Skip to main content

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையுடன் ஒரு நாள்


பெரிவாச்சான் பிள்ளை - சேங்னூர்


காலை 6 மணிக்கு கும்பகோணம் வந்த போது சீமாட்டியுடன் சிட்டி யூனியன் வங்கியும் வரவேற்றது. பித்தளை பாய்லர் குளித்துவிட்டு விபூதி பட்டை அடித்துக்கொண்டு தூங்கி வழிந்துக்கொண்டு இருந்தவர்களுக்கு டீ கொடுத்துக்கொண்டிருந்தது.

மினி பஸ்ஸில் ஏறிய போது அதில் ’சகலமும் கிருஷ்ணார்ப்பணம்’ என்று உணர்ந்தேன்; பஞ்சு மிட்டாய் பாக்கெட், கீரைக்கட்டு, முருங்கை, பூ கூடை... தலைக்கு மேல் உள்ள கைபிடியில் லுங்கி, பனியன் உலர்ந்துக்கொண்டு. இதன் மத்தியில் எனக்கு உட்கார இடமும் கிடைத்தது பெரிய பாக்கியம்.

கும்பகோணத்திலிருந்து சேங்கனூர் சுமார் 15 கிமி தூரத்தில் இருக்கிறது. அந்த பேருந்தில் "ஊர தெரிஞ்சுக்கிட்டேன்" பாடலை காலை 6.30 மணிக்கு எதிர்பார்க்கவில்லை. பாடல் முடிந்தவுடன் டிரைவர் ஸ்டியரிங்கை விட்டுவிட்டு ரிமோட்டை தேடி திரும்பவும் அதே "ஊர தெரிஞ்கிட்டேன்" மறு ஒலிபரப்பு செய்தார், கொஞ்சம் அதிக சத்தத்துடன். இரண்டாவது முறை பாடல் முடிந்தவுடன் சேங்கனூர் வந்துவிட்டது. இரண்டு காத தூரம் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். இரண்டு காது வலிக்கும் தூரம்.

மெயின் ரோடிலிருந்து ஒரு மைல் தூரத்தில் இருக்கிறது இந்த சின்ன கிராமம், அப்பாவியான மக்கள், அதில் சின்ன கோயில் உள்ளே பெரிய ஶ்ரீநிவாச பெருமாள். நான் போன போது ராமானுஜ நூற்றந்தாதி கோஷ்டி சேவித்துக்கொண்டு இருந்தார்கள். ’வியாக்கியான சக்ரவர்த்தி’ பெரியவாச்சான் பிள்ளை அங்கே கம்பீரமாக காட்சி அளித்தார்.

பெரியவாச்சான் பிள்ளை பற்றி அடியேன் படித்ததிலிருந்து சிறு குறிப்பு கீழே..

தாயார் - பெருமாள் - சேங்கனூர்
ஸ்ரீராமானுஜர் காலத்துக்கு முன்பு வரை திவ்யபிரந்தங்களுக்கு எழுத்து வடிவில் உரை இல்லை. “ஓராண்வழியாக” ஆசாரியர், தங்கள் சிஷ்யர்களுக்கு சொல்லப்பட்டு வந்தது. ஸ்ரீராமானுஜர் காலத்தில் தான் முதன் முதலில் திவ்யபிரந்தங்களுக்கு எழுத்து வடிவில் உரை வந்தது.

ஆளவந்தார் காலத்தில் சிலரைக் கொண்ட திரளில் விளக்கம் செய்துள்ள குறிப்பு இருக்கிறது. ஆனால் பாசுரப் பொருள்களைச் சிலருக்கே விரித்துரைக்கும் நிலமையை முழுவதுமாக மாற்றி அமைத்த பெருமை நம் ராமானுஜரையே சாரும். அவர் திருவாய் மொழியின் பொருளை

எல்லோருக்கும் உரைக்க வேண்டும் என்று பணித்தார். ஸ்ரீ ராமானுஜர் பணித்த கட்டளைகளே இதற்கு சான்று.

அமைதியான கிராமம்
வட மொழியில் பல நூல்களை எழுதிய ராமானுஜர் தமிழ்நூல்களில் எதற்கும் உரை எழுதவில்லை என்ற கூற்று ஒன்று ஆராய்ச்சியாளர்களிடம் இருக்கிறது. ஸ்ரீராமானுஜர் ஆழ்வார் பாசுரங்களை சிந்தித்தவாரே இருந்தார் என்பதற்கு பல சான்றுகள் இருக்கிறது.

