உலக சுற்றுச்சூழல் நாள் ஜூன் ஐந்து அன்று எல்லா நாளிதழிலும் விளம்பரம், கட்டுரை வந்து அடுத்த நாள் பாக்கெட் பால் வாங்கும் போது அதைப் பற்றி முழுவதும் மறந்துவிடுகிறோம். ஜூன் ஐந்து முதல் பிளாஸ்டிக் உபயோகப்படுத்துவது இல்லை என்று முடிவு செய்து, முதலில் டப்பர் வேர் டிபன் பாக்ஸை மாற்றினேன். ஜீன்ஸ் போட்ட பெண் தலையில் பூ வைத்துக்கொண்டது போல என்னை பார்த்தார்கள். “உங்க டயட்டைல் துவும் சேர்ந்ததா ?” போன்ற கேள்விகளை கடந்து தினமும் பள்ளிக்கரனை வழியாக அலுவலகம் செல்லும் போது அந்த குப்பை மேடுகளில் தான் எவ்வளவு பிளாஸ்டிக் ! ரங்கநாதன் தெருவில் இரவு 12 மணிக்கு சென்றால் அங்கே கிடக்கும் பிளாஸ்டிக் குப்பையை பார்க்க மலைப்பாக இருக்கும். ஃபேஸ்புக்கில் வரும் செல்ஃபி படங்களை உற்றுப்பார்த்தால் எங்காவது ஒரு பிளாஸ்டிக் இருக்கிறது. நம் தாத்தா பாட்டிகள் பலர் 80 வயசுக்கு மேல் திடமாக வாழ்ந்ததற்கு, தற்போது அதிகமாக கேன்சர் வருவதற்கும் இந்த பிளாஸ்டிக்கும் ஒரு காரணமாக இருக்கலாம். பிளாஸ்டிக் இல்லாமல் வாழ முடியுமா என்று ஒரு நாள் முயன்று பார்த்தேன். கஷ்டம் தான். இரண்டு நிமிஷம் பட்டியலிட்டேன். பால் பாக்கெட...