Skip to main content

ரத்த நிலா


உலகெங்கும் அந்த செய்தி பல மொழிகளில் பரவியிருந்தது. மின்சாரம் இல்லாத கிராமம், பிரதமர் செல்லாத நாடு என்று எங்கும் இதே பேச்சு. நடிகைகள் அடிக்கடி குந்தலை வருடுவது போல பலர் மொபைலை வருடி அந்த செய்தியை வாட்ஸ் ஆப் போன்றவற்றில் அனுப்பினார்கள். முகநூலில் திகட்ட திகட்ட மீம்ஸ் ஜோக் போட்டு உலகத்தில் ஜீவிப்பதை இளைஞர்கள் உறுதிசெய்தார்கள். டிவியில் விவாதித்தார்கள். புகை பிடித்தல் உடல் நலத்திற்கு கேடுக்கு முன் “வதந்திகளை நம்பாதீர்கள்” திரையரங்குகளில் முந்திக்கொண்டது. எதற்காக ஃப்ரொஃபைல் படம் மாற்றுகிறோம் என்று  யோசிக்காமல் எல்லோரும் மாற்றினர். ஸ்ரீரங்கம், திருப்பதி போன்ற புண்ணிய ஸ்தலம் அல்லாமல் அப்பக்குடத்தான், அன்பிலிலும் கூட்டம் வழிந்தது. வேளாங்கனி, நாகூர் தர்கா என்று எதையும் விட்டு வைக்கவில்லை.

யார் முதலில் இந்த செய்தியை பரப்பினார்கள் என்ற மர்மம் இன்னும் நீடிக்கிறது....செய்தி இது தான்:

“கலியுகம் முடிய போகிறது. இன்னும் ஐந்தே நாட்களில். இந்த யுகத்தை முடிக்க நான் பூலோகத்துக்கு வர போகிறேன். கலியுகத்தில் தர்மம், சத்யம், பொறுமை, தயை, ஆயுள், உடல் பலம், ஞாபகத் திறன் ஆகியவை குறைந்துவிட்டது . பணமும், பலமும் உள்ளவனே குணமுள்ளவன் என்று கருதப்படுகிறான். அவனே ஜெயிக்கிறான். ஏழை தோற்றுக்கொண்டே இருக்கிறான்.

டிவியில் உரத்த குரலில் அதிகமாகப் பேசுபவனை பண்டிதன் என்று மக்கள் கும்பிடுகிறார்கள். கார்பரேட் சாமியார்கள் முளைத்துவிட்டார்கள். எழுத்தாளர்களுக்கு சரியான ராயல்டி கிடைப்பதில்லை. இலக்கியவாதிகள் எல்லாம் மோசமான கவிதை எழுதுகிறார்கள் அல்லது டிவியில் விவாதிக்கிறார்கள். காசு கொடுத்து புத்தகம் வாங்காமல் பிடிஃபில் படிக்கிறார்கள். கோயிலுக்கு கூடாத கூட்டம், அரசியலுக்கும், அதைவிட நகைக்கடை, துணிக்கடை திறப்பு விழாவிற்கு கூடுகிறது.

புகழுக்காக தர்மம் செய்கிறார்கள். பலமுள்ளவன் அரசனாகிறான். சிறு விஷயத்திற்குக் கூட திருடுவது, பொய் பேசுவது அதிகமாகிவிட்டது. குடும்பத்தில் சித்தப்பாவே இல்லாமல், மைத்துனன், மச்சான் முதலியோரே முக்கியமான உறவினர்களாக இருக்கிறார்கள்.

விருந்தோம்பல் என்ற சொல்லே அகராதியில் இல்லாமல் போய்விட்டது. மிருகத்தை அடித்து சாப்பிட்டு தமோ குணத்தை வளர்க்கிறார்கள். தமோ குணத்தால் கபடம், சோம்பல், தூக்கம், ஹிம்சை ஆகியவை பெருகிவிட்டது.

கரவையில்லாத பசுக்களையும், வயது முதிர்ந்த பெற்றோரையும் காப்பாற்ற தவறிவிட்டார்கள். மரத்தை வெட்டி பேபப்ர் செய்துவிட்டு அதிலேயே “மரம் வளர்ப்போம்” என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.