ஸ்ரீராமானுஜர் திருமலையாண்டானிடத்து ஆளவந்தாருடைய திருவாய்மொழி அர்த்தங்களை கேட்ட போது, சில இடங்களில் ஸ்ரீராமானுஜர் வேறு சில அர்த்தங்களை சொல்ல அதனால் கோபித்துக்கொண்டு சில நாள் திருவாய்மொழிக்கு அர்த்தம் சொல்லுவதை நிறுத்திவிட்டார்

என்றும், பிறகு திருக்கோட்டியூர் நம்பி தலையிட்டு அதை தொடர்ந்தார் என்கிறது குருபரம்பரை. ஸ்ரீராமானுஜர் திய்வபிரந்தங்களுக்கு உரை எழுதாதற்கு காரணம் தான் எழுதினால் பிற்பாடு

வருபவர்கள் வேறு சிந்தனைகள் பிறக்க வாய்ப்பின்றி போகும் என்று எண்ணம் தான் காரணமாக இருக்கலாம்.  திவ்யபிரந்தங்களுக்கு குறிப்பாக திருவாய்மொழிக்கு முதன்முதலாகத் திருக்குருகைப்பிரான் பிள்ளான் உரை எழுதினார். அவரை தொடர்ந்து பட்டர், நஞ்சீயர், நம்பிள்ளை, பெரியவாச்சான் பிள்ளை, வாதிகேசரி அழகிய மணவால ஜீயர், அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்,  மணவாள மாமுனிகள் ஆகியோர் திவ்யபிரந்தங்களுக்கு உரை எழுதினர்.

சேங்கனூர் வீதியில் ஒர் வீடு
திருவாய்மொழிக்கு சிறந்த உரை என்று கருதுவது நம்பிள்ளை ஈடு எனலாம். இந்த ஈடுக்கு ஒரு வரலாறு உண்டு, அதை பிறகு ஒரு சமயம் எழுதுகிறேன். (பெரிவாச்சான் பிள்ளை தன் சிஷ்யர்களுடன் கூட உரையாடல் சில இருக்கிறது அதையும் பிறகு எழுதுகிறேன் )

நம்பிள்ளையின் சிஷ்யரான பெரியவாச்சான் பிள்ளை ஆவணி ரோகிணியில்
யாமுனாசார்யருக்கும் நாச்சியாரம்மனுக்கும் திருக்குமாராராய், ழநாட்டில் (தஞ்சாவூர் பக்கம்)

உள்ள திருவெள்ளியங்குடி என்னும் திவ்யதேசத்திற்கு அருகில் உள்ள சங்கநல்லூர் என்னும் ஊரில் கிபி 1167ல் அவதரித்தார்.

ஆவணி ரோகிணியில் அவதரித்ததால், இவர் கண்ணனின் அம்சமாகவே கருதப்பட்டார். அதனாலேயே, இவருக்கு கிருஷ்ணர் என்னும் திருநாமத்தைச் பெற்றார். இவர் இல்லை என்றால் இன்று ஸ்ரீவைஷ்ணவம் இப்படி வளர்ந்திருக்காது என்பது நிதர்சனம். பெரிய பெருமாள், பெரியாழ்வார், பெரியவாச்சான் பிள்ளை, பெரியஜீயர் என்று அழைக்கப்பட்ட

திருவெள்ளியங்குடி 
நால்வரும் அவரவர் பெருமையால் ‘பெரிய’ என்ற பட்டத்தை அடைந்து புகழப்பட்டிருக்கிறார்கள்.

பெரியவாச்சான் பிள்ளையின் அவதார ரகசியம் சுவாரஸியமானது.

"மெய்ம்மை சொல்லின் வெண்சங்கம் ஒன்று ஏந்திய
கண்ணா நின்தனக்குக் குறிப்பாகில்,
கற்கலாம் கவியின் பொருள்தானே"
[ திருமங்கை ஆழ்வார், பெரிய திருமொழி, திருக்கண்ணமங்கை 7-10-10 ]

என்று திருமங்கையாழ்வார் திருக்கண்ணமங்கைக் கண்ணன் தம் திருமொழியின் அர்த்தங்களை அறிந்துகொள்ள வேண்டும்மென்று ஆசைப்படுவதை அறிந்து “நீ என்னிடமிருந்து கவியின் பெருளைக் கற்றுக் கொள்ளலாம்” என்று கூறியதை கேட்ட கண்ணனும் அவசியம்

