ஸ்ரீவைஷ்ணவ தொண்டிற்கு குடும்ப வாழ்கை ஒரு தடையாக இருக்க கூடாது என்பதற்காக திருமணம் செய்யாமல் பிரம்மசாரியாகவே ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தை வளர்த்தனர். இருவரும் ஸ்ரீரங்கத்தின் இருகண்களாக விளங்கினார்கள்.

ஸ்ரீரங்கத்தில் பிள்ளைலோகாசார்யர் தம் சிஷ்யர்களுக்கு உபதேசங்கள் செய்து வந்த காலத்தில் டில்லியை ஆட்சி செய்த முகம்மதிய மன்னன் கியாசுதீன் துக்ளக் தன் மகன் உலூக்கானை இளவரசனாக முடிசூட்டினான். ( இவனே பின்னாளில் முகமதுபின் துக்ளக் என்று பெயர் சூட்டிக்கொண்டான்). கிபி 1321ல் தென் இந்தியாவின் மீது படையெடுக்க விரும்பினான். அவனுடைய முக்கிய குறிக்கோள் தங்க வைரங்களின் கருவூலமாக திகழும் கோயில்களைக் கொள்ளையடிக்க வேண்டும் என்பதே. கிபி1323 ஆம் ஆண்டு ஆனி மாதன் 22ஆம் தேதி டில்லியிலிரிந்து பல போர்வீரர்களுடனும், 60,000 குதிரைப்படையுடன் புறப்பட்டான்.


தொண்டை மண்டலத்தை சேதப்படுத்திய உலூக்கான் திருச்சியை நோக்கி விரைந்தான். வழியிலுல்ல சிவ, விஷ்ணு ஆலயங்கள், குளங்கள், ஏரிகள் ஆகியவற்றை பாழ்படுத்தினார்கள், அந்தணர்கள் துன்புறுத்தப்பட்டார்கள், பெண்கள் கற்பை இழந்தார்கள், கோயில் விக்ரஹங்களை உடைத்து நொறுக்கினார்கள். நீர் நிலைகளை பாழ்படுத்துவதன் மூலம் நீர் ஆதாரமின்றி கொடிய பஞ்சம் தலையெடுக்கும், அதனால் மக்கள் மடிந்துப்போவார்கள் என்பது முகம்மதியர்களின் போர்முறைகளில் ஒன்றாகும்.

திருவரசுக்கு வந்த அடியார்கள்
ஸ்ரீரங்கத்தை நோக்கி முகம்மதிய படை வருகிறது என்ற செய்தி கேட்டு அரங்கனுக்கு எந்த நேரத்திலும் ஆபத்து நிகழலாம் என்று அஞ்சி, ஸ்ரீரங்கநாராயண ஜீயர், அர்சகர்கள், திருகோபுரத்து நாயனார், பிள்ளைலோகாசாரியார் மற்றும் சிலர் ஒன்றுக் கூடி அழகிய மணவாளன் முன்பு இங்கேயே இருப்பதா ? அல்லது கோயிலை விட்டு புறப்படுவதா ? இதில் எது விருப்பம் என்று திருவுள்ளச் சீட்டு போட அதில் பெருமாள் கோயிலில் இருப்பதே விருப்பம் என்று வந்தது. அதன் பின் வழக்கம் போல் கோயில் வேலைகள், உத்ஸவம் என்று ஈடுபட்டனர்.

பங்குனி உத்ஸவம் ஆரம்பித்து எட்டாம் நாள் பன்றியாழ்வான்(வராகப் பெருமாள்) கோயிலில் அழகியமணவாளன் எழுந்தருளியிருந்த சமயம், அங்கே பன்னிராயிரம் ஸ்ரீவைஷ்ணவர்கள் குழுமியிருந்தார்கள். அந்த சமயத்தில் முகம்மதியர்கள் சமயபுரம் கடந்து வருகிற செய்தி கேட்டு பிள்ளைலோகாசாரியரும் அவர் சிஷ்யர்கலும் உடனடியாகச் செயலில் இறங்கினார்கள்.

பிள்ளைலோகாசரியர் மற்றும் அவரது சீடர்கள் திருவரங்கனின் மூலவரை காப்பதற்காக கருவறை வாசலை கல்சுவரால் அடைத்து, சுவருக்கு முன்பு தற்காலிகமாக ஒரு விக்ரஹத்தை வைத்தனர். ஸ்ரீரங்க நாச்சியார் மூலவரையும், திருவாபரணங்களையும் வில்வ மரத்தின் அடியிலெ பாதுகாப்பாக வைத்து, மற்றைய ரகசிய அறைகளையும் அடையாளம் தெரியாமல் செய்தார்கள்.

