Skip to main content

திருச்சிடா!

ஞாயிறன்று திருச்சியில் இருந்தேன். க்ரோமியத்தில் குளிப்பாட்டிய பேருந்துகள் நாலு ரூபாய்க்குப் போட்டி போட்டுக்கொண்டு பின்னால் வரும் பேருந்துக்கு எதுவும் மிச்சம் வைக்காமல் அள்ளிக்கொண்டு போகிறார்கள். விரல் இடுக்கில் தர்பையை இடுக்குவது போல பத்து ரூபாய் நோட்டுக்களை இடுக்கிக்கொண்டு எல்லாக் கண்டக்டர்களும் விசில் அடிக்கிறார்கள்.

பெரியாஸ்பத்திரிப் பக்கம் போகும் போது அதே ஃபினாயில் வாசனை வருகிறது. தில்லைநகர் சாலைகள் பெரிதாகியிருக்கின்றன. பல இடங்களில் இருந்த ஐயங்கார் பேக்கரிகள்' ஐயங்கார் கேக் ஷாப்'  என்று ஸ்ரீரங்கம் முதல் திருவரம்பூர் வரை மாறியுள்ளன. கூடவே பக்கத்தில் ஒரு பழமுதிர் சோலையும், பத்மா காபியும்.

புத்தூர் நாலு ரோட்டில் 'குப்பை போடாதீர்கள்' என்ற அறிவிப்புப் பலகை ஆங்கிலத்திலும், சாக்லேட் ஐஸ்கிரீம் கடைப் பெயர் தமிழிலும் இருக்கிறது. சிந்தாமணி - சிந்தாமணி மால் ஆகிவிட்டது! மாரிஸ் தியேட்டர் உள்ளே இருந்த இருக்கைகள் எல்லாம் வெளியே வந்துவிட்டன. ரமா கபேயில் அவர்களே இலையை எடுத்துவிடுகிறார்கள்.

திருச்சி பஸ்டாண்டில் ஒரு ஆட்டோ பின்னால்
படித்தால் பட்னி போகும்
குடித்தால் கிட்னி போகும் என்று எழுதியிருக்கிறார்கள்.

பஸ்ஸில் ஒரு இளைஞர் பெரிய தோசைக் கல்லளவு மொபைல் போனைத் தடவிக்கொடுத்து "மச்சி இன்னும் யாரும் 'லைக்' பண்ணலை" என்று வருத்தமாகப் பேசிக்கொண்டு இருந்தார்.

ஸ்ரீரங்கம் முரளி கஃபே காஃபி டைமிங்ஸ் மாறியிருக்கிறது. சங்கம் ஹோட்டல் பக்கம் சுடிதாருக்குப் பெரிய கடை ஒன்று வந்திருக்கிறது. சங்கீதா ஹோட்டலில் இரவு பத்து மணிக்கு உட்கார இடம் கிடைக்கவில்லை. மூன்று எழுத்து பெயர் கொண்ட பல உள்ளூர் டிவி சேனல்களில் நடிகர், நடிகைகள் டான்ஸ் ஆடும் போது இடுப்புக்கு கீழே விளம்பரங்கள் மறைத்துவிடுகிறது.

காவிரியில் மெலிசாகத் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. கொள்ளிடத்தில் நான் வரும் வரை தண்ணீர் இல்லை. ஸ்ரீரங்கம் கோயிலில் 250 ரூபாய் டிக்கேட்டுக்கும் பெரிதாகக் கியூ நின்று கொண்டு இருக்கிறது. திருப்பதி மாதிரி விரட்டி விடுகிறார்கள். தாயார் சன்னதி தூண்களில் மஞ்சள் தடவும் பழக்கம் இன்னும் இருக்கிறது. திருவெள்ளரை கோயிலில் எவ்வளவு நேரம் வேண்டுமென்றாலும் கமலக்கண்ணனைப் பார்த்துக்கொள்ளுங்க என்று அர்ச்சகர் எங்களை விட்டுவிட்டு போய்விட்டார். பெங்களூர் பஸ் பிடிக்க வேண்டும் என்று கிளம்பிவிட்டோம். 

Comments

  1. Super desikan.. Whenever it comes to trichy/srirangam, I could really feel the entire content lively..
    nostalgic..

    Srirangam lakshmi.!

    ReplyDelete
  2. "தாயார்" சன்னதி 😊

    ReplyDelete
  3. திருச்சி வந்து சென்றது பற்றி எழுதியது நானே வந்து சென்றது போல உணர்வினை தந்தது......

    விரைவில் நேரில் செல்ல இருக்கிறேன்....

    ReplyDelete
  4. பெரிய தோசைக் கல்லளவு மொபைல் போனைத் தடவிக்கொடுத்து// இதான் ஆசான்ங்கறது :)

    ReplyDelete
  5. Super Sir. இப்போதைய திருச்சியை அப்படியே கண் முன்னால் கொண்டு வந்து விட்டீர்கள். திரு.சுஜாதா அவர்கள் ஆங்காங்கே புகுந்து மிளிர்கிறார். நல்ல ஒரு அனுபவம் Sir.

    ReplyDelete
  6. கோபுர தரிசனமும், திருச்சியைப் பற்றிய இற்றைகளும் அருமையாக இருந்தன...நாங்களும் உங்களுடன் வந்தது போன்ற உணர்வு.

    ReplyDelete
  7. இப்போ வாங்கோ.. காவிரி பிளஸ் கொள்ளிடம் கரை புரண்டு ஓடுகிறது.. (சும்மா ஒரு ஆர்வத்துல வந்தாச்சு.. வெள்ள அபாயம்னு சொன்னாலும் இரு கரை தொட்டுத்தான் ஓடுகிறது) கண் கொள்ளாக் காட்சி :)

    ReplyDelete
  8. விரல் இடுக்கில் தர்பையை இடுக்குவது போல பத்து ரூபாய் நோட்டுக்களை இடுக்கிக்கொண்டு எல்லாக் கண்டக்டர்களும் விசில் அடிக்கிறார்கள். :)

    ReplyDelete
  9. தங்களை பற்றி I love trichy (https://www.facebook.com/trichyisheaven) எடுத்து பதிந்து இருக்கிறோம் பாருங்கள் கிட்டத்தட்ட ஒரு 12,000 page view மற்றும் நிறைய கமெண்டுகள் வந்துள்ளன .. நான் இதை பெங்களூர் நண்பர் Naga Chokkanathan அவர்கள் ஷேர் செய்திருப்பதை பார்த்து பதிவு செய்தேன் .. மிக அருமையான சொல் வீச்சு .. படிப்பவர் மன ஓட்டத்தை ஒரு நொடியில் சொல்லும் இடத்திற்கு அழைத்து செல்வதில் சுஜாதாவை நெருங்கி விட்டீர் .. அருமை

    ReplyDelete
  10. பெயருக்கு ஏற்றார்போல் எழுத்து நடை .Good after long time சுஜாதா வை படித்தது போல் உள்ளது.

    ReplyDelete
  11. கடைசி வரி ‘எப்படியோ’ இருக்கும்னு நினச்சேன்.!!

    ReplyDelete

Post a Comment