கற்றுக்கொள்கிறேன் என்று அவதார ரஹஸ்யத்தை கூறினார். “உமது அவதாரத் திருநட்சத்திரத்தில் கார்த்திகையில் கார்த்திகை நாளிலேயே உமது திருநாமமான ’திருக்கலிகன்றி தாஸர்’என்ற திருநாமத்துடன் இந்த சோழநாட்டில் அவதரிக்கப் போகிறீர். அப்போது அதே சோழநாட்டில் என் அவதார திருநட்சத்திரமான ஆவணி ரோஹிணியில் கண்ணன் என்னும் பெயருடன் அவதரித்து உம்மை ஆசார்யனாகக் கொண்டு

அருளிச் செயல்களின் பெருள்களையும் உம்மிடமிருந்தே கற்றறிந்து இவ்வுலகுக்கு வெளிப்படுத்துவேன்” என்று அருளிச் செய்தான். அதன்படியே கலிகன்றியாகிய திருமங்கையாழ்வார் திருக்கலிகன்றிதாஸராகிய நம்பிள்ளையாகவும், கண்ணன் பெரியவாச்சான் பிள்ளையாகவும் அவதரித்தனர் என்று பெரியார் கூறுவர்.

சங்கநல்லூரில் இவரைப் பற்றின சரித்திரம் அதிகம் இல்லை. கோயில் சுவற்றில் அவரை பற்றிய கதை ஒன்று இருக்கிறது.

மனைவியுடன் திருமலைக்கு செல்கிறோம் என்று அவர் பெற்றோர்களிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டார். பிறகு திருமலையிலிருந்து பிரிய மனம் இல்லாமல் அங்கேயே தங்க முடிவு செய்த பொது பெருமாள் பிரம்மசாரியாக தோன்றி சாளக்ராமத்தை தந்து ஊருக்கு செல்ல பணித்தார்.

கொள்ளிடக்கரையில் சாளக்கிராமத்தை வைத்துவிட்டு குளிக்கும் போது, சாளக்ராமம் மறைந்துவிடுகிறது. மனம் வருந்துகிறார். பெருமாள் கனவில் தோன்றி தான் கொள்ளிட மணலில் பதிந்து கிடப்பதை தெரிவிக்கிறார். அவ்விக்ரஹத்தைச் சேங்கனூரில் பிரதிஷ்டை செய்தாரென்றும் அவ்வூரில் வரலாறு வழங்குகிறது. தமது தாய் தந்தையர் ஆச்சாரியன் திருவடியை அடைந்த பின் திருவரங்கத்துக்கு வந்து நம்பிள்ளையின் திருவடிகளை ஆசரியத்து பல உரைகளை நமக்கு தந்தருளினார். இவர் திரும்ப சேங்கனூருக்கு திரும்பினதே இல்லை என்று கொள்ளலாம்.

ஸ்ரீரங்கத்தில் இவர் வாழ்ந்த காலம் ஸ்ரீவைஷ்ணவத்துக்கு பொற்கலமாக அமைந்தது என்று சொல்லலாம். இவருக்கு முன் வாழ்ந்த எம்பெருமானார், பட்டர் காலத்திலும் அரசர்களின் உபத்ரவம், அரசியல் கலகங்கள் இருந்தன. இவருக்கு பின் பிள்ளை லோகாசார்யர்,

வேதாந்த தேசிகன் காலத்தில் துருஷ்கர்களால் பேராபத்துகள் விளைந்தன. ஆனால் பெரியவாச்சான் பிள்ளை காலத்தில் இத்தகைய எந்த இடையூறும் இல்லாமல் ஸ்ரீவைஷ்ணவர்கள் நிம்மதியாக ஆழ்வார், பூர்வாசாரியகளின் விளக்கங்களை கேட்டு நீண்ட உரை எழுதினார்கள். அதனால் ஸ்ரீவைஷ்ணவ வளர்ச்சிக்கு இந்த காலம் பொற்காலம் என்று கூறினால் அது மிகையாகாது.

