Skip to main content

இன்னும் கொஞ்சம் திருச்சி

மெயின் கார்ட் கேட் 
திருச்சி பற்றி எழுதிய "திருச்சிடா!" கட்டுரையை 'ஐ லவ் திருச்சி' குழுமத்தில் பலர் பாராட்டினார்கள். நான் +2 படிக்கும் போது, 'லயன்ஸ் கிளப்' கூட்டத்திற்கு வந்த சுஜாதா 'நான் இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டதற்கு முக்கிய காரணம் 'திருச்சி' என்று சொன்னதுதான் ஞாபகத்துக்கு வந்தது.

போன முறை எழுதிய கட்டுரையில் இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம் என்று சிலர் வருத்தப்பட்டனர். நிறைய எழுதினால் படித்து முடித்தபின் க்ளுகோஸ் தேவைப்படும் என்பதால் எழுதவில்லை.

ஆங்கிலத்தில் Tiruchy, Trichy, Tiruchi, Tiruchirappalli, Trichinopoly என்று பல விதமாக எழுதுவார்கள். தமிழில் இந்தக் குழப்பம் இல்லை, 'திருச்சி' தான். பெயர்க் காரணம் பற்றிய வரலாறு கீழே..

'சிராப்பள்ளி' என்பதில் 'திரு' என்ற சேர்ந்துக்கொண்டு திருச்சிராப்பள்ளியானது. சமண முனிவர் வாழ்ந்த இடங்களை பள்ளி என்று சொல்லுவார்கள். சிரா என்ற சமண முனிவர் இருந்தமையால் சிராப்பள்ளி ஆனது என்கிறார்கள்.

முதலாம் இராஜராஜன் காலத்துச் சாசனமொன்று இவ்வூரை 'உரையூர் கூற்றத்துச் சிற்றம்பரிலுள்ள சிராப்பள்ளி' எனக் குறிக்கிறது. பல்லவ மன்னன் மகேந்திர வர்மன் அதை இடித்துவிட்டு அந்த இடத்தில் கட்டிய சிவன் கோயிலின் பெயராயிற்று என்றும் கூறிவர்.

நான் படித்த கேம்பியன் பள்ளிக்கூடக் கட்டடம் அப்படியே உருக்குலையாமல் இருக்கிறது. நீச்சல்குளம் புது வரவு. நான் படித்த போது இருந்த அதே மரங்கள் இன்னும் இருப்பது ஆச்சரியம்.

கேம்பியன் ஸ்கூல் பின்புறம் 'கலைக்காவேரி' இசைப்பள்ளி புதுப் பொலிவுடன். பக்கத்தில் சில வீடுகள் அடுக்ககங்கள் ஆகிவிட்டன. சோனா, மீனா தியேட்டரில் வெளியே பைக் பார்க்கிங், அதற்கும் வெளியே பரோட்டா கடைகள், அமெரிக்கன் ஆஸ்பத்திரி அருகில் சூலம் போல் பல சாலைகள் பிரிந்து செல்லும் இடத்தில் 'லிப்ஸ்' ஸ்டேஷனரி எல்லாம் அப்படியே இருக்கின்றன. ஆனால் இங்கிலிஷ் வேர்ஹவஸ் காணாமல் போய்விட்டது.

ஸ்ரீரங்கம், சமயபுரம் கோயில் கடைகளில் 'ஃபேண்டா, 7-அப்களைத் தூக்கில் தொங்கவிட்டிருக்கிறார்கள். பொவண்டோ மாதிரி இப்போது, பன்னீர்சோடாவும் 'பெட்' பாட்லில் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. பொவண்டோ பாதி பாட்டில் குடித்தபின் என்.டி.ஆர் கிருஷ்ணர் வேஷம் போட்ட மாதிரி வாய் முழுக்க கலர் மாறிவிடுகிறது.

பாலக்கரை காவேரி தியேட்டர் பக்கம் மேம்பாலம் வந்த பிறகு வேகமாகச் செல்ல முடிகிறது. ஐஸ்கட்டியை டைமண்ட் கல்கண்டு மாதிரி சர்பத்தில் போட்டுத்தரும் பிரமனந்தா சர்பத் கடை இன்னும் இருக்கிறது.

