Skip to main content

மலையாள திவ்யதேசப் பயணம் - 2

மலைநாட்டு திவ்ய தேசங்கள்

பஞ்ச வாத்தியம்
அடுத்தடுத்து பல திவ்யதேசங்களைப் பார்க்கும்முன் கேரளா திவ்யதேசங்களைப் பற்றிய சிறுகுறிப்பைப் பார்த்துவிடலாம்.

கேரளா கோயில்கள் எல்லாம் ஒரே மாதிரியான வடிவமைப்பு கொண்டவை. பெரும்பாலும் சதுர வடிவம். அதே போல் மூலவர் நின்ற திருக்கோலம். கைகளில் சங்கம், சக்ரம், கதை, பத்மம் (குருவாயூர் மாதிரி தோற்றம்). பல கோயில்களைத் தரிசித்த பிறகு நமக்கு நிச்சயம் குழப்பம் வரும்.



இந்தத் திருத்தலங்களில் உள்ள கோயில் அமைப்பும் வழிபாட்டு முறையும் தமிழகத்து முறைகளிலிருந்து வேறுபட்டவை. நான் பார்த்த வரையில் பெருமாளுக்கு இங்கே அர்ச்சகர்களாக நம்பூதிரிகள் எல்லோரும் ஒரே மாதிரி ஆசாரத்தையும் அனுஷ்டானத்தையும் கடைப்பிடிக்கிறார்கள். ஈரத் துணியுடன் தான் கோயிலில் பூஜை செய்கிறார்கள். எவ்வளவு கூட்டம் வந்தாலும் பேசுவதில்லை. சந்தனம், பூ இவைகளை ஒரு சிறு வாழை இலையில் வைத்து நம் கை மேல் படாமல் தருகிறார்கள். காணிக்கை எல்லாம் கீழே தான் போட வேண்டும். கையில் வாங்க மறுக்கிறாகள். தமிழகக் கோயில்களில் உள்ளது போல காணிக்கைக்கு ஏற்ற மரியாதை எல்லாம் கிடையாது.

கோயிலில் பொங்கல், புளியோதரை போன்ற பிரசாதங்கள் கிடையாது அதே போல தீர்த்தம், துளசி, சடாரி எல்லாம் கிடையாது. சில கோயில்களில் பாயசம் தருகிறார்கள்.

எங்கும் பலா 
தமிழக கோயில்கள் மாதிரி இல்லாமல் இவர்கள் கோயிலை சுத்தமாக வைத்திருக்கிறார்கள். வெண்ணை, நெய், மஞ்சள், சந்தனம் எல்லாம் கோயில் சுவர், சிலைகளில் தடவுவது இல்லை. (நான் சமீபத்தில் ஸ்ரீரங்கம் சென்ற போது எங்கள் குழுவில் இருந்த படித்தவர்களே பிரசாதம் வாங்கி சாப்பிட்டுவிட்டு கையில் உள்ள பிசுக்கை பல நூற்றாண்டுமுன் ஆழ்வார்கள் அனுபவித்துப் பாடிய ஸ்தலத்தில் இருக்கும் தூண்களில் துடைப்பதைப் பார்க்க முடிந்தது.)

கோயிலுக்கு வரும் ஆண்கள் எல்லோரும் சட்டை, பனியன் பாஸ்கெட் பால் டி-சர்ட் போன்றவை அணியாமல் வேஷ்டி மட்டும் அணிந்துக்கொண்டு வர வேண்டும். பெண்கள் புடவை அணிந்துக்கொண்டு வருகிறார்கள். எல்லோர் நெற்றியிலும் சந்தனம் காணப்படுகிறது. யாரும் கோயிலில் வம்பு பேசுவதில்லை. பிரதக்ஷிணம் செய்துவிட்டுச் சென்று விடுகிறார்கள்.