’வியாக்கியான சக்ரவர்த்தி’ என்று போற்றப்பட்ட பெரியவாச்சான் பிள்ளை நாலாயிர திவ்வியப்பிரபந்தம் முழுமைக்கும் வியாக்கியானம் மட்டும் இல்லாமல், சமிஸ்க்ருத ஸ்தோத்திரங்கள், ராமாயணம், ரகசிய கிரந்தங்கள் என்று செய்துள்ளார். வேத வேதாந்தங்களை

பற்றி நாம் அறியாத பொருட்களை எல்லாம் தமிழ் பிரபந்தத்தாலே அறிந்து கொள்கிறோம் என்று வேதாந்த தேசிகன். பிரபந்தம் மட்டுமே இருந்திருந்தால், அதன் உட்பொருளை யாராலும் அறிந்துக்கொள்ள முடியாது. வேதாந்த அர்த்தங்களை கிராஸ் ரெப்பரென்ஸ் மூலம் நமக்கு எப்படி அனுபவிக்க வேண்டும் என்று சொன்னவர் பெரியவாச்சான் பிள்ளை. புலமையும், ஆழ்வார்கள், ஆசாரியர்களின் அருளும் இவருக்கு கிடைத்ததால் இது சாத்திமாகியது..

நம்பிள்ளை தம்முடைய நல்லருளால் ஏவியிட
பின் பெரியவாச்சான் பிள்ளை அதனால் - இன்பா
வருபத்தி மாறன் மறைப்பொருளைச் சொன்னது
இருபத்திநாலாயிரம்" என்று உபதேச இரத்தினமாலையில் மனவாள மாமுனிகள் போற்றியுள்ளார்.

இதில் ’ஏவியிட’ என்ற வார்த்தையை நம்பிள்ளை ஆச்சாரிய அனுகிரகத்துடன் எழுதினார் என்று பொருள்கொள்ள வேண்டும்.

இவருடைய சிஷ்யரான வாதி கேசரி ஜீயர் இவரால் உயர்வு பெற்ற கதையை பார்க்கலாம். வாதி கேசரி ஜீயர் ஆரமத்தில் பெரியவாச்சான்பிள்ளைக்குத் திருமடைப்பள்ளி(தளிகை) கைங்கரியம் செய்து வந்தார். அவ்வளவாக கல்வி ஞானம் பெற்றிருக்கவில்லை. பெரியவாச்சான் பிள்ளையை சேவிக்க வந்திருந்த சில பண்டிதர்கள் அவர் திருமாளிகையில் ஏதோ கிரந்தங்களை பற்றி ஆராய்ந்துக்கொண்டு இருந்தார்கள். வாதி கேசரி ஜீயர் அது என்ன என்று கேட்க இவருடைய கல்வி அறிவின்மையை சுட்டிக்காட்ட  ( முஸலகிஸலயம் ) “உலக்கை கொழுந்து”

என்றார்கள். இவர் அந்த கிரந்தத்தின் பெயர் தான் அது என்று நினைத்து பெரியவாச்சான் பிள்ளையிடம் அந்த வித்வான்கள் சொன்னதை சொல்லி அந்த கிரந்தம் யார் அருளிச்செய்தது ? என்று கேட்டார்.

பெரியவாச்சான் பிள்ளை உண்மையை உணர்ந்து “அப்படி ஒரு கிரந்தம் இல்லை - உன் புத்தி உலக்கை கொழுந்து போன்றுள்ளது” என்று பரிஹஸித்திருக்கிறார்கள் என்று வருத்ததுடன் சொன்னார். இதைக்கேட்ட அழகிய மணவாளர் பெரியவாச்சான் பிள்ளையின் திருவடிகளை
பிடித்துக்கொண்டு “அடியேனை எப்படியாவது வித்வானாக்கி விடவேணும்” என்று பிராத்தித்தார். அன்று முதல் பெரியவாச்சான் பிள்ளை இவருக்கு பாடம் சொல்லி வடமொழியிலும், தமிழ்மொழியிலும் இலக்கண இலக்கியங்களைக் கரைகண்டவராக ஆக்கினார். தன்னை பரிஹசித்த வித்வான்களை வெட்கப்படும் படி, இவர் திருவாய்மொழிக்கு "பன்னீராயிரப்படி" வியாக்யானம் ருளிச்செய்தார். கூடவே‘முஸலகிஸலயம்’ என்றொரு கிரந்தமும் செய்தார்.

இவர் செய்த கிரந்தத்தின் தொடக்கத்தில் - ஒன்றுமறியாத விலங்குபோல் இருந்த அடியேன் எவருடைய கடாஷத்தால் பிறவாமை பெற்றேனோ, அத்தகைய பெருமைபெற்ற அபயப்ரதர் என்னும் திருநாமுடைய நம் ஆசார்யரை அடியேன் வணங்குகிறேன் என்று கூறுகிறார்.

