Skip to main content

பாட்டி வெடித்த வெடி

தீபாவளி திருநாள் நாயக்கர் காலத்தில்தான் தமிழகத்தில் தொடங்கி இருக்கும் என்று படித்த ஞாபகம். நான் ஸ்கூல் படித்த போது இருந்த தீபாவளி வேறு, இன்று நான் பார்க்கும் தீபாவளி வேறு.

என்ன டிரஸ், என்ன பட்டாசு, என்ன சினிமா ? என்று தீபாவளிக்கு ஒரு மாதம் முன்பே பரபரப்பாகிவிடும்.

தீபாவளிக்கு என்ன டிரஸ் என்று முடிவு செய்வது பிரம்ம பிரயத்தனம். அந்த வருஷம் வந்த சினிமாவிற்கும் டிரஸ்ஸுக்கு நிச்சயம் சம்பந்தம் இருக்கும்.

புது வசந்தம் வந்த வருடம், திருச்சியில் பலர் மஞ்சள்-கருப்பு காம்பினேஷனில் டிரஸ் போட்டுக்கொண்டு அலைந்தார்கள். அடுத்த வருடம் சஃபாரி ஜுரம் என்னையும் சேர்த்து பலருக்கு பரவியது. ராமர் கலரில் சஃபாரி போட்டுக்கொண்டு என்னுடைய பெல்பாட்டம் ஊரை எல்லாம் பெருக்கியது.

நான் படிக்கும் போது ரெடிமெட் எல்லாம் வரவில்லை. சட்டை பிட், பேண்ட் பிட் வாங்கி அதை தைக்க வேண்டும். வாங்கிய துணி சட்டையாக எப்படி மாறும் என்ற கற்பனையில் அதை தைக்க கொடுக்க அப்பாவுடன் டைலர் கடைக்கு விஜயம் செய்வேன். தற்போது ரிதம்பாஸ் இருக்கும் இடத்தில் ஒரு சின்ன பெட்டி கடை சைசில் ஒரு ஆஸ்தான டைலர் இருந்தார். வாங்கிய துணியை கொடுத்தவுடன் அதை அளந்து பார்த்து, 10 சென்டிமீட்டர் குறைகிறதே... சரி அட்ஜஸ்ட் செய்து தைக்கிறேன் என்று ஒரு தேதி தருவார். அது கிட்டதட்ட தீபாவளிக்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாள் முன்னாடி இருக்கும்.

"அண்ணே கைல ஒரு மடிப்பு வரணும்.. பேண்டுல மூன்று ஃபிளீட்...சைடு பாக்கெட்... உள்ளே சீக்ரெட் பாக்கெட்... மறந்துடாதீங்க" என்று நான் சொல்லுவதை எல்லாம் ஒழுங்காக குறிப்பு எடுத்துக்கொள்வார்.

அவர் குறிப்பிட்ட நாள் அன்று அவர் கடைக்கு சென்றால் சோப்பு துண்டால் மார்க் செய்யப்பட்டு துணியை அரச மர சுள்ளி கட்டு மாதிரி கட்டி வைத்திருப்பார்.
"'நாளைக்கு மறுநாள் தீபாவளி.. இன்னும் தைக்கலையா ? தீபாவளிக்கு போட்டுக்கணும்...சரியில்லைனா ஆல்டர் வேற செய்யணும்"
"ராத்திரி 10 மணிக்கு வாங்க.. நிச்சயம் முடிந்திருக்கும்"

10 மணிக்கு போகும் போது தையல் துணி மிஷினில் அடிப்பட்டுக்கொண்டு இருக்கும். ஆண் குழந்தையை எதிர்பார்த்து பெண் குழந்தை வருவது போல..
"அண்ணே... கைல மடிப்பு கேட்டேனே"
"அதுவா தம்பி... நான் சொல்லல பத்து சென்டிமீட்டர் கம்மி. "அவர் காலுக்கு கீழே வெட்டப்பட்டு துணி பத்து சென்டிமீட்டர் துணி பத்து சிதறி கீழே கிடக்கும்.
"பேண்ட சைடு பாக்கெட் கேட்டேன் நீங்க முன்னாடி வெச்சிட்டீங்களே"
"அப்படியா... அடடே... பரவாயில்லை...இந்த கலருக்கு இது நல்லா தான் இருக்கு.. போன கமல் படம் பார்க்கலை ? அதுல முன்னாடி தான் வைத்திருப்பார்"
வீட்டுக்கு வந்து போட்டுக்கொண்டு பார்க்கும் போது மர்மஸ்தானத்தை ஏதோ இழுப்பது போலவும். உட்கார்ந்தால் முட்டியை இறுக்குவது போலவும் இருக்கும்.
பாட்டி அதை பார்த்துவிட்டு...
"ஏண்டா கீழே இவ்வளவு குட்டையா இருக்கு... ஒரு வாரத்துல நீ இன்னும் உசந்து போயிடபோற" என்பாள்.

