Skip to main content

போலீஸ் வீடு

ஞாயிற்றுக்கிழமை காலை இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம் என்று நினைத்த போது,  அம்மா

"ராஜேஷ் அப்பா போய்ட்டாராண்டா" என்று எழுப்பினாள்

"என்ன?" என்று படுக்கையியிலிருந்து எழுந்து உட்கார்ந்து,

"எப்போ?" என்றேன்

"ராத்திரி போயிருப்பார் போல... கார்த்தால கோலம் போடும் போது அவ ஆத்து வாசல்ல ஒரே கூட்டம்.. அந்த லதா பொண்ணு தான் ஓடி வந்து 'மாமீ...'ன்னு ஒரே அழுகை"

"ராஜேஷ் அம்மா ?"

"இன்னும் வரலையாம்"



ராஜேஷ் என் கூட படிப்பவன். சாது. அவன் உண்டு அவன் படிப்பு உண்டு என்று இருப்பான் அதிகம் பேச மாட்டான். டீச்சர் ஏதாவது கேட்டால் பயந்து விடுவான். பிரின்சிபல் எதுக்கோ அடிக்க கை ஓங்க டிரவுசரிலேயே ஒன்றுக்கு போய்விட்டான். அவன் அப்பா உரையூர் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ. அவன் அப்பாவை கண்டால் அவனுக்கு மட்டும் இல்லை எங்களுக்கும் பயம் தான். ஒரு முறை ராஜேஷுடன் அவன் அப்பாவுக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு நாச்சியார் கோயில் ஸ்டாபில் இறங்கி ஸ்டேஷன் பக்கம் போன போது அந்த காட்சியைப் மறக்கமாட்டேன்.

லாக்கப்பில் அலுமனிய தட்டில் பருப்பு சாதம் போல மஞ்சளாக ஒன்றை சாப்பிட்டுக்கொண்டு இருந்த கைதியை திடீர் என்று உள்ளே சென்று இடுப்பில் உதைத்தார். வாயில் போன சாப்பாடு வெளியே வந்தது, அவன் தாடியில் எல்லாம் அந்த மஞ்சள் சோறு.

அம்மா "டேய் சீக்கிரம் போய் பார்த்துட்டு வந்துடு...வாசலிலே பக்கெட்டுல தண்ணீர் வைத்திருக்கேன் காலை அலம்பிண்டு கொல்லைப் பக்கமா வந்து குளிச்சுடு"

"என்ன ஆச்சு திடிர்னு ?"

"யாருக்கு தெரியும்.. ஹார்ட் அட்டாக் போல..இப்பவே ஒரே போலீஸ் கூட்டமா இருக்கு.. ஃபிளாஸ்கில் காப்பி தரேன். பசங்க என்ன சாப்பிட்டாளோ தெரியலை..லதாவை குடிக்க சொல்லு"

ராஜேஷின் அக்கா லதா பிளஸ்-டூ. எங்களைவிட மூன்று கிளாஸ் சீனியார். ம.செ ஓவியம் போல இருப்பாள். நல்லா படிப்பாள். எங்களுக்கு கணக்கில் ஏதாவது தெரியவில்லை என்றால் நிதானமாக சொல்லி தருவாள். போன வருஷம் அவள் வலது கை, பாதி மூஞ்சி முழுக்க சூடாக வெந்நீரோ எண்ணையோ கொட்டி கொப்பளமாக ஆஸ்பத்திரியில் ஆறு மாசம் இருந்தாள். கண்களுக்கு மேல் புருவம் எல்லாம் காணாமல் பொய் பார்க்க பயமாக இருந்தது. தெருவில் நாய்கள் கூட அதை கண்டு பிடித்து குறைக்க ஆரம்பித்தது.

அண்ணாச்சி கடையில் வேலை செய்த சரவணனுக்கும் இவளுக்கும் 'லவ்' என்று பேசிக்கொண்டார்கள். சிலர் இந்த சம்பவத்துக்கு பிறகு சரவணன் திருநெல்வேலி பக்கமே போய்விட்டான் என்றார்கள். வேறு சிலர் ராஜேஷ் அப்பா அவனை அடித்தே கொன்றுவிட்டார் என்று பேசிக்கொண்டார்கள்.