பெரியவாச்சான் பிள்ளைக்கு "பரம காருணிகர்" மற்றும் "அபார கருணாம்ருத சாகரர்" என்ற இரண்டு உயர்ந்த பெயர்களை வைணவ உலகம் சூட்டியது மகிழ்ந்தது. திருவரங்கநாதன் "அபயப்ரதராஜர்" என்னும் பட்டத்தை இவருக்கு அருளிச்செய்தான். இராமாயண அர்த்த விசேஷங்களை எடுத்துரைத்ததால், "இராமாயணப் பெருக்கர்" என்றும் இவருக்கு ஒரு பெயர்
உண்டு.


இவர் செய்த நாலாயிரதிவ்ய பிரபந்த வியாக்கியனங்களில் பெரியாழ்வார் திருமொழியில் நானூறு பாசுரங்களின் வியாக்கியானம் லுப்தமாகிப்போக அதற்கு மணவாளமாமுனிகள் பலருடைய பிராத்தனைக் கிணங்கி அக்குறையைத் நீக்கியருளினார்.

பெரியவச்சான் பிள்ளை 95 வயது வாழ்ந்து, கிபி 1262ல் ஆசாரியன் திருவடிகளை அடைந்தார். பெரியவாச்சான் பிள்ளைக்குக் குமாரர் (மகன்) இல்லை; ஆகவே, இவர் தனது சகோதரியின் மகனான "நாயனாச்சான் பிள்ளை" என்பவரை ஸ்வீகாரம் எடுத்துக்கொண்டு, தான் நம்பிள்ளையிடமிருந்து பெற்ற உபதேசங்களை அவருக்கு அருளிச்செய்தார்.


பெரியவாச்சான் பிள்ளை வாழித் திருநாமம் :
"தீதறு நம்பிள்ளை பதம் சென்னிவைப்போன் வாழியே
திருமலையில் மால் பதத்தை சிறந்து பெற்றான் வாழியே
ஆதரவாய் தனிச்லோகி தான் அருளினான் வாழியே
ஆழ்வார்கள் சொற்பொருளை அறிந்துரைப்போன் வாழியே
ஒதுபுகழ் சங்கநல்லூர் உகந்துபெற்றான் வாழியே
உரோகிணி நாள் ஆவணியில் உதித்த பிரான் வாழியே
ஏதமில் எண் மூவாயிரம் இயம்புமவன் வாழியே
எழில் பெரியவாச்சான் பிள்ளை இணையடிகள் வாழியே."

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.


சிறிய வாச்சான் பிள்ளை
நேற்று இந்த பையன் பெயர் ’வித்தசைன்’ (கூப்பிடுவது விக்கி) எல்லா இடத்திலும் வியாபித்திருந்தான். பார்க்க சிறிய வாச்சான் பிள்ளை மாதிரியே இருந்தார்.

சாற்றுமுறை முடிந்து சக்கரைபொங்கல், புளியோதரை, தத்யோனம் என்று பெரியவாச்சான் பிள்ளை அருளினார். இதற்கு ’ஈடு’ வேறு இல்லை !

ஸ்ரீகிருஷ்ண பிரேமி ஸ்வாமிகள் கோயிலுக்கு வந்திருந்தார் ( அவரை முதல் முதலில் பார்க்கிறேன்) ”சௌக்கியமா?” என்று என்னை விசாரித்தவரிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு, பெரியவாச்சான் பிள்ளைக்கு பிரியாவிடை தந்துவிட்டு திருவெள்ளியங்குடிக்கு ‘குறுக்கால வயல்வெளி பக்கம் போகலாம்’ என்று ஒருவர் சொல்ல சாப்பிட்ட கார்போஹைட்ரேட்டை கரைக்க நடக்க ஆரம்பித்தேன்.

திருவெள்ளியங்குடி சென்ற பாதை 
சுமார் 2 மைல் தூரம் இருக்கும். போகும் போது இரண்டு பக்கமும் பசுமை, வயலில் பெண்கள் வேலை செய்து கொண்டு, வாய்க்காவில் தண்ணீர் ஓடும் சத்தம், எல்லா இடங்களிலும் பறவை, தேனிக்கள் சத்தம் எங்கு பார்த்தாலும் பட்டாம் பூச்சி என்று வேறு உலகத்துக்கு சென்றேன். எங்காவது கவிதை எழுதி தொலைத்துவிடுவேனோ என்று வேகமாக நடந்தேன்.

திருவெள்ளியங்குடி பெருமாள் கோலவில்லி ராமன். இந்த திவ்யதேசத்தை சேவித்தால் 108 திவ்ய தேசங்களையும் சேவித்த பலனைத் தரும் என்கிறார்கள். பெருமாளுக்கு சங்கு சக்கிரம் கிடையாது அதை கருடாழ்வார் வைத்திருக்கிறார்.