கலி முற்றிவிட்டது. தர்மத்தைக் காப்பற்றுவதற்காக நான் கல்கியாய் வர போகிறேன். தீயவர்களை நாசம் செய்ய, மக்களின் மனம் தூய்மை அடையும் வரை நான் உலகத்தை நாசம் செய்வேன். திரும்ப பிரளயம் உண்டாகும். பூலோகம் அழிந்த பின் திரும்ப கிருத யுகம் ஆரம்பிக்கும். அப்போது சந்திரன், சூரியன், பிருகஸ்பதி ஆகியோர் புஷ்ய நட்சத்திரத்தில் சேர்ந்து பிரவேசிப்பார்கள்”

இன்னும் ஐந்து நாட்கள் தான். ஒவ்வொரு கண்டமாக பஞ்ச பூதங்களுக்கு இறையாகும்... பிரளயம் ஆரம்பிக்கும்.

இப்படிக்கு
- கல்கி பகவான்


இந்த செய்தி வந்த சரியாக ஐந்தாம் நாள் லெக்கின்ஸ் ஆபாச உடையா? என்று விவாதித்துக்கொண்டு இருந்த சமயம்  உலகத்தில் பல இடங்களில் நிலா ரத்தச் சிகப்பான நிறத்தில் மாறும் அற்புதக் காட்சியை கண்ட போது அந்த விபரீதமும் நிகழ்ந்தது.

சுமார் 17 ஆயிரம் சொச்ச தீவுகளை உள்ளடக்கிய இந்தோனேசியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அதை சுற்றி இருக்கும் தீவுகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டு, கடல் கொந்தளித்து, எல்லா தீவுகளும் ஒரு மணி நேரத்தில் கடல் உள்வாங்கி டீயில் தோய்த்த பிஸ்கெட் போல நமுத்து போனது. இப்படி கூட நடக்குமா என்று குழம்பி டிவிட்டரில் டிரெண்டிங் செய்தனர். இது வதந்தியாக தான் இருக்கும் என்று நம்பினார்கள். கூகிள் மேப்பில் அந்த தீவுகள் காணாமல் போக... பேரழிவிற்கு கடவுளின் குறியீடாகவே ’பிள்ட் மூன்’ என்று நம்பினார்கள்.

அடுத்த கண்டம் எது என்று மக்கள் பீதியில் இருந்தார்கள். பக்கத்தில் தான் இந்தியா... நிச்சயம் சுனாமி வர போகிறது என்று பேச ஆரம்பித்தார்கள். வல்லரசு தலைவர்கள் மக்களை அமைதிகாக்கச் சொன்னார்கள்.. இந்திய அரசு பிரதமர், முதலைமைச்சர்கள், அமைச்சர்களை எப்படி காக்கப்போகிறோம் என்று திட்டமிட்டார்கள்.  இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பலத்த பாதுகாப்பும், உலகம் அழிவதற்கு முன் ஒற்றுமையாக இருக்கலாம் என்று அழைப்பும் விடுக்கப்பட்டது. ராணுவம் உஷார்படுத்தப்பட்டது..

ஆராய்ச்சியாளர்கள் க்ளோபல் வார்மிங், ஓசோன் ஓட்டை என்று வழக்கம் போல பேசத் தொடங்கினார்கள். நாசா பயப்பட ஒன்றும் இல்லை என்றது.

வானத்தில் வெள்ளைக் குதிரையில் கல்கி பகவான் மெதுவாக யோசித்துக்கொண்டே பவனி வந்தார். குதிரை திரும்பி பார்த்தது.

“உலக அழிவு தற்செயலாக நடக்கும் ஒரு நிகழ்வாக இருக்க கூடாது. அழிவு வரப்போகிற சரியான நேரமும் தேதியும் என் திட்டமிட்டு தான் நடக்கிறது என்று இந்த பரலோக மக்களுக்கு புரிய வேண்டும்”

குதிரை தலையை ஆட்டியது. “டைனோசர் பல லட்சம் வருஷத்துக்கு முன் அழிந்த மாதிரி மக்களும் அழிவார்கள்”

இந்த சம்பாஷனை நடந்த அதே நேரத்தில் அடுத்த அழிவு ஆரம்பமானது...