அழகிய மணவாளனையும் ஊரைவிட்டு வெளியேற்ற முடிவு செய்தார்.
நம்பெருமாள் ஊரை விட்டு வெளியேறுகிறார் என்ற செய்தி கூடி இருந்த ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு தெரிந்தால் அவர்கள் அனைவரும் வருத்தமடைந்து பெருமாளைப் பின்தொடர்ந்தால் அது பேராபத்தில் முடிந்துவிடும் என்று கருதி பிள்ளைலோகாசரியர் ஒரு சிறு தந்திரம் செய்தார். சன்னதிக்கு முன்பாக இருக்கும் திரைச்சீலையை தொங்கவிடச் செய்து, ஆலய மணியை அடிக்கச் செய்தார். இதனால் பெருமாளுக்குத் திருவாராதனம் நடைபெற்றுக்கொண்டு இருப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டது. திரைச்சீலைக்கு மறுபுறம் திருகோபுரத்து நாயனாரும், பிள்ளைலோகாசாரியாரியரும் அவருடை அந்தரங்க சிஷ்யர்கள் அழகியமணவாளனுக்குத் தீங்கு நேரதபடி அவர்கள் வகுத்த திட்டத்தின்படி பெருமாளையும், நாச்சிமார்களையும் தயார் நிலையில் இருந்த மூடுபல்லக்கில் எழுந்தருளிப்பண்ணிக்கொண்டு யாரும் அறியாத வண்ணம் ஸ்ரீரங்கத்தை காவேரி ஆற்றின் தெற்கு கரையிலுள்ள மாரச்சிபுரம் அடைந்து, பிறகு மணப்பாறை மற்றும் வேலூர் மார்க்கமாக தென் திசை நோக்கி கொடிய மிருகங்கள், காடுகள் என்று பாராமல் விரைந்தார்கள்.

காட்டு வழியில் செல்லும் போது


காட்டுவழியில் செல்லும் போது திருடர்கள் தாக்கிப் பெருமாளுடன் வந்த நகைகள், பாத்திரங்களை அபகரித்து சென்றனர். பிள்ளைலோகாசாரியாரும் தம்மிடமிருந்தவற்றையும் திருடர்களிடம் கொடுத்து அவர்களுக்கு உபதேசங்களையும் வழங்கினார். அவர்கள் திருந்தி அபகரித்த செல்வத்தைத் திருப்பித்தந்த போதும் பெற்றுக்கொள்ளாமல், அழகிய மணவாளனை விட்டுவைத்தார்களே என்று உகந்து திருமாலிருஞ்சோலையை நோக்கி விரைந்தார்கள். அப்போது நம் பிள்ளைலோகாசாரியருக்கு வயது 118 !


பல நாட்ககளுகளுக்கு பின் கடும் பயணத்தை மேற்கொண்ட பின் திருமோகூருக்கு அருகில் ஆனைமலை அடிவாரத்தில் ஜ்யோதிஷ்குடி என்ற கிராமத்தை சென்றடைந்தனர். காடும், குகையும், செந்தாமரை குளமும் அதன் அருகில் வற்றாத சுனையும் அமைந்த அந்த இடமே உகந்தது என்று உணர்ந்தார்கள்.

அழகிய மணவாளனைப் பின் தொடர்ந்து வரும் முகம்மதியர்கள் மதுரையையும் தாக்ககூடும் என்பதாலேயே மதுரை நகரின் எல்லைப் பகுதியான ஜ்யோதிஷ்குடியில் ஒரு குகையில் மறைவாக அழகியமணவாளனை எழுந்தருளப் செய்து திருவாராதனம் செய்தார். அப்போது நம்பெருமாள் திருமுகத்தில் வியர்வை அரும்பியது. தம்மோடு தொடர்ந்து வந்த திருமலையாழ்வாரின் திருத்தாயரான மூதாட்டியைப் பெருமாளுக்கு விசிரிவிடச் சொன்னார். அவள் பெருமாளின் திவ்யமான திருமேனி வியர்க்குமோ ? என்று வினவ அதற்கு பிள்ளைலோகாசார்யர் ”வேர்த்துப் பசித்து வயிறசைந்து” என்ற ஆண்டளின் பாசுரத்தை ( நாச்சியார் திருமொழி 12-6) நினைவுறுத்தினார். அவளும் விசிர பெருமாளுக்கு வியர்வை அடங்கியது.

இதற்கிடையில் உலூக்கான் நடத்திய படுகொலைகளும் அடித்த கொள்ளைளும் ரத்ததை உறையச் செய்பவை. கோயிலுக்குள் நுழைந்ததும் அவன் உற்சவர் விக்கிரகத்தைத்தான் தேடினான். உற்சவர் இல்லாத்தால் கோபத்தில் அங்கே கூடியிருந்த அனைத்து ஸ்ரீவைஷ்ணவர்களையும் கொன்றுகுவித்தான். அன்று மட்டும் ஸ்ரீரங்கத்த்தில் 12,000 ஸ்ரீவைஷ்ணவர்கள் கொல்லப்பட்டனர். இதைப் “பன்னீராயிரம் முடி திருத்திய பன்றியாழ்வான் மேட்டுக்கலகம்” என்று கோயிலொழுகு குறிப்பிடுகிறது.