போகும் போது வெளியே துளசி விற்பவர் “நான் தான் சாமி இந்த கோயிலுக்கு வாயில்காப்பவன் மூன்று தலைமுறையாக நாங்க இதை செய்கிறோம்” என்றார்.  ( வாட்ச்மேன் என்ற சொல்லை அவர் உபயோகிக்காமல், வாயில்காப்பான் என்ற சொல்லை அவர் உபயோகித்தது ஆச்சரியமாக இருந்தது )

பெருமாள் தாயரை சேவித்திவிட்டு வரும் போது ”சாமி ஆண்டாள் சன்னதிக்கு போகலையே அங்கே இருக்கும் பாருங்க” என்று எனக்கு வழி காண்பித்தார்

“நாயகனாய்நின்ற நந்தகோபனுடைய கோயில் காப்பானே, கொடித்தோன்றும் தோரண வாயில்காப்பானே” என்ற பாசுரம் நினைவுக்கு வந்தது.  சகலமும் ஆடும் பஸ்ஸில் ஆடிக்கொண்டு கவிதை கிராமத்தை விட்டு ஸ்ரீரங்கத்துக்கு வந்து சேர்ந்தேன்.

--o0o--o0o--o0o--o0o-   

பாகுபலி 50வது நாள் வெற்றி போஸ்டர் வரவேற்க ஸ்ரீரங்கம் கோயில் மாறியிருக்கிறது. ஸ்ரீரங்கம் பெரிய கோயில் டிவிஎஸ் மற்றும் ‘அம்மா’ உதவியால் இன்னும் பெரிதாக்கப்பட்டிருக்கிறது.

பளிச் கோபுரங்கள்
இது எல்லாம் இவ்வளவு நாள் எங்கே இருந்தது ? என்று மலைத்துப்போனேன். ரிசப்ஷனுக்கு மேக்கப் போட்ட பெண் போல எல்லா கோபுரமும் பளிச் என்று இருக்கிறது. இவ்வளவு நாள் ஸ்ரீரங்கத்தில் மறைந்து கிடந்த கொட்டாரம் பூசப்பட்டு அட உள்ளே போய் கூட பார்த்துவிட்டு வந்தேன்!

புளியோதரை பிரசாதம், திருவல்லிக்கேணியை மிஞ்சிவிடும் போல சுவையாக இருக்கிறது. தேன்குழல் கடிக்க முடிகிறது. நம்பெருமாளையும், தாயார் சன்னதியும் சேவித்து முடித்தபின் ஆயிரம் கால் மண்டபத்துக்கு பக்கம் சென்ற போது அங்கேயும் பிரமாண்டமாக புனர்நிர்மாணம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

வேணுகோபாலன் சன்னதி சுற்றி அழகாக புல் எல்லாம் வளர்த்து, வெளி ஆண்டாள் சன்னதிக்கு பக்கம் ‘அடடே’ போட வைக்கும். உடையவர் சன்னதிக்கு பின்புறம், தன்வந்திரிக்கு சன்னதிக்கு பக்கம் பல புது இடங்களை கண்டுபிடித்து கொடுத்துள்ளார்கள்.

கஸ்டமர் மாடு
ஸ்ரீரங்கம் கோயில் ஒரு டெய்லர் கடையில் இந்த காட்சியை பார்த்து அதிசயத்து போனேன். சின்ன டெய்லர் கடையில் உள்ளே மாடு ஒன்றூ கஸ்டமர் மாதிரி உள்ளே இருந்தது. “தினமும் வரும் சார்” என்று அசால்டாக சொன்னார்கள்.

தாயார் சன்னதிக்கு பக்கத்தில் இருக்கும் நண்பர் @Veeraraghavan Sampath சுவாமிகளை சந்தித்துவிட்டு வேதநாராயணன் செய்த கிருஷ்ண சேஷ்டைகளை கோகுலாஷ்டமி ஸ்பெஷலாக அனுபவித்துவிட்டு, அருமையான காபி குடித்துவிட்டு கொஞ்சம் ராமானுஜர் பிராஜக்டை பற்றி பேசிவிட்டு ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ கிருஷ்ணமாசார்யர் சுவாமிகள் சந்திக்க சென்றேன்.