பதினேழு மில்லியன் சதுர அடி கொண்ட தென் அமெரிக்கா கண்டத்தில் எரிமலைகள் வெடித்து சிதறத் தொடங்கியது. பலத்த பீரங்கி சத்ததுடன் தொடர் வெடிச்சத்தம் கேட்டு மக்கள் பயந்து நடுங்கினார்கள். விஷ வாயுவும், நெருப்பும், பரவ சில மணி நேரத்தில் மெதுவாக சாம்பலாகியது.

சாம்பலாவதற்கு முன் வானத்தில் நட்சத்திரங்களுக்கு மத்தியில் வெள்ளைக் குதிரை ஒன்று சிலர் கண்ணில் பட்டது. அதன்மேல் உட்கார்ந்திருந்தவர், உண்மையுள்ளவர் என்று பார்த்தவர்கள் உணர்ந்தார்கள். பிழைக்க வழி கிடைக்குமா என்று அவரை வணங்கினார். இது எல்லாம் உங்களுக்கு தண்டனை ”அக்கிரமக்காரர்களே!” என்று கோப பார்வையுடன் குதிரை வேகமாக வட அமெரிக்காவை நோக்கி சென்றது..

குதிரை வந்த வேகத்தில் வட அமெரிக்காவை சூறாவளி காற்று சூழ்ந்துக்கொண்டு அடித்தது. எல்லா பெரிய பொருட்களும் சூறாவளியில் பறவைகள் போல பறந்தன. வீசப்பட்டது என்று கூட சொல்லலாம். உலகின் பெரிய வல்லரசை பலத்த மழையும் காற்றும் சூழ்ந்துக்கொண்டு ”காட் பிளஸ் அமெரிக்கா” என்று சொல்லும் நேரத்தில் அந்த கண்டமும் காணாமல் போனது.

கல்கி பகவான் தன் குதிரையிடம் ”ஆக்கப்பட்டவை அனைத்தும் அழியும்” என்றார். குதிரை மீண்டும் தலையை ஆட்டியது. கீழே மீதி இருக்கும் பாதி உலகம் கடவுளை வணங்க ஆரம்பித்தது.

நான்காம் நாள் சுனாமி வந்து ஆப்பிரிக்கா கண்டம் முழுவதும் அழிந்தது. தண்ணீர் எல்லாப் பொருட்களையும் தன்னுடன் எடுத்துச் சென்றது.

பகவானின் முகம் முன்பை விட பிரகாசமாக இருந்தது. அந்தப் பிரகாசம் சூரியனில் தெரிந்தது. சூரியன் இரண்டு மடங்கு பெரிதாக தெரிந்தது. அணையும் விளக்கு பிரகாசமாக எரியும் என்பது போல  சூரியனின் கடைசிகாலத்தில் செக்க சிவந்து எரிந்தது. உற்று பார்த்தவர்களுக்கு இரண்டு சூரியன் தெரிந்தது. பார்த்தவர்களுக்கு கண் போனது.

சில மணி நேரத்தில் அதிபயங்கிர சத்தம் கேட்ட போது இரண்டு சூரியனும் ஒன்றோடு ஒன்று மோதி நியூக்கிளியர் பியூஸன் எரிசக்தியைவிட இந்தியாவை உள்ளடக்கிய ஐரோவாசியா முழுவதும் நெருப்பு மழை நட்சத்திரங்கள் உதிர்வதை போல விழுந்து, மக்கள் கூழானார்கள்.