நான் ஒன்பதாவது படிக்கும் போது என்று நினைக்கிறேன். மலைக்கோட்டை பக்கம் கிருஷ்ணா ரெடிமேட் வந்து இந்த பிரச்சனையிலிருந்து விடுவித்தது. அதற்கு பிறகு அந்த டைலர் என்ன ஆனார் என்று தெரியவில்லை.

பட்டாசுகளை திகட்ட திகட்ட வெடித்திருக்கிறோம். அதற்கு காரணம் என் நண்பனின் அப்பா போலீஸில் இருந்தது தான். யானை வெடி வாங்க காந்தி மார்கெட் போயிருக்கிறேன். வெடிகளை அப்படியே வெடிக்காமல் அதை பிரித்து அதில் உள்ள மருந்துகளை கொட்டி நாங்களே தயாரித்த வெடிகளை வெடிப்பதில் தான் மிகுந்த ஆர்வம். அதை எல்லாம் இப்போது நினைக்கும் போது பயமாக இருக்கிறது. ராக்கெட்டை அதன் குச்சியிலிருந்து பிரித்து நூலில் மாட்டிவிட்டு, பழைய காம்ப்ளான் டப்பாவில் உள்ளே அணுகுண்டு போட்டு விட்டு ஓடியிருக்கிறோம். இதற்கு மேலேயும் செய்திருக்கிறோம் ஆனால் பொதுநலம் கருதி அதை எங்கே எழுதாமல் விட்டுவிடுகிறேன். இதை எல்லாம் விட என் பாட்டி வெடித்த வெடியை பற்றி கடைசியில் சொல்லுகிறேன்.

ஒரு நாளில் எவ்வளவு சினிமா பார்க்கலாம் என்று யாராவது கேட்டால் அதற்கு சரியான பதில் - 5. தீபாவளி அன்று நிச்சயம் 4 படங்கள் பார்த்துவிடுமோம். அடித்து பிடித்து டிக்கெட் எல்லாம் வாங்க வேண்டாம். ஒரு நண்பனின் அப்பா போலீஸ் அடுத்த நண்பனின் அப்பா பட விநியோகஸ்தர். ரஜினியின் மன்னன், தளபதி கமலின் நாயகன் நான் பார்த்த தீபாவளி படங்களில் மறக்க முடியாதது.

கடல் போன்ற கலையரங்கம் திரையரங்கில் தளபதி படத்தில் வரும் 'சுந்தரி பாட்டை' கட் செய்தார்கள். தளபதி பட கேலண்டர், போஸ்டர்கள். கை நிறைய மிட்டாய் கொடுத்தது ஞாபகம் இருக்கிறது. நாயகன் படத்தை பார்த்துவிட்டு அதை பற்றி பலரிடம் பேசியிருக்கிறோம். நாயகன் கமல் என்று பலர் மீசையை எடுத்தார்கள்.

தீபாவளி முதல் நாள் இரவு தெப்பகுளம், NSB சாலை பிளாட்பாரம் கடையில் பனியன், ஜட்டி, கைக்குட்டை, வேட்டி, வெடி என்று எல்லாவற்றையும் குவித்து வைத்து விற்பார்கள். கருர், ஜீயபுரம், லால்குடி என்று சுத்துப்பட்ட எல்லா ஊர்களிலிலிருந்தும் வருபவர்கள் இனிமேல் இது எல்லாம் அடுத்த தீபாவளிக்கு தான் கிடைக்கும் என்பதை போல அள்ளிக்கொண்டு போவதை பார்த்திருக்கிறேன்.