ஸ்ரீரங்கம் - கொட்டாரம்
அவர் கூட படித்த தோழன் போல பேசிக்கொண்டு இருந்தது இனிய
கொட்டாரம் உள்ளே !
அனுபவம். அவர் செய்ய போகும் ஸ்ரீவைஷ்ணவ என்சைக்ளோபீடியா பற்றியும் வேறு பல பகவத் விஷயங்களை பற்றியும் பேசிக்கொண்டு இருந்த போது மலைக்கோட்டை ரயில் ஞாபகம் வர அவசர அவரசமாக வாசுதேவன் அவர்கள் என்னை பைக்கில் ஏற்றி பேருந்து நிறுத்தம்  வரை கொண்டு வந்துவிட்டார். ரயிலை விட்டிருந்தால் இன்று திரும்ப நம்பெருமாளை சேவித்திருப்பேன். அது முடியாமல் போக இந்த கட்டுரையை எழுதினேன்.


பெரியவாச்சான் பிள்ளை என்னும் மகான் அவதரித்த உயர்ந்த நாளாகும்.

Comments

  1. பிள்ளையின் வீடு குறித்துக் கேட்டுப்பார்த்தீர்களா ? உங்கள் Trademark அது தானே ? 'என் பேர் ஆண்டாளில்' தோன்றும் அத்தனை பூர்வாசாரியர்கள் இருந்த வீடு பற்றி எழுதியிருந்தீர்கள். 'வாயிற்காப்போன்' நிஜமாலுமே உங்களை ஆண்டாளின் சன்னிதிக்குத் திருப்பியது - 'நாயகனாய் நின்ற..' பாசுரம் வெகு பொருத்தம். மிக்க நன்றி

    ReplyDelete
    Replies
    1. தேட வேண்டும். எனக்கு தெரிந்து அங்கே இருக்க வாய்ப்பு கிடையாது. அவர் ஸ்ரீரங்கம் வந்துவிட்டார்.

      Delete
  2. நான் தங்களுடைய பதிவுகளை 2004 முதல் படித்து வருகிறேன். நான் பெங்களூரில் வசிக்கும் போது ஓரிரு தடவை தங்களை கைபேசியில் தொடர்பு கொண்டுளேன்.

    அருமையான நல்ல தெளிவான பதிவு. படங்கள் அருமை. உங்களின் முயற்சி, நேர்த்தி மற்றும் அதற்கு நீங்கள் செலவிடும் நேரம் பதிவில் தெரிகிறது. தங்களை போன்ற வைஷ்ணவர்களை இபோதுள்ள கணினினி யுகத்தில் பார்ப்பது அரிது. என்றாவது தாங்கள், இது போன்ற பயண கட்டுரை மற்றும் அரிதான பல வைஷ்ணவ விஷயங்களை தொகுக்க எண்ணியதுண்டா ? அல்லது தாங்கள் இது போன்ற தொகுப்பினை வாரமோ அல்லது மாதமோ பத்திரிகையில் பிரசுரிக்க முயற்சிக்கலாமே .!

    நன்றி..!
    ஸ்ரீனிவாசன்

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி. புத்தகங்களில் எழுதலாம் ஆனால் டெட்லைன் இருக்கும் போது சில சமயம் எழுதுவது கஷ்டம். என் பேர் ஆண்டாள் புத்தகத்தில் சில கட்டுரைகளை தொகுத்திருக்கிறேன்.

      Delete
    2. பாராட்டுக்கு நன்றி. புத்தகங்களில் எழுதலாம் ஆனால் டெட்லைன் இருக்கும் போது சில சமயம் எழுதுவது கஷ்டம். என் பேர் ஆண்டாள் புத்தகத்தில் சில கட்டுரைகளை தொகுத்திருக்கிறேன்.

      Delete
  3. 'பாசுரப்படி இராமாயணம்' இவர் நமக்கு அளித்த பொக்கிஷங்களுள் ஒன்று!

    ReplyDelete
  4. அருமையான பதிவு. நன்றி. பக்கத்தில் இருக்கும் கோயிலுக்குப் போகவே நேரம் தேடும் இந்த நாளில், கோயில்களைத் தேடிச் சேவித்து சுவாரசிய்மாக எழுதும் உங்களைத் தேடிச் சென்று பாராட்ட வேண்டும்.
    வட மொழியில் பல நூல்களை எழுதிய இராமானுஜர் ஏன் தமிழில் எழுதவில்லை என்ற கேள்வி என் மனதில் எப்போதுமே உண்டு. இதுவரை பதில் கிடைக்க வில்லை.
    தமிழில் பிரபந்தத்தை சொல் பிரித்து எளிய உரையுடன் விளக்கும் நூல் ஏதாவது இருக்கிறதா?

