Skip to main content

அப்பாவின் ரேடியோ - சிறுகதைகள்


ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் தன்னுடைய படைப்பு சிறுபத்திரிகையில் தொடங்கி, வெகுஜன பத்திரிகையில் வர வேண்டும் என்ற ஆவல் இருக்கதான் செய்கிறது. பிறகு அந்த ஆசை தனி புத்தகமாகவும் பிறகு சினிமா என்று அது தொடர்கிறது.

"என்னுடைய கதை விகடனில் வந்திருக்கு படித்தீர்களா ?" என்று நண்பர்கள் குதூகலத்துடன் தொலைபேசியில் சொல்லும்போது அவர்களுடைய சந்தோஷத்தை உணரமுடிகிறது. இணையம், ஈ-மெயில், டிவிட்டர் என்று பல வந்தாலும் புத்தகத்தில் நம் எழுத்தைப் பார்க்கும் ஆனந்தமே அலாதி தான்.

போன மாதம் ஒரு தொலைபேசி அழைப்பு. பேசியது ஒரு பெண்.
"சார் நீங்க தான் சுஜாதா தேசிகனா ?"
"ஆமாம்"
"உங்க பெருங்காயம் கதை குங்குமத்தில் படித்தேன்...உங்களுக்கு சொந்த ஊர் தேரெழுந்தூரா?"
"இல்லை.. திருச்சி"
"ஊரைப் பற்றி அப்படியே எழுதியிருக்கீங்களே... எங்களுக்கு அந்த ஊர் தான் இப்ப சென்னையில் இருக்கோம்... கதை ரொம்ப அருமை... எங்க கதை மாதிரியே இருந்தது"
"கதை வந்து மூன்று மாசத்துக்கு மேலே ஆச்சே இப்ப தான் படிச்சீங்களா ?"
"ஆமாங்க.. நாங்க தமிழ் பத்திரிகை எல்லாம் வாங்குவதில்லை"
"ஓ.. அப்ப எப்படி படிச்சீங்க... நெட்டிலா?"
"அது எல்லாம் தெரியாதுங்க... எங்க அக்கா படிச்சுட்டு எனக்கு அனுப்பினாங்க"
"உங்க அக்கா எங்கே இருக்காங்க"
"அவங்க பெங்களூரில் டாக்டர்.. அவங்க ஃபிரண்டு படித்துவிட்டு அவங்களை படிக்க சொல்லியிருக்காங்க... அப்பறம் அதை எனக்கு கூரியரில் அனுப்பினாங்க"
"என் போன் நம்பர் எப்படி கிடைத்தது"
"மூன்று நாளா பத்திரிக்கை ஆபீஸுக்கு ஃபோன் செய்து இப்ப தான் கிடைத்தது... "உங்களிடம் போன் செய்து கதை நல்லா இருக்கு என்று சொல்ல வேண்டும் போல இருந்தது"
"நன்றி" என்று சொல்வதற்குள் ஃபோனை வைத்துவிட்டார்.

சில வருடங்கள் முன் எழுத்தாளர் சுஜாதா அவர்கள், என்னுடைய சிறுகதை ஒன்றைப் படித்துவிட்டு
"மொத்தமா ஒரு புத்தகமா போடுங்ளேன்" என்றார்
"சார் நீங்க முன்னுரை எழுதித்  தந்தால் போடுகிறேன்" என்றேன்
"அதற்கு என்ன நிச்சயம் எழுதித் தருகிறேன்"

அவர் முன்னுரையுடன் புத்தகம் போட வேண்டும் என்ற ஆவல் இருந்தது. ஆனால் புத்தகம் போடும் முன் அவர் ஆசாரியன் திருவடி அடைந்தார். அவர் இருக்கும் போதே புத்தகத்தை கொண்டுவந்திருக்கலாம் ஆனால் முடியாததற்கு பல காரணங்கள்.

சில வருடங்களுக்கு முன் திரும்ப மீண்டும் இந்த புத்தகம் போடும் விளையாட்டு ஆரம்பித்து "இதோ பிள்ளையார் சதுர்த்திக்கு கொண்டு வந்துடலாம்.." "புக் ஃபேர் எல்லோரும் பிஸி" என்று பல காரணங்கள் வந்து போனது. போன வருடம்  பிள்ளையார் "எனக்கும் வயசாகிறது இல்லையா ?" என்றார்.