ஸ்ரீரங்கத்தில் பன்னீராயிரம் ஸ்ரீவைஷ்ணவர்கள் தலை துண்டிக்கப்பட்ட செய்தி கேட்டு பிள்ளைலோகாசார்யர் மிகவும் வருந்தினர். ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஏற்பட்ட துயரத்தாலும், வயோதிகத்தாலும் வழிநடை அலுப்பினாலும் உடல்தளர்ந்து நோய்வாய்ப்பட்டார். தமக்கு அந்திம காலம் நெருங்வதை உணர்ந்ததும் தம் திருமேனியை துறக்க நம்பெருமாளிடம் விடைபெற்றுக்கொண்டார். நம்பெருமாள் திருவாய் மலர்ந்து “உமக்கும், உம் ஸ்பரிசம் பட்டவர்களுக்கும் திருக்கண்ணால் நோக்கியவர்களுக்கும் மோட்ஷம் தந்தோம்” என்று அருளினார்.

கருணை உள்ளம் கொண்ட இவர் தன் கண்களூக்கு எட்டியவரை மரம், செடி கொடிகளையும், சிற்றெறெம்புகளையும், ஸ்பர்சித்து அவற்றுக்குத் தம்மோடு ஒரு சம்பந்தத்தை ஏற்படுத்தி அவைகளுக்கும் மோட்சம் பெற அருளினார்.

கிபி 1323ல் ஆனி மாதம் தனது 118வது வயதில் திருநாட்டுக்கு எழுந்தருளினார். அவர்களுடைய சிஷ்யர்கள் நம்பெருமாளின் திருமாலை, திருப்பரிவட்டம் கொண்டு அவருடைய சரம திருமேனியை அலங்கரித்து ஜ்யோதிஷ் குடியில் மலை அடிவாரத்தில் திருப்பள்ளிபடுத்தித் திருவரசு எழுப்பினார்கள்.

( ”வேர்ச் சுடுவர்கள் மண் பற்றுக் கழற்றாப்போலே ஞானியை விக்ரகத்தோடே ஆதரிக்கும்” என்பது ஸ்ரீவசனபூஷ்ணத்தின் வாக்யம். இதன் பொருள் - குளிர்ச்சிக்காகவும், வாசனைக்காகவும் வெட்டிவேரை பயன் படுத்தும் போது வேரிலுள்ள மண்ணைக் கழுவி தனியாக பிரித்து எடுக்காமல் அப்படியே சூடிக்கொள்வார்கள். அது போல பகவான், ஆசாரியர்களின் திருமெனியை தன் பக்கத்தில் வைத்து ரக்‌ஷித்துக்கொண்டு இருக்கிறான். அகவே ஆசாரியர்கள் திருமேனியை திருபள்ளிபடுத்திய இடத்திற்கு திருவரசு என்பார்கள் )

நம்பெருமாள் பிறகு மதுரை அழகர் மலை, கோழிக்கோடு(கேரளம்), தமிழ்நாடு-கர்நாடகம்-கேரளா மாநிலம் சங்கமிக்கும் இடத்தில் இருக்கும் திருக்கணாம்பியில் சில காலம், பிறகு திருநாராயணபுரம் பிறகு திருமலை, சிங்கபுரம்(செஞ்சிக்கு அருகில்) பிறகு மீண்டும் 48 வருடம் கழித்து ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தார். ஸ்ரீரங்கம் வந்து சேர்வதற்கு முன் கொள்ளிடக்கரையின் வடப்பகுதியில் மண்ணச்ச நல்லூரில் போகும் மார்கத்தில் அழகிய மணவாளம் என்ற கிரமத்தில் சில மாதங்கள் இருந்தார் அங்கே ஒரு வண்ணானால் அழகிய மணவாளனுகு சூட்டப்பட்ட பெயரே நம்பெருமாள் என்பது.வாசகர்களை திரும்பவும் இருபதாம் நூற்றாண்டுக்கு அழைக்கிறேன். சும்மார் 35-40 வருடங்கள் முன் நடந்த சில நிகழ்வுகளை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்.

19974-95ஆம் ஆண்டு மதுரையில் ஸ்ரீவைஷ்ணவர் ஒருவரிடம் பிரபல எழுத்தாளர் ஸ்ரீவேணுகோபாலன்(புஷ்பா தங்கதுரை) அவர்கள் திருவரங்கன் உலா பற்றிய குறிப்புகளை சேகரிக்கிறார். பிள்ளை உலகாசிரியன் திருநாட்டுக்கு எழுந்தருளியது ஜ்யோதிஷ்குடி என்ற ஊரில் அது தற்போது காளையார் கோயில்(சிவகங்கையிலிருந்து சுமார் 20கிமி தூரம்) என்று முடிவு செய்து என்று அவர் புத்தகத்திலும் குறிப்பு எழுதுகிறார்.

மதுரைப் பேராசிரியர். ஸ்ரீ.உ.வே. இரா. அரங்கராஜன் ஸ்வாமிகள். 

