மர மண்டை என்ற பிரயோகம் எப்படி வந்தது என்று என்றும் யோசித்ததில்லை. செந்தில் கவுண்டமணி நகைச்சுவையில் "தேங்காய் மண்டைத் தலையா!" முதல் மாங்கா மண்டை வரை பல 'தலை'களை பார்த்திருக்கிறோம். என் மனைவி "உங்க தலையில..." என்று சொல்ல வந்து நிறுத்திவிடுவாள். ஆனால் சில மாதங்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்வு, என் மண்டையில் கூட ஏதோ இருக்கிறது என்ற நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்தது. சொல்லுகிறேன். வழக்கமாக நடைபயிற்சிக்குச் செல்லும் பாதையில் திடீர் என்று தலையில் ஏதோ மடார் என்று பெரிய பாரம் ஒன்று விழுந்தது. என்ன என்று சுதாரிப்பதற்குள் அது நடந்து, மன்னிக்கவும் பறந்து சென்றது. நடந்தது இது தான் - பெரிய கழுகு தன் கால்களை என் தலையில் வைத்து என்னை தூக்கப் பார்த்து முடியாமல் மேலே பறந்து சென்றது. பருந்தை இவ்வளவு கிட்ட டிஸ்கவரி(தமிழ்) சேனலில் கூட பார்த்ததில்லை. அதிர்ச்சியில் கத்தக் கூட முடியவில்லை. பருந்து சும்மாப் போகவில்லை, அதன் கால்களில் கூடு கட்டுவதற்குக் கொண்டு வந்த சில சுள்ளிகளைக் கீழே போட்டுவிட்டு பறந்து சென்றது. என் தலையை நிஜமாகவே மர மண்டை என்று நினைத்துக் கூடு கட்ட நினைத்திருக்கலாம்....