    ReplyDelete
    Replies
    1. வராகி பிரிண்டர்ஸ் புத்தகம் எளிய தமிழ் விளக்கங்களுடன் இருக்கிறது தற்போது அது கிடைக்குமா என்று தெரியாது. ஸ்ரீராமானுஜர் ஏன் தமிழில் எழுதவில்லை என்று வைணவ உரைவளம் என்று தெ.ஞானசுந்திரம் தன் முனைவர் பட்டத்துக்கு அளித்துள்ள தொகுப்பில் நிறைய எடுத்துக்காட்டுடன் எழுதியுள்ளார். கிடைத்தால் படித்து பாருங்கள்.

      Delete
  5. அருமை , உங்களுடனே மினி பஸ்ஸில் பயணித்தப்படியே , சேங்கனூர் சேர்ந்து சேவித்த உணர்வு !

    முதலில் தந்த அனுபவங்கள் சிறுகதை அனுபவத்தையும் பின்னது , பெரியவாச்சன் பிள்ளை அவர்களது சரித்திரம் , உலக்கைக்கொழுந்து விஷயமும் ..வைணவத்தை வளர்த்த கதையை அழகாக சொல்கிறது .அருமையான பதிவு.

    ReplyDelete
  6. பெரிய வாச்சான் பிள்ளை,சிறிய வாச்சான் பிள்ளை இரண்டுமே மிக அருமை! அது என்ன பெயர் ’வித்தசைன்’ ? சற்று விளக்கவும்.

    ReplyDelete
  7. பெரிய வாச்சான் பிள்ளை,சிறிய வாச்சான் பிள்ளை இரண்டுமே மிக அருமை! அது என்ன பெயர் ’வித்தசைன்’ ? சற்று விளக்கவும்.

    ReplyDelete
  8. //இரண்டு காத தூரம் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். இரண்டு காது வலிக்கும் தூரம்// அனுபவித்து :)

    ReplyDelete
  9. என்னை புவியில் ஒரு பொருளாக்கி"பரன் பாதமும் "எனக்கேதும் சிதைவில்லையே

    ReplyDelete
  10. நண்பரே, வைணவத்தில் எனக்கு இப்போது ஈடுபாடு அதிகரிக்கிறது. இத்தனைக்கும் ஒரு நாத்திகனாக பல ஆண்டுகள் இருந்தேன். வைணவம் என்னை மிரட்டவில்லை. ஒரு காதலியைப் போல் அரவணைத்துச் சென்றது. இப்போதும் எனது பகுத்தறிவு விசாலப் பார்வைக்கு வைணவம் தடையாக இருந்ததேயில்லை. சரணாகதிதான் என்ற அடிப்படை வைணவக் கோட்பாடு எல்லாவற்ரையும் அரவணைத்துக் கொள்கிறது. அடக்கம் அமரருள் உய்க்கும் அல்லவா.. திகட்டாமல் இருக்கிறது, இதுபோன்றவற்றைப் படிப்பதற்கு. உங்கள் நட்பை விரும்புகிறேன். ஒரு திமிர்பிடித்த வாதம். பகுத்தறிவுப் பகலவன் வைணவர்தானே, பிறப்பால்.. மகாத்மா காந்தி முதல் பலரும் வைணவத்தில் ஈடுபட்டவர்தானே.. அதுபற்றி வேறொரு இடுகையில் பார்க்கலாம். அன்பன், பா. கிருஷ்ணன் (9445272050)

    ReplyDelete
  11. கொட்டாரம் என நீங்கள் குறிப்பிட்டிருப்பது திருமங்கையாழ்வாரால் கட்டுவிக்கப்பட்ட நெற்குதிர் ஆகும். 2007 ல் முதன்முதலாக இதை நான் பார்த்த போது மிகவும் பாழடைந்து இருந்தது. இதன் அருகிலேயே பலர் , பக்கத்தில் இருந்த லட்சுமி தாயாரின் குருக்கள் உட்பட , சிறுநீர் கழித்து கொண்டு இருந்தது மன வேதனையை தந்தது.

    ReplyDelete
  12. வாயில்காப்பான் = மெய்காவல்

    ReplyDelete
  13. The year of birth and death of PVP are accurate ?

    ReplyDelete
  14. ஸ்ரீ .உ.வே. புத்தூர் ஸ்வாமி புத்தகத்தில் உள்ள பெரியவாச்சான் பிள்ளை சரித்திரம் முழுவதும் அப்படியே இதில் இடம்பெற்றுள்ளது.

    ReplyDelete

Post a Comment