வீட்டுப்பக்கம் பெரிய ஆலமரம் ஒன்று இருக்கிறது. நடைப்பயிற்சியின் போது அதிலிருந்து விழும் பழங்களை எடுத்து உடைத்துப் பார்த்தால் உள்ளே கருப்பாக சின்ன பூச்சிகள் இருக்கும். பறித்து உடைத்தாலும் இருக்கும். அத்திப்பழம் பற்றி இந்த வருடம் ஆரம்பத்தில் படித்த போது விடை கிடைத்தது. 'அத்தி பூத்தாற்போல்' என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கலாம். என் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடத்திற்கு போகும் வழியில் அத்தி மரத்தில் எப்போதும் காய்கள் இருப்பதை பார்த்திருக்கிறேன். சென்னை தி.நகர் பாலாஜி பவன் பின் புறம் இதே போல ஒரு அத்தி மரத்தைப் பார்த்திருக்கிறேன். முன்பு நாட்டு மருந்துக்கடையில் மட்டுமே கிடைத்துக்கொண்டு இருந்த அத்திப்பழம் இப்போது எல்லா கடைகளிலும் ஆஞ்சநேயர் வடைமாலை மாதிரி பதப்படுத்தப்பட்ட 'அஞ்சீர்' என்று கிடைக்கிறது (அஞ்சீர் என்றால் 'தேன் அத்தி' என்று பொருள்.). எழுநூறுக்கும் மேற்பட்ட அத்தி மரங்கள் இருக்கிறது என்றால் ஆச்சரியமாக இருக்கிறது. அத்திப் பூ என்பது நூற்றுக்கணக்கான பூக்கள் அடங்கிய பூங்கொத்து, இதழ்கள் மூடப்பட்...