அந்த ஸ்ரீவைஷ்ணவர் நமக்கு முன்பே அறிமுகமானவர் மதுரைப் பேராசிரியர். ஸ்ரீ.உ.வே. இரா. அரங்கராஜன் ஸ்வாமிகள். சில காலம் கழித்து ஜ்ஜோதிஷ்குடி பற்றி அந்திமோபாய நிஷ்டை, யதீர்ந்திர ப்ரவண ப்ராபாவம் போன்ற வரலாற்று நூல்கள் கொண்டு எந்த இடம் எங்கே என்ற ஆய்வு மேற்கொள்கிறார். . ஒரு நாள் எதேர்சையாக ஒரு நில உரிமையாளரிடம் பேசும் போது அவர் இருக்கும் கிராமத்தில் இருளில் ஒலிவிடும் ஜோதிவிருட்சம் நிறைய இருக்கிறது என்று சொன்னவுடன் சட்சென்று ஒரு பொறி தட்டி அங்கே செல்கிறார் பேராசிரியர் அரங்கராஜன்.

பசுமையான கிராமம், அங்கே ஒரு சின்ன தாமரை குளம் அதற்கு பக்கம் சின்ன பெருமாள் கோயில் இருப்பதை காண்கிறார். கோயிலுக்கு உள்ளே சென்று பார்த்த போது உள்ளே நிறைய பாம்பு சட்டைகளும், பெரிய பல்லிகளின் சத்தமும் விடாமல் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

வேதநாராயணன் அன்று 
அங்கே வேதநாராயண பெருமாளும் அவர் பக்கம்

கைகளை கூப்பிக்கொண்டு ஒரு சின்ன விக்ரஹமும் தென்படுகிறது. ஊர் மக்கள் அவரை பிரம்மா என்றும் அவர் ஒரு பிரம்ம ரிஷி என்றும் கூறுகிறார்கள். பேராசிரியர் அந்த திவ்ய விக்ரஹத்தை ஆராய்ந்து பார்க்கும் போது வேட்டியில் புற்றாக கட்டெறும்புகளும், இரண்டு கைகளிலும் சக்க்ரம் சங்கு பொறிக்கப்பட்டு இருப்பததை பார்க்கிறார். அவர் வேறு யாரும் இல்லை நம் பிள்ளைலோகாச்சாரியர் என்று முடிவு செய்து அவர் திருவரசு எங்கே என்று தேடுகிறார்.

வேதநாராயணன் - இன்று 
சற்று தூரத்தில் ஒரு கல்மேடு தெரிகிறது அதனை சுற்றி கற்களும் அதன் மீது ஒரு அருவாளை சொருகி வைத்திருப்பதை பார்க்கிறார். கிராம மக்கள் அங்கே ஒரு முனிவர் அடக்கம் செய்த இடம் என்று கூறுகிறார்கள். அதுவே பிள்ளைலோகாசார்யர் திருவரசு என்று கண்டுபிடிக்கிறார்.

அதற்கு பக்கம் ஒரு சின்ன குகை தென்படுகிறது. கிராம மக்கள் அங்கே ஒரு காலத்தில் பெருமாள் இருந்தார் என்று கூறுகிறார்கள். அந்த குகை போன்ற அமைப்பில் பாதங்கள் செதுக்கியிருக்கிறது. அதுவே நம் அழகிய மணவாளனுக்கு வேர்த்துக்கொட்டிய இடம் என்று கண்டுபிடிக்கிறார்.

நம்பெருமாள் இருந்த குகை (2007 படம்)
தொடர்ந்து ஒரு மாத காலம் அடிக்கடி அந்த கிரமத்துக்கு சென்று அங்கே இருக்கும் வயதானவர்களை பேட்டி காண்கிறார். அவர்கள் செல்லும் செவி வழி செய்திகளையும் வரலாற்று நூல்களையும் ஒப்பு நோக்கி ஜ்ஜோதிஷ்குடி என்ற ஊர் யானை மலை அடிவாரத்தில் இருக்கும் கொடிக்குளம் என்ற கிராமம் தான் என்று முடிவுக்கு வருகிறார்.
நம்பெருமாள் இருந்த குகை
(2007  படம்)


கள்ளர் பற்று என்ற கிராமத்தை ’மூச்சு இல்லாத கிராமம்’ என்று குறிப்புடன் கலெக்டர் அலுவலகம் சென்று ஆய்வு செய்யும் போது காணாமல் போன கிராமம் என்ற வரிசையில் குறிப்புக்களை பார்க்கிறார். அதுவே பிள்ளைலோகாசார்யர் போகும் போது நம்பெருமாளின் நகைகளை கொள்ளை அடித்த கூட்டம் இருந்த கள்ளர்கள் வசித்த கிராமம்!.