வலியில்லாமல் பலர் சாக நினைத்து தற்கொலை செய்துக்கொள்ள விரும்பினார்கள். பூச்சி மருந்துக்கு அலைந்தார்கள். மருந்துகடைகள் சூரையாடப்பட்டன. குலேபகாவலி படத்தை பல முறை பார்த்தனர். மாமிகள் சீரியல் பார்த்தனர்; செல்ஃபி எடுத்துக்கொண்டனர். கூகிலும், ஃபேஸ்புக்கும் இல்லாமல் என்ன செய்வது என்று குழம்பி போனார்கள். கோயில் கோபுரங்களின் மீது ஏறி குதித்து உயிரை விட்டால் சொர்க்கம் நிச்சயம் என்ற வந்ததி பரவி எல்லோரும் கோயிலுக்குப் படையெடுத்து கோபுரத்தின் மீது ஏறத்தொடங்கினார்கள். முடியாதவர்கள் பாயும் புலி, புலி போன்ற படங்களுக்கு போனார்கள். குடித்தார்கள். வாங்கிவைத்து இன்னும் படிக்காத புத்தகங்களை படிக்க ஆரம்பித்தார்கள். பார்க்காத திருட்டு டிவிடிக்களை பார்த்தார்கள்.  தளை தட்டிய வெண்பா எழுத தொடங்கினார்கள்.  இளையராஜா, ரஹமான் பாடல்களை கேட்க, விரல்களை மடக்கி பாபா' முத்திரை  வைத்துக்கொண்டால் பிழைத்துவிடுவோம் என்று சிலர் அதில் ஈடுபட்டார்கள். ஆனால் இதை எல்லாம் செய்துக்கொண்டு இருந்த போது எல்லாம் பஸ்பமாகியது.

இரவா பகலா என்று தெரியாத அந்த நேரம் கல்கி பகவான் தன் குதிரையில் வலம் வந்தார்.

எல்லா இடங்களிலும் வெறும் சாம்பலாக காட்சி அளித்தது.  இன்றோடு பிரளயம் முடிந்து கலியுகம் முடிவு பெற்றது என்று கல்கி பகவான் பெருமூச்சு விட்டு எல்லா இடங்களிலும் திரும்பி பார்த்தார் எங்கும் மயான அமைதி. சிற்சில இடங்களில் இன்னும் நெருப்பு தனல் இருந்தது.

“இன்னும் சில நாழிகைகள் தான் எல்லாம் முடிந்துவிடும். இனி சித்து அசித்து ஈஸ்வரன் கிடையாது. அசித்தும் ஈஸ்வரனும் மட்டும் தான்... இல்லை இல்லை ஈஸ்வரன் மட்டும் தான்!”  குதிரை புரியாமல் தலையை ஆட்டியது.  எல்லாமே அழிந்தது...திரும்பவும் உலகத்தை சிருஷ்டிக்க வேண்டும் ...வா திரும்ப வைகுண்டம் போகலாம்” என்று பகவான் புறப்படும் சமயம் பின்புறத்தில் பரப்ரவென ஏதோ சத்தம் கேட்டது.

திரும்பி பார்த்த போது தூரத்தில் ஒரு பிளாஸ்டிக் கேரி-பேக் பறந்துக்கொண்டு இருந்தது.

Comments

 1. வழக்கமான உங்கள் நையாண்டிகளை ரசித்தேன். நல்ல வேளை.. நம்மூர் மாடுகளைப் போல வெள்ளைக் குதிரையும் கேரிபேக்கை சுவைத்து விட்டு வருகிறேன் கல்கி பகவானே என்று சொல்லாமல் விட்டதே..

  ReplyDelete
 2. கலியுகத்தில் அழிவின் காரணமாக சொல்லப்பட்டதில் , பாயும் புலியும் , புலியையும் கூட சேர்த்தது நல்ல நகைச்சுவை ..Interesting ! , உங்க கற்பனைக்குதிரை நாலு கால் பாய்ச்சலில் பாய்ஞ்சிருக்கு.. ! :) carry bag ஐ பகவானே அழிக்க முடில ங்கும்போது கொஞ்சம் வருத்தமாகவும் இருக்கு !!

  ReplyDelete
 3. What a fiction! Great writing style. A nice lesson to the new world that Plastic is indistrutable!

  ReplyDelete
 4. அழிவில்லாதது கேரி பேக் மட்டுமே.... :(

  நல்லதோர் சிறுகதை.

  ReplyDelete
 5. Arumaiyana karpanai....plastic bagkku Kalki bagavan onnum plan vachirukkala pola 😊

  ReplyDelete
 6. mind boggling End, superb narration, review to avoid spelling mistakes

  ReplyDelete

Post a Comment