மெயின் கார்ட் கேட் திருச்சி பற்றி எழுதிய " திருச்சிடா !" கட்டுரையை 'ஐ லவ் திருச்சி' குழுமத்தில் பலர் பாராட்டினார்கள். நான் +2 படிக்கும் போது, 'லயன்ஸ் கிளப்' கூட்டத்திற்கு வந்த சுஜாதா 'நான் இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டதற்கு முக்கிய காரணம் 'திருச்சி' என்று சொன்னதுதான் ஞாபகத்துக்கு வந்தது. போன முறை எழுதிய கட்டுரையில் இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம் என்று சிலர் வருத்தப்பட்டனர். நிறைய எழுதினால் படித்து முடித்தபின் க்ளுகோஸ் தேவைப்படும் என்பதால் எழுதவில்லை. ஆங்கிலத்தில் Tiruchy, Trichy, Tiruchi, Tiruchirappalli, Trichinopoly என்று பல விதமாக எழுதுவார்கள். தமிழில் இந்தக் குழப்பம் இல்லை, 'திருச்சி' தான். பெயர்க் காரணம் பற்றிய வரலாறு கீழே.. 'சிராப்பள்ளி' என்பதில் 'திரு' என்ற சேர்ந்துக்கொண்டு திருச்சிராப்பள்ளியானது. சமண முனிவர் வாழ்ந்த இடங்களை பள்ளி என்று சொல்லுவார்கள். சிரா என்ற சமண முனிவர் இருந்தமையால் சிராப்பள்ளி ஆனது என்கிறார்கள். முதலாம் இராஜராஜன் காலத்துச் சாசனமொன்று இவ்வூரை 'உரையூர் கூற்றத்துச் சிற்றம்பரி...