புத்தகக் கண்காட்சி போது நடைபாதை கடைகளில் எழுத்தாளர்களின் புத்தகங்கள் ஒரு முழம் பூவின் விலையை விட கம்மியாக கிடைப்பதை பார்த்திருக்கிறேன். இருந்தாலும் ஆசை யாரை விட்டது ?

இன்றைய தொழில்நுட்ப உலகில் நம்மை நாமே போட்டோ எடுத்து பிரிண்ட் போட்டுக்கொள்ளலாம் , புத்தகத்தை அச்சடிக்கலாம். அதே போலத் தான் இந்த புத்தகமும்.

இந்த புத்தகத்தில் இடம்பெற்ற கதைகள், விகடன், டைம்ஸ் இலக்கிய மலர், சொல்வனம் ஆகிய இதழ்களில் தப்பி தவறி வந்தவை.

இந்த புத்தகத்துக்கு திரு.எஸ்.ராஜகோபாலன்(சுஜாதாவின் தம்பி) முன்னுரை எழுதியுள்ளார். சுஜாதா போலவே என்னுடைய நலம் விரும்பி; இருவருக்கும் இந்த புத்தகம் வரக் காரணமாக இருந்த நண்பர்களுக்கும் என் நன்றிகள்.
அட்டைப்பட ஓவியம் என் மகள் ஆண்டாள். அவளுக்கு என் ஸ்பெஷல் நன்றி!.


அப்பாவின் ரேடியோ 
சிறுகதைகள் 
பத்து பைசா பதிப்பகம் 
பக்கம் 169
விலை ரூ 110/=
https://www.nhm.in/shop/home.php?cat=1207

Comments

  1. வாழ்த்துகள் தேசிகன்!

    ReplyDelete
  2. haven't bought the book. will buy and read and revert you.All the best .keep writing more.

    ReplyDelete
  3. பதிப்பகத்தின் பெயரே மிக வித்தியாசமாக இருக்கிறது. புத்தகம் அழகுற வெளிவந்திருப்பதைக் கண்டதில் மிக்க மகிழ்ச்சி. என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  4. சிந்திப்பவன்March 14, 2013 at 9:41 AM

    ஓட்டல் பெயர் "இலவசம்"..அங்கு ஒரு சாப்பாடு ரூ.200 என்பது போல உள்ளது.!
    பதிப்பகத்தின் பெயரில் இருக்கும் "தாராளம்" புதக்கத்தின் விலையில் காணோமே.!!

    ReplyDelete
  5. வாழ்த்து சொன்ன நண்பர்களுக்கு நன்றி.
    சித்திப்பவன் - Book was printed using POD ( Print on Demand ).. and what you see as price is the cost price.

    ReplyDelete
  6. இந்த புத்தகத்தில் இடம்பெற்ற கதைகள், விகடன், டைம்ஸ் இலக்கிய மலர், சொல்வனம் ஆகிய இதழ்களில் தப்பி தவறி வந்தவை.////

    ReplyDelete
  7. congrats sir on achieving a small milestone.

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் சார். கட்டாயம் வாங்கி படிக்கிறேன்.

    ReplyDelete
  9. வாழ்த்துகள் தேசிகன் - வெங்கட்

    ReplyDelete
  10. Congrats Desikan .

    ReplyDelete
  11. அன்புள்ள தேசிகன்,

    நல்வாழ்த்துக்கள்! கட்டாயம் வாங்கிப் படிக்கிறேன். அட்டை ஓவியம் நன்று. உங்கள் மகளாயிற்றே :-) என்னவோ சமீபத்தில்தான் அவளுக்கு பெயர் வைத்தபோது நீங்கள் எழுதிய பதிவைப்படித்தது போல இருக்கிறது... இப்பொது உங்கள் புத்தகத்திற்கு அட்டை படம்!

    ஆண்டாளுக்கு என் 'ஸ்பெஷல்' வாழ்த்துக்கள்.

    அன்பன்,
    ஸ்ரீநிவாஸன்,
    சென்னை

    ReplyDelete
  12. தேசிகன்: புத்தகம் வந்து சேர்ந்தது. படித்துக்கொண்டிருக்கிறேன். சிலது ஏற்கனவே படித்தவை. படிக்கும்போது ‘வாத்யார்’ ஞாபகம் ஏனோ வந்துகொண்டிருக்கிறது!

    ReplyDelete

Post a Comment