தாமரைக் குளமும் சுனையும் 
மேலும் ஒரு நாள் அவருக்கு ஒரு கனவு வருகிறது. அதில் நம்பெருமாள் ஒரு பல்லக்கிலும், நகை ஆபரணங்கள் இன்னொரு பல்லக்கிலும் அடுத்த பல்லக்கில் வஸ்திரங்களும் எடுத்து செல்கிறார்கள். மூன்று மாட்டுவண்டிகளில் மாடுகளின் சலங்கை, மணிகள் கழற்றப்பட்டு ( சத்தம் போடாமல் போக வேண்டும் என்பதற்கு ) வயதான பெரியவர் ( பிள்ளை லோகாச்சார்யர் ) தீ பந்தத்துடன் முன்னே செல்கிறார். இந்த காட்சியை ஓவியர்கள் வைத்து ஒரு ஓவியமாக தீட்டுகிறார்.


இடிந்த குகை இன்று
பெருமாள் பாதம் இன்று
 ( சேதம் எதுவும் இல்லாமல்)
போன மாதம் பேராசிரியர் பற்றி எழுதியிருந்தேன். அப்போது அவர் சொன்ன விவரங்கள் இவை. திருவரங்கன் உலா பற்றி குறிப்பு மன்னு புகழ் மணவாளமாமுனிவன் என்ற புத்தகத்தில் இருக்கிறது ( அதுவும் பேராசிரியர் எழுதியது ).

இப்பேர்பட்ட இடத்துக்கு இந்த மாதம் ஐப்பசி திருவோணம் பிள்ளை லோகாச்சாரியர் திருநட்சதிரம் ( அக்டோபர் 21, 2015) அன்று சென்றிருந்தேன்.

அன்று காலை திருமோகூர் பெருமாள்
திருவரசுக்கு செல்லும்
பாதை ( பழைய படம் )
ஆப்தனை சேவித்துவிட்டு சென்றேன். `ஆப்தன்' என்பதற்கு நண்பன் என்று பொருள் உண்டு.
தன்னை வழிபடுபவர்களுக்கு உற்ற நண்பனாகவும், அவர்களது இறுதிக்காலத்திற்கு பிறகு வழித்துணைவனாகவும் இருப்பதால் இந்த பெயர். அவர் எனக்கு வழி சொல்லாமலா இருப்பார் ? அங்கே ஒருவரை விசாரித்ததில் மதுரை வேளான் கல்லூரிக்கு பிறகு ஒரு பெட்ரோல் பங்க் அதற்கு அடுத்த லெப்ட் என்று சிறு குறிப்பு எடுத்துக்கொண்டு அங்கே செல்லும் போது யானை மலை பிரம்மாண்டமாக காட்சி அளித்தது. யானை மலை மொத்தம் சுமார் 3 கிமி தூரம். அதை காமராவில் பானரோமிக்காக கவந்துக்கொண்டு, பலகையில் போகும் வழியை பார்த்துக்கொண்டு அங்கே சென்றேன்.
திருவரசு ( பழைய படம் ) 

உள்ளே சென்ற போது கிராம மக்கள் வழி சொன்னார்கள்.
“ஆந்த வழியில் சென்றால் பெரிய பள்ளம் கார் மாட்டிக்கும்”

யானை மலை அடிவரத்தில் ஆங்கிலத்தில் ‘serenity’ என்பார்களே அந்த அமைதி அங்கே குடிக்கொண்டிருந்தது. எங்கும் பசுமை, பறவைகள் ஒலியும், செடிகளில் தட்டான், வண்ணத்துப் பூச்சிகளும் இருந்தது.

அங்கே ஒரு தாமரை குளம்... அதன் முன் ஒரு பலகையில் ”யாரும் கோவில் குளத்தில் இறங்கக் கூடாது.. அசுத்தம் செய்யாதீர் என்று எழுதியிருக்கும் பலகையை படிக்கும் போது தூரத்தில் ஒரு பெரியவர் கையில் இருந்த அருவாளை கீழே வைத்துவிட்டு என் அருகில் வந்து
“சாமி செருப்பை கழட்டி வைத்துவிடுங்கள்.. அப்பறம் குளத்தில் இறங்க கூடாது” என்றார்.

திருவரசு இன்று
கிராம மக்களுடன் பேசிய போது அந்த குளத்தை அவர்கள் பாதுகாத்து வருகிறார்கள். அதை சுத்தமாக வைத்துள்ளார்கள். அதில் யாரும் இறங்குவதில்லை. பக்கத்தில் உள்ள ஒரு சுனையில் என்றும் வற்றாத நீர் இருக்கிறது அதை அவர்கள் குடிக்க, சமையல் செய்ய மட்டுமே உபயோகப்படுத்துகிறார்கள். அதில் கை, கால் அலம்புவதில்லை. நம்பெருமாளுக்கு திருவாராதனத்துக்கு பயன்பட்ட குளம் ஆச்சே !

நம்பெருமாள், பிள்ளைலோகாசார்யர் திருவரசு இருக்கும் இடம் என்று ஒரு எல்லைக்கு பிறகு யாரும் அங்கே செருப்பு போட்டுக்கொண்டு செல்ல கிராம மக்கள் அனுமதிப்பதில்லை.