பாரதப்புழா நதி
கோயிலைச் சுற்றிலும் மண்தரை தான். சிமிண்டு, தார் போட்டு அதிகாரிகளின் கார்களுக்கு வழி செய்கிறேன் என்ற எந்த எக்ஸ்டரா-ஃபிட்டிங்கும் இல்லை. கோபுரம், கோயிலை சுற்றி இருக்கும் நடைபாதைகளில் வரும் தண்ணீர் எங்கும் தேங்காமல் மழை நீர் சேகரிப்பு நடப்பதற்கு இந்த ஏற்பாடு என்று நினைக்கத் தோன்றுகிறது. (ஸ்ரீரங்கத்தில் சக்கரத்தாழ்வார் சன்னதிக்கு பின் புறம் இருக்கும் மரங்களை கூடிய சீக்கிரம் வெட்டி எடுக்க போகிறார்கள் என்ற கேள்விப்பட்டேன் )

பார்த்த எல்லாக் கோயிலிலும் பெரிய மரம் ஒன்றும், அதைச் சுற்றி திண்ணையும் கட்டியுள்ளார்கள். அந்தப் பெரிய மரம் பெரும்பாலும் அரச மரம்; சில இடங்களில் அரச மரம், ஆல மரம், வேம்பு, பலா என்று எல்லாம் ஒன்றாகப் பின்னி வளர்ந்திருந்தன.

பல மரம் ஒன்றாக
கோயிலின் வழிபாட்டு நேரம் காலை 4 மணி முதல் 10:30 மணி வரை. பிறகு மாலை 5 மணி முதல் 7:30 வரை. நம்மூர் கோயில் மாதிரி பூட்டிய பின் அர்ச்சகரைக் கூப்பிட்டுத் திறப்பது எல்லாம் இங்கே நடக்காத விஷயம். பல கோயில்களில் தாயார் சன்னதி என்று தனியாக எதுவும் இல்லை. இந்தக் கோயில்களில் மூலவருக்குத் தான் ஏற்றம். உத்ஸவர் சின்னதாக ஸ்ரீபலி எனப்படும் பலி ஸாதிப்பதற்கு காலை மாலை எழுந்தருளுகிறார். இங்கு நடைபெறும் பிரகார ஊர்வலத்திற்கு ஸ்ரீவள்ளி என்று பெயர். எவ்வளவு வெயில் இருந்தாலும் பொறுமையாக நடந்து செல்கிறார்கள்.

இங்குள்ள கோயில்களில் மூலஸ்தானத்திற்கு முன்புறம் சதுர வடிவிலான மேடை ஒன்று இருக்கிறது. பலிபீடம் என்று கூறுவர். சில ஸ்தலங்களில் பிரம்மாண்டமானதாயும், சிலவற்றில் சின்னதாகவும் அமைந்துள்ளது. ஸ்ரீரங்கப்பட்டினத்தில் இதே மாதிரி பார்த்த ஞாபகம். தமிழ்நாட்டில் அமைந்துள்ளது போன்று பெரிய துவஜஸ்தம்பங்கள் (கொடிமரங்கள்) இங்கும் உண்டு. [கேரளாவில் இதே போல துவஜஸ்தம்பங்கள் கிறுத்துவ ஆலயங்களில் கூட இருப்பது வியப்பான ஒன்று.]

பல கோயில் சுவற்றில் Mural Paintings கலை வேலைப்பாடான ஓவியங்களை ரசிக்கலாம். பெரும்பாலும் செந்தூர வண்ணம் கலந்தது இருக்கிறது. ஸ்ரீரங்கம் போன்ற கோயில்களில் இந்த ஓவியங்கள் பெருமாலும் நீல வண்ணம் கொண்டவை.

இங்கே நம்ம ஊர் போல நாதஸ்வரம் கிடையாது, பஞ்ச வாத்யம் என்று சொல்லப்படும் மலையாளத்துக்கே உரித்தான சிறப்பான வாத்தியம். ( பார்க்க முதல் படம் ).