"இன்னுமாடா கிளம்பளை...இந்தாடா காப்பி.. அந்த பவானி இருந்தா அவளுக்கும் கொடு. வேற ஏதாவது வேணுமுனா கேட்க சொல்லு..மாமி வாந்தாவுட்டு வந்து பார்க்கிறேன்"

ராஜேஷின் அம்மா புதுக்கோட்டை செல்லும் வழியில் நார்த்தாமலை பக்கம் இருக்கும் அன்னவாசல் சொந்த ஊர். நரபலி கேஸ் ஒன்றை கண்டுபிடித்த போது ராஜேஷ் அப்பாவுக்கும் இவர்களுக்கும் மிரட்டல் ஏதோ வந்த போது ராஜேஷுடன் நார்த்தமலை சென்று அங்கு ஒரு மலைமேலே கோயிலையும், மலை மேலே ஏறும் போது சின்ன குட்டையில் அல்லி மலர்கள் பார்த்திருக்கிறேன்.

ராஜேஷின் அம்மா சனி ஞாயிறு ஊருக்கு போய்விடுவாள். அவள் போன பின்பு பவானி என்ற வேறு ஒரு பெண் வந்துவிடுவாள். சில சமயம் பவானி போலீஸ் உடையில் அழகாக இருப்பாள். 'பானு' என்று அவளை ராஜேஷ் அப்பா கூப்பிடுவார். ராஜேஷ் அப்பாவுக்கு இவளுக்கும் என்ன தொடர்பு என்று தெரியாது. சனி ஞாயிறு பானுவும் சிக்கன் வாசனை சேர்ந்த்தே வரும். அரசல் புரசலாக ஏதேதோ பேசிக்கொள்வார்கள். ராஜேஷ் அம்மா ஒருமுறை பானுவுடன் ஸ்கூல் வாசலில் சண்டை தலைமயிரை இழுத்து சண்டை போடுவதை பார்த்திருக்கிறேன்.

ராஜேஷ் வீட்டுக்கு போன போது காலை பேப்பர் முதலிரவுக்கு முன் காத்துக்கொண்டு இருக்கும் பெண் போல மடிப்பு கலையாமல் கீழே இருந்தது. ராஜேஷ் அம்மா அங்கு இல்லை. ராஜேஷ் என்னை பார்த்து கை அசைத்தான்.
என்ன பேசுவது என்று தெரியாமல், நானும் கை அசைத்தேன்.
ஹால் பூரா ஒருவித ஊதுபத்தியும் ரோஜாப்பூ கலந்த வாசனை விரவியிருந்தது.

ராஜேஷ் அப்பா ஹாலில் படுத்துக்கொண்டு இருந்தார். மார்பு வரைக்கும் வேஷ்டியால் போர்த்தியிருந்தார்கள். கால்கள் கட்டை விரல் இரண்டும் பாண்டேஜ் துணியால் இணைகப்பட்டிருந்தது. மோவாக்கட்டையும் தலையும் சேர்த்து ஒரு துண்டில் கட்டியிருந்தார்கள். மலையாள துண்டை மாலை போல போட்டுக்கொண்டு ஒருவர் மூக்கிலும் காதில் பஞ்சு அடைத்துக்கொண்டு இருந்தார். கண்கள் மூடி ஒரு நாள் சேஷ் பாக்கியிருந்தது. எல்லாம் அசையாமல் இருந்த போது மூக்கின்மேல் ஒரு ஈ மட்டும் சுற்றிக்கொண்டு இருந்தது.

"ஐஸ்பாக்ஸுக்கு சொல்லியாச்சா?"

"அம்மா கல்லுக்குழி கிட்ட வந்துட்டாங்களாம்"

"நடு ராத்திரி தண்ணி குடிக்க கிச்சனுக்கு போயிருக்கார்..திடீர் என்று மயக்கம் போட்டு விழுந்துவிட்டாராம். பாவம் ராஜேஷும், லதாவும் என்ன செய்வது என்று தெரியாமல் ...எல்லாம் முடிஞ்சு போச்சு"

போன்ற பேச்சுக்கிடையே தொலைப்பேசி விடாமல் ஒலித்துக்கொண்டு இருந்தது. ஒருவர் அதன் பக்கம் நாற்காலியில் உட்கார்ந்துக்கொண்டு தகவல் சொல்லிக்கொண்டு இருந்தார். அவர் பேசி முடித்து கீழே வைத்தவுடன் உடனே அடுத்த தொலைப்பேசி அழைத்தது.