உய்யகுண்டான் வாய்க்கால் ஓரத்தில் இருந்த தென்னை மரங்கள் பல காணாமல் போய், வாய்க்கால் பக்கம் அடுக்குமாடிக் கட்டடம் ஒன்றும் புதிதாக முளைத்திருக்கிறது. ஐயப்பன் கோயில் பஸ் ஸ்டாப் ஆகிவிட்டது.

குரு மெடிக்கல் ஹால் என்கிற மதுரம் ஆஸ்பத்திரி கட்டிடத்தின் முகப்பில் பீபீ ஊதும் தேவதைகள் (ஹிந்து நாளிதழில் இருக்கும் காமதேனு, யானை போல இருக்கும்) கட்டிடமும், பச்சைக் கலர் குரு தைலம் அதே சின்ன கிளாஸ் பாட்லும் இன்னும் மாறவில்லை. மூடி மட்டும் பிளாஸ்டிக்கில் மாற்றியிருக்கிறார்கள்.

பழமுதிர்ச் சோலை, பத்மா காபிக்குப் போட்டியாக வாசன் மருந்துக் கடைகள் நிறைய முளைத்திருக்கிறது. அதில் எப்போது இருக்கும் கூட்டம் கவலை தருகிறது. பஸ்டாண்ட் பக்கம் பழைய KAS ராமதாஸ் லாட்டரிச் சீட்டுக்கடைகள் எல்லாம் மறைந்து தொடர்ச்சியாக ஹோட்டல்கள் மட்டுமே. சத்திரம் பஸ்ஸ்டாண்ட் பக்கம் ஓமப்பொடியும், மிக்ஸரும் குவித்திருக்கிறார்கள். மிக்ஸர் விற்காத கடைகள் அநேகமாக மொபைல் ஃபோன் கடைகளாகவோ சர்வீஸ் செண்டர்களாகவோ இருக்கின்றன. கோஹினூர் தியேட்டர் எதிர்புறம் ஜிம் ஒன்று வந்திருக்கிறது!.

"இதே மாதிரி ஒரு குக்கர் காஸ்கட் வேண்டும்"

"என்ன மேக்?"

"தெரியலையே.."

கேஸ்-கட்டைத் தடவி பார்த்து "ப்ரிமியர் மேக்" என்று ஒன்றை எடுத்துத் தர, "சார் ஒரு அரை டஜன் வேணும்... அமெரிக்காவுக்கு எடுத்துண்டு போக.." இந்த சம்பாஷனை நடந்தது மங்கல் & மங்கல் பாத்திரக்கடை. அமெரிக்காவுக்கு காஸ்கட் வாங்க இங்கே வந்துவிடுகிறார்கள்.

சின்னக்கடை வீதியில் பல சுஜாதா புத்தகங்கள் வாங்கிய புத்தகக் கடையும், கடைக்காரரையும் பார்க்க முடிந்தது.

இன்றைய 'மெயின் கார்ட் கேட்' என் பாட்டி காலத்தில் 'கோட்டை' என்று அழைக்கப்பட்டது. திருச்சியில் இருப்பவர்களுக்கு இந்தக் கோட்டையைப் பற்றிய சரித்திரம் தெரியும என்பது சந்தேகமே. 'நடந்தாய் வாழி திருச்சிராப்பள்ளி' என்ற புத்தகத்திலிருந்து கொஞ்சம் சுருக்கி இங்கே தந்துள்ளேன்.

நாயக்க மன்னர்கள், ஆற்காட்டு நவாப் காலத்தில் கட்டப்பட்டு, பிற்காலத்தில் பலரால் பாதுகாக்கப்பட்டும், பலப்படுத்தப்பட்டும் வந்திருக்கிறது.

1680-இல் திருச்சிராப்பள்ளிக் கோட்டை மைசூர் படைகளால் முற்றுகையிடப்பட்டது. அதே போல் கிபி 1741-இல் மராட்டியர்கள் கோட்டையை முற்றுகையிட்டு வென்றனர். ஆனால் கிபி 1743-இல் ஹைதராபாத் நிஜாம் கோட்டையை முற்றுகையிட்டு, மராட்டியரிடமிருந்து அதனைக் கைப்பற்றினார். பிறகு ஆற்காடு நவாப் அன்வருதீன் கோட்டையைப் புதுப்பித்துக் கட்டினார். இவர் இறந்தபின் ஆற்காடு நவாப்பின் பதவிக்குப் போட்டி ஏற்பட்டது. நவாப்பின் மகன் முகமதலி தனது பாதுகாப்பிற்காகக் கோட்டைக்குள் புகுந்தார். இதனால் சந்தா சாகிப்பின் படைகள் கோட்டையை முற்றுகையிட்டன.