கிராம மக்கள் பராமரிக்கும் குளம்
தூரத்தில் நான்கு பேர் கீழே உட்கார்ந்துக்கொண்டு இருந்தார்கள். கிட்ட போய் பார்த்த போது சின்ன மைக் உதவியுடன் திருவாய்மொழி சேவித்துக்கொண்டு இருந்தார்கள்! ( படம் கீழே)

அங்கே இருந்த ஒரு ராமானுஜ அடியார்(ஸ்ரீராமன் ராமனுஜதஸர்) என்னை நம்பெருமாள் இருந்த குகைக்கு அழைத்துச் சென்றார். இரண்டு வருடம் முன்பு யானை மலையிலிர்ந்து யானை சைஸுக்கு ஒரு பெரிய கல் உருண்டு வந்து அந்த குகையின் மீது விழ அது பின்னமாகிவிட்டது என்றார். பழைய படம் இருக்கிறது அதை உங்களுக்கு மெயிலில் அனுப்புகிறேன் என்றார்.

திருவரசுக்கு மேல்
யானை மலை
( இங்கிருந்து தான் கல் விழுந்தது )
குகை மீது விழுந்த கல்
சில மணி நேரத்தில் பல அடியார்கள் அங்கே ஒன்று சேர்ந்து பிள்ளை லோகாசாரியர் திருவரசில் மீது அமைதிருக்கும் திவ்ய விக்ரஹத்துக்கு திருமஞ்சனம், சேவாகாலம், சாற்றுமுறை என்றூ இனிதே நடந்து முடிந்தது. அடியார்கள் ஒருவரை ஒருவர் பார்க்கும் போது இருவரும் சேவித்துக்கொண்டார்கள். ராமானுஜர் காலத்துக்கே அழைத்து சென்ற அனுபவம்.

திருவாய்மொழி கோஷ்டி
மணவாள மாமுனிகள் கிபி 1413ல் திருவரங்கத்திற்கு முதன்முறையாக எழுந்தருளியபோது ஆதிகேசவ பெருமாள் மாட வீதிக்குச் சென்று பிள்ளைலோகாசாரியர் திருமாளிகையிலிருந்து மணல் துகள்களைச் சேகரித்து தாம் காலசேஷபம் சாதிக்கும் இடத்தில் ”ரகசியம் விளைந்த மண்ணன்றோ” என்று கொண்டாடினார்.

நம்பெருமாள், பிள்ளை லோகாச்சாரியர் கால் பதித்த அந்த இடத்திலிருந்து ஒரு கல்லை எடுத்து வந்தேன்.


யானை மலை

பிகு: யானை மலை சில குறிப்புகள் - யானை மலை சுமார் 3கிமி நீளம் உள்ள ஒரே மலை. அதன் உள்ளே பல ரகசியங்கள் உள்ளன என்கிறார் அரங்கராஜன் ஸ்வாமிகள். அதில் தமிழ் பிராமி கல்வெட்டுகள் கிபி 717 பழமை வாய்ந்த கல்வெட்டுகள் இருக்கிறது. சுமார் 10-12 வருடம் முன் சிலர் யானை மலையை கிரானைட் பாறைகளூக்கு மலைகளை குடைந்து எடுக்க திட்டம் தீட்டினார்கள். அப்போது அரங்கராஜன் ஸ்வாமிகளும் கிராம மக்களும் உண்ணா விரதம் போராட்டம் இருந்தார்கள். ஸ்ரீவைஷ்ணவ சமூகம் இவர்களுக்கு கடமைப்பட்டிருக்கிறது.

மேலும் சில படங்கள்:
கூகிள் மேப் - தேவர் சிலையிலிருந்து ஜ்ஜோதிஷ்குடிக்கு செல்லும் வழி இங்கே 
மதுரை தேவர் சிலையிலிருந்து ஜ்ஜோதிஷ்குடிக்கு
செல்லும் வழி திருவரசு, வேத நாராயணன் கோயில், யானை மலை, குளம் ஒரே படத்தில் 


மேலும் சில தகவல்கள்:
நம்பெருமாள் 48 ஆண்டுகள் சென்ற இடங்கள்.
1323 - ஸ்ரீரங்கம்,
1323 ( ஏப்ரல் - ஜூலை ) - ஜ்யோதிஷ்குடி
1323-25 - திருமாலிருஞ்சோலை
1325-26 - கோசிக்கொடு
1326-27 திரிகடம்புரா ( தேனை கிடம்பை )
1327-28 - புங்கனூர்வழியாக மேல்கோட்டை
1328-43 - மேல்கோட்டை ( 15 ஆண்டுகள் )
1344-70 - திருமலை ( 26 ஆண்டுகள் )
1371 செஞ்சி, அழகிய மணவாளம் கிராமம், ஸ்ரீரங்கம்

பிள்ளைலோகாசார்யருடன் வந்திருந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்:
கூரகுலோத்தமதாஸர்
திருக்கண்ணங்குடிப்பிள்ளை
திருப்புட்குழி ஜீயர்
விளாஞ்சோலைப்பிள்ளை
நாலூர்ப்பிள்ளை
மணற்பாக் காத்து நம்பி
கொல்லி காவலதாஸர்
கோட்டூர் அண்ணர்
திருவாய்மொழிப் பிள்ளையின் திருத்தாயார்
திருக்கோபுரத்து நாயனார்