ஒரு போலீஸ்காரர் ராஜேஷுடன் பேசிக்கொண்டு இருந்தார். கிட்டே போய்

"மாப்ளே.." என்றேன்

பதில் சொல்லவில்லை.

பக்கத்தில் லதா அழுது கண்ணெல்லாம் சிவந்து போயிருந்தது. பொட்டு நெற்றியில் ஈஷி இருந்தது.

தயங்கி "பிளாஸ்கில் காபி இருக்கு" என்றேன்

"வேண்டாம்.."

வேற என்ன பேசுவது என்று தெரியாமல் யார் எல்லாம் இருக்கிறார்கள் என்று வேடிக்கை பார்த்தேன்.

வீடு முழுக்க போலீஸ்காரர்கள் நிரம்பி இருந்தார்கள். பானு அங்கே இல்லை..
நானே கிச்சன் சென்று டம்பளர் எடுக்கும் போது மேடையில் மிளகாய் கொட்டி நெடி அடித்தது. டம்பளரில் காபியை கொட்டி லதாவுக்கு கொடுத்த போது அவள் அழுதுக்கொண்டே அதை வாங்கிகொண்டாள்.

திருச்சி முனிசிபாலில் இருக்கும் ஒருவர் வந்து ராஜேஷிடன் பேசிவிட்டு பெரிய மாலையை போட்டுவிட்டு சென்றார்.

சில மணி நேரத்தில் ராஜேஷ் அம்மா 'ஓ' என்று பெரிதாக அழுதுக்கொண்டு உள்ளே நுழைந்தாள். ராஜேஷையும், லாதாவையும் கட்டிக்கொண்டு தலையை அடித்துக்கொண்டு அழுது ஓய்ந்து போனாள்.

இரவு எட்டு மணிக்கு எல்லாம் முடிந்து வீட்டை அலம்பி ஒரு மூலையில் விளக்கு ஏற்றி வைத்தார்கள்.

கேரியரில் சாப்பாடு கொண்டு போய் கொடுத்துவிட்டு.

ராஜேஷிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் "நான் வரேண்டா.... இப்படி திடீர்னு?" என்று இழுத்தேன்.

"நானும் லதாவும் சேர்ந்து கொலை செய்தோம்" என்றான்

Comments

  1. கதையின் பலமே சொல்லாமல் சொல்லிப் போன தகவல்கள் தான்.. ஊடே விரவிக் கிடக்கும் அவை ராஜேஷ் லதாவின் மேல் ஒரு கரிசனம் உண்டாக்கி விடுகிறது.. (நியாயப்படுத்தாமல் சொல்லிப் போன விதத்தால்)

    ReplyDelete
  2. எதிர்பார்க்கவே இல்லை முடிவை....

    நல்ல சிறுகதை.

    ReplyDelete
  3. கொஞ்சம் ஏமாற்றமாக இருக்கிறது. ரொம்ப எதிர்பார்த்துட்டேனோ? கதை பாதியிலேயே நின்றது போல் ஒரு உணர்வு- இல்லை எனக்குத்தான் புரியல்லையா. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. ராஜேஷின் அப்பா கேரக்டரை சின்னச் சின்ன வரிகளில் உணர்த்தியிருந்த விதத்தை பிரமித்தேன் ஸார்! கடைசி வரி ‘திடுக்’கின் பின்னால் என்ன நடந்திருக்கும் என்பதை படிப்பவரை ஊகிக்க வைப்பது அருமை!

    ReplyDelete
  5. துண்டு துண்டாக, ஒரு சிறுவனுக்கு எவ்வளவு விஷயம் தெரிந்திருக்குமோ அவ்வளவை சொல்லி, அதிலிருந்து பெரியவர்களுக்கு தேவையான விஷயத்தை தந்துள்ளீர்கள். கதை மிகவும் சுருக்கமாக இருக்கின்றது. சீக்கிரமாக எழுதிய கதையோ?

    "நாத்தமலை " டைப்பிங் மிஸ்டேக்கா, இல்லை "நார்த்தமலை" அப்படித்தான் இருக்குமா? :)

    ReplyDelete
  6. கருத்துகளுக்கு நன்றி.

    ReplyDelete
  7. இப்படியான முடிவை எதிர்பார்க்கவில்லை....

    ReplyDelete

Post a Comment