ஒரு தீபாவளி காலை திடீர் என்று சமையல்கட்டில் பயங்கர வெடி சத்தம் புகையும் குப்பைக்கும் நடுவில் பாட்டி பயந்துக்கொண்டு இருந்தாள்.
"என்ன பாட்டி ?"
"உனக்கு மத்தாப்பு வெடிக்க மெழுகுவத்தி என்று நினைத்து பத்த வெச்சேன்...வெடித்துவிட்டது"

பாட்டி மெழுகுவத்தி என்று நினைத்து லக்ஷ்மி வெடியை பற்ற வைத்திருக்கிறாள். இன்றும் எனக்கு அந்த தைரியம் கிடையாது.

எல்லோருக்கும் என் தீபாவளி நல்வாழ்த்துகள்

Comments

  1. மிகவும் தைரியமான பாட்டி...!

    இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. இதற்கு மேலேயும் செய்திருக்கிறோம் ஆனால் பொதுநலம் கருதி அதை எங்கே எழுதாமல் விட்டுவிடுகிறேன்.
    ஹாஹா உங்கள் பொது நலம் வாழ்க..

    ReplyDelete
  3. அவர் கடைக்கு சென்றால் சோப்பு துண்டால் மார்க் செய்யப்பட்டு துணியை அரச மர சுள்ளி கட்டு மாதிரி கட்டி வைத்திருப்பார்.
    வீட்டுக்கு வந்து போட்டுக்கொண்டு பார்க்கும் போது மர்மஸ்தானத்தை ஏதோ இழுப்பது போலவும். உட்கார்ந்தால் முட்டியை இறுக்குவது போலவும் இருக்கும்.

    என் டெய்லர் இன்னும் கேவலம்.. கீழவாசல் கோபுரத்தினுள் கடை.. தூரத்தில் பார்த்து லைட் எரிந்தால் ஆர்வமாய் ஓடி.. ‘தம்பி.. நாளைக்கு வா’ என்று பிள்ளையார் சனீஸ்வரனுக்கு சொன்னமாதிரி திருப்பி அனுப்புவதிலேயே குறியாய் இருப்பார்.
    ஒரு முறை அவர் தைத்துக் கொடுத்த பேண்ட்டை அப்படியே நம்பி பிரித்துப் பார்க்காம்ல் எடுத்துக் கொண்டு போய்.. போட்டுக் கொண்டு சபையில் வந்து அமர்ந்தால்.. ஜிப் போடும் பகுதியில் ராஜகோபுர வாசல் மாதிரி காற்று ஜிவ்வென்று பிய்த்துக் கொண்டு போனது..
    மனுஷ்ன தைக்க மறந்திருக்கிறார்.. திரும்பி வந்து கேட்டால் கண்ணில் நீர் வ்ர சிரிக்கிறார் !

    ReplyDelete
  4. தீபாவளியின் முக்கிய அங்கத்தினராக தையல் அன்று இருந்தது. இளமை ஊஞ்சலாடுகிறது பார்த்தவிட்டு பெல்ஸ் தைத்த அனுபவம் இன்றும் பசுமை. பெல்ஸ் அடியில் ஜிப் வைத்து தைத்து.....அது ஒரு கனாக்காலம்

    ReplyDelete
  5. தீபாவளி முதல் நாள் இரவு தெப்பகுளம், NSB சாலை # we used to go in cycle from Srirangam to NSB road just to roam around 15 days before deepavali. Golden days

    ReplyDelete
  6. இனிமையான அனுபவங்கள்.....

    பாட்டி வெடித்த வெடியும் ரிஷபன் சாரின் பின்னூட்டமும் படித்து படித்து சிரித்தேன்.... :)

    ReplyDelete
  7. அன்புள்ள தேசிகன்,

    நீங்கள் தீபாவளிக்கு எழுதியதை பொங்கலுக்குதான் படிக்கிறேன்! நல்ல நகைச்சுவையாக இருந்தது. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

    ஆண்டாள் மற்றும் அமுதனுக்கு பொங்கல் வாழ்த்துக்கள்!

    அன்பன்,
    ஸ்ரீநிவாஸன்,
    சென்னை

    ReplyDelete
  8. neengalh ezhuthiyathai padiththadum naan pazhaiya ninaivugalhil mithanthen.

    ReplyDelete
  9. You took me to my childhood days. Thanks Desikan Sir

    ReplyDelete
  10. you have kindled our nostalgia.vivid narration.

    ReplyDelete
  11. you have kindled our nostalgia.vivid narration.

    ReplyDelete

Post a Comment