நாயக்க மன்னர்களின் வீழ்ச்சிக்கு பின் கோட்டைச் சுவர்கள் நாளடைவில் நலிவடைய ஆரம்பித்தன. ஆங்காங்குக் கற்கள் பெயர்ந்தும் சிதிலமடைந்தும், மரம், செடி, கொடிகள் வளர்ந்தும் இடிந்தும் போயின.

இந்தக் கோட்டையின் நீளம், அகலம், எப்படி இருந்தது என்பவற்றை ஆங்கிலேயப் படைத் தளபதி ஒருவர் வரைப்படத்துடன் எழுதிய குறிப்புகள் நமக்குச் சொல்கின்றன. இதில் திருச்சி நகரைச் சுற்றி இரண்டு கோட்டைகள் இருந்தன என்பது தான் வியப்பளிக்கும் விஷயம்.

இன்று காணப்படும் கீழப்பொலிவார்ட் சாலை, மேலப்பொலிவார்ட் சாலை, பட்டர்வொர்த் ரோடு ஆகியவை இருக்கும் இடங்களில் முன்பு கோட்டைச்சுவர்களும் அதனைச் சூழ்ந்த பெரிய கோட்டையும் இருந்தது என்பதை உணர்த்தும். தெப்பக்குளத்திற்கு அருகில் உள்ள மெயின்கார்ட்கேட் மற்றும் கோட்டையின் சிதைந்த பகுதியாக பட்டர்வொர்த்ரோடு சாலையில் காணப்படும் பகுதியும் உள்ளன.

காலங்கள் மாறிய போது கோட்டையின் இடிபாடுகள் நகர வளர்ச்சிக்கு இடைஞ்சலாய் இருந்தன. அதனால் 1869-இல் திருச்சிராப்பள்ளி முனிசிபாலிட்டி ஏற்படுத்தப்பட்டபின் கோட்டைச் சுவர்கள் இடிக்கபட்டு அகழிகள் தூர்க்கப்பட்டன (அகழி எனப்படுவது கோட்டை முன் சூழப்பட்டுள்ள நீர் அரணாகும்!). இத்தனை பலம் வாய்ந்த, பல போர்களையும், அரசர்களையும் கண்ட இக்கோட்டையை இடித்துத் தரைமட்டமாக்க சுமார் 12 வருடங்கள் ஆயின. கோட்டையை இடிக்கும் பணி 1880 வரை நடைபெற்றது. அகழிகள் இருந்த இடங்கலில் அகன்ற நீண்ட சாலைகள் போடப்பட்டன. அவை மேலப்பொலிவார்ட் ரோடு, கீழப்பொலிவார்ட் ரோடு, பட்டர்வொர்த் ரோடு எனப் பெயர் பெற்றன. பொலிவார்ட் ரோடு என்ற ஆங்கிலச் சொல் ஓரங்களில் மரங்களுள்ள அகன்ற சாலை என்ற பொருள்படும். கோட்டையின் வடக்குச் சுவரும் அகழியும் இருந்த இடத்தில் 1903-இல் சாலை போடப்பட்டு, பட்டர்வொர்த் என்ற கலெக்டரின் பெயர் சூட்டப்பட்டது.

கோட்டையை மாறியது போலவே, பொலிவார்டாக (Boulevard) இருந்த சாலைகள் இன்று 'புலிவார்' என்று மாறியிருக்கிறது!

மேலே பார்க்கும் 'மெயின் கார்ட் கேட்' சித்திரம் நான் பத்து வருடங்கள் முன் வரைந்தது.

Comments

  1. என் மனைவியின் ஊர் திருச்சி என்பதால் அதன் மேலும் எனக்குக் காதல் உண்டு ஆனால் திருச்சியின் தீ வெப்பம் தாள முடியாதது but ஏனைய சீசன்களில் I love this place ...

    ReplyDelete
  2. என் மனைவியின் ஊர் திருச்சி என்பதால் அதன் மேலும் எனக்குக் காதல் உண்டு ஆனால் திருச்சியின் தீ வெப்பம் தாள முடியாதது but ஏனைய சீசன்களில் I love this place ...

    ReplyDelete

Post a Comment