பயன் பட்ட நூல்கள்:
மன்னுபுகழ் மணவாளமாமுனிவன் - இரா. அரங்கராஜன்
ஸுதர்சனர் எஸ்.கிருஷ்ண ஸ்வாமி - ஸுதர்சனர் 1007 முதல் பாகம்.
அரங்கமா நகருளானே
பழைய படங்கள் - இணையம், திருவரசு நண்பர்கள் அனுப்பியது, மற்றவை அடியேன் எடுத்தது.
அழகிய மணவாளன் என்கிற நம்பெருமாள் பேயாழ்வார் திருநட்சத்திரம் அன்று எழுதியது ( 23/10/2015)

கல் சொல்லும் கதை - பாகம் - 2 இங்கே : http://sujathadesikan.blogspot.in/2017/02/2.html 

Comments

 1. நானும் சேவித்துக் கொண்டேன்.. ஸ்வாமி பற்றி எப்போது படித்தாலும் கேட்டாலும் கண் கலங்கி விடுகிறது. திருவரங்க செல்வத்தைக் காப்பாற்றிக் கொடுத்த வள்ளலுக்கு நாமெல்லாம் வாழ்நாள் முழுதும் நமஸ்கரிக்க வேண்டும்

  ReplyDelete
 2. நீங்கள் பாக்யசாலி!!

  ReplyDelete
 3. மிகவும் அரிதான மற்றும் இனிதான தகவல் வழங்கிய திரு சுஜாதா தேசிகனுக்கு வந்தனம். திருவரங்கனின் உலாவைப் பற்றி எழுதிய ஆசிரியர், ச்வாமி வேதாந்த தேசிகனின் பங்கினைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. நிச்சயம் எழுதுகிறேன். அதற்கு சில தகவல்களை படித்துக்கொண்டு இருக்கிறேன்.

   Delete
 4. Mikka nandri, yanai malai narasimha moorthy dharisanam panni iruken....thiruvarsukku adutha nadi tripla poganum

  ReplyDelete
 5. மெய்சிலிர்த்து விட்டது , ஐயா .

  ReplyDelete
 6. மிக அருமையான கட்டுரை.......நன்றிகள் பல.......அடியேன் ராமானுஜதாசன்....

  ReplyDelete
 7. ஸ்ரீனிவாசன்October 29, 2015 at 2:04 PM

  அரிய தகவல்கள்..!
  வரலாறு மற்றும் தகவல்களை தேடி திரட்டி அவைகளை மிகுந்த அலைச்சலுகிடையில் நேரில் சென்று பக்தியில் திளைப்பது ஒரு சிலரே..!

  " தேடற் கரியவனைத் திருமாலிருஞ்சோலை நின்ற
  ஆடற் பறவையனை அணியாயிழை காணுமென்று
  மாடக் கொடி மதில்சூழ் மங்கையார் கலிகன்றி சொன்ன
  பாடல் பனுவல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே "
  - பெரிய திருமொழி ( திருமாலிருஞ்சோலை)

  ReplyDelete
 8. அருமையான விஷயங்களை அற்புதமாகப் பகிர்ந்து உள்ளீர்கள். அடியார்கள் வாழ, அரங்கநகர் வாழ, குரு பரம்பரை வாழ, இன்னுமோர் நூற்றாண்டு இரும்..... கொண்ட பெண்டிர் மக்களோடு!

  ReplyDelete
 9. very well written. Needs to be published widely for more people to read Thank you

  ReplyDelete
 10. பிள்ளை லோகாசார்யன் பெயர் வந்த கதை முதல் சுவாரஸ்யம்!!!

  வடக்குத் திருவீதிப்பிள்ளையும், பெரியவாச்சான் பிள்ளையும் நம்பிள்ளையின் சிஷ்யர்கள் என்பதில் தொடங்கி இருக்கும் இக்கட்டுரை , மனதில் உடனேயே ஆவலைத்தூண்டி பலப்பல விஷயங்களுக்கு எண்ணங்களை ஒருமுகப்படுத்துகிறது!!!!!

  ஒரு வாக்கியத்தில் நிறைய தகவல்கள் உண்டு தேசிகன் கட்டுரையில்!!! ஒரு தடவைக்கு இரண்டு தடவை படிக்கிறேன் தெரிந்து கொள்ள!!!! பொக்கிஷமான அரிய பெயர்கள்!!!! அதிசயங்கள்!!!!


  ஸ்ரீ ரங்கநாதரை காப்பாற்ற எவ்வளவு எவ்வளவு முயற்சிகள் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் நம் ஆச்சார்யர்கள்!!!!!

  முகம்மதிய படை நெருங்கி வர வர நமக்கு அடிவயிற்றில் கலக்குகிறது!!!! என்ன செய்து காப்பாற்றுவார்கள் என்று பதைபதைக்கிறது நினைவுகள்!!!