Mural Art
இந்தக் கோயில்களின் வழிப்பாட்டு முறையை மாற்ற வேண்டும் என்று ஸ்ரீராமானுஜர் கேரளாவிற்கு வந்த போது இங்கே உள்ள நம்பூதிரிகள் பெருமாளிடம் வேண்டிக்கொண்டு தாங்கள் செய்துவரும் வழிபாட்டு முறைகளையே பெருமாள் தொடர்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டுமெனப் பிரார்த்தித்தார்கள். அவர்களின் ஆசையை நிறைவேற்றிட வேண்டி பெருமாள் மலையாள நாட்டின் எல்லையுள் ஓரிடத்தில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த ஸ்ரீராமானுஜரை அப்படியே எடுத்து வந்து திருக்குறுங்குடிக்கு அருகில் ஒரு பாறையில் படுக்க வைத்ததாகவும், கண்விழித்துப் பார்த்த போது ஸ்ரீராமானுஜர் தாம் தமிழகத்தின் இருப்பதையறிந்த ஒரு கனம் பெருமானின் திருவுள்ளக் கருத்தை அறிந்து மீளவும் தமது திருப்பணிகளைத் தமிழகத்திலேயே தொடங்கியதாகவும் வரலாறு.

கோயிலைச் சுற்றி எல்லா இடங்களிலும் பலா மரங்களும், வாழை மரங்களும் பசுமையான காடுகளும், நதிகளும், ஒரு டீ-கடை கூட இல்லாமல், எப்போதும் பறவை ஒலியும்... பெருமாள் இங்கே நிம்மதியாக இருக்கிறார்.

பயணம் தொடரும்.. 

Comments

  1. //பெருமாள் இங்கே நிம்மதியாக இருக்கிறார். //

    உண்மை.

    ReplyDelete
  2. வணக்கம் ராகவன்.

    மிக அருமையாக இருக்கு கோவில் தரிசனம்.

    நாங்கள் பல வருடங்களுக்கு முன் மலைநாட்டு திவ்ய தேசங்களுக்கு சென்று வந்தது நினைவுக்கு வந்தது.

    //கோயிலைச் சுற்றி எல்லா இடங்களிலும் பலா மரங்களும், வாழை மரங்களும் பசுமையான காடுகளும், நதிகளும், ஒரு டீ-கடை கூட இல்லாமல், எப்போதும் பறவை ஒலியும்... பெருமாள் இங்கே நிம்மதியாக இருக்கிறார். //

    உண்மைதான்.

    வித்வக்கோடும், திருமூழிக்களம் கோவில்களும்,அருகே ஓடும் நதிகளும் ....மறுபடியும் செல்ல வேண்டும்.

    தொடர்ந்து படிக்க ஆவலோடு காத்திருக்கிறேன்.
    நன்றி.

    ReplyDelete
  3. Dear Sujatha Desikan

    Please check this out when you have time.Please feel free to share this info in yoru blog and like minded friends and blogs.
    https://www.facebook.com/notes/jeyakumar-sathyamoorthy/interested-in-helping-a-temple/520828467958421


    Divya Kabisthalam

    This is one of the 108 Divya Desa temples of Lord Perumal

    This Sthalam has been on the back of my mind for over a year since I was there at the temple .

    The temple was in a really bad shape and the Bhattacharyaar looked to be in abject poverty. His only son was both speech and hearing challenged (deaf and mute). Considering the temple had been maintained by the family tree of bhattacharyaar, he was at a loss as to who would be able to take care of the Kaingaryams after him.

    The temple is privately owned and as per the bhattacharyar , he is paid Rs 500 a month + Rice.



    While I was there I took pictures of the temple and all the pages from his bank passbook.(He has no phone either).His house (more of a hut) was right opposite to the temple and he certainly could use our help.

    I have shared the pictures of the temple online.

    https://plus.google.com/photos/117643277399132281565/albums/5847043060688699937?authkey=CMOK_u_ooce3EQ

    Thanks
    JK

    ReplyDelete
  4. (ஸ்ரீரங்கத்தில் சக்கரத்தாழ்வார் சன்னதிக்கு பின் புறம் இருக்கும் மரங்களை கூடிய சீக்கிரம் வெட்டி எடுக்க போகிறார்கள் என்ற கேள்விப்பட்டேன் )

    வருத்தம் தரும் செய்தி..!

    ReplyDelete

Post a Comment