  அந்தப்பாடு பட்டிருக்கிறார் பிள்ளைலோகாசரியர் !!! அந்த வயதிலா ஸ்ரீ ரங்கநாதருடன் இந்த பயணம்!!!! நினைத்தே பார்க்க முடியவில்லை!!!!என்ன சமயோசிதமான யுக்தி!!! மெய்சிலிர்க்கிறது!!! மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்கின்றன!!!! அவ்வளவு தத்ரூபமான நிகழ்வு!!!! ஒவ்வொரு செயலையும் அருமை மாலையாக கோர்த்திருப்பது அற்புதம் தேசிகன்!!! உங்கள் விரல்களிலும் எண்ணங்களிலும் பெருமாள் சுவாசிக்கிறார்!!!

  ஜ்யோதிஷ்குடி வரை வந்திருக்கிறேன் பெருமாளுடன். என் மாதிரி பாமரர்களுக்கு திரும்பத்திரும்ப படித்தால் தான் மண்டையில் ஏறுகிறது!!!! திரும்ப வருகிறேன் தேசிகன்!!!

  ReplyDelete
 11. காடும் குகையும் வற்றாத சுனையும், என்கிற அற்புத வர்ணனையை தாண்டிய கண்கள் , பன்னீராயிரம் ஸ்ரீவைஷ்ணவர்கள் கொல்லப்பட்டனர் என்ற கொடூரத்தை ஏற்கவே முடியவில்லை. பெருமாள் அவர்களை காப்பாற்றி இருக்கக்கூடாதா என்று கண்களில் நீர் வழிகிறது. ஏனோ இந்த அசம்பாவிதத்தை தோற்றுவித்து விட்டார்.

  பெருமாள் தன ஆச்சார்யர்களுடன் பயணிப்பதை வெகுவாக ரசிக்கிறார்!!! மானுடர்களைப்போலவே அவருக்கு வியர்க்கிறது!!!! ஏனென்றால் ஆத்தமார்த்தமாக அவரை நேசித்து அவருக்காக பாடுபடும் தொண்டர்களின் நடுவே இருக்க விரும்புகிறார்!!! மிக வியப்பாக இருக்கிறது தேசிகன்!!! திரும்ப திரும்பப்படிப்போம் என்று கண்களும் மனமும் ஆரம்ப வரிகளுக்கே போகிறது!!!! அற்புத ஆற்றல் உங்களுக்கு!!!


  படித்துக்கொண்டே நாங்களும் பெருமாளுடன் ஓடுகிறோம்!! நிற்கிறோம்! ஆசுவாசப்படுத்திக்கொள்கிறோம் !!!! இந்த உணர்வை உங்களால் மட்டுமே தர முடியும் தேசிகன்!!! வேறொன்றுமே தேவையில்லை என்று ஆர்ப்பரிக்கிறது மனது!!!! கோவிலில் மற்ற ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு என்னவாயிற்றோ என்று தேகம் நடுங்குகிறது.


  ஆஹா!! எத்தனை அன்புள்ளம் பிள்ளைலோகாசார்யருக்கு!!!!! கருணையே கருணை!!! மனதுக்கு இதமாக சொல்லி இருக்கிறீர்கள் தேசிகன்!!!! வற்றாத வீழ்ச்சி போல் வார்த்தைகள் அருமை! அற்புதம்!!! அந்த பரமாத்மா அவ்வளவு பேருக்கு மோக்ஷம் பெற்றுத்தந்திருக்கிறார்! திருவரசு விளக்கம் நெக்குருகி விட்டது!!! தன அடியார்களை எப்படி கண்போல் காக்கிறார் பெருமாள்??!!!

  ReplyDelete
 12. Most interesting and refreshing all the time when I start reading again!!!! Such a vast description including so many so many minute details!!!!! It is a real treasure to save all the details in my mind!!!!

  ReplyDelete
 13. You have done a lot of spade work to produce so many very interesting and mind blowing details!!!! Your fluent flow makes the reading very very absorbing!!!!Hats off Desikan!!!! You are sure to make a mark in the World map!!!!

  ReplyDelete
 14. I have been here.. dint know that there was a cave actually. Felt as if I was there while reading. Thank you so much.

  ReplyDelete
 15. eyes are moisturising.. what a devotion to core. today we find it only in outwards

  ReplyDelete
 16. உங்களுக்கு பெருமாள் கடாக்ஷம் பூரணமாக இருக்கிறது. ஒரு முறை படித்த எல்லோருக்கும் பிள்ளை லோகச்சாரியார் பார்வையில் பட்ட புண்ணியம் வந்து சேரும் என்று நம்புகிறேன்.

  ReplyDelete
 17. தங்கள் பதிவு மிக அருமை. மிக்க நன்றி.

  ReplyDelete
 18. மிக அற்புதம்!! As usual!!

  ReplyDelete
 19. Sir excellent narration, I want to meet you, you are becoming living library

  ReplyDelete

Post a Comment